Wednesday, May 12, 2004

நினைவுத்தடங்கள் -16

1957ல் நான் ஆசிரியப் பணி ஏற்றபோது அப்போதைய ஜில்லா போர்டுகள் 'கழக உயர்நிலைப் பள்ளி' என்ற பெயரில் உயர்நிலைப் பள்ளிகளை நிர்வகித்து வந்தன. முன்பே நான் குறிப்பிட்டுள்ளபடி முதலில் நியமனம் ஆன பண்ருட்டி, என் ஊரிலிருந்து வெகு தொலைவு என்பதால் அருகில் இருந்த விருத்தாசலம் தான் வேண்டும் என்று கேட்டுப் பெற்றேன். அப்போது கணித ஆசிரியர்கள் கிடைக்காமையால் கேட்ட இடத்தில் நியமனம் கிடைத்தது.

முதல் நாள் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆசிரியப் பணியின் முதல் நாள் அனுபவம் பற்றி தேர்வில் கூடக் கேட்பதுண்டு. எனது முதல் நாள் அனுபவம் சுவாரஸ்யமானது. ஆசிரியத் தொழிலில் உடைக்கு முக்கியப் பங்குண்டு. ஆசிரியர்கள் என்றால் பாவப்பட்ட ஜன்மங்கள், ' ஊருக்கு எளச்சவன் பள்ளிக் கூடத்து வாத்தி' என்று அவர்களது ஏழ்மையான உடை காரணமாகவும் இளக்காரமாக நினைத்த காலம் அது. எனவே 'பளிச்'சென்று உடை உடுத்த வேண்டும், மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பதில் நான் அதிக கவனம் காட்டினேன். தலைமை ஆசிரியர்கள் மட்டும் வேட்டி கட்டி திறந்த கோட்டுடன் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகத் தெரிவார்கள். நான் முதல் நாளே கோட்டு, 'டை'யுடன் வகுப்புக்குச் சென்றேன். ஆசிரியர்களை அந்த உடையில் பார்த்திராத அந்தப் பள்ளி மாணவர்களின் புருவங்கள் உயர்ந்தன. ஒரு உற்சாகம் அவர்களிடையே எழுந்ததைக் கண்டேன். ஆனால் சக ஆசிரியர்களிடம் அது ஏதோ தகாத செயல் போல கருதப்பட்டது. வகுப்பில் நுழைந்ததும் 'வணக்கம் அய்ய்ய்ய்...யா!' என்ற கூச்சலுடன் மாணவர்கள் எழுந்து நின்றார்கள். "உஸ்ஸ்....! இதென்னக் கூச்சல்!. எனக்குக் கூச்சல் பிடிக்காது. மௌனமாக எழுந்து கை கூப்பினால் போதும்!" என்று கண்டித்தேன். அது அவர்கள் புது ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்காதது. பலரது முகங்களில் மிரட்சி தெரிந்தது. என் பெயர், நான் எடுக்கும் பாடம் பற்றித் தெரிவித்துவிட்டுப் பாடத்தைத் தொடங்கினேன்.

மூன்றாவது வரிசையிலிருந்து ஒரு மாணவன் எழுந்து "உங்களைப் பற்ற்¢ சொல்லுங்கள் சார்!" என்றான். "உட்கார்! என்னைப் பற்றி எதற்கு உனக்குத் தெரிய வேண்டும்? நான் நடத்தும் பாடத்தைப் பற்றி மட்டும் கேள்!" என்று அவனை அடக்கினேன். அவன் ஏன் அப்படிக் கேட்டான் என்பதை பிறகுதான் சக ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொண்டேன். சில புதிய ஆசிரியர்கள் அப்படிக் கேட்கப்பட்டதும், அதைக் கௌரவப் பிரச்சினை போல எண்ணி, தங்களைப் பற்றி மாணவர்களிடயே மதிப்பாக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் "எனக்குக் கிராமத்தில் பத்துக் காணி நஞ்சையும், அஞ்சு காணி புஞ்சையும் அதில் நாலு மோட்டரும் ஓடுது. எனக்கு இந்த வேலைக்கு வரணும்னு அவசியம் இல்லே. நான் I.A.S எழுதி கலெக்டர் ஆகணும். அதுவரைக்கும் சும்மா இருப்பானேன்னு தான் இதுக்கு வந்தேன். சீக்கிரமே போயிடுவேன்" என்று ஏதோ ஆசிரியர் தொழிலுக்கு வந்தது கேவலம் போலச் சொல்வார்கள்.

அவர்களுக்கே தன் தொழிலில் மரியாதை இல்லாத போது மாணவர்களுக்கு எப்படி ஆசிரியத் தொழிலின் மீது மரியாதை ஏற்படும்? அப்படிச் சொன்னதும் அடுத்த பையன் "உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா சார்?" என்று அவரது சரித்திரம் முழுவதையும் கேட்க ஆரம்பித்து விடுவான். அப்புறம் அன்றைக்குப் பாடம் ஏது? மாணவர்களும் ஆசிரியரைத் தொட்டுப் பேசுகிற நெருக்கம் ஏற்பட்டு பயம் போய்விடும். எனவே நான் அதில் கவனமாக இருந்தேன்.

இன்னொருவன் எழுந்து புது ஆனந்த விகடன் இதழ் பக்கம் ஒன்றைக் காட்டி "இது நீங்க தானே சார்?" என்றான். இது பற்றி நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஆனந்த விகடன் மாணவர் திட்டத்தின் கீழ் அன்று விகடனில் வெளிவந்த என் கதை என் புகைப் படத்துடன் வந்திருந்தது. சட்டென்று ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. புகழாசை கொஞ்சம் தலை காட்டியது. ஆகா என்று மகிழ்ந்து பரவசத்தை மாணவர்களிடம் உடனே காட்டினால் இடம் கொடுத்ததாக ஆகிவிடும் என்பதால் சுதாரித்துக் கொண்டு, "அதெல்லாம் வெளியிலே! உட்கார்!!" என்று அதட்டினேன். வகுப்பு 'கப் சிப்' ஆகி விட்டது. பாடத்தை ஆரம்பித்தேன். இது மாணவர்களிடையே ஒரு மதிப்பை ஏற்படுத்தியது.

வகுப்பு முடிந்து ஆசிரியர்களின் ஓய்வறைக்குச் சென்றபோது சக ஆசிரியர்கள் சிலரது கண்களில் என் உடை உறுத்தியிருக்க வேண்டும். தங்களுக்குள் கண்ஜாடை காட்டி உதட்டைச் சுழித்ததைப் பார்த்தேன். நானாக அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். "ஒகோ! புதுசா?'' என்று ஒருவர் இழுத்தார். "சார் டிரஸ்ஸைப் பாத்துச் சொல்றீரா?, இன்னிக்குத் தானே காப்புக் காட்டியிருக்கு? மொத நாளு கோட்டும் சூட்டுமா வர வேண்டியது தான். அப்புறம் டிகிரி வாங்கத் தச்சதை எப்பதான் போட்டுக்கறதாம்?" என்று அவர்களில் மூத்தவராகத் தென்பட்ட ஒருவர் நக்கல் செய்தார். அவரது பின்பாட்டுகள் போல ஓரிருவர் சிரித்தனர். கல்லூரி ராகிங் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் அதற்கெல்லாம் மிரண்டு விடவில்லை.

மறுநாள் ஆசிரியர்கள் அறைக்குச் சென்ற போது, "வாங்க ரிங்மாஸ்டர்!" என்று அட்டகாசமாய் வரவேற்றார் முதல் நாள் நக்கல் செய்த மூத்த ஆசிரியர். என் கோட்டும் சூட்டும் கருநீல வண்ணத்தில் இருந்ததால், 'ரிங் மாஸ்டர்' என்று அவர் அழைத்தார் என்பதைப் பிறகு அறிந்தேன். "என்ன சார் மொத நாள் அப்படித்தான் இருக்கும்னு சொன்னீங்க- இன்னிக்கும் அதே டிரஸ்லே தானே வந்திருக்காரு" என்று ஒருவர் சீண்டினார். "வெள்ளக்காரன் போய்ட்டா என்ன? அவனோட நாகரீகத்தையும் அவனோடவே அனுப்பிச்சுடணுமா?" என்று நமட்டுச் சிரிப்பை உதிர்த்தார் இன்னொருவர். "புது விளக்குமாறு கொஞ்ச நாளைக்குப் பளபளப்பாத்தான் இருக்கும்" என்றார் முதலில் தொடங்கிய மூத்த ஆசிரியர். நான் அலட்டிக் கொள்ளவில்லை. தினமும் இந்தக் கேலி தொடர்ந்தது. "கல்யாணம் ஆனா இந்த மேனியா போய்டும்" என்று அவர் ஜோசியம் சொன்னார். கல்யாணம் ஆனபிறகும் நான் அதே மாதிரி கோட் சூட்டில் வரவே,"கொழந்தை பிறந்தா சரியாகிவிடும்" என்றார். குழந்தை பிறந்தும் நான் மாறாதிருக்கவே அவருக்கு அலுத்துப் போய்விட்டது. "இந்த ஆசாமிகளைத் திருத்தவே முடியாது. பெரிய கலெக்டர்னு நினைப்பு!' என்று சொல்லி அத்துடன் விட்டுவிட்டார்.

ஆசிரியர்களுக்குத்தான் கேலியாக இருந்ததே தவிர மாணவர்களிடையே மதிப்பு, கூடவே செய்தது. பளிச்சென்று உடை உடுத்தி காலையில் அவர்களைச் சந்திக்கையில் அவர்களிடையே ஒரு புத்துணர்ச்சியும் பொலிவும் தென்படுவதைக் கண்டேன். பெற்றோர்களிடமும் என் உடை என்னை உயர்த்திக் காட்டியது. என்ன திறமை இருந்தாலும் பொலிவான தோற்றம் உண்டாக்கும் முதல் அபிப்பிராயம் நம் வெற்றிக்கு கணிசமாக உதவவே செய்கிறது என்று அனுபத்தில் கண்டேன். அதனால் என் பணி இறுதிக்காலம் வரை 36 ஆண்டுகள் விடாப் பிடியாக அதைப் பின்பற்றினேன். என் வெற்றிகரமான ஆசிரியப்பணிக்கு அதைச் சவாலாக ஏற்றுப் பெயர் வாங்கினேன். 'செட்டியார் முடுக்கா, சரக்கு முடுக்கா?' என்று பழமொழி சொல்வார்கள். செட்டியார் முடுக்காக இருந்து சரக்கு முடுக்காக இல்லாவிட்டால் மறுபடி கடைக்கு வரமாட்டார்கள்; சரக்கு முடுக்காக இருந்து செட்டியார் முடுக்காக இல்லாவிட்டாலும் வியாபாரம் அமோகமாக இராது. செட்டியாரும் முடுக்காக இருக்கவேண்டும்- சரக்கும் முடுக்காக இருக்கவேண்டும். அப்போதுதான் வியாபாரம் அமோகமாக இருக்கும். ஆசிரியர் தொழிலுக்கு இதுமிக அவசியம்.

-தொடர்வேன்...

No comments: