Friday, October 29, 2004

களஞ்சியம் 10 - அசலும் நகலும்

கவிஞர்கள் தங்களுடைய முன்னோடிகளின் படைப்புகளிருந்து சொல்லாட்சிகள், உவமைகள், வருணனைகள், கருத்துக்களை அழகாக எடுத்தாண்டிருப்பதைப் பார்க்கிறோம். திருக்குறள் அப்படி கம்பனது காவியத்திலும் பிறகாப்பியங்களிலும் நிறைய எடுத்தாளப் பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் தன் சினிமாப் பாடல்களில் பழம்பாடல்களையும் பாரதியின் பாடலையும் முன் மாதிரியாகக் கொண்டு அதே சொல்லாட்சி, சந்தம், யாப்புகளை அசலைப் போலவே - இன்னும் சொன்னால் அசலை விடவும் அற்புதமாய்ப் போலச் செய்திருக்கிறார். அவரது 'அத்திக்காய் ஆலங்காய்...' பாடலும், 'உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ.....' போன்றவை தனிப்பாடல்கள் சிலவற்றின் நகலாக இருப்பதை, தனிப்பாடல் திரட்டுகளைப் படித்தவர் அறிவர். அவரது 'மெதுவா மெதுவா தொடலாமா?' என்பதும், 'வளையல், வளையல் கல்யாண வளையலுங்க....' என்பதும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் ஆங்கிலக் கவிதைகளான 'பல்லக்குத் தூக்கிகள்'(Palanquin Bearers) - 'Lightly O lightly we bear her along' என்பதையும், 'வளையல் விற்பவர்கள்'(Bangle sellers) - 'Bangle sellers are we, who bear the shining loads to the temple fair...' என்பதையும் நினைவூட்டுவன.

இவையெல்லாம் ஓரளவே போலச் செய்யப்பட்டவை. ஆனால் பாரதியின் கண்ணன் துதியான,

'காயிலே புளிப்பதென்னே? கண்ணபெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ணபெருமானே!'

என்ற வரிகளை அப்படியே அடியற்றி அதே பாணியில் 'அம்பிகாபதி' திரைப்படத்தில் பாடியுள்ள பாடல் அற்புதமானது.

'கண்ணிலே இருப்பதென்ன? கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ? கன்னி இளமானே!
கார்குழலை ஏன் வளர்த்தாய்? கன்னி இளமானே
காளையரைக் கட்டுதற்கோ? கன்னி இளமானே!
பல்வரிசை முல்லையென்றால் கன்னி இளமானே,
பாடும் வண்டாய் நான் வரவா? கன்னி இளமானே!
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே!
அன்ன நடை பின்னுவதேன்? கன்னி இளமானே
ஆர்விழிகள் பட்டனவோ கன்னி இளமானே!'

- காலம் பல கடந்தும் காதுகளில் ரீங்கரிக்கிற இப்பாடலை மறக்க முடிகிறதா?

இன்றைய நவீன கவிஞர்களும் இதே போல சங்கப் பாடல்களை அடியற்றி போலச் செய்திருக்கிறார்கள்.

பிசிராந்தையார் என்ற புலவரை 'இவ்வளவு வயதாகியும் உங்களது தலை முடி நரைக்காதிருப்பது எப்படி?' என்று கேட்டபோது அவர் அளித்த பதிலாக ஒரு பாடல் 'புறநானூறு' தொகுப்ப்¢ல் உள்ளது:

'யாண்டு பல ஆக
நரையில ஆகுதல்
யாங்காகியர் என
வினவுதிராயின்
மாண்ட என் மனைவியடு
மக்களும் நிரம்பினர்
நான் கண்டனையர்
என் இளையரும்
வேந்தனும் அல்லவை
செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய
கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே!'

இதை ஒட்டி கவிஞர் சிவசக்தி என்பவர் எழுதிய ரசமான கவிதை இது:

`யாண்டு சில ஆகியும்
நரை பல ஆகுதல்
யாங்கு ஆகியர் என
வினவுதிர் ஆயின்.....
மாண்பிலா மனைவி
தறுதலைத் தனையர்
சுரண்டிடும் சுற்றம்
நன்றியிலா நண்பர்
அரசியல் பேய்கள்
ஆகியோர் உறைகாடு
யான் வாழும் காடே!

காலத்துக் கேற்ற பாட்டு தானே!

கவிஞர் மீராவும் இதே போல `செம்புலப் பெயல் நீரார்' என்ற சங்கப் புலவரின் பாடலை ஒட்டி அங்கதச் சுவையடு ஒரு கவிதை எழுதியுள்ளார்.

`யாயும் யாயும்
யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
யானும் நீனும்
எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே! - இது சங்கப் பாடல்.

மீரா பாடுகிறார்:

`என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
நானும் நீயும் உறவின்முறை
எனது ஒன்று விட்ட
அத்தை பெண் நீ
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!

- மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: