Wednesday, June 02, 2004

நான் ரசித்த வருணனைகள்-உவமைகள் -23.

'மௌனி' யின் படைப்புகளிலிருந்து:

1. நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?

- 'அழியாச்சுடர்' கதையில்.

2. விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவதுதானா ஆடவர் வாழ்க்கை?

- 'சாவில் பிறந்த சிருஷ்டி'.

3. அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட
ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்துசென்றது.

- 'மனக்கோலம்'.

4. காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும் , அது நகர்ந்து
சென்று கொண்டேதான் இருக்கும்.

- 'பிரபஞ்ச கானம்'.

5. ஹிருதயத்தின் சங்கீத ஒலி சப்தமின்றி வெள்¢வியாபகம் கொள்ளும் என்ற நினைப்பினால்,
அதை விடாது பிடித்து விரல் நுனி வழியே பிடில் தந்திகளிலே ஏற்றி நாதரூபமாக்கச் சிரமப்-
பட்டான். நீல வானத்தை அணுகி மறைந்த சூரிய ஒளியில் சலிக்கும் அனேக வித வர்ண
மேகங்களைத்தான் கட்டி நின்றன அவன் பிடித்த ஸ்வரக் கற்பனைகள். உயரே பறந்து
மறைந்தும், காதில் இனிக்கக் கூவும் இன்னிசைப் பறவைகளே போன்று அவன் கீதம் சபை
-யோர்களைப் பரவசமாக்கியது.

- 'நினைவுச் சூழல்'.

6. தன்னைப் போன்றே திகைத்து வீதி மரங்களும் நகரமுடியாது நின்றிருப்பதை சேகரன்
பார்த்தான். லேசாக மரங்கள் காற்றில் அசையும்போது. அதன் தலையிலிருந்து பூக்கள்
பொலபொலவென்று உதிருவது வெகு விநோதமாகத் தெரிந்தது. எதிர் பங்களாவிலிருந்து
நாய் குரைப்பு சத்தம் கேட்டது. எதிரொலியில் அப் பங்களாவே நாயெனக் குரைப்பது
போலிருந்தது.

- 'பிரக்ஞை வெளியில்'.

7. ஒரு சோகமான கீதம் அவன் பாடிக் கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி கனவிற்-
கும், நனவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டை துடைக்கவல்ல அவனுடைய கானம்,
சாதாரணமானதல்ல.

- 'எங்கிருந்தோ வந்தான்'.

8. எதிரில் மரங்கள் வெளிச்சத் திரையின் முன்பு, கருப்புருவங்கொண்டு தெரியலாயின.வெளிச்சம்
கண்ட வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனித்தால் அன்று மிகச் சோதி கொண்டது போன்ற
காலைச் சூரியன் உதயமாவதைக் காணக் கண் கூசியது. மேலே அண்ணாந்து பார்க்கும்
போதும் ஒரே வெளிச்சத் தோற்றமேயன்றி தனித்தோற்றம் ஒன்றும் காணக்கூடவில்லை.

- 'கொஞ்ச தூரம்'.

9. விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும். சுருதி, விலகி எட்டியா
நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது! சப்தத்திலிருந்து சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய
வெளியில் மௌனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க் கோழிகள் இடைவிடாது புலம்புகின்
றன. அவன் மனவெளி இருளில் ஒன்றி நின்று ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம்
அச்சம் கொள்கிறது. மௌனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை
மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்
அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான்.

- 'மனக்கோலம்'.

10. பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடின்றித் திரியும் பறவை போன்ற ஞான உணர்வைப் பிடித்துக்
கூண்டில் அடைத்ததுதான் அந்தக் காவியம். சாசுவதானந்தத்தை வாக்கியத்தில் புதைத்துக்
கொண்டு களிப்பதில், கலைஞர்கள் கடவுளுடைய சிருஷ்டி ஆனந்தத்திற்கு ஒப்பானதை
உணர்கிறார்கள் போலும். எவ்வகை சிருஷ்டியும் அழிவிற்கு விரைந்து செல்வதாயினும்,
அழிவின்றித்தான் அவர்கள் மனதில் அக்கண ஆனந்தம் பரவுகிறது.

- 'மாபெருங்காவியம்'.

- தொடர்வேன்.

- அடுத்து கு.அழகிரிசாமி ய்¢ன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

V .Sabanayagam

No comments: