Tuesday, April 11, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 14

சிஷெல்ஸில் தமிழர்கள்

ஆதார பூர்வமாகப் பார்த்தால் சிஷெல்ஸ¤க்குத் தமிழர்கள் வந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளன. 1770ல் பதிவான முதல் குடியேற்றத்தின் போது ஐந்து தமிழர்கள் மாகே தீவுக்கு வந்தனர். அவர்கள் வழித்தோன்றல்களே தற்போதைய சிஷெல்ஸ் தமிழர்கள் என்பது வரலாறு.

புதுச்சேரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அரசு ஆலோசகராக வந்தார். அரசு அன்பளிப்பாகக் கிடைத்த பெரும் பரப்பளவு நிலங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். 1864ல் நாயக்கனும், 1874ல் கந்தசாமி செட்டியும் தமிழகத்திலிருந்து வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். இப்போதும் பல வியாபார நிறுவனங்கள் இப்பெயர்களுடன் இயங்குவதைப் பார்க்கலாம்.

முதலில் குடியேறிய தமிழர்களில் பலர் இங்கு கலப்புமணம் செய்து கொண்டு மதம் மாறியுள்ளனர். 1901ல் 300க்கு மேற்பட்ட சைவக் குடும்பங்கள் இருந்துள்ளன.

இவர்கள் தங்கள் தமிழ்மரபு, கலாச்சாரங்களை விடாது பேணி வந்துள்ளனர். இங்கு நிலவும் மக்கள் பெயர்களில் பிள்ளை, செட்டி, நாயுடு, படையாச்சி, வேலு, கந்தசாமி, கோவிந்தன், வடிவேலு ஆகியவை அதிகம். 1944ல் இங்கு நீதிபதியாக யாழ்ப்பாணத் தமிழர் ஹோமர் வன்னியசிங்கம் என்பவர் இருந்திருக்கிறார்.

தமிழத்தின் காவேரிப் படுகையிலிருந்து தமிழ் வர்த்தகர்கள் இந்நாட்டுக்குத் தேவையான நுகர்பொருட்களை மரக்கலங்களில் கொண்டு வந்து விற்று, இங்கிருந்து கப்பல் கட்டுமானத்திற்கான பெரிய பெரிய மரங்களை ஏற்றிச் சென்றுள்ளனர். அப்படி வந்து போனவர்ளில் சிலர் இங்கேயே தங்கி, திருமணம் செய்து கொண்டு பெரும் வர்த்தகங்களில் இங்கேயே ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகளில் பலர் தமது மொழி, மதம் ஆகியவற்றைத் துறந்து இந்நாட்டு மொழி, மதம் ஆகியவற்றை ஏற்று வாழ்க்கை நடத்துவதும் வழக்கமாயிற்று.

இந்நாட்டில் புழக்கத்தில் உள்ள கிரியோல்சொற்களில் பல தமிழ்ச் சொற்களாய் இருப்பது தமிழர் குடியேற்றத்துக்கு ஆதாரமாய்க் காட்டப் படுகிறது. எடுத்துக்காட்டாக கீழ்கண்ட சொற்களைப் பார்க்கலாம்.

தமிழ்ச் சொற்கள் - கிரியோல் சொற்கள்

முறுக்கு - முலுக்
கறையான் - கறையார்
கள்ளு - காளு
கறிவேப்பிலை - கறிப்பிலை
பீர்க்கங்காய் - பிப்பங்கா
பூசனிக்காய் - பூசனிக்கா
கொத்தமல்லி - கொத்துமல்ல
அம்மா - மம்மா
அப்பா - பப்பா
ஐயையோ - அய்யோயோ
பாதாம் - பாதாமியே

இப்படி ஏராளமான தமிழ்ச் சொற்கள் இங்கு மருவி புழக்கத்தில் உள்ளன.

1971ல் இங்கு பன்னாட்டு விமானநிலையம் செயல்படத் தொடங்கிய பிறகு தமிழர்களின் வரவும் ஈடுபாடும் அதிகரித்தது. இங்குள்ள தமிழரில் பலர் தமிழ் நாட்டில் மணம் புரிவதும், தமிழ்ப் பெண்கள் இப்போது அதிகம் இங்கு வாழ்வதும் அதிகரித் துள்ளது.

சிஷெல்ஸ¤க்கு, தந்தையின் கடையை மூடிவிட்டு ஊர்திரும்ப எண்ணி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு.தீனதயாளு பிள்ளை அவர்கள் எப்படி அங்கேயே தங்கி வர்த்தகம் செய்து இன்று பிரபல தொழிலதிபராக ஆனார் என்பதைப் பார்த்தோம். அவரை வழிகாட்டியாகக் கொண்டு தஞ்சை மாவட்டம் மற்றும் புதுவைப் பகுதிகளிலிருந்து நிறையத் தமிழர்கள் இங்கு வந்து, வர்த்தகம், மற்றும் ஆடிட்டர், மருத்துவர், வழக்கறிகர், ஆசிரியர் என்று பல பணிகளில் ஈடுபட்டுச் செல்வத்திலும் செல்வாக்கிலும் வளர்ந்து, இன்று அவர்களில் பலர் குடும்பத்துடன் குடியுரிமை பெற்றுக் கொண்டு, மனை வாங்கி வீடு கட்டி அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள்.

இவர்களில் தீனதயாளு பிள்ளை அவர்களுக்கு அடுத்தபடியாக இப்படி இங்கே கால் ஊன்றி பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஆகி தமிழர்களில் முதலிடத்தில் நிற்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களைப் பற்றியும் முன்பே கண்டோம். இப்போது அவரது வெற்றி மணிமுடியில் மேலும் ஒரு வண்ணச் சிறகாய் சமீபத்தில் இந்திய ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்கள் கையால் ஜனவரி 9, 2006 அன்று 'ஓவர்சீஸ் இந்தியன் அவார்ட்' (PRAVESI BHARATHIYA SAMMAN) என்கிற விருதும் கிடைத்திருப்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும். உலகம் முழுதுக்குமான 538 பேர் அடங்கிய இறுதிப் பட்டியலிலிருந்து முடிவாக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் டாக்டர் ராமதாஸ¤ம் ஒருவர் என்பது இன்று சீஷெல்ஸ் தமிழரிடையே பெருமையாய்ப் பேசப்படும் செய்தி.

இந்தியாவிலிருந்து பல பகுதிகளிலிருந்தும் வந்து பலவித தொழில்செய்து புகழ் பெற்றவர்களில் ஆடிட்டர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். இவர்களில் முதலில் வந்தவர் 35 ஆண்டுகளுக்கு முன் 1970ல் கேரளாவிலிருந்து வந்த திரு. டி.எஸ்.கே நாயர் அவர்களாவார். இவர் இலண்டன் ACCOUNT INSTITUTE ல் முறையாகப் பதிவு செய்து கொண்டவர். இவரது மனைவி திருமதி. சாந்தா நாயர் சீஷெல்ஸ் இந்துக்களிடையே மிகவும் பிரபலமான தெய்வ பக்தை. இவர்களது மகள் சீஷெல்ஸ் அரசில் மிக உயர்ந்த பதவியில் -'PRINCIPAL SECRETARY' ஆக இருக்கிறார். இவர்களது மாப்பிள்ளை திரு.நந்தகுமார் நாயரும் ஆடிட்டரே. இவர்களது இரண்டு மகன்களில் ஒருவர் தனியார் நிறுவனத்திலும் மற்றவர் சிஷெல்ஸ் விமானப் பணியில் விமானியாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே சிஷெல்ஸ் குடியுரிமை பெற்று அங்கேயே வீடு, மனை என்று தங்கி விட்டவர்கள். தமிழ்ச் சமுதாயத்துடன் கலந்து பாசத்துடனும் நட்புடனும் வாழும் குடும்பம் இவர்களுடையது.

1980ல் இங்குவந்து தற்போது சிஷெல்ஸ் குடியுரிமை பெற்றுள்ள திரு.என்.ரமணி அவர்களும் ஆடிட்டர்தான். இங்குள்ள தமிழ் வர்த்தக நிறுவனங்களில் 75 சதவீதம் இவரது வாடிக்கையாளர்கள். பழகுவதற்கு இனிமையும் எளிமையும் மிக்க திரு.ரமணி அவர்கள் இலக்கிய மற்றும் இசை ரனை மிக்கவர். எப்போதும் நகைச்சுவையுடன் மலர்ந்த முகத்துடன் பேசக் கூடியவர். இவரது துணைவியார் திருமதி.யோகாம்பாள் நல்ல குடும்பத் தலைவி.

இன்னொரு ஆடிட்டர் திரு.பழனி என்பவரும் 1980ல் இங்கு வந்து தன் நிறைவான அனுபவத்தால் பல நிறுவனங்களுக்கு நிதி கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றி வருபவர். இவர் சீஷெல்ஸில் பரவலாக அறியப்பட்ட தமிழ்க் கவிஞர். பல தொகுப்புகள் போடும் அளவுக்கு ஏராளமான கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார்.சிறந்த பேச்சாளரும் கூட. தமிழகத்திலிருந்து பிரமுகர்கள் யார் வந்தாலும் மேடையிலேயே அவர்களுக்குப் பாராட்டிதழ் கவிதையில் வாசித்தளிப்பவர். தினமும் அங்குள்ள நவசக்தி விநாயகரைத் தரிசிக்கத் தவறாத தீவிர பக்தர். இவரது மனைவி திருமதி.வசந்தி அவர்களும் தீவிர தெய்வபக்தி உள்ள குடும்பத் தலைவி. இருவருமே சாயிபாபா பக்தர்கள். பொறியியல் பட்டதாரியான இவரது மகள் செல்வி.லாவண்யா சீஷெல்ஸ் அரசின் செய்தி அமைச்சகத்தில் பணி புரிகிறார். இவர் தமிழ்ப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமைகளில் பரதநாட்டியம் கற்பித்து வருகிறார். மகன் இலண்டனில் ஆடிட்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கறிஞர் திரு.ராஜசுந்தரம் அவர்களின்ன் சகோதரரான திரு.சோ.பாலசுந்தரம் அவர்களும்1983ல் இங்கு வந்து 1992 வரை MASONS TRAVEL என்கிற நிறுவனத்தின் நிதிக்கட்டுப்பட்டு அலுவலராக இருந்தவர். சிஷெல்ஸின் மிகத் திறமையான நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் எனப் புகழ் பெற்றவர். நிதிக் கட்டுப்பாட்டில் கடுமையான ஒழுங்கை அனுசரிக்கும் இவர், ஒருமுறை தனது நிறுவன உரிமையாளரின் சகோதரி மீதே நிதி ஒழுங்கின்மைக்காக நடவடிக்கை எடுத்தவர். இவரும் இவரது மனைவி திருமதி ஜெயா அவர்களும் சீஷெல்ஸில் விநாயகர் கோவில் எழுப்புவதில் அயராது உழைத்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். தற்போது சிங்கப்பூரில் அங்கு படிக்கும் மகனுடன் குடியுரிமை பெற்று ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறவர்கள்.

சிஷெல்ஸ் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் பணியாற்றும் திரு.ரவீந்திரன் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் குடியேறி 1990ல் சிஷெல்ஸ¤க்கு வந்தவர். சிறந்த பாடகர். 'சிஷெல்ஸ் எஸ்பி பாலசுப்ரமண்யம்' என்று நண்பர்களால் அழைக்கப் படுவர். இந்தியக் கலாச்சார நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாது பங்கேற்பவர். இந்து கவுன்சிலின் செயலாளரா கவும், தமிழ்ப் பள்ளியின் முதல்வராகவும் உள்ளார். சிஷெல்ஸ் தமிழ் சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பனிப்புடன் பாடுபடுபவர். மதுரைக் காரரான இவரது துணைவியார் சிஷெல்ஸ் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபர். இவர்கள் குடும்பமும் சீஷெல்ஸ் குடியுரிமை பெற்றவர்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கலாசலை முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் மிக முக்கியத் தமிழ்ப் பிரமுகர். இவர் சென்னை 'காந்தளக' உரிமையாளர் திரு மறவன்புலவு கி.சச்சிதானந்தம் அவர்களின் மைத்துனர். திரு சச்சிதானந்தம் சிசெல்ஸில் இலங்கை அரசுத் தூதராக இருந்தபோது அவருடன் இணைந்து அங்கு தமிழ் சமுதாயத்துக்கு இந்து ஆலயம் ஒன்றை உருவாக்குவதில் முன்னோடியாகப் பனியாற்றியவர். சிஷெல்சஸின் 'நேஷன்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும், 'சிஷெல்ஸ் அலை ஓசை" இதழின் ஆசிரியக் குழுவின் தலைவரும் ஆவார். 70 வயதாகியும் அயராது கலை, கலாச்சார, கல்வி வளர்ச்சியிலும் தமிழ் சமுதாய முன்னேற்றத்திலும் அயாராது உழைக்கும் இவர், சிஷெல்ஸ் இளைஞர் களுக்கு தக்க முன் மாதிரியாகத் திகழ்பவர். இவரது துணைவியார் திருமதி. சரோஜினி அவர்கள் சிறந்த தமிழ்க் கவிஞர். சிஷெல்ஸின் நவசக்தி விநாயகர் மீது பாமாலை இயற்றி வௌ¤யிடுள்ளார். இவர்களது மகன் திரு.சிற்சபேசன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிறந்த தமிழ் அறிஞராகவும் அரசியல் பத்திரிகையாளராகவும் பிரபலமாக இருப்பவர்.

திரு.கே.டி.பிள்ளை அவர்களின் அக்காள் மகனும் மனைவியின் சகோதரருமான திரு.ஜி.சிவசண்முகம் பிள்ளை மிகவும் குறிப்பிடத்தக்க தொழிலதிபரும் பிரமுகரும் ஆவார். எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இவரை அன்பர்கள் 'சிவா' என்ற செல்லப் பெயரில் அழைக்கிறார்கள். பரபரப்பான 'குயின்சி'தெருவில் உள்ள 'குயின்சி சூப்பர் மார்க்கட்டை' சிறப்பாக நடத்தி வருபவர். தமிழ் மக்களது மளிகை மற்றும் இந்திய வகை உணவுப் பொருள்களை தருவித்துத் தருபவர். இதில் இவரது துணைவியார் திருமதி.சித்ரா (கே.டி.பிள்ளையின் அண்ணன் மகள்) அவர்களின் பணி அதிகம். இவரும் தீவிர சாயிபாபா பக்தை. திரு.சிவா மாமாவுடன் சிறு பிராயத்திலேயே இங்கு வந்து இங்கேயே பயின்றவர் என்பதால் இந்நாட்டின் தாய் மொழியான கிரியோலில் நன்கு பேச வல்லவர். இதனால் சிஷெல்வாக்கள்¤ன் அன்புக்கும் பாத்திரமானவர். தன் ஓய்வற்ற வர்த்தகப் பணிக் கடுமைக்கு இடையேயும் தமிழ்க் கலாச்சார வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், தமிழ்ப் பள்ளியின் பொறுப்பாள ராகவும் அயராது உழைப்பவர். இவரது மூத்த மகள் டெல்லியில் மருத்துவம் பயில்கிறார். இவரது மற்ற இரு மகள்களும் புதுவையில் படிக்கிறார்கள்.

திரு.ஜோதிநாதன் கே.நாயுடு என்பவர் இன்னொரு முக்க்¤யத் தொழில் அதிபர். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே மயிலாடுதுறையிலிருந்து இங்கு வந்து துணி சோப் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கியவர். திரு.ஜோதிநாதனும் அவரது இரு சகோதரர்களும் இங்குதான் பிறந்து வளர்ந்தவர்கள். திரு.ஜோதிநாதன் நாயுடு தந்தையைப் பின்பற்றி, 'BLUE LAGGON' என்ற பெயரில் தயாரிக்கும் வாஷிங் சோப், வாஷிங் பௌடர் ஆகியவை இங்கு மக்களிடையே பிரபமானவை. திரு. ஜோதிநாதன் பழகுவதற்கு மிகவும் எளிமையும் இனிமையும் மிக்கவர். அவரது மழலை ஆங்கிலம் கேட்க மிக இனிமையாயிருக்கும். அவரது துணைவி திருமதி.பாரதி நாயுடு என் மகளின் நெருங்கிய தோழி. மிக இனிமமையான பண்பாளர். ஓவியக் கலையிலும் கைவேலைக் கலையிலும் வல்லவர். என் மகளுடன் சேர்ந்து பல ஓவிய மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்புப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். இவரும் தீவிர சாயிபாபா பக்தை. இவர்களின் ஒரே மகள் செல்வி.ஷிவானி - சென்னையில் கல்வி கற்றவர்- 'ஏர் சிஷெல்ஸி'ல் ASST MARKETING MANAGER ஆகப் பனிபுரிகிறார். ஒரே மகன் துபாயில் விமானமோட்டிக்கான பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு இளம் ஆடிட்டர் சென்னையை சேர்ந்தவர். திரு.வெ.சீனிவாசன் என்கிற இவர் 1995ல் சிஷெல்ஸ¤க்கு வந்தவர். தற்போது 'CORNIVA' என்கிற மருந்துகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். இவரது தந்தையினால் ஆர்வம் பெற்று, மிகுந்த இலக்கிய ரசனையும், சமீபத்திய இலக்கியப் படைப்புகள் பற்றி இணைய தளத்தின் மூலம் வாசிப்பும் மிக்கவர். என்னுடைடைய இலக்கிய ரசிகர். எனது இந்தத் தொடரின் வண்ணப்படங்களை அனுப்பி உதவியவர்.

நான் சிஷெல்ஸ் செல்லுமுன்பே மின்னஞ்சல் மூலம் என்னோடு தொடர்பு கொண்டி ருப்பவர். அனேகமாக எனது எல்லாப் படைப்புகளையும் படித்து ரசித்தவர். சுவாமி விவேகானந்தரின் தீவிர விசுவாசி. அதனால் தன் மகனுக்கு 'நரேன்' என்றும் மகளுக்கு

'ஸ்வரூப் ராணி' என்றும் பெயர் சூட்டி இருப்பவர். இவரது துணைவி திருமதி.கலா சிஷெல்ஸில் உள்ள அரசு தொழிற் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். இவரும் இலக்கிய ரசனையும் தீவிர வாசிப்பு ஆர்வமும் கொண்டவர்.

மயிலாடுதுறையிலிருந்து வந்து இங்கு கடை வைத்திருக்கும் திரு.கண்ணன் நாயுடு என்பவர் சிறுவயதிலேயே தெய்வபக்தியில் பற்றுக் கொண்டு சுத்த சைவமும் ஆசார அனுஷ்டானமுமாய் வாழ்பவர். இவரது மனைவி திருமதி.நர்மதா நல்ல கலைரசனை மிக்கவர். என்மகள் மங்களநாயகியுடன் இணைந்து அங்கு நடக்கும் எல்லா கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் குழந்தைகளை நாட்டியம், ஓரங்க நாடகம் மாற்றுடைப் போட்டி ஆகியவற்றில் பயிற்றுவித்து மேடை ஏற்றுபவர்.

இப்படி அங்குள்ள எல்லாத் தமிழர்களும் தாய் நாட்டில் பெற முடியாத பெருமைகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். தங்களுக்குள் மிகவும் நட்பும், உறவும் மிக்கவர்களாய் ஒருவர்க் கொருவர் அனுசரனையாய் வாழ்கிறார்கள். அடிக்கடி பிறந்த நாள், திருமணநாள் மற்றும் எங்களைப் போல விருந்தினராக வந்திருப்பவர் களைக் கௌரவிக்க என்று அடிக்கடி விருந்தளித்து மகிழ்கிறார்கள். தாராளமாக விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கிக் கௌரவிக்கிறார்கள். நாங்கள் அங்கே தங்கியிருந்த 70 நாட்களில், 20 பேர் வீடுகளிலாவது விருந்தும் பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருப்போம். தாய் நாட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கிறோம் என்ற ஏக்கமே இல்லாமல் அங்கு தமிழர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.

தொடரும்

- V. Sabanayagam

No comments: