Wednesday, February 04, 2004

நினைவுத் தடங்கள் - 12

எத்தனை பேர் அறிவுறுத்தினாலும், 'இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிக்கிற' சபலம் எழுத்தைப் பொறுத்தவரை எனக்கு இருந்தே வந்தது. நிலையான ஆசிரியர் தொழிலை விட்டு விட்டு, பத்திரிகையில் சேர விரும்பியது நடக்காமல் போனதை, நல்லதுதான் என்று அப்போதைக்கு நினைத்தேன் என்றாலும் அடுத்து அதே போல ஒரு வாய்ப்பு வந்தபோது இருக்கிற வேலையை விட்டுவிட்டு அதற்குத் தாவவே மனம் சபலப்பட்டது.

1970 வாக்கில்- ஆண்டு சரியாக ஞாபகமில்லை- கோவை வானொலி தொடங்கிய சமயம். 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' பதவிக்கு அழைத்து விளம்பரம் வந்தது. அப்போது நான் பதவி உயர்வு பெற்று உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகி இருந்தேன். 1957ல் பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்ற நான் 1963லேயே - காமராஜர் தயவால் 'இடறி விழுந்தால் ஒரு இடைநிலைப் பள்ளி, ஓடி விழுந்தால் ஒரு உயர்நிலைப்பள்ளி' என்று ஏராளமான உயர்நிலைப் பள்ளிகள் தமிழ் நாட்டில் அப்போது திறக்கப் பட்டதால் ஆறே ஆண்டில் நானும் என் சகாக்களும் பதவி உயர்வு பெற்றோம். அப்போது எனக்கு வயது 28 தான். எங்களுக்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு 'Mass promotion' கல்வித் துறையில் நிகழ்ந்ததில்லை. 20-25 ஆண்டுகள் ஆசிரியராக உழன்று சலித்துப் போன பின் தலைமை ஆசிரியரானவர்களே அதிகம்.

இளம் வயதிலேயே பதவி உயர்வு பெற்று விட்டதால் உற்சாகத்தோடு பணியாற்றினேன். 7 ஆண்டுகளுக்குப் பின் பதவி காயம் ஆனபின்தான் இந்த 'இருப்பதை விட்டு........' ஆசை வந்தது. நானும் அகில இந்திய வானொலிக்கு 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' பதவிக்கு மனுச் செய்தேன். 1200 மனுக்களில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு 'நேர்முகத் தேர்வு'க்கு அழைக்கப் பட்டவர்- களில் நானும் ஒருவன். கிடைத்தால் அதை ஏற்க மனம் சபலப் பட்டாலும் யாரையாவது- அது தொடர்பானவர்களை யோசனை கேட்க விரும்பினேன். அப்போது அகிலன் சென்னை வானொலியில் 'ஸ்கிரிப்ட் ரைட்டரா'கப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரோடு அப்போது எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. எனவே அவரிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.

அகிலனோடு எனக்கு ஏற்பட்ட பழக்கத்தை முதலில் சொல்ல வேண்டும். கலைமகளில் அகிலன் நிறைய எழுதிய போது அவரது கதைகள் என்னை வெகுவாக ஈர்த்தன. கலைமகள் நாவல் போட்டியில் முதல் ஆண்டிலேயே 'பெண்' என்ற நாவலுக்காக 1000 ரூபாய் பரிசு பெற்றிருந்தார் அவர். அது முதல் கலைமகளி?ன் ஆஸ்தான எழுத்தாளர் போல ஆகிவிட்டார். நிறையத் தொடர்கதைகள் எழுதி இளைஞர்களைக் கவர்ந்தார். அப்படி கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். நான் அவரது தீவிர ரசிகனானேன். அவ்வப்போது பாராட்டுக் கடிதங்கள் எழுதியதால் அவரோடு நெருக்கம் ஏற்பட்டது. எழுதுவதற்கு முதலில் அவர்தான் எனக்கு ஆதர்சம். புதிதாகக் கட்டிய என் வீட்டிற்கு 'அகிலம்' என்றே பெயரிட்டேன். என் மகனுக்கு அகிலநாயகம் என்று பெயர் வைத்தேன். அந்த அளவுக்கு அவரது எழுத்தின் மீது அப்போது எனக்குப் பிரேமை. கடிதம் மூலமே தொடர்பு கொண்டிருந்த எனக்கு அவரை நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்பு ஒரு திருமணத்தில் கிட்டியது. என்னைப் போலவே அவரது தீவிர ரசிகரான அந்த நண்பரின் திருமணத்தில், பேசுவதற்காக அகிலன் ஒரு குக்கிராமத்துக்கு வந்திருந்தார். அப்போது திருமணங்களில் புத்தகங்களைப் பரிசளிப்பதுபோலவே நல்ல பேச்சாளர்களை, இசைக்கச்சேரிகளை ஏற்பாடு செய்வதுபோல அழைப்பதுண்டு. அப்போது அகிலன் பிரபல எழுத்தாளர் என்பதால் அழைக்கப்பட்டிருந்தார். அவர் அதுவரை தன்னைப் பொது இடங்களில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. தன் புகைப்படத்தைப் பிரசுரிக்க அனுமதித்தில்லை. அவரது பெயர் மட்டும் தான் தெரியும். இதைப் பயன்படுத்தி ஒரு எத்தன் பல இடங்களில் 'நான் தான் அகிலன். பர்ஸ் திருடுபோய்விட்டது'என்று சொல்லி அவரது ரசிகர்களிடம் பணம் பறித்து விட்டான். தொடர்ந்து இப்படி நிறையப் புகார்கள் வந்த பிறகே தன்னை வெளிக் காட்டாதிருந்த தவறை உணர்ந்து கலைமகளில் தன் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதை வைத்து ஒரு சிறுகதையும் எழுதினார்.அதன் பிறகே கூட்டங்களில் கலந்து கொள்ளவும் திருமணங்களில் பேசவும் தொடங்கினார். அப்படித்தான் நண்பரின் திரும- ணத்திற்கும் பேசவந்திருந்தார். அந்த குக்கிராமத்தில் அவரது பேச்சுக்குத் தலைமை ஏற்க யாரும் இல்லாததால் நானே தலைமை ஏற்கும்படி ஆயிற்று. அப்போது நெருங்கிப் பழக வாய்ப்புக் கிட்டியது. அதுவரை அகிலன் ரயில்வேயில் 'தபால் சார்ட்டர்' ஆகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அவரது 'பாவை விளக்கு' படமானபோது மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு திரைத் துறையில் புகுந்தார். 'திரையுலகம் மின்னுகிற உலகம்; அது நிஜமல்ல' என்று அவரே தன் கதைகளில் பலமுறை குறிப்பிட்டு எச்சரிக்கை செய்திருப்பதை எடுத்துக் காட்டி அவர் மின்னுகிற திரை உலகிற்குச் செல்வதற்குக் கவலை தெரிவித்து நான் ஒரு கடிதம் எழுதினேன். எழுத்தாளர்கள் உள்ளே புகுந்து அந்த பயத்தை உடைக்க வேண்டும் என்றுதான் தான் அதில் ஈடுபடுவதாகவும் அப்போது அவர் எனக்குப் பதில் எழுதினார். ஆனால் அவர் நினைத்தபடி மின்னுகிற உலகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் தோல்வியுற்று அதை விட்டு வெளியே வந்தார். நல்ல வேலையை அவசரப் பட்டு விட்டு விட்டதற்காகப் பெரிதும் வருந்தினார். பிறகு எப்படியோ அவர்மீது அக்கறை கொண்டவர்களின் உதவியால் சென்னை வானொலியில் 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' ஆனார். அவரைக் கேட்டுவிட்டு 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' நேர்முகத் தேர்வுக்குச் செல்ல எண்ணி நான் சென்னை சென்று அவரைச் சந்தித்தேன். விகடனுக்குப் போகுமுன் யோசனை கேட்ட என் உறவினரைப் போலவே அகிலனும் அந்த என் முயற்சியை ஆதரிக்க வில்லை. 'இப்போது நீங்கள் ஒரு நல்ல கௌரவமான உத்தியோகத்தில் இருக்க்?றீர்கள். தலைமை ஆசிரியர்- சமூகத்தில் மதிப்பான ஒரு பதவி. அதை வ்?ட்டுவிட்டு இதற்கு ஏன் வரவேண்டும்? மேலும் நீங்கள் நினைப்பது போல வானொலியில் இலக்க்?ய சேவை எதுவும் செய்து விடமுடியாது. 'வயலும் வாழ்வும்' போன்றவற றில் 'அவரை-துவரை' என்று எதாவது தான் பேசிக்கொண்டிருக்க முடியும். வீணாக என்னைப் போல எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அக்கறையோடு அறிவுரை சொன்னார். அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு வந்தாலும் சபலம் விடவில்லை. திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்ற நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன். அங்கே என்னைப் போலவே அந்த நேர்முகத் தேர்வுக்கு அசோகமித்திரனும் வந்திருந்தார். அவரை நான் முன்பே சென்னையில் சிலமுறை அவரது வீட்டில் சந்தித்திருந்ததால் நட்புடன் பேசினார். அப்போது அவர் எந்த வேலையிலும் இல்லை. சிரமதசையில் இருந்தார். இந்த நேர்முகமே கண்துடைப்பு என்றும் முன்பே வானொலியில் பணியாற்றும் ஒருவரை அப் பதவிக்குத் தீர்மானித்து விட்டதாக கேள்விப்பட்டதாகவும், நம்பிக்கை- யில்லாமலே பணக்கஷ்டமான வேளையில் செலவு செய்து வந்திருப்பதாகவும் கவலையோடு சொன்னார். முடிவு அப்படித்தான் ஆயிற்று. வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த- எங்களோடு நேர்முகத்துக்கு வந்திருந்த பத்துபேர்?ல் ஒருவரான-நபருக்குத்தான்அந்த பதவி முன்பே தீர்மானிக்கப்பட்டபடி கிடைத்தது.

- தொடர்வேன்.

 

No comments: