Friday, July 14, 2006

எனது களஞ்சியத்திலிருந்து - 23

சிவப்பிரகாசர் செந்தமிழ்:

கற்பனைக் கருவூலமெனப் புலவர்களால் பாராட்டப் படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் நாம் சிறு வயதில் படித்த 'நன்னெறி' உட்பட 32 நூல்களை எழுதி சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர். அவர் வாழ்ந்த காலம் 17-ஆம் நூற்றாண்டாகும்.

அவரது கவிதைகள் எளிமையும் நயமும் மிக்கவை. எடுத்துக்காட்டாக இரு கவிதைகளைக் கீழே தருகிறேன்.

சைவ நெறியைச் சார்ந்தவர் என்பதால் சிவபெருமானையே தன் கவிதைகளுக்குக் கருப் பொருளாக்கிப் பாடுபவர். புதுமணம் புரிந்த ஒரு தம்பதியரை வாழ்த்திப் பாடுகிறவர், சிவபெருமான்-உமையவள் ஊடலையும், அவர்களது மக்கட் செல்வங்களின் சிறு குறும்புகளையும் நகைச்சுவயுடன் தம் கவிதையில் அமைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

முதல் பாடல் இறைத் தம்பதிகளுக்கிடையே ஆன ஒரு ஊடலைக் காட்சிப் படுத்துகிறது.

உமையவள் சிவபெருமானின் தலையில் உள்ள கங்கா தேவியைப் பார்த்து விடுகிறாள். அது யார் என்று
கேட்கிறாள். "உமது முடியின் மீதுள்ள இளமங்கை யார்?"

"அது மங்கையல்ல; வெண்மையான அலைகளை எறிந்து அழகு கொழிக்கும் குளிர்ச்சியான ஆறு" என்கிறார் ஈசன்.

"அப்படியானால் ஒளி பொருந்திய முகமும், கரிய கண்களும், காதும், வாயும் ஆற்றுக்கு உண்டா?"

"உனக்கு அவ்விதம் தோன்றுவது முகம் போன்ற தாமரையும், கண் போன்ற குவளை மலரும், காது போன்ற வள்ளைக் கொடியும், வாய் போன்ற செவ்வல்லி மலரும் அல்லவா?" என்று சமாளிக்கிறார் இறைவன்.

அது பொய் என்றுணர்ந்த உமையவள் "கொங்கையும் கூந்தலும் கூட நீரினில் இருக்குமோ?" என்று மடக்குகிறாள்.

"அது நீரில் உண்டாகிற நீர்க் குமிழிகளும், நீர்ப்பாசியும் ஆகும். என்ன சொன்னாலும் நீ அதை மறுத்துக் கூறுவாய் பெண்ணே!" என்று மழுப்புகிறார்.

'பெண்ணே!' என்றழைத்தது தன்னைத்தான் என்று நினைத்த கங்காதேவி, " ஏன்சுவாமி" என்று கேட்க குட்டு உடைந்து விடுகிறது. ஈசன் வெட்கத்தோடு தலைகுனிந்து "என்னை மன்னித்து விடு" என்று வேண்டுகிறார். அதனால் மனமகிழ்ச்சியுற்ற அம்பிகை உங்களைக் காப்பாற்றுவாள் - என்று திருமண வாழ்த்தை முடிக்கிறார்.

பாடலைப் பார்க்கலாம்:

'ஐய! நின் சென்னி மிசை உறைகின்ற மடமங்கை
.......யார்?' என்ன உமை வினவவும்,
'அன்னது ஒரு மடமங்கையன்று; வெண்திரை கொழித்து
.......அழகு ஒழுகு தண்புனல்' எனத்,
'துய்ய ஒளி ஆனனம் கரிய விழி காது வாய்
.......தோயத்தில் உண்டோ?' எனச்,
'சொல்லரும் கமல மலர், காவி மலர், கொடிவள்ளை
.......தூய செங்குமுதம்' என்னப்
பொய்யென நினத்து 'நல் கொங்கையும், கூந்தலும்
.......புனலினிடை உண்டோ?' எனப்,
'புற்புலம் சைவலம் அது' எனவே மறுத்துப்
.......'புகன்றிடுதி நங்காய்' எனத்
தையல் அவள் 'ஏன்' என்ன, நாணொடு வணங்கி, 'எந்
.......தன் பிழை பொறுத்திடு' என்றே
சங்கரன் உரைத் திடத் திருவுள மகிழ்ந்த சிவ
.......சங்கரி உமைக் காக்கவே!

( சென்னிமிசை - தலைமீது; திரை - அலை; தண்புனல் - ஆறு; துய்ய - தூய்மையான; ஆனனம் - முகம்; தோயம் - நீர்; கமலம் - தாமரை; காவி - குவளை; வள்ளை - வசலைக்கொடி; குமுதம் - அல்லி; புற்புதம் - நீர்க்குமிழி; சைவலம் - பாசி; )

இறைத் தம்பதிகளின் ஊடலைக் காட்டி, மணமக்களுக்கு அத்தகைய ஊடல் அவர்களுக்கும் நிகழும், உமையவள் காப்பாள் என்று சொல்லி வாழ்த்தும் நயம் வித்தியாசமாக இல்லையா?

அடுத்த பாடலும் அதே மணமக்களை வாழ்த்திப் பாடியது தான். இப் பாடல் பிள்ளைப் பேறு எவ்வளவு இனிமையானது என்பதைக் காட்டுவதாகும்.

இங்கே தெய்வக் குழந்தைகளான விநாயகரும் முருகனும் தமக்குள் குறும்புகள் செய்து தந்தை அரனிடம் புகார் செய்கிற காட்சி விவரிக்கப் படுகிறது.

சிவபிரானிடம் மூத்த பிள்ளையான விநாயகர் வந்து தம்பி முருகனைப் பற்றிப் புகார் சொல்கிறார். " அப்பா! தம்பி முருகன் என்னுடைய காதுகளை மிகவும் நோகிறமாதிரி கிள்ளி விட்டான்" என்று சிணுங்குகிறார்.

ஈசன் வேலவனைப் பார்த்து, "ஏன் அப்படிச் செய்தாய்?" என்று விசாரிக்கிறார். அதற்கு முருகன் "அண்ணன் என் தலையில் உள்ள கண்களை எண்ணிப் பார்த்தான்" என்று பதில் கூறுகிறார்.

தேம்பி அழுகிற கணபதியை நோக்கி இறைவன், "நீ ஏன் அவ்வாறு வேடிக்கை செய்தாய்?' என்று வினவ, " என் முகத்தில் உள்ள தும்பிக்கையை அவன் எத்தனை முழம் என்று அளந்து பார்த்தான்" என்று சொல்லவும் முருகன் அதைக் கேட்டு சிரிக்கிறார். சிவபெருமான் அவர்களது தாயான உமாதேவியிடம், "உன் பிள்ளைகளின் குறும்புகளைப் பார்த்தாயா?" என்று கேட்க, அம்பிகை புன்னகைத்தபடி கணபதியை அருகழைத்து அணைத்து மகிழ்கிறாள். அந்த தேவி களிப்புடன் உங்களைக் காப்பார் என்று சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்துகிறார்.

பாடலைப் பார்ப்போம்:

அரனவனி டத்திலே ஐங்கரன் வந்து தான்
.......'ஐய! என் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்' என்றே சிணுங்கிடவும்,
.......அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே, 'அண்ணன் என் சென்னியில்
.......விளங்கு கண் எண்ணினான்' என,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து 'நீ அப்படி
.......விகடம் ஏன் செய்தாய்?' என,
மருவும் என் கைந்நீளம் முழம் அளந்தான்' என்ன
.......மயிலவன் நகைத்து நிற்க,
மலையரையன் உதவ வரும் உமையவளை நோக்கி 'நின்
.......மைந்தரைப் பாராய்!' எனக்
கரு அரிய கடலாடை உலகு பல அண்டம்
.......கருப்பமாய்ப் பெற்ற கன்னி,
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
.......களிப்புடன் உமைக் காக்கவே!

(ஐங்ககரன் - விநாயகர்; சென்னி - நெற்றி; மருவும் - பொருந்திய ; )

- இப்படி இன்னும் பல இனிய, கற்பனை வளம் மிக்க, நயமான கவிதைகளை 'சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்' தொகுப்பில் ஆர்வமுள்ள இலக்கிய அன்பர்கள் படித்துச் சுவைக்கலாம்.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.

1 comment:

ENNAR said...

தங்கள் எழுத்துகள் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்