Sunday, May 16, 2004

நான் ரசித்த வருணனைகள்- உவமைகள் - 21

கு.ப.ரா வின் படைப்புகளிலிருந்து:


1. ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமுகம்; அதில் மை தீட்டிய இமைகள்¢டையே குறுகுறு
என்று சஞ்சலித்த இரண்டு குறை கூறும் விழிகள். ரோஜாக்களிடையே மல்லிகை போல்
கீழிதழை சற்றே கடித்து வெளியே தோன்றிய பல் வரிசை.இத்தகைய உருவம் மோகினி
போல் என் மனதில் குடி கொண்டு ஆட்டி வைத்ததே - அது அவளுடையது.
- 'நூர் உன்னிஸா' கதையில்.

2. என் ஹிருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ? முடியாது. பூவின் அவா மணமாக
வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் ஹிருதயக்
கரையில் போய்ச் சேரமுடியும்? சாத்யமில்லை.....
- 'நூர் உன்னிஸா'.

3. மனத்தில், ஆழத்தில் பீதி அது பாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்-
தது. மேலே மட்டும் சமாதானம். கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் அந்தத் திகில், மேல்
மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு
கலங்கும்;முகம் விகாரமடையும்.மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்;
பயத்தை கீழே அமுக்கிவிடும்.
சுகமோ துக்கமோ, எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபா-
வத்தில் இதுவும் ஒரு அத்தாட்சியோ?
- 'விடியுமா?.

4. அந்தரங்கம் திறந்து கிடந்தது போன்ற அந்த அறையை அதற்குமேல் அவளால் பார்க்க
முடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக்
கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள்.
-'ஆற்றாமை'.

5. ''என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாளே என்று நீங்கள் நினைப்பீர்கள்.நினைத்துக்
கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா? புருஷனிடம்
வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத்
தீர்த்த பாத்திரம் போலத்தான் அவள்".
- 'சிறிது வெளிச்சம்'.

6. புருஷன் இறந்ததால் புஷ்பம் மட்டும் போகவில்லை; போகம் மட்டும் போகவிலை; சுய
மரியாதையே போயிற்று - அவளுடைய மானிடப் பெண்மையே போயிற்று. வெறும் மிருகம்-
அல்ல, மிருகத்திலும் கேடுகெட்ட அவமதிப்புக் கொண்ட ஜன்மம். அழகு போகவில்லை;
ஆனந்தம் போயிற்று; உயிர் போகவில்லை, உயிரின் சின்னம் போய்விட்டது.
- 'கனகாம்பரம்'.

7. பெண்ணின் உடலில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அது நெருங்கியதும்
ஏக காலத்தில் பஞ்சேந்திரியங்களும் மயங்கி விடுகின்றன.
- முற்றுப் பெறாத 'வேரோட்டம்' நாவலில்.

8. மனிதன் கஷ்டம் வருகிறபோதுதான் கடவுளை நினைக்கிறான். அது போலவே தேசங்க-
ளுக்கு நெருக்கடி ஏற்படும்போது லட்சியங்களைப் பற்றிய பேச்சுக்களும் நல்லெண்ணங்-
களும் ஏற்படுகின்றன.
- 'எதிர்கால உலகம்' கட்டுரையில்.

9. சிவ பெருமான் ...பார்வதியை நோக்கிக் கைகளை நீட்டினார். மெய்ம்மறந்த மகிழ்ச்சி-
யுடன் பார்வதி சிவபிரான் மார்பில் சாய்ந்தாள். மலைச்சாரலில், மரநிழலில்,மடுக்கரையில்-
எங்கும் ஆண்குரல் பெண்ணை அழைத்தது. - 'புனர்ஜென்மம்'.

10. மொழி பெயர்ப்பு என்பது எழுதுவதைக் காட்டிலும் அதிக தொல்லை கொடுப்பது. சீமை ஓட்டைப் பிரித்துவிட்டு கீற்று வைக்கும் வேலை போன்றது. ஒரு கட்டுக் கோப்பைக்
கலைத்து விட்டு மற்றொரு கட்டுக்கோப்பை ஏற்றுவதில் எப்போதுமே பூரண வெற்றி
கொள்ளமுடியாது. அடிக்குஅடி நிர்ப்பந்தம். எல்லைக் கோட்டைத் தாண்டினால் மொழி
பெயர்ப்பில்லை. வியாக்கியானம்! தாண்டாமல் வார்த்தைக்கு வார்த்தை போட்டால்
கருத்து விளங்குவதில்லை நடையும் சரளமாவதில்லை. இவைகளின் நடுவே நீந்திக்கொண்டு
போய்க் கரையேற வேண்டும்.

- ' இரட்டைமனிதன் ' நாவல் முன்னுரையில்.
- தொடர்வேன்.

- அடுத்து ஜெயகாந்தன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: