Wednesday, April 21, 2004

நினைவுத் தடங்கள் -15

இளமை முதலே தமிழில் ஆர்வம் அதிகமாகவே இருந்ததால் கல்லூரியில் அப்போது இருந்த தமிழ் ஆனர்சில் சேர்ந்து படித்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவே ஆசைப் பட்டேன். பள்ள்¢ இறுதித் தேர்வில் தமிழில்
நல்ல மதிப்பெண் பெற்றதோடு, மயிலை சிவமுத்து அவர்கள் நடத்திய 'மாணவர் மன்ற'த் தேர்வில் முதல் வகுப்பும் பள்ளியில் தமிழில் முதன்மையாக வந்ததும் தமிழ் படிக்கும் ஆசைக்கு உரமிட்டன. அதோடு எழுத்தாளனாக விரும்பியதால் தமிழ் படிப்பது உபயோகமாக இருக்கும் என்று கருதினேன். ஆனால் என் தந்தையார், தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று கூறி அதிக வாய்ப்புள்ள கணித குரூப்பில் சேரும்படி செய்து விட்டார்கள். இண்டரில் அப்போது 'டி' குரூப் என்று ஒரு பிரிவு- முழுதும் தமிழ்- ஆங்கிலம் 2 தாள் மட்டும் உள்ளது - அண்ணாமலையில் இருந்தது. தமிழ் ஆனர்ஸ் படிக்க விரும்பு பவர்கள் அந்த குரூப்பில் சேர்ந்தார்கள். வேறு குரூப் எடுத்தாலும் தமிழ் ஆனர்ஸில் சேர முடியும்
என்றாலும் இரண்டு ஆண்டு அதிகம் தமிழ் படிப்பது வலுவான அடிப்படை அமைய உதவும்.

இண்டர் முடித்ததும் பழையபடி தமிழ் ஆனர்ஸ் ஆசை எழுந்தது. ஆனாலும் அப்போதும் தந்தையின் வற்புறுத்தலால் அதில் சேர முடியாமல் பி.எஸ்.சி கணிதப் படிப்பில் சேர்ந்தேன். பட்டப் படிப்பு முடித்ததும் அடி மனதில் ஆசிரியர் பணி பதிந்திருந்ததால், ஆசிரியர் பயிற்சியில் சேர விரும்பினேன். ஆனால் என் தந்தையும், சகோதரர்களும் மற்ற உறவினர்களும் வழக்கறிஞராக யோசனை சொன்னார்கள். அதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னார்கள். முதலாவது- என் மூத்த சகோதரர்கள் இருவரும் பதவி உயர்வு வாய்ப்புள்ள- பொறியியல், வேளாண்மை தொழிற் கல்வி பயின்று வேலையில் இருந்தார்கள். என் தம்பி கால்நடை அறிவியல் படிப்பில் சேர்ந்திருந்தான். அதனால் பதவியுயர்வோ அந்தஸ்தோ இல்லாத ஆசிரியர் தொழிலுக்குப் போக வேண்டாம் என்று
அறிவுறுத்தினார்கள். அதோடு அப்போது எங்கள் பகுதியில் - வருமானம் இல்லா விட்டாலும்- 'வக்கீல் பிள்ளை' என்பது அந்தஸ்தாகக் கருதப் பட்டது. இதை அதிகம் வற்புறுத்தியவர் அரியலூரில் பிரபல வழக்கறிஞராக வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வந்த என் தாய் மாமன் அவர்கள். தனக்குப் பின் தன் வரிசாக என்னை ஆக்கிக் கொள்ளும் நோக்கமும் இருந்ததால், தானே வக்கீல் படிப்புச் செலவை ஏற்பதாகவும் ஆசை காட்டினார். நான் பிடிவாதமாக ஆசிரியராகத் தான் ஆவேன் என்று வக்கீல் படிப்பில் சேர மறுத்தேன். என் மாமாவுக்குக் கோபம் வந்து விட்டது. "டானா டாவன்னா உத்யோகமெல்லாம் ஒரு உத்தியோகமா? என்ன சம்பளம் வரும்?' என்றார் எகத்தாளமாக. அப்போது -1956ல் பட்டதாரி ஆசிரியருக்கு பஞ்சப்படி உட்பட 121ரூ. தான் சம்பளம். "அது எப்படி குடும்பம் நடத்தப் போதும்? இப்போது இள ரத்தத் திமிர்லே பேசறே- கல்யாணம் ஆகி ரெண்டு புள்ள பொறந்துதுண்ணா அதுக்கு படிப்பு, வைத்தியம்னு செலவாகும் போது நெனச்சிப் பார்ப்பே!" என்று அதைரியப் படுத்தினார். அவர் பயமுறுத்த வில்லை - அதுதான் யதார்த்தம் என்றாலும் ஆசிரிராக வேண்டும் என்ற இளமை முதலாக ஏற்பட்டிருந்த லட்சியப் பிடிப்பால் பிடிவாதமாக அனைவரது யோசனையையும் மீறி ஆசிரியரானேன். பின்னாளில் பொருளாதார நோக்கிலும், உறவினரிடையே மற்ற சகோதர்களூக்குச் சமமான மரியாதை கிட்டாத போதும், பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைத் தர வசதியில்லாத நிலை ஏற்பட்ட போதும் என் மாமாவின் அறிவுரை நினைவுக்கு வரும். ஆனால் அது கண நேரந்தான். மற்ற தொழிலில் கிட்டாத மதிப்பும் பக்தியும் என் மாணவரிடமும் பெற்றோரிடமும் கிடைத்திருப்பதை எண்ணி மனம் பெருமிதம் கொள்ளும். அதற்கு நான் என் தொழிலில் காட்டிய அர்ப்பணிப்பும் பாரபட்சமற்ற சேவையும் தான் காரணம்.

ஆசிரியர் பணி 'புனிதமான தொழில்-மோசமான வியாபாரம்' ( Noblest of all professions - sorriest of all trades) என்பார்கள். நான் ஆசிரியத் தொழிலை புனிதமான தொழிலாகத்தான் பார்த்தேன். வியாபாரமாக அல்ல. அதனால் நான் ஆசிரியத் தொழிலை ஒரு சவாலாக ஏற்று, ஒரு வெற்றிகரமான
ஆசிரியராக, வெற்றிகரமான தலைமை ஆசிரியராக ஆனேன். ஆசிரியத் தொழிலுக்கு ஒரு கௌரத்தை ஏற்படுத்தினேன். ஆனால் அந்த சவாலில் வெற்றி பெற நான் சந்தித்த எள்ளல்கள், ஏளனம், சிரமம் ஏராளம். குறிப்பாக - 'ஞமலி போல் வாழேல்' என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியை மெய்ப்பிப்பது போல- சக ஆசிரியர்களின் எள்ளல், பொறாமைகளிலிருந்து மீண்டது ஒரு சாதனைதான்.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: