Friday, January 23, 2004

நினைவுத்தடங்கள் - 11

எஸ்.எஸ், வாசன் தொடங்கிய `மாணவர் திட்டம்` இப்போதுள்ளதைப் போல மாணவ நிருபர் தேர்வு அல்ல. மாணவர்களது எழுத்தாற்றலை வெளிக் கொணர்வதும் ஓராண்டில் வெளிப்பட்ட மாணவ எழுத்தாளர்களில் இருவரை உதவி ஆசிரியர்களாக நியமிப்பதும் தான் நோக்கம். 1956-57ல் வாரம் ஒரு படைப்பாக 52 வாரங்களுக்கு கதைகள், கவிதைகள் தேர்வு செய்யப் பட்டு வெளிவந்தன. எனது `குழந்தைத் தெய்வம்` என்ற கதை 1957ல் நான் ஆசிரியர் பயிற்சி முடிந்து வெளிவந்த பின் வெளியானது. எல்லாக் கல்லுரி மாணவர்களது படைப்புகளும் வந்தன. அண்ணாமலையில் தொடர்ந்து இரண்டு மூன்று பேர் இதனால் மாணவர்கள் ஆசிரியர்களின் கவனத்துக்கு வந்தார்கள். கதை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்காதவர்கள்-தட அறியல் துறை இயக்குனராக இருந்து ராஜீவ் கொலைவழக்கில் பிரபலமாகப் பேசப்பட்ட திரு.சந்திரசேகரன்- எனக்கு ஓராண்டு சீனியர்-அதில் ஒருவர். அதைப் பார்த்ததும் எனக்கு நெருக்கமான, நான் அப்போது நிறைய எழுதிக் கொண்டிருந்ததை அறிந்த நண்பர்கள் உற்சாகப் படுத்தி என்னையும் விகடன் மாணவர் திட்டத்திற்கு எழுதத் தூண்டினார்கள். ஆனந்தவிகடன் எழுத்தாளர் என்பது அப்போது - ஏன் இப்போதும் தான்-புருவம் உயர்த்தும் சாதனை. நான் அதுவரை பெரிய பத்திரிகைகளுக்கு எழுதவில்லை. எனவே பயத்தோடு தான், நண்பர்களின் வற்புறுத்தலால் எழுதி அனுப்பினேன். என் பள்ளிப் படிப்பின் போது ஒரு ஐஸ் விற்பவனை தலைமை ஆசிரியர் பள்ளிக்கு அருகில் விற்பதற்குத் தடை விதித்தபோது நான் அவனுக்காக இரக்கப்பட்ட சம்வத்தை வைத்து எழுதிய கதை அது. படித்துப் பார்த்த நண்பர்கள் கதை நன்றாக வந்திருப்பதாகவும் நிச்சயம் வெளியாகும் என்றும் நம்பிக்கையூட்டினார்கள்.


அப்படியே கதையும் விகடனில்,என் போட்டோவுடனும் வகுப்பு கல்லூரி வ்¢வரங்களுடனும் வெளியாகியது. ஆனால் பெருமைப் பட்டுக்கொள்ளவும் நண்பர்களின் பாராட்டைப் பெறவும்தான் வாய்ப்பில்லாது போய்விட்டது. ஏனென்றால் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகல்லவா கதை பிரசுரம் ஆனது? அனால் அந்த ஏமாற்றம் வேறு வகையில் ஈடுகட்டப்பட்டது. நான் ஆசிரியராகப் பணியேற்ற அன்றுதான் கதை பிரசுரம் ஆனந்தவிகடனில் வெள்¢யாயிற்று. தபாலில் வந்த பிரதியுடன் தான் பள்ளிக்கு முதன் முதலாகச் சென்றேன். முதல் வகுப்பில் நுழைந்ததுமே ஒரு பையன் அவனிடம் இருந்த புது விகடனில் என் கதை வந்துள்ள பக்கத்தை விரித்துக் காட்டி, `இது நீங்க தானே சார்?` என்று கேட்டான். மிகுந்த பரவசமும் பெருமையும் ஏற்பட்டது, ஆனால் மிகவும் குளிர்ந்து போனதாக மாணவர் முன்னிலையில் காட்டிக்கொள்ள விரும்பாமல், `உட்கார்! வகுப்பில் இதெல்லாம் கேட்காதே!` என்று அவனை அடக்கினேன். ஆனால் பணியில் நுழைந்ததுமே கிடைத்த இந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

அந்த ஆண்டு வெளியான படைப்புகளை எழுதிய 52 பேருக்கும் அன்பளிப்பாக விகடனிலிருந்து ஒரு அழகான `பைலட்` பேனா அன்பளிப்பாக வந்தது. அத்துடன் சன்மானம் ரூ.150ம் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்குப் பின் `உதவி ஆசிரியர்` நியமனத்துக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்த போது மகிழிச்சியால் நான் திக்கு முக்காடிப் போனேன். ஏனேனில் 52 பேரில் 10 பேரைத் தேர்வு செய்து அழைத்திருந்தார்கள் என்பது பூரிப்பை ஏற்படுத்தியது.நான் விரும்ப்¢ய துறையில் பணி கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சி வேறு. போகவர பயணப்படியுடன் அழைத்திருந்தார்கள். மிகுந்த நம்பிக்கையுடன் சென்னைக்குப் புறப்பட்டேன்.

சென்னையில் என் உறவினர் ஒருவர்- ஜனசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், `விகடன்¢ல் உனக்குக் கிடைத்தாலும் நீ அதை ஏற்க வேண்டாம், நீ தற்போது அரசாங்க வேலையில் இருக்கிறாய், இது நிலையானது. விகடன் உதவி ஆசிரியர் வேலை வாழ்க்கைக்கு உத்திரவாதமான தல்ல. அதோடு அங்கு உன் எழுத்துக்களை அதிகம் வெளியிட அணுமதிக்க மாட்டார்கள். ஆசிரியப்பணியில் இருந்து கொண்டே நிறைய வெளிப்பத்திரிகைகளில் எழுத முடியும். விகடனில் அப்படி எழுத விடமாட்டார்கள்`-என்று என் உற்சாகத்தை வடியச் செய்தார். அதுதான் யதார்த்தமானது என்றாலும் மனது விகடனில் கிடைத்தால் தேவலை என்றே ஆசைப்பட்டது.


விகடன் அலுவலகத்தில் வரவேற்று சிற்றுண்டி கொடுத்து உபசரித்து மாடியில் இருந்த ஆசிரியர் அறைக்கு அனுப்பி வத்தார்கள். என்னைத் தவிர வேறு யாரும் பேட்டிக்கு வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை தனித்தனியாக அழைத்திருந்தார்கள் போலும். எஸ்.எஸ்.வாசன் அவர்களே பேட்டி கொடுத்தார். இன்முகத்துடன் வரவேற்று அமரச் செய்தார். என் கதை வந்த விகடன் அவர் கையில் இருந்தது. என்னைப் பற்றி விசாரித்த பின், `ஆசிரயராக இருப்பதால் குழந்தை மனத்தை உணர்ந்து நண்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனால் இந்தத் திட்டம் வேலை இல்லாதவர்க்கு வாய்ப்பளிக்க எண்ணித் தொடங்கப்பட்டது. இப்போது நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள். அதனால் வேலை இல்லாதவர்க்கு வாய்ப்பளிக்கலாம் அல்லவா?` என்று கேட்டார். கேட்க ஏமாற்றமாக இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், `சரி சார்! அப்படியே செய்யுங்கள்` என்று விடை பெற்றுக் கொண்டேன். என் உறவினர் `கிடைக்காதது நல்லது தான் போ` என்று தேற்றி அனுப்பினார். நாட்பட்ட பின் அது சரிதான் என்று பட்டது.

`எழிற் பூ` என்ற கதையை எழுதிய ஆம்பூர் கோ. கேசவனும், பின்னாளில் நல்ல நகைச்சுவை எழுத்தாளராகப் புகழ் பெற்ற முகுந்தன் என்ற புனைப் பெயர் கொண்ட எஸ்.வரதராஜனும் உதவி ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு விகடனில் பணியாற்றினார்கள். அதற்குப்பிறகு அந்த திட்டம் கைவிடப்பட்டது. பல வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் மாணவ நிருபர் திட்டம் வந்தது. ஆம்பூர் கேசவன் கொஞ்ச நாளில் நோய்ப்பட்டு இறந்து போனார். எஸ்.வரதராஜனும் விகடனை விட்டு வெளியேறி முகுந்தன் என்ற பெயரில் நகைச்சுவை எழுத்தாளராகப் பிரபலமானார். இப்போது அவரைப் பற்றித் தகவல் ஏதும் இல்லை. அவரது எழுத்துக்களையும் பார்க்க முடியவில்லை. என் உறவினர் சொன்னபடி அப்போது விகடனில் வாய்ப்பு கிடைக்காமல் போனதும் நல்லதற்குத்தான் என்று இப்போது படுகிறது. அதன் பிறகு விகடனிலேயெ நிறைய எழுதியதுடன் அதில் விசேஷமான `ஜாக்பாட்` பரிசும் பெற்றேன். ஆசிரியர் பணியில் பதவி உயர்வும் பெற்றுப் பேராசிரியாக ஓய்வும் பெற்றேன்.

-தொடர்வேன்.
-வே.சபாநாயகம்.

No comments: