Saturday, January 03, 2004

நினைவுத் தடங்கள் - 8

இன்றைய எனது வறளாத இலக்கியப் பிரக்ஞைக்கும் இலக்கியத் தேடலுக்கும் என் பள்ளிப்பருவத்தில் நிறையப் படிக்கக் கிடைத்ததும் சூழ்ந்¢லையும் தான் காரணம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தினமணி வாசிக்க அப்போதைய `இலட்சுமிகாந்தன் கொலை வழக்கு` விசாரணை தூண்டுகோலாக இருந்தது. 1944-45ல் அந்தக் கொலை வழக்கு விசாரணை
பரபரப்பாகப் பேசப்பட்டது. திரை உலகில் பிரபலமாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் பிரதான குற்றவாளிகளாக நிறுத்தப் பட்டு வி¡ரணை நடந்தது. லட்சுமிகாந்தன் என்பவர் இந்துநேசன் என்கிற தனது மஞ்சள் பத்திரிகையில், இன்றைய கிசுகிசு போல பூடகமாக இல்லாமல் வெளிப்படையாய் பெயர் குறிப்பிட்டே சினிமா நட்சத்திரங்களை
மிகக்கேவலமான மொழியில் படிக்கவே கூசுகிறமாதிரி திட்டி எழுதி வந்தார். பணம் பறிக்கும் நோக்கம்தான் பிரதானம். பாகவதர்- டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஆர்.மகாலிங்கம்-வரலட்சுமி என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ.மதுரம் ஜோடிகளை அற்பத்தனமாக அவர்களது அந்தரங்களைக் கொச்சைப் படுத்தி எழுதினார். பத்திரிகை கிடைக்கவில்லை என்கிற அளவுக்கு பரபரப்பான செய்திகள். இதனால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாரோ திட்டமிட்டு அவரைக் கொலை
செய்துவிட, பாகவதரும் கிருஷ்ணனும் கைதானார்கள். அந்த வழக்கின் விசாரணை விஸ்தாரணமாக குறுக்கு விசாரணனையின் கேள்வி-பதில் உட்பட-இப்போது போலத் தொகுத்துப் போடாமல் நாமே நீதிமன்றத்தில் இருந்து நேரில் பார்ப்பது போல் பத்திரிகைகளில் வந்தன.

என்னைப் போன்ற சிறுவர்களும் துப்பறியும் தொடர்கதை படிக்கிறமாதிரியான சுவாரஸ்யத்துடன் இருந்தது என்றால் அது ஏற்படுத்திய பாதிப்பின் வீச்சை உணரலாம். அப்படித்தான் என் பத்திரிகைப் படிப்பு ஆரம்பித்தது. அதல்லாமல் புதிதாக அப்போது தொடங்கப் பட்ட நூலகமும் என் பரந்த படிப்புக்கு உதவியது. `மெய்கண்டார் வாசகசாலை` ( மெய்கண்டார் அவதரித்த ஊர் அது- பெண்ணாடம் என்பதால்) என்ற அந்த நூலகத்தை பக்தவச்சலம் திறந்து வைத்தார். அங்குதான் நான் அப்போது பிரபலமாய் இருந்த வங்காள நாவல்களை- பக்கிம் சந்திரர், சரத்சந்திரர் எழுதியவை
எல்லாம் படிக்க நேர்ந்தது. ஆனந்த விகடனில் அப்போது தேவனோ யாரோ எழுதிவந்த `சூர்யகாந்தி` என்ற
தொடர்கதை படித்ததும் நினைவுக்கு வருகிறது. அப்போது இரண்டு எதிர் எதிர் பத்திரிகைகள்- தார்மீக ஹிந்து, நாத்திகம் என்று ஞாபகம்- நடத்திய விறுவிறுப்பான விவாத யுத்தம் இன்னும் நினைவில் நிற்கிறது.


வாசகசாலையை ஒட்டித்தான் வானொலித் திடல் இருந்தது. அங்குதான் நான் பெரியாரையும், ராஜாஜியையும் முதன் முதல் பார்த்தேன். ஒரு பெரிய காங்கிரஸ் மாநாடு அங்கு நடந்தது. ராஜாஜி தலைமையி நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்கு ம.பொ.சி, அண்ணாமலைப்பிள்ளை, சுத்தானந்த பாரதி, சின்ன அண்ணாமலை, சேலம் சுப்பிரமணியம் ஆகியோர் வந்திருந்
தது பசுமையாய் நினைவில் நிற்கிறது. அப்போது காந்தியடிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணத்தல் இருந்தார். அவருக்காகத் தனி ரயிலே விடப்பட்டிருந்தது. அவர் கார்டு லைனி¢ல் அப்போது பயணித்திருந்தார். திருச்சி போகும் வழியில் அரியலூர் நிலையத்தில் மட்டும் 5 நிமிஷம் நிறுத்தி தரிசனம் தர ஏற்பாடாகி இருந்தது. காந்திஜியைப் பார்க்க பள்ளியிலிருந்து எங்களைக் கூட்டிச்சென்றார்கள். கண்ணுக்கெட்டியவரை மிகப் பிரமாண்ட ஜனசமுத்திரம் பாபுவைத் தரிசிக்கக் கூடியிருந்தனர். சரியாகக் குற்¢ப்பிட்ட நேரத்துக்கு காந்திஜியின் ரயில் வந்தது. அவர் இருந்த கம்பார்ட்மெண்டின் கதவு ஒருபெரிய அகழிப்பாலம் போல முன்னால் சங்கிலியில் பிணைத்த மேடையாகத் திறந்தது. எதிர் வெய்யலில் செப்புச் சிலையில் நிறத்தில் கண்கலைக் கூசவைக்கிற பிரகாசத்தில் பாபுஜி மக்கள் கூட்டத்தை நோக்கிக் கைஅசைத்தார். `மகாத்மா காந்திக்கு ஜே!` என்ற விண்ணை எட்டிய கோஷம்
உடலைச் சிலிர்க்க வைத்தது. 60 ஆண்டுகள் ஆகியும் அந்த சிலிர்ப்பு மறக்க வில்லை.

பெரியார் வானொலித் திடலில் பேசிய போது அவர் மக்களது அறியாமையை இடித்துரைத்தது அந்த சின்ன வயதிலேயே எனக்கு ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது. அப்போது பெரியாரிடம் ஒரு சீட்டு தரப்பட்டது. அதைப் படித்த பெரியார், ` ஒருத்தர் கேட்டிருக்காரு- நீங்கதான் கடவுளை மறுக்கிறவராச்சே, பேரை ஏன் ராமசாமின்னு வச்சிருக்கீங்கன்னு. அதுவா அது- நான் ராமனுக்கு சாமி` என்று பதில் சொன்னர். ஒரே கைத்தட்டல். ஆரவாரம். நான் அதை வெகுநாட்கள் பார்க்கிறவரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு வேரொரு ஊரில் நடைபெற்ற அவரது கூட்டத்துக்குச் சென்றபோது இதே `நான் ராமனுக்கு சாமி` என்ற விளக்கத்தைக் கேட்டதும் எனக்குச் சப்பிட்டுப் போயிற்று. பெரியாரும் இப்படிபட்ட செப்பிடுவித்தை செய்யநேருவதை நினைத்து மனதில் சலிப்பு ஏற்பட்டது.

- தொடர்வேன்.
-வே.சபாநாயகம்.

No comments: