Thursday, January 22, 2004

நினைவுத் தடங்கள் - 10

அண்ணாமலையில் என்னுடன் பயின்றவர்களில் இன்று பிரபலமாக இருப்பவர்களில் சமீபத்தில் `விளக்கு விருது` பெற்ற கவிஞர் சி.மணி விடுபட்டு விட்டது. முன்னர் குறிப்பிட்டவர்கள் பட்டப் படிப்புவரை என்னுடனும் எனக்கு ஓரிரு ஆண்டுகள் முன்னும் பின்னும் பயின்றவர்கள். சி. மணி அண்ணாமலையில் 1955ல் தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாவது `பேட்ச்` ஆக 1956-57ல் என்னுடன் பயின்றார். அவரது இயற்பெயர் பழனிசாமி. அவர் ஆங்கில முதுகலை பயின்றவர். பயிற்சி முடிந்ததும் சேலம் பெரியநாய்க்கன் பாளையம் அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியில் ஆங்கில விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

கல்லூரியில் உடன் பயின்றபோது நாங்கள் அவரைக் கவிஞராக அறிந்திருக்கவில்லை. அவர் மிகவும் சாது. மிகவும் அடக்கமானவர். கூச்ச சுபாவம் உள்ளவர். அதிகமாக யாரிடமும் பழக மாட்டார். என்னுடன் நட்புக் கொண்டிருந்தவர். கல்லூரிக் காலத்திலேயே எழுத்தாளனாக என்னை அவர் அறிவார். ஆனால் எனக்குதான் அவர் கவிஞர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆசிரியப்பணி ஏற்று 10 ஆண்டுகளுக்குக்குப் பின்னர் சி.சு.செல்லப்பாவின் `எழுத்து`வில் பிரபல கவிஞரான போது தான் அவர் என் கல்லூரி நண்பர் என்று ந.முத்துசாமியின் மூலம் அறிய நேர்ந்தது.

அப்பொது முத்துசாமி கூத்துபட்டறையைத் தொடங்கி இருக்கவில்லை. `கசடதபற` குழுவினரில் ஒருவராக இருந்து அதன் மூலமும் கணையாழி மூலமும் நல்ல சிறுகதைஆச்¢ரியராக அறியப் பட்டிருந்தார். அப்போதெல்லாம் நான் சென்னை சென்றால் தீபம் அலுவலகத்திற்கும் கசடபற குழுவினர் (சா.கந்தசாமி, ஞானக்கூத்தன்) அறைக்கும் செல்லாமல் திரும்புவதில்லை. அப்படி ஒருமுறை போன போது தான் திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமியைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் எனது கல்லூரிப் படிப்பு பற்றி பேச்சுவந்த போது 56-57ல் அண்ணாமலையில் பயின்றிருந்தால் சி.மணி உங்களுடன் படித்திருக்கணுமே என்று முத்துசாமி கேட்டார். பிறகு விவரம் கேட்ட பிறகு தான் தெரிந்தது பழனிசாமிதான் அவர் என்று. உடனே அப்போது சென்னைக்கு வந்திருந்த சி.மணியிடம் அழைத்துச் சென்றார்.

10 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த நான் கல்லூர்¢க் காலத்தில் அவர் கவிஞர் என்று எங்களுக் கெல்லாம் காட்டாதி- ருந்ததற்கும் முத்துசாமி மூலம் அறிய நேர்ந்ததற்கும் கோபித்துக் கொண்டேன். அப்போது அவர் `நடை` என்ற சிற்றிதழைத் துவக்கி ஒரு இதழ் வந்திருந்தது. இரண்டாம் இதழில் அவர் கேட்டுக் கொண்டபடி எம்.டி.வாசுதேவன் நாயரின் `நாலுகட்டு வீடு` - சி.ஏ.பாலன் மொழிபெயர்த்தது- நாவலை விமர்சித்து எழுதினேன். பொருளாதார நெருக்கடி இல்லாதிருந்தும் தரமான படைப்புகள் வராததால் ஆறு இதழ்களுக்குப் பின் அந்த தரமான `நடை` இதழை அவர் ந்¢றுத்தி விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் விளக்கு பரிசு பெற்றதையும் அவரது முதிய தோற்றத்தையும் செய்தித் தாட்களில் பார்த்ததும் வாழ்த்துத் தெரிவிக்க விரும்பி னேன் என்றாலும் இன்றுவரை அவரது தற்போதைய முகவரி தெரியாமல் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.

பட்டப் படிப்பு காலத்தில் சிற்பி அவர்கள் தம்முடன் தமிழ் ஆனர்ஸ் பயின்ற நண்பர்கள் ச.மெய்யப்பன், மருதூர் இளங்கண்ணன் போன்றவர்களை ஆசிரியக் குழுவாகக் கொண்டு `முத்தமிழ்` என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். நான் ஓவியராக அதில் அட்டைப் படமும் உள் சித்திரங்களும் வரைந்தேன். அந்தப் பத்திரிகைப் பயிற்சிதான் பின்னாளில் சிற்பி புகழ் பெற்ற கவிஞரானதற்குப் பயிற்சிக் களமாக அமைந்தது எனலாம். அந்த கால கட்டத்தில் நான் நிறைய கதைகள் எழுதி, அப்போது புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்த நாரண துரைக்கண்ணனை ஆசிரியராகக் கொண்ட `ஆனந்த போதினி` மற்றும் `பிரசண்டவிகடன்`, எ.ஸ்.எஸ்.மாரிசாமியை ஆசிரியராகக் கொண்ட `இமையம்` மற்றும் `பேரிகை`,அரு.ராமனாதனின் `காதல்` இதழ்களில் பிரசுரம் ஆனது. சன்மானம் இல்லை என்றாலும் ஒரு ஆரம்ப எழுத்தாளனை ஊக்குவித்த நாரண துரைக்கண்ணன், எஸ்.எ.ஸ்.மாரிசாமி, அரு.ராமனாதன் ஆகியோரை மறக்க முடியாது.

அப்படி இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க இன்று யார் இருக்கிறார்கள்? அதிகம் விற்பனையில்லாத பத்திரிகைகளில் கொஞ்சம் காலூன்றி நிற்கத் தொடங்கியதும் `ஆனந்தவிகடன்` போன்ற பிரபல பத்திரிகளில் என் கதைகள் வரவேண்டுமே என்ற தாகம் ஏற்பட்டது. விகடனில் எல்லாம் என் போன்ற தொடக்க நிலைப் படைப்பாளிகளுக்கு இடம் கிடைக்குமோ என்று ஏக்கம் கொண்டிருந்த போது தான் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் முதன் முறையாக `விகடன் மாணவர் திட்டத்தை 1956ல் அறிமுகப் படுத்தினார். அது என்னைப் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

-தொடர்வேன்.
- வே.சபாநாயகம்.

No comments: