Monday, October 18, 2004

வருணனைகள் உவமைகள் - 29: வண்ணதாசன்

நான் ரசித்த வருணனைகள் உவமைகள் - 29: வண்ணதாசன் படைப்புகளிலிருந்து

1. தொம்மென்று அறைக் கதவை வீசியடைத்தான். அதிர்ச்சியில் கொடியில் கிடந்த பாண்ட்ஸ், ஹேங்கரிலிருந்து வழ வழத்து- ஒரு கீழிறங்குகிற பாம்பை நினைவூட்டியபடி- தரையில் சரிந்தது.

- 'பூனைகள்' கதையில்.

2. டைப்பிஸ்ட் கம்-க்ளெர்க் என்று ஒரு அவசரமான நியமனத்துடன் யாரும் எதிர்பாராத அலுவலகச் சூழ்நிலையில் நின்றபோது 'வேறு ஆளே கிடைக்கலையா, கருவாட்டுக் கூடையிலே பொறுக்கின மாதிரி' என்று யாரோ பின்னால் சொல்ல அவள் ஒவ்வொரு சீட்டாக வணங்கி அறிமுகமாகிக் கொண்டிருந்தாள்.

- 'சில பழைய பாடல்கள்'.

3. அந்தக் குவார்ட்டர்ஸ் வீட்டுக்கு முன் செல்லப்பா நிற்கையில் உள்ளே வரவிடாமல் தடுப்பதுபோல ஒரு நார்க்கட்டில் குறுக்குவாட்டில் நிறுத்தப் பட்டிருந்தது. அதன் கால்கள் நான்கும் முட்டவரும் கொம்புகள் போன்று ஒரு ஆயத்ததுடன் இருந்தன.

- 'தற்காத்தல்'.

4. அது அவள் நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை முழுவதுமாக அள்ளி மறுபடி மேலே வீசிக் கொள்கிற நேரத்தின் படம். ஓரு கை தோளுக்குச் சென்று கொண்டிருக்க, ரவிக்கைக்கு முழுக்கனத்தைக் கொடுத்திருந்த மார்பும் தோளின் செழுமையும் பக்க வாட்டில் தெரிய, புடவை ஒருசந்தோஷமான பாய்மரம் போலப் பின்பக்கம் விசிறி அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் மூடியிருக்கும். வாய்
கொள்ளாத சிரிப்பில் கன்னத்து ரோஸ் பவுடர் பூச்சுத் திரண்டு மேடிட்டு ஓரிரண்டு ஜிகினா மினுக்கும்.

- 'போய்க் கொண்டிருப்பவன்'.

5. தாத்தா முன்னைப்போல இப்போது சவரம் செய்து கொள்வதுகூட இல்லை. சினிமாக்களில் நாலு பக்கமும் இருந்து நாலுபேர் ஒருத்தனை அமுக்கிப் பிடிப்பதுபோல தாத்தாவின் தோற்றம் சகல பக்கங்களிலும் பிடிபட்டு அமுங்கிக் கொண்டிருந்தது.

- 'நிறை'.

6. லோகாவைப் பார்க்கமல், இன்னும் ஜன்னல் கம்பியின் துரு ஏறிய திண்மையில் விரலைச் சுண்டிக் கொண்டிருந்தான். நாலு கம்பியிலும் விரல் வேகமாக வழிந்து ஒரு இசையின் துவக்கம் போலச் சப்தம் மறுபடி மறுபடி எழுந்தது. இந்த இயக்கத்துக்குச் சம்பந்த மில்லாது ஓடுகிற ஒரு கசந்த நாடாபோல அவனுடைய பேச்சிருந்தது.

- 'திறப்பு'.

7. சட்டென்று எல்லாம் முடிந்து போயிற்று. அவனுக்கு வேலை கிடைத்து வேறு ஊருக்குப் போனதுடன் எல்லாம் நின்று விட்டது. இவளுக்கு மட்டும் அந்த முகத்தின் துரத்தல் இருந்தது. கொம்புகளைப் பாய்ச்சுவதற்குக் குனிந்த தலையுடன் துரத்திக்கொண்டே வருகிற காட்டு மிருகம்போல, அவளைக் கொஞ்ச நாள் அந்த முகம் அலைக்கழித்தது. அப்புறம் அதையும் தொலைத்தாயிற்று. மலையிலிருந்து கழற்றி ஒவ்வொன்றாக வீசுவதுபொல இந்த வாழ்க்கையின் வீச்சு எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து கொண்டிருந்தது.

- 'அந்தந்த தினங்கள்'.

8. அவர்களைச் சுற்றி, ஏப்ரலின் மலர்ச்சியைக் கிளை நுனிகளில் ஏந்திக் கொண்டு கம்மென்று வாகை மரங்கள் வாசனையைப் பெய்து கொண்டிருந்தது. வெகுதூரம் வரைகூடவே வந்து நம் விரட்டலுக்குப் பின் மனமின்றித் திரும்புகிற வீட்டு நாய்க் குட்டியாக வேப்பம்பூவின்
வாசனையும் விட்டுவிட்டுக் கூடவே வந்துபோய்க் கொண்டிருந்தது.

- 'சங்கிலி'.

9. தேர் நிலைக்கு வந்து நின்றிருந்தது. தேரின் வடம் ஒவ்வொன்றும் நீளம்நீளமாக அம்மன்சன்னதி வரைக்கும் பாம்புமாதிரி வளைந்து வளைந்து கிடந்தது. தேர் சகலஅலங்காரங்களுடனும் தோரணங்களுடனும் வாழை மரத்துடனும் நிலவு வெளிச்சத்தில் மௌனமாகப் பேசாமல் நின்றது. கோமுவோடு கோபித்துக் கொண்டு சண்டைபோட்டதுபோல் தோன்றியது.

- 'நிலை'.

10. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிவருகிற இவனுடைய கோபமும் படபடப்பும் கவனிக்க வைத்தன. டவுன் பஸ்ஸில் சில கண்ணாடிகள் நொறுங்கி அப்படியே நிற்குமே அதுபோல பேசுகிறவனுடைய முகம் ஆயிரம் நடுங்கலுடன் நொறுங்குவது தெரிந்தது.

- 'பளு'.

- தொடர்வேன்.

-அடுத்து ஜெயமோகன் படைப்புகளிலிருந்து.

-வே.சபாநாயகம்.

1 comment:

Thangamani said...

வண்ணதாசன் ஒரு கண்ணாடியைப்போல, இல்லை ஒரு முப்பரிமாண உலகத்தை, அதன் வாசனைகளோடு, அதன் அத்தனை நிறங்களோடும், சுவைகளோடும் நம் கண் முன் பரப்புவதில் வல்லமை மிக்கவர். பல சமயங்களில் அவரது எழுத்தில் நான் கரைந்துவிடுகிறேன். நன்றி இந்தப்பதிவுக்கு.