Monday, January 12, 2004

நினைவுத் தடங்கள் - 9

கல்வி வள்ளல் ராஜாசர் அண்ணாமலை செட்டியாருக்கு எங்கள் தென்னார்க்காடு மாவட்டத்(இப்போதைய கடலுர், விழுப்புரம் மாவட்டங்கள்) துக்காரர்கள் பெரிதும் கடமைப் பட்டவர்கள். ஏனெனில் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைக்கப் பட்டிருக்காவிடில் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் பேர் உயர் கல்வி பெற்றிருக்க முடியாது. மலையாளிகள், இலங்கைத் தமிழர்கள் எனப் பல் திசைகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றாலும் சிதம்பரத்தைச்சுற்றி இருந்தவர்கள் தாம் அதிகமும் அங்கு படித்தவர்கள். விழுப்புரம், கடலுர், சீர்காழி, மாயவரம் ஆகிய இடங்கள்¢லிருந்து தினமும் ரயிலில் வந்து படித்தவர்கள் அதிகம். இப்போது பேருந்து வசதி பெருகி விட்டதால் எல்லா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பேர் தினமும் பயணம் செய்து அங்கு படிக்கிறார்கள்.

1951ல் நான் அங்கு இண்டர்மீடியட்டில் சேர்ந்த பொழுது, பேருந்து வசதி இல்லாததால், ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அந்த நாளைய ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு அங்கு படித்துப் பட்டம் பெற்றதை மறக்க முடியாதது போலவே, சாப்பாட்டையும் மறக்க முடியாது. மாதம் 45-50 ரூபாய்க்குள்தான் பில் வரும். அவ்வளவு மலிவாக அவ்வளவு அற்புதமான சாப்பாட்டை எங்கும் நான் கண்டதில்லை, கேட்டதில்லை. அந்த நாளைய ஹாஸ்டல் வாழ்க்கையில் பெற்ற அனுபங்கள் என்றும் பசுமையாய் நிற்பவை.

பல மாவட்டத்து மாணவர்கள், பல மாநிலத்து மாணவர்கள், இலங்கைத் தமிழர்கள் என்று பல்வேறு கலாசார, பண்பாட்டுக்காரர்களுடன் பழக நேர்ந்ததால் உலகம் பரந்து தென்பட்டது. அறிவு விசாலப் பட்டது. அரசியல் அதிகமும் புழங்கியதால் விரும்பாமலே அரசியலை அறிந்து கொள்ளும் கட்டாயமும் ஏற்பட்டது. நான் சேர்ந்த பொழுது, மணவாள ராமானுஜம் என்ற கண்டிப்பான துணைவேந்தர் இருந்தார். அவர் மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தது பல மாணவர்க்குப் பிடிக்கவில்லை. ஹாஸ்டலிலும் கடுமையான கண்காணிப்பு. மாலை ஆறு மணிக்கு கேட் பூட்டப் பட்டுவிடும். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அதற்குமேல் வெளியே செல்லவோ திரும்பவோ முடியும். மீறினால் மறுநாள் நோட்டீஸ் போர்டில் பெயர் வந்துவிடும் அபராத அறிவிப்புடன். இது சினிமா பார்க்கிறவர்கள், அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குப்போய் கலர் பார்ப்பவர்களுக்கெல்லாம் இடைஞ்சலாக இருந்தது. இது போதாதென்று ஆண்கள் விடுதியிலிருந்து கூப்பிடு தொலைவில் இருந்த பெண்கள் விடுதிக்குச் செல்லும் சாலை மறித்துச் சுவர் எழுப்பப்பட்டது.

இது தங்களைச் சிறுமைப் படுத்துவதாகக் கூறி பெரிய ஆர்ப்பாட்டமும் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. மாணவிகளையும் இதில் சேர்த்துக் கொண்டார்கள். துணைவேந்தரின் மாளிகையை முற்றுகை இட்டு அவரை வீட்டுக்காவல் போல வைத்து விட்டார்கள். ஒருகட்டத்தில் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுகிற நிலைமை ஏற்பட்டது. அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு திராவிடக் கழக அனுதாபிகள் துணைவேந்தருக்கு ஆதரவாக மாறவே மாணவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. பிராமணர்களும் மலையாளிகளும் மணவாளராமானுஜம் பிராமணரல்லாதவர், தமிழர் என்பதற்காகவே அவரை வெறுக்கிறார்கள் என்றொரு பேச்சு எழவே பிராமணரல்லாத தமிழர்கள் துணைவேந்தரைக் காப்பாற்ற முனைந்தார்கள். காலம் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் திராவிடர் கழக மாணவர்கள் துணைவேந்தர் மாளிகையின் மாடியி¢ன் பின்புறம் கயிற்றை இறக்கி அதன்மூலம் துணைவேந்தரை வெளியேற்றிக் காப்பாற்றினார்கள். அப்போதுதான் நான் அங்கு சேர்ந்தேன். கடுபிடிகள் மேலும் அதிகமாக்¢ அடையாள அட்டையெல்லாம் வழங்கப்பட்டு நெருக்கடி காலம் போல ஆகிவிட்டது. அதன் பிறகு திராவிட இயக்கத்துக்குப் பாசறை போல ஆகிவிட்டது. 1946 -47களில் பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் பயின்ற போது ஒடுக்கப்பட்ட திராவிடக் கழகத்தினர் மணவாளராமானுஜம் அவர்கள் காலத்தில் வலுப்பெற்று பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பாகுபாடு ஏற்பட்டது. அத்துடன் அண்ணாமலை சர்வகலாசாலை என்பது சர்வ கலாட்டா சாலை என்ற அவப்பெயரும் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் தான்,

எனக்கு ஓரிரு ஆண்டுகள் முன் பின்னாகவும் என்னோடும் இன்றய பிரபல அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், அறிவியலாளர்களும் அங்கு பயின்றார்கள். அப்போது பிரபலமாயிருந்த `பொன்னி` என்ற இலக்கிய ஏட்டினால் `பாரதிதாசன் பரம்பரை` என்று அடையாளம் காட்டப்பட்ட கவிஞர் பொன்னடியான், கவிஞர் மு.அண்ணாமலை (`தாமரைக்குமரி` கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்), இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் எனக்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தமிழ் ஹானர்ஸ் பயின்றார்கள். இன்றைய திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியும், கவிஞர் சிற்பியும், பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பனும் உடன் பயின்றார்கள். பழ.நெடுமாறனும், பண்ருட்டி ராமச்சந்திரனும் ஓராண்டு பின்னால் பயின்றார்கள். சிற்பி, மெய்யப்பன் ஆகியோரது இலக்கிய நட்பில் எனது கல்லூரிகால எழுத்துப் பணி தீவிரமடைந்து, நிறையப் பத்திரிகைப் பிரசுரங்கள் நிகழ்ந்தன.

- தொடர்வேன்.
- வே.சபாநாயகம்.

No comments: