Saturday, June 24, 2006

கடித இலக்கியம் - 10

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதியவை)

நாகராஜம்பட்டி
15-10-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்களுக்குப் பதில் எழுதுவதற்கு ஓர் 'இன்லண்ட்' கவர் தான் வாங்கி வைத்தேன். வெளியே மூட்டம் போட்டுக் கொண்டு மழை தூறிக் கொண்டு இருக்கிறது. வீட்டில், அறையில் விளக்குப் போட்டுக் கொண்டு, கதவுகளையெல்லாம் அடைத்து விட்டு, மிகப் பாந்தமாக எழுத உட்காரும்போது ஒரு சிறிய பதில் போதாது என்று தெரிகிறது.

வெகு அழுத்தமாகப் பதில் எழுத வேண்டிய, இரண்டு மூன்று ஸ்பஷ்டமான விஷயங்கள் தங்கள் கடிதத்தினால் எழுந்திருக்கின்றன.

முதலாவது தங்கள் துயரம்.

நமக்குத் தெரிகிற துக்கங்களின் தோற்றம் - ஆன்மீகமாக அல்ல, யதார்த்தமாகவே - மாயையானது. இந்த அடிப்படையிலே தான் நான் தங்களை அணுகுகிறேன்.

எது குறித்துத் துக்கம்?

தாங்கள் எனக்கு ஒரு சந்தோஷமான பிரகிருதியாகவே தோன்றுகிறீர்கள். கொஞ்ச நேரம் இதைத் திரும்ப உணர்ந்து கொள்ளுங்கள். உதித்த குலமும், ஊடாடும் குடும்பமும், உத்தியோக வாழ்வும், புத்திரோற்பத்தியும் வாழ்வின் போக்கும் எதுவும் உங்களுக்கு எத்தனையோ பேரையும் விடவும் மேலானவை. நமது வாழ்வு விரயமாவதாக நாம் உணர்வது பொதுவான அந்தரங்கப் பிரச்னை. ஒரு விதத்தில் அது கூட - டால்ஸ்டாயாகவும், பாரதியாகவும் நாம் ஆக முடியாதது குறித்து வருந்துவது - சிறுபிள்ளைத்தனம் தான். நம்மை உந்துவதாக இந்த ஜாக்கிரதையான வருத்தம் இருக்கலாமே ஒழிய - நம் வாழ்நாளின் மகிழ்ச்சியைக் குறைப்பதாக அது மாறக் கூடாது. இனி எது குறித்துத் துக்கம்?

எவரும் தவற விடக் கூடாத இன்பங்களோடு கூட உங்களுக்கு இன்னும் சில சலுகைகள் உண்டு. சோழமண்டல வாழ்வு என்றும், காவேரி தீரம் என்றும், தொன்மையும் பெருமையும் சொல்லும் ஒரு சைவ வேளாள மிராசுதார்க் குடும்பம் என்றும் நான் வர்ணம் தீ£ட்டிக் கொள்வது எனது இயல்பின் மிகையான கணிப்பு என்று ஒருக்கால் கருதப் பட்டுக் கொண்டாலும், நிச்சயமாக எனக்கு இல்லாத பல அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளில் தங்களுக்கு அதிகம் 'ஸ்கோர்கள்' உண்டு.

உண்மையிலேயே நாம் உருப்படியாய்ப் பெரிதாய் எதுவும் சாதிக்கவில்லையா? தொலையட்டும் பரவாயில்லை. அந்த வருத்தத்தை இன்னும் ஒரு extra பாரமாக மேலே ஏற்றிக்கொள்ளத் தேவையில்லை. மானிடப் பிறவியிதில் மாகாதல் கொண்டு வாழ்கிற, "வல்லார்க்கும் மாட்டார்க்கும்" பொதுவாக அளிக்கப்பட்ட வரத்தை நன்கு துய்ப்போம். "உற்றாரும் உறவினரும், தாயும் தந்தையும், உடன் பிறப்பும், பெண்டும் பிள்ளையும்" - "வாழ்க்கையும், சம்பாத்தியமும், உடையும் உணவும்" - எதுவும் உங்களுக்கு இந்த சமூகத்தில் எல்லார்க்கும் போல இயல்பேயாம். துன்பமே இயற்கை என்னும் சொல் என்றும் உண்டு. அதைத் துறந்து மகிழ்ச்சியுறுவோம்!

இரண்டாவது உங்கள் கனவுகள்.

முதலாவது விஷயத்தைப் பிரஸ்தாபித்திருப்பதிலேயே இக் கனவுகளின் காரணங்கள் அடங்கி இருக்கின்றன. பரீ¨க்ஷக்குத் தவறி நின்று விடுவதும், கிணற்றங் கரையின் விளிம்பில் தடுமாடுவதும், ரயிலைத் தவற விடுவதுமான கனவுகளை நானும் கண்டிருக்கிறேன்.எத்தனையோ கோடிச் சலனங்களில் அவையும் சில. அவை, தொடர்ந்து வருகிற கனவுகளாக இருப்பதை நாமே தவிர்த்துக் கொள்ள முடியும். அதற்கு நமது அகம், பகல் பூராவும், விழித்திருக்கும் போதெல்லாம் ஆனந்தத்தில் தளும்ப வேண்டும்.

கனவுகள் குறித்து அஞ்ச வேண்டாம். நிதரிசனங்களைக் குறித்தும் அஞ்ச வேண்டாம். சமூகம் குறித்தும், இழந்து விடுவோம் என்று தோன்றுகிற எது குறித்தும் அஞ்ச வேண்டாம். courage is a great quality என்று என் காது கேட்டிருக்கிறது. தொற்றுநோய்க் கிருமிகளுக்கு அஞ்சுங்கள். மானத்தை இருட்டில் விற்று சம்பாதிக்கும் புகழுக்கு அஞ்சுங்கள்.

மனம் நிறைந்து, காம்பீர்யம் துலங்கத் துலங்க, நமது கழிவுகளை மொய்க்கும் உலகோர்ப் பழிகளுக்கு அஞ்சாதீர்கள். அஞ்சாமையும், ஆனந்தமாயிருத்தலும் உங்கள் கனவுகளை மாற்றும்.

மூன்றாவதாக, நீங்கள் தெரிவித்திருக்கும் சில மேலெழுந்தவாரியான அபிப்பிராயங்கள்.

"இடையில், கண்ணதாசன், துக்ளக், குமுதம் என்று Tit bits கணக்காய் எழுதி 'இவர் எல்லோரையும் போல சாதாரண மனிதரே' என்று சலிப்பேற்படச் செய்து விட்டார்......." என்று JK வைப் பற்றி ஓர் இடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

தாங்கள் அவற்றைப் புரிந்துகொண்டது குறித்து எனக்கு வருத்தம் உண்டாகிறது.

இலக்கியம் என்பது என்ன? படைப்பிலக்கியம் என்பது ஒரு அநாவசியமான அடைமொழி என்று எனக்குத் தோன்றுகிறது. வாழ்வே இலக்கியமாகிற போது, அங்ஙனம் எழுதத் தகும் எதுதான் இலக்கியமில்லாமல் போய்விடும்? நமது சமூகம், நமது உறவுகள், நமது பிரச்னைகள், நமது கவிதை, கலை, நாகரீகம், தோல்வி, வெற்றி, எதிரே காணும் பொருள் - எது குறித்து ஓர் இலக்கியவாதியின் பொறுப்பு கைகழுவப்பட்ட சிந்தனைகளை அந்த Tit bits களில் அவர் காட்டியிருக்கிறார் என்று இன்னொரு தடவை "கணக்காய்"ப் பாருங்கள்.

- இங்கே திருப்பத்தூருக்கு அவர் வந்திருந்த போது, காம்ரேடும், வக்கீலுமான ஒரு நண்பர் - "வெற்றிகர"மான வாழ்க்கை வாழ்பவர் - JK வுக்கு எங்கள் வட்டத்தில் பழைய நாளிலேயே பரிச்சயமானவர் - அவரைக் காண வந்து பேசிக் கொண்டிருந்தார். விசாரிப்பின் போது, தனக்கு மூன்று பெண்குழந்தைகள் என்றும், அதோடு நிறுத்தியாயிற்று என்றும், ஆண்குழந்தை இல்லை என்கிற குறை தனக்கு இல்லை என்றும் சொல்லிக் கொண்டார். இதுவரை எல்லாம் சரி. அப்புறம், அந்தக் குறையை உணராததற்கு ஒரு காரணமும் வேடிக்கையோ என்னவோ - சொன்னார்: "பையன் இருந்தால் அவன் நம்மை சொத்துக் கேட்பான். "அப்பா, நீ எனக்கு என்ன வைத்தாய், தந்தாய்" என்பான். நாம் என்ன தரமுடியும் அவனுக்கு (அவர் ஒருகாம்ரேட் - வெற்றிகரமான வக்கீல்- கவனம் வையுங்கள்)?" என்று பேசிவிட்டு, ஒரு 'ஜொக்' அடித்தது போலச் சிரித்தார்.

அப்போது JK ஒரு மஹாராஜாவைப் போல் தமது மீசையைத் தடவிக் கொண்டிருந்தார். தடவியவாறே சற்றுப் பொறுத்துச் சொன்னார்: "நமக்கு" - (அதாவது JK வுக்கு, அவர் மகனுக்கு) -"இந்தப் பூமியையே சம்பாதித்துத் தரும் உத்தேசம் உண்டு!". இதை ஒருவிதக் கனம் தந்து, நிதானமாகச் சொன்னார். இதிலே கூட அவரது இலக்கியச் சலாகை விழுந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவர் எழுதி அரங்கேற்றிய எதிலும், நாம் விஷயங்களைச் சரியாகப் பிரதிபலிக்கச் செய்து கண்டு கொள்ளாதது - குறைந்த பக்ஷம் (இந்த "அளவு" எப்போதும் JK க்கு உரியது அன்று), அவரது வெளிப்பாட்டின் மொழி நயத்தையும் இலக்கியப் பாங்கையும் உணராது பின் தங்கி நிற்பது - நமது ரசனையின் குறைபாடாகவே எனக்குத் தோன்றுகிறது. வேண்டுமானால் அவை நமக்குச் சிரத்தை இல்லாத, ஈடுபாடு இல்லாத விஷயங்களாக இருக்கலாம். அதனால்?

Fiction பற்றியும் non-fiction பற்றியும் அவரே தமது புத்தகத்தின் முன்னுரையில் எழுதி இருக்கிறார். Non-fiction என்பது அவ்வளவு சுலபமானதோ, சாமான்யமானதோ அல்ல.

கதைகளில் மட்டுமே இலக்கியம் என்றால், உலக இலக்கியத்துக்கே ஆகாரம் காணாது.

சரியாகப் பரிமாணம் அறியாதவர்கள், அவர் Fiction எழுதாததற்கு உள்ளூர ஒரு சந்தோஷம் கொண்டவர்கள், அவர் வீழ்ந்து விட்டதாகப் பிரபலப் படுத்த விரும்பியவர்கள், மோசமான fiction ஐயும் அதைவிடப் படுமோசமான non-fiction ஐயும் எழுதியவர்கள் - எழுதுகிறவர்கள் போட்ட ஒரு கோஷம், தவறாகத் தங்கள் தலையிலும் விழுந்தது அங்கு தங்கி விட்டிருக்கிறது.

வையவன் எப்பொழுதாவது சொல்வார்: "அவர் non-fiction நல்லா எழுதுகிறார் என்றே இருக்கட்டுமப்பா! Literary world ல் என்ன தெரியுமா அர்த்தம்? ஒரு writer, non-fiction எழுதுகிறான் என்றாலே அவன் தீர்ந்தான் என்று அர்த்தம்!"

Business world போல literary world டிலும் மார்க்கெட், விலைவாசி.......இத்யாதி Tricks and Trends உள்ளது போலும்!!!!!!

அப்பொழுதும் நான் இக்கருத்துக்கு உடன்பட்டதில்லை. அதே அபிப்பிராய வலிமையை ஏற்றித்தான் மேலே தங்களுக்கும் எழுதியிருக்கிறேன். JK வை பற்றி ஏதோ எழுதி விட்டீர்கள் என்பதால், நான் தங்களை உறுதியிருப்பதாகக் கருதமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

இதோடு இது போதும்.

".................happiness knows no marrow nor has it any yesterday. Happiness forgets the past and takes no thought for the future. It knows only the present - and that not a day, but a moment"

- Turgenev.

எனவே ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணமும், மகிழ்ச்சியாயிருந்து விடுங்கள். இதை ஒரு விரதம் போல் மேற்கொள்ளுங்கள். அதைத் தேடிக் கொண்டே இருந்து விட்டோ, எதிர்பார்த்துக் கொண்டே இருந்து விட்டோ ஏமாந்து விடக் கூடாது.

எது சந்தோஷமோ அதைச் செய்யுங்கள். அதையே நினையுங்கள். இடைமறிப்புகளிடமிருந்து லகுவாக நழுவுங்கள். "A thing of beauty is ajoy for ever.............." ( ஆனால் இதைச் சொன்ன கீட்ஸின் வாழ்க்கையைப் பார்த்தால் அது ரொம்ப சோகம் )

- இன்னொன்று கூட. நாம் சாதிக்காவிட்டால் பரவாயில்லை. லக்ஷ¢யப் பிரகாரம் எழுதாவிட்டால் பரவாயில்லை. எதை அடைந்தாலும் அடையாவிட்டாலும் பரவாயில்லை. இந்த வாழ்வு சந்தோஷமானது என்று மட்டும் அறிய, அறிவிக்கத் தவறக் கூடாது. தங்கள் குடும்பமும் சூழலும் வாழ்வும் இதற்கு அனுசரணையாய் இருக்க மிகவும் விரும்புகிறேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.
15-10-76

No comments: