Friday, November 03, 2006

கடித இலக்கியம் - 18

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 18

நாகராஜம்பட்டி
16-3-77

அன்புள்ள சபா,

வணக்கம்.

பக்தி செய்வது ஒரு நல்ல மனநிலை. அது உத்தமமான பலன்களை உண்டாக்கும். பக்தியில் அதீத நிலை உண்டாகிற போது அதற்குப் பயப்படாதீர்கள். உஷத் காலமும், ஒரு குளியலும், குத்துவிளக்கும், கூப்பிய கரங்களும் மனசுக்கு அபாரமான தெம்பையும் நம்பிக்கையையும் ஒரு தெளிவையும் தரும். அதை மேலும் உங்கள் உதவியால் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக்க முடியும் என்று பாருங்கள். கூடச் சேர்ந்து நீங்களும் பிரார்த்தியுங்களேன். ஓய்ந்த நேரத்தில் இதிஹாஸ சம்பவங்களையும் அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களையும் அழகுகளையும் உங்கள் நயம் கலந்து விவரித்துச் சொல்லுங்களேன். 'தெய்வம் நமக்குத் துணை பாப்பா, ஒரு தீங்கு வரமாட்டது பாப்பா' என்று சிறு வயதிலேயே நாம் படித்ததை ஞாபகப் படுத்துங்களேன். அன்பின் மகத்தான பரிமாணங்களில் சகிப்புத்தன்மை அதற்கு எப்பேர்ப்பட்ட காவிய உருவைத் தருகிறது என்று முடிந்தால் மெள்ளக் கற்றுக் கொடுங்களேன்.

உங்களது ரகசியமான ஒரு குரல் கூட துயரம் தோய்ந்து தனக்குத் தானே எப்போதேனும் பேசிக் கொள்ளக் கூடாது. நீங்கள் உல்லாசி. அது உங்களுக்கே மறந்து போய்விட்டதா? விளையாட்டு மைதானத்தில் பந்தாடுகிற உங்களுக்கு விசன வேதாந்தத்தின் பல்லவி எதற்கு? வேதாந்தத்தில் தைரியமானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (உண்மையில் வேதாந்தம் என்பது தைரியம் அன்றி வேறு எதுவும் கலவாததே ஆகும்.)

நீங்கள் எம்.ஏ படிப்பதுதான் மிகவும் பரிவுக்குரிய விஷயமாயிருக்கிறது. நிறைய வேலை வாங்குகிறது போலும். கடவுள் எதனாலோ என்னை அந்தப் பக்கம் போக விடவில்லை. உங்கள் முயற்சிகள் நிறைவேறவும், அதனால் வாழ்வு மேலும்மேலும் நிறைந்து வளரவும் வாழ்த்துகிறேன்.

என் வீட்டில் இப்போது ஏராளமான உயிர்கள் இருகின்றன. இருபதுக்கு மேலே புறாக்கள், பதினாறு கோழிக்குஞ்சுகள், மூன்று கோழிகள், ஒரு சேவல், பீமா என்று ஒரு நாய்க்குட்டி. மற்றும் இங்கே நானும் என் மனைவியும் மகளும். சிவகுமார் திருப்பத்தூரில். இந்தக் குடும்பத்தைக் குந்தகமின்றிக் கொண்டுபோய்க் கொண்டு நானும் குதூகலமாயிருப்பது ஒன்றே எனக்குப் போதும் போல் தோன்றுகிறது.

வருத்தங்கள் வேண்டவே வேண்டாம். எப்போதும் விளையாடிக் கொண்டு வாருங்கள். அல்லது பக்தி செய்துகொண்டு வாருங்கள். எதைச் செய்தாலும் அதைப் பக்தியாக்கிக் கொள்கிற ஒரு பரம ரகசியத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பிரச்னை பெரிது இல்லை.

நான் உங்களுக்கு உபதேசங்களாக எழுதுகிறேனா? அப்படி ஒரு குரல் ஜாடையின் குறை என் பாஷையில் இருக்குமானால் மன்னியுங்கள். நான் எனக்கே சில மந்திரங்களை மறுபடியும் மறுபடியும் உருவேற்றிக் கொள்கிறேன். எதிரே ஒரு ஆள் வேண்டும். தங்களை நண்பராய் அடைந்த பேற்றினுக்கும் இவ்வாறெல்லாம் ஒரு நட்பில் பேசிக்கொள்ள முடிகிறதே என்னும் பேற்றினுக்கும் பெரிதும் நன்றி சொல்லிக் கொண்டே ஒவ்வொன்றையும் நான் எழுதுகிறேன்.

***** ***** *****

19-3-77

வாழ்விலேயே அதிக சந்தோஷத்தோடும் நம்பிக்கையோடும் நாம் இருக்கிற தருணம் மற்றவர்களுக்குச் சந்தோஷம் பற்றியும் நம்பிக்கை பற்றியும் நாம் சொல்கிற தருணம் தான் என்று, மூன்று நாட்களுக்குப் பிறகு மறுபடியும் உங்களுக்குத் தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும்போது தோன்றுகிறது. அச்சத்தை வென்று விட்டால் எல்லாம் பரிபூரண ஆனந்தமே. பாரதியின் அச்சமில்லை பாட்டை நம் குழந்தைகளுக்கெல்லாம் இப்போதிருந்தே சொல்லிக் கொடுக்கவேண்டும்.

மனசைப் பரிசோதிக்கும் போது - அல்ல, அதன் அடிநிலை அறியும்போது, வரண்டு விரக்தியுற்ற மனமாயினும் அதனுள் உணர்ச்சிகளின் மாயம் எவ்வாறெல்லாம் மறைந்திருக்கும் என்பதை நான் சமீபத்தில் அறிந்து கொண்டேன். இதனால், வயசும் காலமும் நமது வர்ணங்களை மாற்றிவிட முடியாது என்பதையும் தெரிந்து கொண்டேன்.

நான் மிகச் சிறந்த விஞ்ஞானியாயினும் பக்தி செய்ய விரும்புவேன். எனது பக்திக்கு எது பொருள் என்னைக் கேட்காதீர்கள். அது பக்தி செய்கிறது என்பது ஒன்றே நான் அறிந்தது. மற்றவையெல்லாம் எனது இதிஹாஸங்களும், கவிகளும், உலக சமயங்களும் இதுவரை எனக்குத் தந்த வர்ணணைகளின் மேல் நான் கட்டும் மாய மாடமொன்றில் நின்று தொலைவையளக்கும் என் தூரப்பார்வைகளேயாம்.

***** ***** *****

6-4-77

இந்தக் கடிதத்தை எழுதி எதிலோ ஒரு நோட்டுப் புத்தகத்தில் வைத்து விட்டேன். நேற்றுத்தான் கவனமாய்த் தேடி கண்டுபிடித்தேன்.

அடேயப்பா, இடையில் உலகத்திலும் நமக்குள்ளும் எத்தனை பெரிய விஷயங்கள் நடைபெற்றிருக்கின்றன! நமது உறவும் சம்பாஷணைகளூம் அபூர்வமானவைதாம். எவ்வளவோ விஷயங்களில் ஆழ்ந்து போயினும், உங்களைப் பற்றி நினைக்கின்ற பொழுதும் உங்களுக்கு எழுதுகிற போதும் அதிலும் ஓர் அடிநிலை வரைக்கும் ஆழ்ந்து போகிறேன். மேலே எழுதியிருக்கிற விஷயங்களை நீங்கள் ஒரு காரணமாயிருந்து தெரிவிக்கிற விஷயங்களாகவே கருகிறேன். இதுதான் இதற்கு முத்தாய்ப்பு.

விரைவில் சென்னை போகலாம் என்று இருக்கிறேன். அது மே விடுமுறைத் தொடக்கம் வரைக்கும் அதிக பட்சம் ஒத்திப் போகும். நீங்கள் பரீட்சைக்கு மதுரை போகிறீர்கள் இல்லையா? நல்லது. காரியங்கள் நன்கு நடக்கட்டும்.

பரீட்சையும் எழுதுங்கள். ஒரு பதிலும் எழுதுங்கள்.

- பி.ச.குப்புசாமி.

No comments: