Monday, October 18, 2004

நினைவுத் தடங்கள் - 24

இளமைப் பிராய நினைவுகள் எல்லோருக்கும் இனிமையானது. அது மீண்டும் வராதா என்று ஏக்கமும் ஏற்படுவதுண்டு. 'மீண்டும் வாழ்ந்தால்.........' என்று ரைட் ஆனரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார். அது போல மீண்டும் இளமைப் பருவத்திலிருந்து வாழ்க்கை தொடர முடிந்தால்............ என்று நடக்க சாத்யமில்லாத நினைப்பு எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. அவ்வளவு சுவாரஸ் யமான இளமை அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். காரணம் இன்றைய வாழ்க்கையை வடிவமைத்தது அப்போது ஏற்பட்ட சூழ்நிலையே. குறிப்பாக இளமைக்கால கல்விச் சூழ்நிலை ஒருவரது வாழ்வில் முக்கியமானது. எனக்கு அமைந்த இளமைக் கல்விச் சூழ்நிலை இன்றைய- நெறியான ரசனை மிக்க வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. அதற்கு நான் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் செலுத்த வேண்டியது எனக்கு அட்சராப்பியாசம் செய்து வைத்து எண்ணும் எழுத்தும் பிழையறக் கற்பித்த எனது ஆசான் சி.எஸ்.சாமிநாத அய்யர் என்கிற வீரசைவருக்குத் தான்.

அப்போதெல்லாம் கல்விச் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தவர்கள் லிங்காயத்துகள் என்கிற வீரசைவர்கள்தான். சில பகுதிகளில் அவர்கள் சாத்தாணி வாத்தியார்கள் என்று அழைக்கப் பட்டார்கள். எங்கள் ஆசிரியர் எங்கள் அப்பாவின் இளமைக் காலத்திலேயே சிதம்பரத்திலிருந்து இளைஞராக எங்கள் ஊருக்கு வந்தவர். மூன்று தலைமுறையினர்க்குக் கற்பித்தவர். ஊர்ச் சாவடியை பள்ளிக்கூடம் நடத்த மக்கள் அவருக்கு அளித்தார்கள். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் அரசு அங்கீகாரம் இல்லாத திண்ணைப் பள்ளிக்கூடமாகத்தான் நடத்தினார். பிறகு அதை அரசு உதவி பெறும் பள்ளியாக- 'இந்து எய்டட் எலிமெண்டரி ஸ்கூல்' ஆக உயர்த்தினார்.

'கோல்டுஸ்மித்' எழுதியுள்ள 'கிராமத்துப் பள்ளி ஆசிரியர்" (The village school maaster) போல சகலமும் அறிந்தவர் அவர். பள்ளி அலுவலுக்கிடையே தேடி வரும் கிராம மக்களுக்கு, பஞ்சாங்கம் பார்த்து நாள் பார்த்துச் சொல்வார். 'பிராமிசரி நோட்' எழுதித் தருவார். இன்னும் படிப்பறிவற்ற அம் மக்களுக்குப் பல வகையிலும் உதவி, அவர்கள் மத்தியில் ஒரு மரியாதையை ஏற்படுத்துக் கொண்டிருந்தார்.

அவரது பள்ளியில் படிப்பு ஆறு வருஷங்கள். அரிச்சுவடி என்பதுதான் தொடக்க வகுப்பு. ஒரு ஆண்டு முழுதும் தமிழ் அரிச்சுவடி முழுதும் கற்ற பிறகே முதல் வகுப்பு. அகரம் தொடங்கி 247 எழுத்துக்களையும் ஆற்றுமணல் பரப்பப் பட்ட தளத்தில் உரத்து உச்சரித்த படியே எழுதிப் பழக வேண்டும். அப்படியே நூறு வரையிலான எண்ணிக்கை யும் மணலில் எழுதியே பாடமாக வேண்டும். இதில் தேர்ச்சியானதும் அரிச்சுவடியில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள் எனப்படிப் படியாய் வாக்கிய அமைப்புவரை படிக்கப் பயிற்சி தருவார். இடையில் கதையும் பாட்டும் மூலம் கதை கேட்கவும் சொல்லவும் பயிற்சி. முதல் வகுப்பில் 'உலகநீதி', இரண்டாம் வகுப்பில் 'ஆத்திச் சூடி', மூன்றாம் வகுப்பில் 'கொன்றை வேந்தன்', நான்காம் வகுப்பில் 'வெற்றி வேற்கை', ஐந்தாம் வகுப்பில் 'விவேக சிந்தாமணி' மற்றும் 'மூதுரை', 'நல்வழி' ஆகிய நீதி நூல்களும் ஏதாவது ஒரு சதகம் அவரவர் வீட்டு மதத்துக்கேற்ப 'அறப்பளீசுர சதகம்', திருவேங்கட சதகம்' என்று ஆறு ஆண்டுகளில் தமிழ் பிழையற எழுதவும் படிக்கவும் நீதி நூல்களில் பயிற்சியும் பெற்றேன். அது இன்று எனது இலக்கிய ரசனைக்கும் படைப்புக்கும் பெரிதும் காரணமாய் இருக்கிண்றன. தினசரி காலையில் அவரே கைப்பட தலைப்பு எழுதிக் கொடுத்து அனைவரும் காப்பி எழுத வேண்டும். இதனால் கையெழுத்து அழகாய் எழுதப் பயிற்சி கிடைத்தது.

இன்றைய ஆரம்பக் கல்வியில் எண்ணிலும் எழுத்திலும் இத்தகைய முறையான பயிற்சி இல்லாதால் தான் இன்றைய இளைஞர்க்கு உச்சரிப்பிலும், எழுத்திலும், கணிதத்திலும் இலக்கியத்திலும் தடுமாற்றத்தைப் பார்க்கிறோம். ஆசிரியர்களிடமும் அத்தகைய அர்ப்பணிப்பையும் சேவை மனப்பாங்கையும் இன்று காண முடியாமையும் இளைஞர்களின் கல்வித் தரக் குறைவுக்குக் காரணம். ஒரு மாணவனுக்கு மாதம் எட்டணா மட்டும் சம்பளமாய் வாங்கிக் கொண்டு கற்பித்து வல்லவனாய் ஆக்கிய அந்த ஆசிரியருக்கு மாறாக- இன்றைய ஆயிரக்கணக்கில் கறந்து கொண்டு பிள்ளைகளை வெறும் மனப்பாட எந்திரங்களாய் ஆக்கிவரும் கான்வெண்ட் படிப்பை எண்ணும்போது மனம் வெதும்பத்தான் முடிகிறது.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்

No comments: