Thursday, February 12, 2004

நினைவுத்தடங்கள் - (13)

அண்ணாமலைப் பல்கலையில் பயின்றவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயம் கல்வி மட்டுமல்லாமல், கலை, இசை, தமிழுணர்வு, அரசியல் என்று பல்கலைகளையும் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்புக் கிட்டியதைச் சொல்லவேண்டும். கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், தமிழ் மற்றும் சமஸ்கிருத பண்டிதப் படிப்பு இவற்றுடன் இசை, ஓவியம் போன்ற நுண்கலைகள் பயிலவும் தனித் தனிக் கல்லூரிகள் இருந்தன. இப்போது மருத்துவக் கல்லூரி, மற்றும் பல் மருத்துவம் ஆகியவையும் சேர்ந்துள்ளன. எல்லாம் ஒரே வளாகத்தினுள் இருந்ததால் நாம் படிக்கும் படிப்புடன் மற்றவை பற்றியும் அறியும் வாய்ப்பும் கிட்டியது.

நான் படித்த கால கட்டத்தில் ( 1951-1957 ) மணவாள ராமானுஜம், சர்.சி.பி. ராமசாமி அய்யர், சர்.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் போன்ற பிரபலங்கள் துணைவேந்தர்களாகவும் தண்டபாணி தேசிகர், சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை, மதுரை சோமசுந்தரம் போன்ற பல சங்கீத வித்வான்கள் இசைக் கல்லூரிப் பேராசிரியர்களாகவும், முதல்வர்களாகவும் பணியாற்றியதைப் பார்க்கும் பேறு கிட்டியது. பிரபல இசை வல்லுனர்கள் இசைக் கல்லூரியில் சிறப்புக் கச்சேரிகள் செய்ததையும் டாக்டர் மு.வ, பாவேந்தர் பாரதிதாசன் போன்ற மேதைகளின் சொற்பொழிவுகள் இலக்கியமன்றங்களில் ஆற்றியதையும் கேட்கும் பாக்கியமும் கிட்டின.

ஆங்கிலத்துக்கு பேராசிரியர் துரைசாமி, ஜிப்பா சீத்தாராமன் போன்ற ஜீனியஸ்களிடமும், தமிழுக்கு டாக்டர் ஏ.சி.செட்டியார், வித்வான் மு.அருணாசலம் பிள்ளை போன்றவர்களிடமும் நான் பட்டப்படிப்பில் பாடம் கேட்டிருக்கிறேன். ஏ.சி.செட்டியார் அப்போது மாணவர்களூக்கு கவர்ச்சியானவர். அந்தக் காலத்தில் கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டாதபோது சினிமா நடிகர்களைக் காணக் கூட்டம் நிற்கும் என்பார்களே அது போன்று, அவர் கல்லூரி வளாகத்துக்குள் இருந்த அவரது வீட்டிலிருந்து காலை ஒன்பதரை மணிக்குக் கிளம்பி பெரிய பூங்காவின் குறுக்காக வரும் அழகைப் பார்க்க மாணவர் கூட்டம் சாலையில் காத்திருக்கும். நெடிய அழகான சிவந்த தோற்றம், வலப்பக்கம் வகிடெடுத்த சுருள்முடி பளீரென்ற மேனாட்டு உடை இவற்றுடன் அவரைப் பார்க்கப்பரவசமாக புதிய மாணவர்களூக்கு இருக்கும். ஆனால் என்னளவில் அவரது போதனை என்னை ஈர்க்கவில்லை. பின்னாளில் 'சரஸ்வதி'யில் 'உதிரிப் பூக்கள்' என்ற தலைப்பில் 'வனா கனா' என்ற பெயரில் வல்லிகண்ணன் அவரைப் பற்றி எழுதியது மிகப் பொருத்தமாகவே இருந்ததை ரசித்தேன். 'ஏ.சி.செட்டியார் தமிழ் பேசினால் ஆங்கிலம் போல இருக்கும்; ஆங்கிலம் பேசினால் தமிழ்போல இருக்கும்' என்று அவரது மொழிவெளிப்பாட்டைக் குறிப்பிட்டது அவரது வகுப்பில் பாடம் கேட்ட என் போன்றவர்க்கு அனுபவபூர்வமானது. மாறாக வித்வான் மு.அருணாசலம் பிள்ளை அந்தக் காலத்துத் தமிழ்ப் பண்டிதருக்கு அசலான எடுத்துக் காட்டாக மூலக்கச்சம் வைத்துக்கட்டிய மல் வேட்டி, டை இல்லாத ஓப்பன் கோட்டு, தலையில் டர்பன், நெற்றியில் பட்டையாய் திருநீற்றுப் பூச்சு, காலில் சாதா தோல் செருப்பு என மாணவர்களின் கேலிப் பொருளாகக் காட்சி தருவார். வகுப்பில் மாணவர்களை அடக்க மற்ற பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். வகுப்பு தொடங்கும் போது ஒரே கூச்சலாக இருக்கும். ஆனால் பிள்ளை அவர்கள் கம்பராமாயணத்திலிருந்து 'ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்.....' என்று கேதாரகௌளையில் உரத்த குரலில் இசையோடு பாடத்தைத் தொடங்கியதும் 'கப்' பென்று இரைச்சல் அடங்கி ஒரு அதீத அமைதி ஏற்படும் பாருங்கள்- அது சிலிர்ப்பான அனுபவம். இசையின் வலிமையை அப்போதுதான் நான் உணர்ந்தேன்.

இன்னொரு ரசமான அனுபவம்- பல மாவட்டம், பல மாந்¢லம், பல நாடுகளிலிருந்தெல்லாம் மாணவர்களை அங்கு காண முடிந்தது. கேரளத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும்(குறிப்பாக இசைக்கல்லூரியில் படிக்க ஈழத்திலிருந்து நிறைய பெண்கள்) வந்து பயின்றது அவர்களது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறியும் அனுபவத்தை அளித்தது.

அரசியல் விரும்பாமலே உங்களை ஈடுபட வைக்கிற சூழ்நிலை அங்கு இருந்தது. அநேகமாக தினமும் ஒரு அரசியல் கூட்டம் பல்கலைக் கழக வளாகத்தை ஒட்டியிருந்த திருவேட்களத்தில் நடைபெற்றது. வேறு பொழுது போக்க இடம் இல்லாததால் அனைவரும் அந்தக் கூட்டங்களுக்குச் செல்லுகிற வழக்கம் எல்லோருக்கும் அமைந்தது. பெரியார், அண்ணா, இளந்தாடி நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்ட நாவலர் , மதியழகன், கலைஞர் கருணாநிதி ஆகிய திராவிடத்தலைவர்களும் பாலதண்டாயுதம், பார்வதி கிருஷ்ணன் போன்ற கம்யூனிசத் தலைவர்களும் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவார்கள். அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அரசியல் நாற்றங்காலாக அப்போது விளங்கியது. எந்தப் போராட்டம் என்றாலும் அங்கே பிரதிபலிப்பும் பங்கேற்பும் நிச்சயம் இருக்கும். குறிப்பாகத் திராவிடக் கட்சிகள் மாணவர்களை வெகுவாகத் தம் பேச்சுத் திறமையால் கட்டி இழுத்தனர். '53 வாக்கில் தேவிகுளம் பீர்மேடுக்காக ஒரு போராட்டம் நடந்த போது அண்ணாமலையில் ஒரு பிரமாண்டமான மாணவ ஊர்வலம் சிதம்பரம் நகரையே கிடுகிடுக்க வைத்தது.. எந்த மாணவனும் விடுதி அறையில் நின்று விடாதபடி அறை அறையாய்ப் போய் விரட்டிக்கொண்டுவந்து ஊர்வலத்தில் நிறுத்தினர். வர மறுத்தவர் தாக்கப்பட்டனர். இப்படி விரும்பாமல் போனாலும் அரசியலில் ஈடுபடும் நிர்பந்தம் இருந்தது. அதனால் முன்னணியில் நிறுத்தப்பட்ட அப்பாவி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட போதும், 65ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் உதயகுமார், ராஜேந்திரன் என்ற மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டதும் இப்படித்தான். அண்ணாமலை சர்வ கலாட்டா சாலை என்ற அவப் பெயர் உண்டாக இவ்வகையான அரசியலே காரணமாகி பெற்றோர் அங்கு தம் பிள்ளைகளைச் சேர்க்கவே அஞ்சுகிற நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றியே தென்னார்க்காடு மற்றும் தஞ்சை மாவட்ட மாணவர்கள் அங்கு சேர்கிற நிலை இருந்ததை மறுக்க முடியாது.

- தொடர்வேன்..

No comments: