Friday, June 16, 2006

கடித இலக்கியம் - 9

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

நாகராஜம்பட்டி
5-10-76

அன்புள்ள சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பள்ளி மீண்டும் திறந்திருக்கும். இந்நேரம் பழைய வாழ்க்கை தொடர்ந்திருக்கும்.


நீங்கள் வராமற் போனது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது. கடிதம் எழுதக்கூடத் தோன்றாமல் மனம் காய்ந்து போயிற்று. இங்கும் பள்ளி திறந்து, வாழ்வும் வேலையுமான பளு தோள்களை அழுத்துகையில், சுகமாக ஏதாவது எழுதத் தொடங்கி ஒதுங்க வேண்டும் போல் தோன்றுகிறது. தங்களுக்கு எழுதுகிறேன்.

ஜேகேவின் "ஜய ஜய சங்கர" வந்திருக்கிறது. பார்த்தீர்களா? மிகக் கனமான கதை. வெகு உயரமான பாத்திரங்கள். அதிகாரமான அணுகல். அழகான வார்ப்பு.

திருப்பத்தூரில், கார்த்திகை மோடம் போல் பட்டிமன்றக் கவியரங்கச் சொற்பொழிவு விழாச் சீஸன். பெரிய வட்டிக்கடை முதலாளியின் பள்ளி ஆண்டுவிழா. சன்மானங்களும் விருந்தும் எல்லா ஊர்களின் கல்லூரிகளின் பேராசிரியர்களையும், M.A பட்டம் சூடிக் கொண்ட கவிஞர்களையும் வரவழைத்து, தங்கள் தொந்தி பெருத்த கூன் விழுந்த முதலாளிக்கும் ஒரு பொன்னாடையை வாங்கிப் போர்த்திவிட்டன. நகரத்தில் வாழ்கிற தோஷமுள்ளவர்களுக்கு, தவிர்க்க முடியாமல் அங்கேயும் போய்க் கழிகிறது.

எனக்கு இங்கே கிராமத்து வீடும், விடுமுறைக்கு வந்திருக்கும் பிள்ளைகளும் மனைவியும் புறாக்களுமே பொழுதாகி விட்டன. நீங்கள் வந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். ஜமுனாமரத்தூர் நண்பர்களும் ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்தார்கள்.

ஆயிற்று. உத்தியோகச் சகடக்கால் மறுபடியும் ஓட ஆரம்பித்து விட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைக் கேஸ்களைப் பிடிக்கும் அவலம் வேறு. விச்ராந்தியான கொஞ்ச நாட்கள் மறுபடியும் எப்பொழுதோ? தங்களுக்கு இங்கே வரத் தோன்றுவது மறுபடியும் எப்பொழுதோ?

மறுபடியும் எப்பொழுதோ நமது கனவு போன்ற நாட்கள்?

மேல் ஒலக்கூருக்கு வந்த போது, வழியில் வராக நதிக்கரையில் ஒரு குழந்தையின் பிணம் போயிற்று. வாழ்வின் துக்கம் நினைப்புக்கு வந்தும் மனத்தில் உறைந்து நின்று தாக்க வில்லை. கழிந்து போன நாட்களிலும் எவ்வளவோ கடன் வருத்தம் இருந்தது. வாழ்வின் வசந்தமான பசுமை அப்போதும் வாடவில்லை. வரவர நாளுக்குநாள் துக்கமும், அதிருப்தியும், அவலமான உத்தியோக வாழ்வும் ஒரு குறுகிய கூண்டில் நேரடியாகப் பிடித்து நிற்கவைக்கப்பட்டு விட்டன போல் தோன்றுகிறது.

கவியின் குரல், இது மாயை போலும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறது.

- சுற்றியிருப்பவர்கள் எந்த நிலையிலும் சந்தோஷமாய் இருப்பார்கள் என்றால், நாமும் இன்னும் எவ்வளவு சந்தோஷமாய் இருப்போம் என்று இப்போதும் மனம் தாக்குப் பிடித்துத் தான் பார்க்கறது.

போகப் போகப் பார்க்கலாம்.

வாழ்வின் முக்கியமான பருவத்துக்கு - அதாவது, இனியும் இதுபோலவே இருந்தால் இது ஒரு விரயமான வாழ்க்கை எனக் கூறத்தகும் பருவத்துக்கு - வந்து விட்டோம். வயது முப்பத்துமூன்று முடிந்து விட்டது.

நாடெங்கிலும் பாரதி விழாக்கள் நடந்தன போலும். நமக்கு எவ்வளவு பரிச்சயமான பாரதி! முப்பத்தொன்பது வயதுக்குள் அவன் ஏறி நின்ற சிகரங்கள் எத்தனை! வருஷாவருஷம் இல்லாமல், இந்த வருஷம் பாரதி விழாக் கொண்டாடச் சொல்லி சுற்றறிக்கை வந்தும் எங்கள் பள்ளியில் இன்னும் விழா எடுக்கவில்லை. சடங்கு நிகழ்த்த சம்மதமில்லை.

எங்கள் வைஷ்ணவி உங்களை வரச் சொல்லி எழுதச் சொல்கிறாள். சிவகுமார் "ஊரிலேயே எதுக்கு இருந்துனு இருக்கீங்க? இங்கே வந்து பாருங்க......பட்டிக் காட்டிலே எவ்வாவு பயிர்ச்செடி கொடியெல்லாம் இருக்குதுன்னு........" என்று எழுதச் சொல்கிறான்.நீங்கள் அசல் அழகான கிராமவாசி என்று அவனுக்குத் தெரியாது.

குமுதத்துக்கு இரண்டு கதைகள் எழுதி அனுப்பினேன். அனேகமாகத் திரும்பி வரலாம்.

எதையாவது எதையாவது எதையாவது எழுத இப்பொழுது தயங்குவதில்லை.

***** ***** *****

7-10-76

சற்றுமுன், 'ஜனசக்தி'யில் 'ஜெயஜெய சங்கர' பற்றி எழுதி இருப்பதைப் படித்தேன்.

கலை, இலக்கியம் சம்பந்தமான அடிப்படை உணர்வுகள் வாய்க்கப் பெறாத இந்த வறியவர்களுக்கு ஞானோபதேசம் பெறுவது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது. இவர்கள் ஒருவகையில் தமிழகத்தின் திமுக இலக்கியவாதிகளுக்கு நிகரான மூடத்தன்மை வாய்ந்தவர்களும்கூட. இவர்கள் மார்க்ஸ் பேராலும் லெனின் பேராலும் பாட்டாளி வர்க்கச் சார்பிலும் பேசுவது அவை சம்பந்தமான எதிர்காலப் போக்குகளுக்கே அபாயகரமாதாகும். இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கம் மிக மேல்மட்டத்தில் நன்கு சிந்தித்து இவர்களை வாயடைக்கச் செய்ய வேண்டும். இது நமது கோரிக்கையன்று. ஒரு எச்சரிக்கை.

- எனது முந்தைய கடிதம் தங்களுக்குக் கிடைத்ததா? என்னென்னவோ எழுதினேன். தங்களை அந்த நேரத்தில் திடமுறச் செய்வதாக மட்டுமே கூட அவற்றிலேதேனும் தங்களுக்குக் கிடைத்ததா?

ஒரு கடிதம் எழுதுங்களேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

No comments: