Wednesday, December 08, 2004

களஞ்சியம் - 12

எனது களஞ்சியத்திலிருந்து - 12: விவேகசிந்தாமணி விருந்து:

1. அறிமுகம்:

தமிழின் சிறந்த அற நூல்களுள் 'விவேக சிந்தாமணி' குறிப்பிடத்தக்கது. அதன் எளிமை கருதியும், அது கூறும் மனங் கொள்ளத்தக்க சிறந்த அறிவுரைகளாலும் எல்லோராலும் விரும்பிக் கற்கப் பட்டதனால் அது பெருவழக்குப் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப் பள்ளிகூடங்களில் விவேகசிந்தாமணி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அதனால் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு மட்டும் உடைய நாட்டுப்புற மக்கள், அச்சு வடிவம் பெற்ற அல்லி அரசாணி மாலை, நல்லதங்காள் கதை போன்று மனப்பாடமாகக் கூறுவர். 'மக்கள் இலக்கிய வரிசை'யில் 'விவேக சிந்தாமணி'க்கு ஒரு நிச்சயமான இடம் என்றும் உண்டு.

விவேக சிந்தாமணி மிகவும் பிற்பட்ட காலத்தது. நாயக்கர் மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரால் பாடப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பே விவேக சிந்தாமணி. இதில் பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்யுட்களும் பிற்காலத்தே பலர் பாடிய தனிப் பாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலில் சாதாரண நடைமுறை அறங்களும், வாழ்க்கை ஒழுங்குகளும், உயர்தர்ம நெறிகளும் கதைகள், நகைச்சுவை, அவலம், வீரம், காதல் போன்ற சுவைகளுடன் எளிய நடையில் சொல்லப் பட்டுள்ளன.

'விவேக சிந்தாமணியைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலம், இடம் ஏதும் அறிய முடியவில்லை. பாடல்களை இயற்றியவர், பாடல் தோன்றிய சூழல் எதுவும் குறிப்பிடப் படவில்லை. பாடல்களைத் தொகுத்து வரிசைப் படுத்துவதற்குப் பாடலின் சிறப்பு, யாப்பு, கருத்து ஆகியவற்றை மனதில் கொண்டு ஒரு வரன்முறையைப் பின் பற்றவில்லை. அதனால் விவேக சிந்தாமணி பல்சுவை இலக்கிய மாய் - ஒர் கலவை நூலாக உள்ளது' என்பார் புலவர் மாணிக்கம்.

கடந்த நூறு ஆண்டுகளில் ஏறக்குறைய இருநூறு பதிப்புகள் போல மூலமும் உரையுமாய் விவேக சிந்தாமணி வந்திருப்பதே அதன் செல்வாக்கை உணர்த்தும். கடவுள் வாழ்த்து உட்பட 135 பாடல்கள் பல்வகை யாப்பில் உள்ளன. வெண்பாக் களும், கட்டளைக் கலித்துறைகளும், ஆசிரிய விருத்தங்களும் அமைந்த பாடல்கள். முதற்பாடல் கணபதி துதியாக அமைந்த வெண்பாவாகும். பிற 134 பாடல்களும் பெரும்பாலும் நீதிக்கருத்தை உணர்த்தும் பாடல்களே. சில பாடல்கள் நாட்டில் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தருபவை. சில திருக்குறளுக்கு விளக்க உரை போல்வன. புத்த ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், நாட்டில் வழங்கும் பழங்கதைகள், புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்தோடு கூறும் கதைகள் பல பாடல்களில் உள்ளன. வடமொழியில் உள்ள தனிப்பாடல்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பாகவும் சில பாடல்கள் உள்ளன. காதல் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்பச்சுவையை மிகைப்படுத்தும் பாடல்களும் உள்ளன. பெண்ணையும் சிற்றின்பத்தையும் பழித்துரைக்கும் பாடல்களும் பல உள்ளன.

டி.கே.எஸ். சகோதரர்கள் தங்களது 'இராஜ ராஜ சோழன்' என்னும் வரலாற்று நாடகத்தில் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்றை இனிய இசையோடு பாடச் செய்தனர்.

"சங்கு முழங்கும் தமிழ்நாடன்
தன்னை நினைந்த போதெல்லாம்,
பொங்கு கடலும் உறங்காது!
பொழுதோர் நாளும் விடியாது!
திங்கள் உறங்கும்! புள் உறங்கும்!
தென்றல் உறங்கும் சில காலம்!
எங்கும் உறங்கும் இராக் காலம்!
என் கண் இரண்டும் உறங்காவே!

இந்தப் பாடலின் கருத்து, இனிமை, கற்பனை காரணமாய் நாடகத்தில் இடம் பெற்ற போது மக்களின் போற்றுதலுகு உள்ளானது. இது போன்ற அரிய இனிய பாடல்களை நான் ஆரம்பப்பள்ளிப் பருவகாலத்தில் மனப்பாடம் செய்ததால் இன்று பேச்சிலும் எழுத்திலும் அவை தாமாகவே வந்து விழுகின்றன. அந்த அற்புதப் பாடல்கள் சிலவற்றை பல் வேறு தலைப்புகளில் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெரு நோக்கில் குழுமத்தில் எழுத விழைந்தேன்.

- தொடரும்.

-வே.சபாநாயகம்.

No comments: