Tuesday, June 29, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 3: பிரிவாற்றாமை

மரபிலக்கியத்தில் 'பிரிவாற்றாமை' ஒரு ரசமான பகுதி. வள்ளுவர் முதல் நாடோடிக் கவிஞன் வரை அது பற்றிப் பாடாத கவிஞர் இல்லை. அவர்களது கவிதைகளில் தலைவனது பிரிவால் வாடும் தலைவியரது ஆற்றாமை உருக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவை.

உற்றார் உறவினர் இல்லாத ஊரில் குடியிருப்பது மனிதர்களுக்கு மிகவும் துன்பமான வாழ்க்கை. அதைவிடத் துன்பம் தருவது ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்திருப்பது. ஏனெனில் சாதாரண நெருப்பு தொட்டால்தான் சுடும். காமநோய் நெருப்போ தொட்டுக் கொண்டிருக்கிற வரை சுடாமல், விட்டுப் பிரிந்தவுடன் சுடுகிறது.

'இன்னாது இனன் இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு'

'தொடற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ' - என்கிறார் வள்ளுவர்.

பிரிவாற்றாமையில் இவர்க்கு நிலவு சுடும். இரவு துன்புறுத்தும். கடல் அலைஓசையும் வருத்தும். இரவு முடிவற்றதாக நீண்டு வேதனை தரும்.

'ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? யான் வளர்த்த
கோழிவாய் மண்கூறு கொண்டதோ? - ஊழி
திரண்டதோ கங்குல்? தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத் துள்'
- என்று ஆத்திரப் படுகிறாள் ஒருத்தி.

'இந்தக் கடல் முழக்கம் அடங்காதா? நான் வளர்த்த கோழியின் வாயில் மண் அடைத்து விட்டதா? அது கூவினால் இரவு கழிந்து, விடிந்து விடுமல்லவா? ஒருவேளை உலகம் அழியக் கூடிய ஊழிக்காலம் வந்து விட்டதா? அதனால்தான் இப்படி முடிவற்ற இரவாக இருக்கிறதா?
சூரியனும் அவனது தேரும் பாதாளத்துக்குள் உருண்டு விழுந்து விட்டனவா?' என்று எரிச்சல் படுகிறாள்.

இன்னொருத்தியும் 'சூரியனது தேர் விரைந்து வந்து பொழுதை விடிய வைக்காதா? சூரிய உதயத்தில் வந்து விடுவதாகச் சொன்ன தன் காதலன் அதனால் தான் இன்னும் வர வில்லையோ?' என்று கவலைப் படுகிறாள். அவளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. 'இந்த சூரியனுக்கு இன்று என்ன ஆயிற்று? ராகு அல்லது கேது என்கிற பாம்பு விழுங்கி விட்டதா? அல்லது அவன் ஏறி வருகிற தேர் அச்சுமரம் முறிந்து போய், புரவிகள் கயிற்றை உருவிக் கொண்டு ஓடிவிட்டனவா? அல்லது செத்துத்தான் போனானோ? அல்லது இன்று பாதையை மாற்றிக்
கொண்டு வேறுவழி போய்த் தொலைந்தானா? தோழி! எனக்கு எப்படியடி விடியப் போகிறது' என்று ஆற்றமாட்டாமல் புலம்புகிறாள்:

அரவம் கரந்ததோ?
அச்சு மரம் இற்றுப்
புரவி கயிருருவிப்
போச்சோ? - இரவிதான்
செத்தானோ? வெறு வழி
சென்றானோ? பாங்கி எனக்கு
எத்தால் விடியும்
இரா?

- ரசிகமணி டி.கே.சி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது!.

இன்னொருத்திக்கு- விரகதாபத்தில், வானில் தண்ணொளி பொழிகிற நிலவின் குளுமை தீயாய்ச் சுடுகிறது. 'இது ஏன் தான் இப்படி எரிக்கிறதோ? இந்த ஊரையே தன் வெப்பத்தால் எரித்துவிடுமோ? அல்லது இந்த உலகத்தையே சுட்டெரிக்கப் போகிறதா? வேறு யாரை எல்லாம் இது நீறு ஆக்குமோ? எனக்குத் தெரியவில்லை' என்கிறாள் தோழிகளிடம்.

இந்தப் பாடலைத் தான் கேட்டு ரசித்த அனுபத்தை டாக்டர் உ.வே.சா அவர்கள் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பின் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலைத்து ஒரு உருக்கமான பாடல் வரி கேட்கிறது. 'ஊரைச் சுடுமோ........உலகந்தனைச் சுடுமோ...... ஆரைச் சுடுமோ?......அறியேனே.......' என்று அந்தக் குரல் உருக்குகிறது. உ.வே.சா நிமிர்ந்து உட்காருகிறார். மீண்டும் அதே உருக்கமான பாடல் வரி அவரை சிலிர்ப்படையச் செய்கிறது. எழுந்து நடந்து போய் தெருவை எட்டிப் பார்க்கிறார். பாலெனப் பொழியும் நிலவொளியில் தூத்தில் ஒரு ராப்பிச்சைக்காரன் பாடிக் கொண்டே போவது தெரிகிறது. 'மூங்கிலிலைமேலே தூங்கும்.....' என்று ஏற்றப் பாட்டில் கேட்டு மூங்கில் இலை மேலே தூங்குவது எதுவாக இருக்கக்கூடும் என்று புரியாமல் தவித்த கம்பரைப் போல, மகாவித்துவானான உ.வே.சாவுக்கு 'எது ஊரைச் சுட வல்லது? உலகத்தையே சுடப் போவது எது?' என்ற குழப்பம் உண்டாகிறது. அடுத்த வரிக்காகக் காத்திருக்கிறார். ஆனால் அந்தப் பொல்லாத பிச்சைக்காரன் அந்த ஒரு வரியையே திரும்பத் திரும்பப் பாடியபடி செல்கிறான். தமிழ்த் தாத்தாவுக்குப் பொறுக்க வ்¢ல்லை. பரபரப்புடன் படியிறங்கி அவனைத் தொடர்ந்து போய் பாட்டு முழுவதையும்கேட்டுவிடத் துடிக்கிறார்.

ஆனால் எத்தனை தெரு சுற்றி வந்தாலும் அவன் அந்த ஒரு வரிக்கு மேல் பாடுவதாய் இல்லை. பொறுமை இழந்தவராய் அவனை நெருங்கி, " அப்பனே! அந்தப் பாட்டைத் தொடர்ந்து பாடேன்" என்கிறார். "பாட்டா? பசி உயிர் போகிறது - தொடர்ந்து பாட சக்தி எங்கே இருக்கிறது?" என்று அலுத்துக் கொள்கிறான் அவன். "அவ்வளவுதானே? என் கூட வா. வயிறார சாப்பாடு போடுகிறேன். சாப்பிட்டு விட்டுப் பாடு!" என்று அழைக்கிறார். அவன் பரமானந்தத்துடன் அவருடன் போகிறான். திண்ணையில் அமர வைத்து உணவளிக்கிறார். அவன் சாப்பிட்டுத் திருப்தியாய் ஏப்பம் விட்டபின், "இப்போது முழுப் பாட்டையும் பாடு" என்று ஏதோ புதையலைப் பார்க்கப் போகிற ஆர்வத்தோடு கேட்கிறார். அவன் பாடுகிறான்:

'ஊரைச் சுடுமோ? உலகந்தனைச் சுடுமோ?
ஆரைச் சுடுமோ அறியேனே! - நேரே
பொருப்பு வட்டமான நகில் பூங்கொடியீர்! இந்த
நெருப்பு வட்டமான நிலா.'

'ஆகா! ஆகா!' என்று உருகிப் போகிறார் - ஊர் ஊராய் நடையாய் நடந்து பழந்தமிழ்ச் செலவங்களை தேடி நமக்களித்த வள்ளல்!

- மேலும் சொல்வேன்.

No comments: