Tuesday, June 22, 2004

நான் ரசித்த வருணனைகள் - உவமைகள் - 24

நான் ரசித்த வருணனைகள் - உவமைகள் - 24
--------------------------------------
கு.அழகிரிசாமி படைப்புகளிலிருந்து:
=========================

1. அவள் (ஜானகி) சிரித்தால் முத்து உதிர்கிறது; நடந்தால் அங்கே செந்நெல் விளைகிறது. இருவரும் நடந்து வரும் போது மண்ணில் விழும் தடம், பூமாதேவியின் உள்ளங்கையில் அதிர்ஷ்ட ரேகை ஓடுவது போல் இருக்கிறது.

- 'திரிவேணி சங்கமம்' கதையில்.

2. அந்தப் பக்கத்து கிராமங்களுக்கெல்லாம் அந்த முத்துமாரி ஒரு தெய்வம் மட்டுமல்ல, வழக்குத் தீர்க்கும் நீதிபதியும், நோய் தீர்க்கும் வைத்தியரும், திருடனைப் பிடித்துக் கொடுக்கும் உளவதிகாரியும் கூட அவள்தான்.
- 'அக்கினிப் பிரவேசம்'.

3. அழகில்லாவிட்டாலும், ஒரு கன்னிப் பெண்ணோடு தெருவில் சிரித்துப் பேசிக் கொண்டு வருவது ஒரு சுகமான அனுபவம்...

- 'இரண்டு பெண்கள்'.

4. மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். அதன் பெயர் பணம்......

- 'ஞானரதம்' நாடகத்தில்.

5. இந்த எண் சாண் உடம்பில் சப்த சமுத்திரங்களும் அலை மோதுகின்றன. பிரபஞ்ச கானத்தையே இந்தச் சின்னஞ்சிறு வீணை இசைக்க வேண்டியிருக்கிறது. தாங்க முடியாத மகாசக்திகள் இந்த உடம்பின் மன அரங்கத்தில் நவரச நடனங்களையும் ஆட முந்துகின்றன....

- 'கவிச்சக்கரவர்த்தி' நாடகத்தில்.

6. பிரம்மனுடைய சிருஷ்டியில் இந்தப் பழத்தைப் போன்ற துர்நாற்றம் மிகுந்த வேறொரு வஸ்து உலகத்திலேயே கிடையாது! அதே சமயத்தில் பிரம்ம சிருஷ்டியில் இதற்கு இணையான சுவை கொண்ட பண்டமும் கிடையாது. 'வாழ்க்கையும் இப்படித்தான் முரண்பாடுள்ளதாய்
இருக்கிறது' என்பதை டோரியன் பழம் நமக்கு உணர்த்துகிறது.

- 'நாடே ஒர் ஊர்' பயணக்கட்டுரையில்.

7. அது என்ன கிழமை, எந்த மாதம், எந்தத் தேதி என்பவையெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. சிறு குழந்தையாக இருந்தால், அப்பா பச்சைப் பலப்பம் வாங்கிக் கொடுத்த நாள் என்றோ, எதிர் வீட்டு ரமா ஜரிகைப் பாவாடை கட்டிக் கொண்டு வந்த நாள் என்றோ சொல்லிவிடும். இந்தச் சமயத்தில் நானும் கூட சிறுகுழந்தையைப் போல்தான் சொல்ல வேண்டியிருக்கி - ரஷ்யாக்காரன் முதல் முதலில் 'ஸ்புட்னிக்'கை விட்டதற்கு நாலைந்து நாட்கள் கழித்து என்று ஞாபகம்.

- 'கார் வாங்கிய சுந்தரம்' கதையில்.

8. இப்போது முதலியார் வீட்டில் அவர் குடும்பமும் பிள்ளைகள் குடும்பமுமாக நான்கு குடும்பங்கள் ஆகிவிட்டன. பிள்ளைகள் மூன்று ஆயுதங்கள். மனைவிமாரைச் சேர்த்து ஆறு ஆயுதங்கள். இதிலே மனைவிமார் என்ற ஆயுதங்கள் நேரடியாக முதலியார் மீது பாய்வதில்லை.
ராக்கெட்டுகள் விண்வெளிக் கோள்களை ராக்ஷஸ வேகத்தில் வெளியே தள்ளுவதைப் போல், கணவன்மாரைத் தள்ளிவிடும் கருவிகளாக இருந்தார்கள்.

- 'அபார ஞாபகம்'.

9. பிறக்கும் போதே இப்படி அறுபது வயதுக் கிழவராக, அப்பாவி மனிதராகப் பிறந்து, பிறந்த நாள்முதல் மளிகைக் கடை ஆறுமுகம்பிள்ளை வீட்டுத் திண்ணையிலேயே வசித்து வருவது போல் எல்லோருக்கும் தோன்றியது.

- 'தரிசனம்'.

10. ஏதோ ஓர் அரண்மனையில் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் மங்கள காரியத்தை எக்காளம் ஊதி அறிவிப்பது மாதிரி, உல்லாசத்தும் அங்குரார்ப்பண கோலாகலத்துக்கும், அடையாளம் போல களியாட்டமாடும் அந்த மோகன ராகத்தை, அன்று அந்த மாலை நேரத்தில் அனுபவித்த அனுபவமே தனி. சிறிது நேரம் பொன்னூசலாடி மகிழ்வது, சிறிது நேரம் யாரையோ மறைமுகமாகக் கேலி செய்து விட்டு முகத்தைத் திருப்புவது.......

- 'மீனா'.

- தொடர்வேன்.

- அடுத்து நா.பா வின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: