Tuesday, October 11, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 19. எழுத்தாளர் சந்திப்பு - 6. 'சிற்பி'பாலசுப்பிரமணியன்.

அண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ் ஆனர்ஸ் படித்த அதே காலத்தில் நான் பி.எஸ்.சி கணிதம் பயின்றேன். ஒரே விடுதியில் வெவ்வேறு சிறகுகளில் தங்கிப் படித்தோம். அவருடைய வகுப்புத் தோழரும் எங்கள் வட்டாரத்துக்காரருமான 'மருதூர் இளங்கண்ணன்'
(பாலகிருஷ்ணன்) என்ற நண்பர் மூலம் தான் எனக்கு சிற்பியின் அறிமுகம்
கிட்டியது. அப்போது 'சிற்பி' என்ற பெயரில் தான் கவிதைகள் எழுதி வந்தார்.
'சிற்பி' என்ற பெயரில் இலங்கையில் ஒருவர் எழுதியதால் பின்னர் 'சிற்பி'
பாலசுப்பிமணியன் என்று மாற்றிக் கொண்டார். 'முத்தமிழ்' என்ற கையெழுத்து இதழை அப்போது அவர் நடத்தினார். அவருடன் பயின்ற 'பதிப்புச் செம்மல்' மெய்யப்பன்(அப்போது அவர் பெயர் சத்தியமூர்த்தி) அவர்களையும் சிற்பியின் அறையில் தான் முதலில் சந்தித்தேன்.

சிற்பியினுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது 'முத்தழிழ்' காரணமாகத்தான்.
இதழின் ஆசிரியராக அவரும் திருவாளர்கள் மெய்யப்பன், மருதூர் இளங்கண்ணன், வேல்முருகன் மற்றும் சில ஒத்த ரசனை உடைய நண்பர்களும் ஆசிரியக் குழுவில் இருந்தனர். இதழின் ஓவியராக என்னை ஏற்றுக்கொண்டார் சிற்பி. நான் ஓவியம் வரைவதை அறிந்திருந்த மருதூர் இளங்கண்ண்ன், அதற்காகாகத்தான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

'முத்தமிழ்' காலாண்டு இதழாக, 'கல்கி' அளவில் வெளியிடப்பட்டது. அட்டைப்
படங்களையும் உள்ளே தலைப்பு மற்றும் சிறு சிறு ஓவியங்களையும் வரைய சிற்பி எனக்கு வாய்ப்பளித்தார். சங்க இலக்கியப் பாடல்களுக்கான ஓவியங்கள் தான் அட்டையில் வெளியாயின. அதற்கான விளக்கங்களை சிற்பி உள்ளே எழுதினார். சிற்யின் படைப்புகள் நிறைய வந்தன. சொல்லப் போனால் சிற்பி பின்னாட்களில் புகழ் பெற்ற கவிஞராவதற்கு 'முத்தமிழ்', பயிற்சிக் களமாக இருந்தது எனலாம். மெய்யப்பனும் இளங்கண்ணனும் இதர தமிழ் பயின்ற நண்பர்களும் சிறப்பான கவிதை, கட்டுரைகளை 'முத்தமிழி'ல் எழுதினார்கள். ஓராண்டு முடிந்ததும் 'முத்தமிழி'ன் ஆண்டு மலரை 1955ல் சிறப்பாகத் தயாரித்தார் சிற்பி.

கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர் அளவுக்கு பெரிய அளவில் பைண்டு செய்யப்பட்டு ஆர்டதாளில் ஜாக்கட் அட்டையுடன், அச்சு மலருக்கு இணையாக இருந்தது அம்மலர். சென்னிகிருஷ்ணன் என்ற என் வகுப்பு நண்பர் 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்' என்ற பாடலை நினைவூட்டும் - பாரிமகளிர் நிலவொளியில் அமர்ந்து ஏங்குவதைச் சித்தரிக்கும் காட்சியை அழகான வண்ணத்தில் வரைந்திருந்தார். நான் மலரின் உள்ளே பல ஓவியங்களையும், தலைப்புகளையும் வரைந்திருந்தேன். எனக்கும் கூட 'முத்தமிழ்' பயிற்சிக்களமாக இருந்தது என்றால் மிகை இல்லை.

ஆண்டு மலர் வெளியிட்டதும் 'முத்தமிழ்' இதழின் நினைவாக சிற்பி அவர்கள்
ஆசிரியக் குழுவினரையும் அதன் ஓவியர்களான எங்கள் இருவரையும் கொண்டதான ஒரு போட்டோ எடுக்கவும் ஏற்பாடு செய்தார். காலடியில் 'முத்தமிழ்' இதழ்களும் வைக்கப்பட்டிருந்த அந்தப் படம் 50 ஆண்டுகள் கடந்தும் என் வசம் இன்னும் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் சிற்பி அவர்கள் பாரதியார் பலகலையில் தமிழ்த்துறைத்
தலைவராக இருந்தபோது என்னையும், நண்பர்கள் பூவண்ணன், புவனைகலைச்செழியன், தம்பிசீனிவாச்ன், பூவை அமுதன் போன்ற 16 குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அழைத்து கோவையில் 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' நடத்திய போது, அவர் எங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தையும், விருந்தோம்பலையும் மறக்கவியலாது. தொடர்ந்து அவரிடம் தொடர்புக்கு வாய்ப்பு ஏற்படாதிருந்தும் இது போன்ற நிகழ்வுகளில் அவ்வப்போது சந்தித்திது வந்தேன்.

அதன் பின்னர் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் என்னை மறவாது அதே அன்புடன் இன்றும் நட்புப் பாராட்டும் அவருடைய இனிய பண்பில நான் மிகவும் நெகிழ்கிறேன். அண்மையில் நடைபெற்ற அவரது பவளவிழாவிற்கு எனக்கு அழைப்பு அனுப்பியதுடன் விழாஔ நினைவு மலருக்கு எனது கட்டுரையையும் கேட்டிருந்தார். உடல் நலிவு காரணமாய் என்னால் நேரில் சென்று விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.வாழ்த்தும் கட்டுரையும் அனுப்பி வைத்தேன். உடன் முத்தமிழ் ஆண்டு மலரின் நினைவாக எடுக்கப்பட்ட போட்டோவின் நகலையும் அனுப்பி வைத்தேன். 0

3 comments:

RAMESHKALYAN said...

நீங்கள் குறிப்பிடும் மருதூர் இளங்கண்ணன் விருத்தாசலம் கலைக் கலூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தாரா? நான் படிக்கையில் இளங்கண்ணன் என்பவரே தமிழ் பயிற்றுவித்தார். (சற்றே உயரமற்று குங்குமப் போட்டு இட்டு பாரதி தாசன் ஸ்டைல் மீசை வைத்திருப்பார்). அவரா இவர்?

வே.சபாநாயகம் said...

ஆம்! அவர்தான். இந்த ஊர் மாப்பிள்ளையும் கூட. பாவம் அவர் பணிக்காலத்திலேயே இறந்து போனார். -சபா.

Pena said...

கவிஞர் சிற்பியுடனான உங்கள் தோழமையும் தொடர்பும் என்னுடைய பள்ளித்தோழன்,இலங்கை,அனுராதபுரம் அன்பு ஜவகர்சாவையும்,நாங்கள் இருவரும் தனித்தனியாக நடத்திய கையெழுத்து இதழ்களின் ஞாபகங்களையும் கிளறி விட்டன."கலைக்கோலம்" 1975 கையெழுத்து இதழைக் கண்ணின் மணி போல் காத்து வருகிறேன்.அவ்வப்போது தாய் தன் மகவைத் தடவிக்கொடுப்பது போல் எடுத்துப்பார்த்துக்கொள்கிறேன்.