Friday, July 14, 2006

கடித இலக்கியம் - 11

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம்- 11

நாகராஜம்பட்டி,
2-11-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதம் வந்தது.

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்றும், துன்பங்களை வெல்வது எப்படி என்றும், சஞ்சலங்கள் அற்றுத் தெளிந்து நிற்பது எப்படி என்றும் நாம் நிறையப் படித்திருக்கிறோம். இருந்தும், அந்தச் சரியான வழியை, நமக்குச் சோதனைகள் வரும்போது நாமே தான் தேடி அலைந்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இனிமேல் நான் உங்களுக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதக்கூடும். நீங்கள் துன்புற்றிருப்பதாகக் கருதி இப்படி ஒரு நினைப்பு இல்லை. எனக்கே, பலவிதத் தொல்லைகளும், அடுக்கடுக்கான அமைதியின்மைகளும் ஏற்பட்டு- சடாரென்று அவற்றிலிருந்து விடுபட விரும்பிவிட்ட தீவிர க்ஷணத்தில் இப்படி தோன்றுகிறது.

இந்த நினைவுகளில், நமது பாக்கியம், நம்முள் ஒரு மேன்மையான குரலும் கேட்கிறது. நிதரிசனமான வாழ்வின் ஓலம் பல சமயங்களில் அதை அடக்கி மறைத்து விட்டாலும், எப்பொழுதும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டால் அந்தக் குரலைத் தெளிவாகக்
கேட்க முடியும். அதைக் கேட்போம்.

நமக்குத் துன்பம் எவர் பொருட்டு அல்லது எவரால் வருகிறது? நமது மகிழ்ச்சிக்கென்று நாம் தேர்ந்துகொண்ட, நம்முடன் ரத்த சம்பந்தமும் சித்த ஒருமையும் கொண்டு அவற்றின் பேரிலான அன்புடன் உறவு கொண்ட - அவர்களாலேயே நமக்கு நம் வாழ்வில்
துன்பமுண்டாகக் காண்கிறோம்.

நமக்கு ஒரு பிரச்சினையாகி நிற்கும் இந்த உறவுகளோடு ஊடாடுவதில், அவரவர் இயல்புக்கு ஏற்ப பல தனி வழிகள் இருக்கக் கூடும். நமது இயல்பை அனுசரித்து நாம் நமது உறவுகளுக்கு - அவற்றுடன் அமைதியாகச் செல்வதற்கு, ஒரு வழி காணவேண்டும்.

வேதாந்தியாகவும் மகானாகவும் ஆவது பெரிய விஷயம் தான். நாம் அவர்களல்ல என்பதற்கு நம்மிடையே பல ருசுக்கள் உண்டு. ஆனால் அப்படி கொஞ்சம் வேஷம் தரித்துப் பாருங்களேன்! சில்லறை வாழ்வின் சிறுவர் சிறுமியர் வந்து உங்களைச் சீண்டி நச்சரிக்கிற போது, அவர்கள் உங்களை அவமானம் செய்து ஆரவாரிக்கிற போது, என்ன குரூரம் என்று அறியாமலேயே ஹிருதய வலிக்கு உங்களை ஆளாக்குகிற போது, அவசியம் ஒருமுறை அந்த வேஷத்தைப் போட்டுப் பாருங்கள். நமது சுகம் என்று நாம் கருதுவனவற்றை ஒவ்வொன்றாக நாம் துறக்கத் துறக்க, இந்த வேஷத்தின் கம்பீரம் ஏறி, நம்முள் அந்தப் புராதனமான குரல் பேச ஆரம்பித்துவிடும்.

அது உங்களுக்கு மந்திரம்போல் பல விஷயங்களைச் சொல்லும். ஆரம்பத்தில், சிரமமான வைராக்கியச் சித்தத்துடன்தான் நமது துன்பங்களைச் சகிக்க நேரும். பிறகு அந்தச் சகிப்பு லகுவாகிவிடும் என்கிற உண்மையைக் கவனம் வைத்து, அந்தக் குரலின்படி நடக்க வேண்டும்.

எனது துன்பங்களுக்குக் காரணமான இந்த மனிதர்களின் மீதெல்லாம் எனக்குப் பெருங்காதல் இருக்கிறது. இவர்கள் பற்றிய எனது நலமான கனவுகள் எண்ணற்றவை ஆகும். ஏதோ ஒரு கோளாறில் இவர்களே எனது வலியின் முனகல்கள் ஆகிவிட்டார்கள். கொஞ்சம் யோசித்தால், துன்பம் இவர்களுக்குத்தான் என்று தோன்றுகிறது. என்னை இணக்கமற்றவனாக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் இவர்கள், என்னால் பெறக் கூடிய இன்பங்களை எல்லாம் இழக்கிறார்களே என்று எனக்கு ஒரு விதத்தில் பரிவு தோன்றுகிறது. என் உள்ளம் சந்தோஷத்தை அறிந்திருக்கிறது. இப்போதும் கூட அந்த ஆற்றின் நீரிலிருந்து, இடுப்பளவு தான் எழுந்து நின்று பேசுகிறேன். இவர்கள் நிரந்தரம், சந்தோஷம்
என்று கருதத்தக்க அந்த நீரலைகளில் இன்னும் பாதங்களைக் கூட நனைக்காதவர்களாய் இருக்கிறார்களே!

ஆனால் இவர்கள் பொருட்டு நாம் என்ன செய்வது? வாழ்வில் இவர்கள் போகிற மாதிரியேவா நாமும் போக முடியும்? அதை அப்படியே விழுங்கி ஜீரணித்து, ஒரு சாபம்போல் அவர்களை மன்னித்து-

இப்படி அடிக்கடி நடப்பதுண்டு. அந்தக் குரலைத் தொடர்ந்து கேட்டு வந்தால் அவற்றின் இடைவேளை அதிகமாகி இறுதியில் எந்தச் சச்சரவும் இன்றி அமைதியாகப் போகலாம் என்று 'மூட நம்பிக்கை' கண்டு அந்த வேஷத்தை இப்போதெல்லாம் நான் மிகுந்த பாவனையுணர்ச்சியோடு போடுகிறேன்.

"உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பரோ?
.......மாயையே - மனத்
திண்மை யுள்ளாரை நீ செய்வது
.......மொன்றுண்டோ மாயையே!"

"இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
.......மாயையே - தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
.......நிற்பையோ? - மாயையே!"

- இன்னொன்று கவனம் கொள்ளத் தோன்றுகிறது. இந்தச் சுரண்டல் சமுகத்தில், எல்லா மட்டங்களிலும் வாழ்வின் பிரச்சினைகளுக்குப் பணம் ஒரு மூல காரணம். அந்த எடைக் கல்லைப் போட்டால், தட்டு சரியாகி விடுமா என்று சொல்லமுடியாது தான். ஆனால் ஒட்டும் இரண்டுளத்தின் தட்டுகள் மேலும் கீழுமாய்த் தாழ்ந்து கிடப்பதற்கு வேறு நியாயமான காரணங்கள் இல்லை.

இது ஒரு சிந்தனை. சீக்கிரம் தங்களுக்கு இதைச் சேர்ப்பிக்க வேண்டுமெனில், முன்பின் சிந்தியாது கறாராகக் கடிதத்தை இந்த நள்ளிரவில் நிறுத்தி நாளைத் தபாலில் உடனே போட்டால் தான்.

- பி.ச.குப்புசாமி
2-11-76.

No comments: