Tuesday, June 29, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 2:- சீட்டுக்கவி

முற்காலத்தில் புலவர்கள் அரசவையில் மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறுவார்கள். தமது தேவையை ஓலைச் சுருளில் கவி வடிவில் எழுதி அதையே கடிதமாகக் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதைச் சீட்டுக்கவி என்பர். மகாகவி பாரதி அவரது 15ஆம் வயதில் எட்டப்ப மன்னருக்கு தனது படிப்புக்கு உதவி கேட்டு, தனது கோரிக்கையைப் பாடலாகவே எழுதினார். அது இப்படித் தொடங்குகிறது:

"தென்னிளசை நன்னகரிற் சிங்கம் வெங்கடேசுரெட்ட
கன்னன் சுமூக சமூகம்"

என்று தலைப்பிட்டு, மன்னரின் பெருமையைப் பாடி,

"...........................................பெருவரை
விறற்றோள் மகிப! வெங்கடெசு ரெட்ட
மன்னர்தம் மன்ன! நீ மகிழ்வொடு காண்க.
இன்னணம் எளியேன் எழுதிய விண்ணப்பம்:

என்று தொடங்கி,
தமிழ் மொழியின் பெருமை, தமிழ் கற்றவர்களின் அவல நிலை, பிற மொழியான ஆங்கிலம்
கற்றவர்களின் மேலாண்மை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு,

"கன்ன!யான் அம்மொழி கற்கத் துணிந்தனன்
எனினும்
கைப்பொருள் அற்றான் கற்பதெவ்வகை?
பொருளான் அன்றிக் கல்வியும் வரவில;
கல்வியான் அன்றிப் பொருளும் வரவில;
முதற்கண் கல்வியே பயிறல் முறைமையாம்
அதற்குப் பொருளிலை ஆதலின் அடியேன்
வருந்தியே நின்பால் வந்தடைந்தனன்.
பெருந்திரு உடையைநின் பேரருள் உடைமையன்
மாந்தர்ப் புரத்தல் வேந்தர்தந் திருவருட்கு
இலக்கியமாதலின் எளியேற் கிந்நாள்
அரும்பொருள் உதவிநீ£ அனைத்தும் அருள்வையால்

...............................................................................
என்று வேண்டி மன்னரை வாழ்த்தி முடிக்கிறார்.

"பாரதி விடுத்த கோரிக்கயை ஏற்று எட்டையபுர மன்னர் பண உதவி செய்தாரா என்று நம்மால் அறியக் கூடவில்லை" என்று சீனி.விசுவநாதன் 'மகாகவி பாரதி வரலாறு' நூலில் குறிப் பிடுகிறார்.

பாரதிக்குப் பின் வந்த புதுமைப்பித்தனும் சீட்டுக்கவிகள் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதியது எந்த மன்னருக்கும் இல்லை. அவரது நண்பர் ரகுநாதனுக்குத்தான். மன்னருக்குத்தான் எழுத வேண்டுமா என்ன? தனக்கு வேண்டிய பொருளை வாங்கி வரும்படி ரகுநாதனுக்கு கவிதை வடிவில் எழுதினார்.

புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலி லாலாக்கடை அல்வா என்றால் மிகவும் பிரியம். ரகுநாதன் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்லி விட்டுப் போனார். சில தினத்துக்குள் புதுமைப்பித்தன் திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருந்தது.
எனவே, தான் புறப்படும் தினத்தைக் குறிப்பிட்டு விருதுநரில் தன்னைச் சந்த்¢க்கும்படி கூறி ரகுநாதனுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் வெறுங் கடிதமல்ல; இரண்டு பாட்டுக்களைக் கொண்ட சீட்டுக்கவி.

''அல்வா எனச் சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே! - அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.

சென்னைக்குப் பதினேழில்
சீட்டுக் கொடுத்துவிட்டு
உன்னைப் பிறகங்கே
சந்தித்து - பின்னை
ஊருக்குப் போவேன்
உறுதியாய் வா அங்கே
நேருக்கு மற்றவையப்
போ."

'ஆனால் குறிப்பிட்டபடி அவர் வரவில்லை' என்று எழுதுகிறார் ரகுநாதன்.

புதுமைப்பித்தன் கவிதைகளின் பாதிப்பால் நானும் சீட்டுக்கவி எழுதினேன். நான் ஆசிரியப் பணியேற்ற புதிதில் விருத்தாசலத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்த ஒரு இலக்கிய நண்பருக்கு அடிக்கடி அங்கிருந்து தினசரி பள்ள்¢க்கு வரும் மாணவர் வசம் கடிதம் அனுப்புவேன். அந்த நண்பர் சிறந்த கவிஞர். நான் படித்த சில நூல்களைப்பற்றி கவிதையிலேயே கடிதம் அனுப்பினேன்.

"நீட்டி மடக்கி
நெடுநேரம் கருதாங்கி
பாட்டென்று ஏதோ
பண்ணிவச்சேன் - சீட்டுக்
கவிபாடும் என்று
கவியும்மைக் கொல்கின்றேன்
செவிசாய்ப்பார் வேறெனக்கு யார்?

பித்தனது பாணியிலே
பேத்தித் தொலைச்சிருக்கான்
சத்திருக்கோ என்று
சலியாதீர் - பித்துகுளிப்
பயலெல்லாம் பாட்டெழுதி
பல்லை உதிர்க்கையிலே
இயல் எழுதக் கூடாதோ
நான்?

வெண்பா இலக்கணம் ஏதும் கற்றவனல்ல நான். 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றபடி சந்தத்தை அடிப்படையாகக் கொண்டு எதுகை மோனையோடு எழுதி அனுப்பினேன். அவர் இப்படி பதில் கவிதை எழுதினார்,

'சீட்டுக்கவி எழுதி
விட்டீர் சிறப்பாக!
பாட்டைப் பாராட்டுதலும்
வேண்டுமோ? -பாட்டைநீர்
பாடாய்ப் படுத்திய
பாட்டினைக் கண்டபேர்
ஓடாமல் நிற்பரோ
தான்'.

என்று கொஞ்சம் இடித்திருந்தார். ஆனலும் அடுத்த பாட்டில் ஆறுதலாக,

நம்மிருவர் பாட்டிலும்
நல்லோர் வகுத்திட்ட
செம்மைசால் இலக்கணம்
சிதையினும் - உண்மையில்
சித்தந்தனில் அயர்வு
கொள்ளற்க உம்கவியில்
பித்தன்தனைக் காண்கின்றேன்
நான்.' - என்று எழுதியிருந்தார்.

சிறுபிள்ளை விளையாட்டுதான்! ஆனால் அப்போது அது ஒரு உத்வேகம்! நண்பர் ஹரி போன்றவர்கள் வெகு அநாயசமாக இந்த சீட்டுக்கவி விளையாட்டை விளையாடி இருப்பார்கள்.

- மேலும் சொல்வேன்.

No comments: