Thursday, April 08, 2004

நினைவுத்தடங்கள் - (14)

1956ல் அண்ணாமலையில் நான் பி.எஸ்.சி கணிதம் முடித்ததும் அங்கேயே ஆசிரியர் பயிற்சி பட்டப் படிப்பில்- பி.எட் ல் சேர்ந்தேன். சென்னை நகரில் ஒரு ஆண்டாவது படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். முதன் முதலில் கல்லூரியில் சேர்ந்த போது, அனுபவமின்மையாலும் சிதம்பரத்தைவிடத் தொலைவு என்பதாலும் என் தகப்பனார் அப்போது சென்னையில் சேர அனுமதிக்கவில்லை. பட்டப் படிப்பு முடிந்ததும் சென்னையில் சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்தால், பெரு நகர அனுபவம் கிட்டும் என்பதாலும், எழுத்துத் துறையில் பிரசுர வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதாலும், இலக்கியக் கூட்டங்கள்- படைப்பாளிகள் பலரது அறிமுகம் கிடைக்கும் என்பதாலும் அங்கே சேர விரும்பினேன். ஆனால் என் துரதிஷ்டம் மனுசெய்ய மதிப்பெண் பட்டியல், மற்றும் சான்றிதழ் கிடைப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவரும்- பல்கலைக்கழகத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவருமான பேராசிரியர் ராமானுஜாச்சாரி அவர்களிடம் போய் சான்றிதழ்கள் பெறத் தாமதமாவதால் சென்னைக்கு மனுசெய்ய காலக்கெடுவுக்குள் முடியாமை பற்றிச் சொன்னேன். அவர் தத்துவத் துறையின் தலைவராக இருந்ததுடன், புதிதாகத் தொடங்கப் பட்ட ஆசிரியக் கல்லூரிக்கும் முதல்வராக இருந்தார். அதனால், காலக்கெடு தாண்டினாலும் இங்கேயே உனக்கு இடம் தருகிறேன் என்று சொல்லி அதன்படி என்னை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து விட்டார். அதனால் எனது சென்னை ஆசை நிறைவேறாது போயிற்று.

இந்த சமயத்தில் திரு ராமானுஜாச்சாரி பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். தென்னாட்டின் அப்போதைய சிறந்த தத்துவப் பேராசிரியர்களில் அவர் ஒருவர் என்பதோடு அண்ணாமலையின் மூளை என்று வெகுவாக அறியப்பட்டவர். 1970வரை அங்கு பயின்ற எவரும் அவரை மறந்திருக்க முடியாது. ந்¢னைவாற்றலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் பெற்றிருந்தவர். உணவு விடுதியின் காப்பாளராகப் பலமுறை இருந்தவர். தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் செனட், சிண்டிகேட் ஆகியவற்றில் நிர்வாகத்தின் நியமன உறுப்பினராக இருந்து வந்தவர். அவர் வார்டனாக இருந்த காலத்தில் கலாட்டா செய்யவோ கட்டுப்பாட்டை மீறவோ முரட்டு மாணவர்கள் கூடப் பயந்தனர். எதாவது குறைபாட்டினைப் புகார் செய்ய அவரிடம் சென்றால், "வாப்பா சபாநாயகம்! திருவள்ளுவர் பிளாக் 108ஆம் நம்பர் ரூம் தானே? என்ன- மேல் ஜன்னல் கதவு ஒடஞ்சு தொங்குதா? சொல்லியாச்சு! நாளைக்கு கார்ப்பெண்டர் வருவார்" என்று நாம் எதிர்பாராதபடி ஏதோ யட்க்ஷ¢ணி வந்து அவரிடம் சொல்லிய மாதிரி, ஆயிரம் பேருக்கிடையே நம்மை நினைவுகூர்ந்து பெயர், பிளாக், அறை எண், அங்கு முதல் நாள் இரவு அவர் வலம் வந்த போது அவர் கவனித்த- நாம் புகார் செய்ய வந்திருக்கிற- குறைபாட்டினைக் குறிப்பிட்டுக் கேட்கும்போது நமக்கு சிலிர்ப்பு ஏற்படும். அவரது அத்தகைய ஆற்றலால் யாரும் அவர் முன்னிலையில் தவறு செய்ய அஞ்சுவார்கள். ஒருமுறை பார்த்த முகத்தை, கேட்ட பெயரை அவர் மறக்க மாட்டார். அதனால் 1950ல் துணைவேந்தர் மணவாள ராமாநுஜம் அவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் முன்னணியில் இருந்த அனைவரையும் அவர் அடையாளம் சொல்லி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நிர்வாகத்துக்குச் சாத்தியமாக இருந்தது. இதனால் அவர் நிர்வாகத்தின் மிகப் பெரிய சொத்தாகக் கருதப்பட்டார். அப்படிப்பட்டவரின் நிர்வாகத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தது- சென்னையில் படிக்க முடியாத என் குறையை ஈடு செய்தது.

அப்போதுதான் தொடங்கி இரண்டாம் ஆண்டு என்பதால் இப்போது போலக் கூட்டம் இல்லை. நாங்கள் 75 பேர் தான் அந்த ஆண்டில் பயிற்சி பெற்றோம். அப்போது என் உடன் பயின்றவர் சமீபத்தில் விளக்கு விருது பெற்ற கவிஞர் சி.மணி என்கிற சி.பழனிச்சாமி அவர்கள். அவர் படிப்பு முடிந்து பெரியநாய்க்கன் பாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரானார். நானும் முப்பதுக்கும் மேற்பட்ட என் சகாக்களும் எங்களது தென்னார்க்காடு மாவட்டக் கழக- பழைய ஜில்லாபோர்டு- உயர்நிலைப் பள்ளிகளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகச் சேர்ந்தோம். அப்போது கல்வித் துறையில் மட்டும் வேலையில்லாத் திண்டாட்டமில்லை. இப்போது போல எம்.எஸ்.சி முதல் வகுப்பில் தேறியும் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க நேர்ந்ததில்லை. சொல்லப் போனால் ஆசிரியர் பற்றாக் குறையால், ஆசிரியர் பயிற்சியில் தோல்வியுற்றவர்- ஏன் பயிற்சியில்லாத பட்டதாரிகள் கூடத் தற்காலிக நியமனம் பெற்றார்கள். அவர்களில் விரும்பியவர்க்கு மறு ஆண்டு ஜில்லா போர்டு உதவித்தொகை கூட, பயிற்சியில் சேர்ந்து படித்து மீண்டும் நியமனம் பெறக் கிடைத்தது. அதிலும் கணித, அறிவியல் பட்டாதாரிகளுக்குக் கிராக்கி அதிகம். அதிகமும் வரலாறு, சமூகவியல் படித்தவர்கள் தான் கிடைத்தார்கள். அதனால் மனு செய்த கணித, அறிவியல் ஆசிரியர்களுக்குக் கேட்ட இடத்துக்கு நியமனம் கிடைத்தது. அப்படித்தான் நானும் முதலில் போட்ட, தூரமான இடத்துக்குப் போக மறுத்து என் கிராமத்துக்கு அருகில் இருந்த விருத்தாசலத்திற்குப் போட்டால் சேருவேன் என்று நிபந்தனை விதித்து அப்படியே பெற்றேன். இப்போது சொன்னால் நம்பவியலாது. அது ஒரு காலம்!

(-தொடர்வேன்...)

No comments: