Tuesday, June 22, 2004

நினைவுத் தடங்கள் - 19

சிறு வயது முதலே எனக்கு ஓவியத்தில் நாட்டமிருந்தது. ரசனை போலவெ இதுவும் பயிற்சியால் அடையமுடியும் என்றாலும் இயல்பாகவே அமைவது ஒரு கொடுப்பினைதான். எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்தது. பிள்ளைப் பிராயத்தில், மாலை நேரத்து வானில் மிதக்கும் பஞ்சுப் பொதி போன்ற மேகங்களில் எனக்கு யானையும் குதிரையும் தேரும் தெரிந்- தன. சாக்கட்டி கிடைத்தால் தரையில் சின்னச் சின்னதாக ஏதாவது வரைந்து கொண்டிருப்- பேன். அப்போதைய பூட்பாலிஷ் டப்பாவின் (Cobra) மேல் இருந்த - மண்டலமிட்டபடி தலையுயர்த்தி கம்பீரமாய் குத்திட்டு நின்று பிளந்த நாக்கை நீட்டிச் சீறும் நல்ல பாம்பை நான் முதன் முதலில் வரைந்தது நினைவில் நிற்கிறது. வரலாற்றுப் பாடப் புத்தகத்திலிருந்த சிவாஜியும், அக்பரும், பாபரும், தாஜ்மஹாலும் என்னை வரையத் தூண்டின. இத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி எங்களூர் தச்சாசாரி ஒரு சிற்பக் கலைஞர். அவர் மரத்தில் சிற்பங்கள் செய்யும் போதும் அவற்றிற்கு வண்ணங்கள் தீட்டும் போதும் மிக ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருப்பேன். அவரது மகன் என்னை விட பத்து வயது மூத்தவர் - அவரும் தந்தையைப் பார்த்து மரத்திலும் சுதையிலும் சிற்பங்கள் செய்வார். ஊர் முழுக்க ஒரு திண்ணை விடாது, பென்சில் ஓவியங்களை - நீர்வீழ்ச்சி, ஓடைகள் போன்று இயற்கைக் காட்சிகள் என்று வரைந்தாலும் அதிகமும் சாமி படங்களே- மயில் மீது அமர்ந்திருக்கும் முருகன், மயிலுடன் நிற்கும் குழந்தை முருகன், குழல் ஊதும் கண்ணன் தலையில் மயிலிறகோடு, தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி என்று ரவிவர்மா பாணியில் வரைந்தபடியே இருப்பார். வீட்டுக் காரர்கள் யாரும் ஆட்சேபித்தலில்லை. மாறாக அழைத்து போட ஊக்கமளித்த¨ர். எப்போதும் அவரது காதில் கூர் சீவிய நீளமான பென்சில் அமர்ந்திருக்கும். அந்தப் பென்சிலை அவர் உளியால் சீவுவது முதற்கொண்டு அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். என் ஆர்வத்தைக் கண்டு அவர் என்னையும் அதே திண்ணைப் பக்கத்தில் அவரது ஓவியத்தைப் பார்த்து வரையச் சொல்லுவார். ஆங்காங்கே திருத்தமும் செய்து வழி காட்டுவார். அவரது ஓவியம் எதிலும் கண்கள் மட்டும் பூர்த்தி செய்யப் படாமலிருக்கும். கடைசியாகத்தான் கண்களைத் திறக்க வேண்டும் என்பார். ஆனால் அந்தக் 'கடைசி' ஒருபோதும் வந்ததில்லை. எனக்கு நினைவு தெரிந்து பிறகு எந்த நாளிலும் எந்த ஓவியத்துக்கும் கண் திறக்கப் பட்டதில்லை.

பள்ளியில் படித்த காலங்களில், ஓவிய வகுப்பு என்று தனியாக இருந்தும் அவ்வகுப்புகளில் ஏதும் கற்றதில்லை. துர்அதிர்ஷ்ட வசமாக எனக்கு வாய்த்த ஓவிய ஆசிரியர்கள் - மாணவனாக இருந்தபோதும் சரி, தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோதும் சரி - எல்லோரும் பஞ்சத்துக்கு ஆண்டியாக - வயிற்றுப் பிழைப்புக்காக அரைகுறைப் படிப்புடன் அரசு நடத்தும் ஆறுமாத ஓவிய சான்று பெற்று வந்தவர்களாகவே இருந்தார்கள். மாணவர்களை விழி உயர்த்தி பிரமிக்க வைக்கும் லட்சியமோ அர்ப்பணிப்போ அவர்களிடம் நான் கண்டதில்லை. பள்ளி இறுதி வகுப்பில் தவறியவர்கள் எல்லோரும் அநேகமாக - அப்போது ஹையர்கிரேட் ஆசிரியர்களா கவோ, ஓவிய ஆசிரியர்களாகவோ, நெசவு ஆசிரியர்களாகவோ, லோயர்கிரேட் உடற்பயிற்சி ஆசிரியர்களாகவோ பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து- கொஞ்சமும் அக்கலைகளில் ஆர்வமற்ற வர்களாய் பள்ளிகளில் அமர்ந்து மாணவர்களது கழுத்தை அறுப்பவர்களாக பிழைப்பை ஓட்டினார் கள். இன்றும் அந்த நிலைமையில் ஏதும் மாற்றமில்லை. எட்டாம் வகுப்பில் எனக்கு வந்த ஓவிய ஆசிரியர் உடற்கல்விக்கும் ஆசிரியர். அந்தக் காலக்கட்டத்தில் அப்படி ஒரு இரட்டைப் பயிற்சி பெற்றிருந்த ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். அது ஒரு வகையில் தேவலை. பாட வேளை அதிகம் இல்லாமல்
இரண்டு ஆசிரியர்கள் சோம்பலாய் பொழுதைக் கழிக்காமல் ஒருவரோடு போயிற்று. அரசாங்கத்துக்கும் லாபம். இப்போது ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ஆசிரியர். வகுப்பறைக்குப் பெயர் எழுதச் சொன்னால் கூட 'எனக்கு அழகாக எழுத வராது ஐயா' என்று நழுவும் கபட்டுப் பசுக்களையே என் பணிக்காலத்தில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் யதார்த்தமாக சிந்திக்கிற தலைமை ஆசிரியர்கள் அவர்களிடம் கோபிப்பதில் லாபமில்லை என்று அவர்களை அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். எனக்கு ஓவிய ஆசிரியரைக் கொண்டு பள்ளிச் சுவர்களில் தேசப் படங்கள், இயற்கைக் காட்சிகள் என்று வரைந்து பிள்ளைகளுக்கு கலையுணர்ச்சியைத் தூண்டும் ஆசை இருந்தும் அது நிறைவேறி¢யதில்லை.

நான் படிக்கும்போதே சில்பி, மாலி, கோபுலு போன்றோரின் கோட்டோவியங்களில் மனதைப் பறி கொடுத்து அவர்களைப் போலவே கார்ட்டூன்களும், காரிகேச்சர்களும் வரையப் பழகியிருந்தேன். அதனால் நான் ஆசிரியராகப்பணி செய்த காலங்களில் பள்ளி இலக்கிய மன்றத்துக்கு பேச வந்த பெரியவர்களை ஒரு ஆட்டொகிராப் நோட்டில் அப்படியே அவர்களைப் பார்த்து பென்சிலால் வரைந்து அவர்களிடம் ஆட்டொகிராப் வாங்கியிருக்கிறேன். அதை இன்றும் நினைவு கூர்கிற என் பழைய மாணவர்கள் உண்டு. அப்படி வரைந்த போது சில
சுவையான அனுபவங்களும் கிட்டியதுண்டு.

குன்றக்குடி அடிகளார், மயிலை சிவமுத்து, கி.வா.ஜ, தேவநேய பாவாணர், உலகஊழியனார், திருக்குறள் முனுசாமி போன்ற இலக்கியவாதிகளும் அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், புலவர் கோவிந்தன் போன்ற அரசியல்வாதிகளும் என் ஓவிய ஆல்பத்திலிருக்கிறார்கள். கி.வா.ஜ 'கலையால் காலத்தைக் கொல்லலாம்' என்று எழுதிக் கையொப்பமிட்டார். உலகஊழியனார் எதிரே மேடையருகில் அமர்ந்து நான் வரைந்ததைக் கண்ணுற்றவர், நான் கூட்டமுடிவில் அணுகி அவரது சித்திரத்தைக் காட்டி ஒப்பம் கேட்டபோது, 'ஐயா, தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள்?' என்று கேட்டார். 'இப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி செய்கிறேன்' என்று சொன்னேன். 'அப்படியா! நான் பத்திரிகை நிருபரோ என்று உடையைப் பார்த்து எண்ணினேன்' என்று நான் கோட் சூட்டில் இருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னவர் அப்படியேமேடையிலேயே என்னைத் தழுவிக் கொண்டார். 'ஓவியம் உணர்ந்தவர் இறையெனக் கருதப் படுபவர்' என்று எழுதிக் கையொப்பமிட்டார். அவ்வளவு பெரிய அறிஞரின் அந்தப் பாராட்டு இன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. 'ஐயா, நீங்கள் தியானம் செய்தால் சுலபமாக வருமே!' என்றார். 'எப்படி ஐயா?' என்று விளக்கம் கேட்டேன். 'ஓர் உருவைப் பார்த்து நினைவில் இருத்திப் பின் அதனை அப்படியே தாளில் பதிப்பது மனம் ஒருமைப் பட்டவர்க்கே சாத்தியம். உங்களுக்கு அது கைவந்திருப்பதால் மனதை ஒருமுகப் படுத்தும் தியானக் கலை சுலபம்' என்றார்.

இப்படி பெரியவர்களை வரைந்து ஒப்பம் பெற்றது போலவே எங்கள் பள்ளிக்கு பார்வையிட வரும் அதிகாரிகளையும் வரைந்து ஒப்பம் பெறுவதுண்டு. அதைப் பாராட்டியவர்களும் உண்டு, கடுப்படித்தவர்களும் உண்டு. முதன்மைக்கல்வி அதிகாரியான ஒரு அம்மையாரை நான் தலைமை ஆசிரியராக இருந்தபோது எங்கள் பள்ளிவ்¢ழாவின் போது வரைந்து காட்டியபோது அவரது உயர்ந்த பதவியையும் மறந்து, வியந்து மனமாரப் பாராட்டினார். அதன் பிறகு போகிற பள்ளியிலெல்லாம் ஓவிய ஆசிரியர்களையெல்லாம் 'அங்க பாரய்யா, ஒரு தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து அப்படியே வரைந்து விட்டார். நீர் போட்டால் கீழே பெயர் எழுத வேண்டியிருக்குமோ?' என்று சீண்டியிருக்கிறார். அதற்கு மாறாக இன்னொரு முதன்மைக் கல்வி அதிகாரி- ஓய்வு பெறும் நிலையில் இருந்தவர்- முகமெல்லாம்ம் காலத்தின் முத்திரைகள்
கோடுகளாய்ப் பதிந்திருக்க அப்படியே நான் அதனைப் பதிவு செய்திருப்பதைப் பார்த்து முகம் சுள்¢த்தவராய் 'போய்யா! இது என்னை மாதிரியே இல்லை! இவ்வளவு வயதானவனாகவா நான் இருக்கிறேன்?' என்று முரண்டி கையொப்பமிட மறுத்துவிட்டார். அதுவும் ஒரு பாராட்டு என்று கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது?

- தொடர்வேன்.

No comments: