Friday, June 16, 2006

கடித இலக்கியம் - 7

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதியவை)

கடிதம் - 7


நாகராஜம்பட்டி
6 - 4 - 76


அன்புமிக்க சபாவுக்கு,

தாங்கள் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறீர்கள்.(அது என் பாக்கியங்களுள் ஒன்று) அதனாலேயே என் கடிதம் வராத காலத்தும், திடீரென்று வந்த போதும் - இவ்வளவு உணர்ச்சி கொள்கிறீர்கள். யோசித்தால், இதைச் சார்ந்த எனது பொறுப்பு களை நான் அதிகம் உணர்கிறேன்.

தங்களை ஏமாற்றாமல் விரைந்து பதில் எழுதியிருக்க வேண்டும். மறுபடியும் தவறிவிட்டேன்.

ஒன்பது வாத்தியார்கள் வேலை செய்கிற பெரிய ஆரம்பப் பாடசாலை. நான்தான் தலைமை ஆசிரியர். நேரம் தவறிக்கூடப் போக முடியாத நிலை. அவசர அவசரமாகக் காலையில் போக வேண்டியிருக்கிறது.. அங்கே போனபின் ஆயிரம் ஜோலிகள்.

வீட்டிலும் எனது பாத்திரம் இப்போதெல்லாம் வேறு மாதிரியானது. மனைவி பாவம்! அவளுக்கு உடல் சிரமத்தையாவது குறைப்பது எனது தர்மம். தண்ணீர் சேந்திக் கொடுக்கிறேன். அவள் அரிசியில் கல் பொறுக்கும்போது நான் அடுப்பை எரிக்கிறேன்.

வெங்காயம் அரிந்து தருகிறேன். இப்படி பல சில்லறைப் பணிகள். அவற்றின் வெளி மதிப்பு மிகக் குறைவானதாக இருக்கலாம். ஆனால் இருவர் உறவிலும் இந்தச் சிறிய பங்கு மிகவும் செம்மையுண்டாக்குகிறது.

இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாரே என்கிற சலிப்புக்கூட அவளுக்குத் தோன்றாத நாளாகப் பார்த்து, லாந்தர் வைத்துக் கொண்டு கவிழ்ந்து எழுத வேண்டும். அப்படித்தான் எழுதுகிறேன். ஆனால், தங்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவது, உருப் படியாகக் கதை எழுதுவது - ஆகிய இந்தக் காரியங்களுக்கு அவளைத் தடையாகச் சொல்லுவது என்னைப் பொய்யனாக்கும். இதுவரை நான் குறிப்பிட்ட சூழ்நிலையில், சிறிது நேரமே சுகமாக அனுபவிக்கிற சோம்பல்தான் உண்மையில் காரணம்.

இன்று காலை பள்ளிக்கூடம் போனதும், "கண்ணதாசன்" பத்திரிகை தபாலில் வந்து சந்தோஷமளித்தது. அட்டையில் பதினாலு வயது ஜெயகாந்தன். போட்டோ: ஜே.எம்.கல்யாணம். கவர்னர் கே.கே.ஷா, ஹக்கீம், ஆர்.கே.கண்ணன், எம்.எஸ்.வெங்கட ரமணி ஆகியோரின் கட்டுரைகளுடன் என் கட்டுரையும் எழுத்துக்கு எழுத்து வந்துள்ளது.

பத்திரிகை கிடைத்தால் படியுங்கள்.

தங்கள் கடிதம், என் விசாரிப்புகளுக்கு மிகுந்த விவரமான, பெரும்பாலும் சந்தோஷமான தகவல்களைத் தந்திருந்தது. தந்தையாரின் முதுமை நிலை மட்டும் காலத்தின் சோகக் கனவைக் காட்டுகிறது. இருப்பினும் அவர் குறித்து, மாந்தரை அவரவர்

"எச்சத்தால்" கண்டு அறியும் நமது மரபு பிரகாரம் நாம் பெருமிதமும் சந்தோஷமுமே கொள்வோம். 'யாருக்குத்தான் இல்லை' என்கிற பதிலை அறிந்துள்ள போதும், உங்களுக்குக் கூடவா இடையில் வாட்டமும் துன்பமும் வருந்தி ஆற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிகளும் நேர்ந்தன என்று கேட்க நினைக்கிறேன். வசந்தம் துளிர்விடும் காலத்தில் நெடுநாளைக்குப் பிறகு மீண்டும் பரஸ்பரம் எழுதிக் கொள்வதிலும் ஒரு processன் அழகு தெரிகிறது. எல்லாவற்றிற்கும் சந்தோஷமே படுவோம். துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறப்போம். இன்பமே வேண்டி நிற்போம்.

தாங்கள் எஸ்.எஸ்.எல்.சி பேப்பர்கள் திருத்த சென்னை செல்ல நேர்ந்தால், நாம் சந்திக்கும் தருணம் நெருங்குகிறது என்று நினையுங்கள். தேவபாரதி சமீபத்தில் ஒரு கார்டில், ஏப்ரலில் JKவின் பிறந்த நாளை முன்னிட்டு(ஏப்ரல் 24) சென்னை L.L.Aயில்(லோகல் லைப்ரரி அத்தாரிட்டி) எள்¢ய முறையில் ஒரு விழாக் கொண்டாடவும் உத்தேசம் என்று எழுதியிருந்தார். ஒருமுறை சென்னை செல்ல வேண்டும் என்ற தாகத்தை நானும் அதை உத்தேசித்துப் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் சென்னை போகும் முன்பும், போன பின்பும் எனக்கு அடுத்தடுத்துக் கடிதம் எழுதி உந்துங்கள். கிளம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!

வாழ்வில் என்ன ஏற்றத் தாழ்வுகளில் விழுந்தாலும், எழுத்தின் மேல் உள்ள மரியாதையான உறவைக் காப்பாற்றிக் கொண்டே வருவதாகவும், இதையே என் எளிய வாழ்க்கை நிறைவாகவும் உணர்கிறேன். இது என்னை எல்லாப் பரிமாணங்களிலும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையையே முலதனமாகக் கொண்டு வாழ்கிறேன்.

"தீபம்" பத்திரிகையை நான் பார்த்து வருஷக் கணக்காகிறது. எப்பொழுதோ தென்பட்டபோதும், தங்கள் குறுநாவல் பிரசுரமான செய்தியைக் கேள்விப்படவில்லை. "ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது" நாவலை எழுதி முடித்திருக்கிறீர்களே இது பெரிய விஷயம். சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளிவிடும் நபரின் நாவல்களில் ஒன்று எனில் இது சகஜமான விஷயம். நீங்கள் அப்படி இல்லை.

இந்த எல்லா விஷயங்களும் தங்களைப் பற்றி எனக்கு மிகுந்த நிறைவும் சந்தோஷமும் அளித்தன. இவ்வாறே தொடர்ந்து இருக்கட்டும்.

நான் மத்தியில் B.A Literatre படிக்கும் சபலத்துக்கு வேண்டா வெறுப்பாய் ஆளானேன். "ஒத்தெல்லோ" பற்றி ஒரு ஷேக்ஸ்பிரின் அதாரிடி எழுதிய 1920 காலப்புஸ்தகம் ஒன்றை ரஸித்துப் படித்தது மட்டுமே லாபம். பிற புத்தகங்கள் தூசு படிந்து விட்டன. கயிற்றால் கட்டிப் போட்டு விட்டேன். வீட்டு அழுக்குத் துணிகளுக்கு அது இப்போது மேடை. எல்லாம் ஒரு மாதக் கூத்து.

வையவன் B.A.வுக்குப் பிறகு வெங்கடேஸ்வரா யூனிவர்ஸிடியிலோ என்னவோ - தமிழ் M.A பாஸ் செய்து விட்டு B.T B.Ed எதுவும் போகாமல் செகண்டரி கிரேடாகவே இருந்து கொண்டிருக்கிறார்.

Turgenev ரொம்ப நாட்கள் ரஷயாவை விட்டு நீங்கிப் பாரிஸில் இருந்தார். தூர இருந்துகொண்டுதான் அவரது முக்கிய நாவல்க¨ளை எழுதினார். டால்ஸ்டாயும்,டாஸ்டாவ்கியும் ரஷ்யாவை விட்டு வெளியே போனால் எழுதவே முடியாத பழக்கம் உள்ளவர்கள்). துர்கனேவுக்கு ஒரு artistic distance தேவைப் பட்டது போலும் என்று ஒரு விமர்சகன் குறிக்கிறான். வையவனோடு எனக்கு இப்போது நேர்ந்திருக்கிற இந்தப் பிரிவு - அவரது எழுத்துக்களை சரியாகவும் உரக்கவும் விமரிசிக்கத் தடையில்லாத ஒரு artistic seperation ஆகும்.

சபரிமலைக்கு, முதல் இரண்டு வருஷங்கள் JKவுடன் காரில்தான் போனோம். மூன்றாவது நான்காவது ஐந்தாவது வருஷங்கள், ஒரு நிதானமான, சௌகரியம் மிக்கப் பாசஞ்சர் வண்டியில் பயணம். இரண்டு இரவுகளும் ஒரு பகலும் ரயிலிலேயே கழியும் அந்த அனுபவம் ரொம்ப அருமையானது. ஒரு கம்பார்ட்மெண்ட் என்கிற உணர்ச்சியே உண்டாவதில்லை. ஏதோ, நகரும் ஒரு சிறிய குடில் போல், மிதக்கும் பல்லக்கு போல் - எத்தனை விஷயங்கள், என்னென்ன சம்பாஷணைகள் - நேரில் விவரிக்கிறேனே!

திருப்பத்துரிலிருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் 7 அல்லது 7 1/2 மைலில் நாகராஜம்பட்டி இருக்கிறது. 8வது மைலில் பேராம்பட்டு. மனைவி நாகராஜம் பட்டியில் உதவி ஆசிரியை. நான் 73 - அக்டோபரிலிருந்து பேராம்பட்டுக்குத் தலைமை ஆசிரியர். குடித்தனம் நாகராஜம்பட்டியிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். சிவகுமார், திருப்பத்தூரிலேயே, வீட்டெதிரில் உள்ள ஸ்ரீராமநிலையம் ஆரம்பப் பாட சாலையில் இரண்டாம் வகுப்பு. தாத்தாக்களும், பாட்டிகளும், அத்தைகளும் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் அவ்வப்போது போய் வருவதோடு சரி. வைஷ்ணவி சிறு பிராயத்தில் எங்களோடு இருந்தாள். இப்போதெல்லாம் நான்கு நாட்கள் அங்கே, நான்கு நாட்கள் இங்கே.

சென்னையில் தவறினாலும், மே மாதத்தில் தாங்கள் இங்கு வந்தால் சில நாட்கள் சௌகரியமாகத் தங்கிப் போகலாம்.

தங்கள் கடிதத்தில் கேட்டுள்ள ஒவ்வொன்றுக்கும் கவனமாகப் பதில் எழுதச் சொல்லி இருந்தீர்கள். எது எதற்கு எழுதியிருக்கிறேன், எவற்றிற்கு எழுதவில்லை என்று தெரியவில்லை. இன்னும் எழுதிக் கொண்டிருந்தால், நாள் இன்னும் தாமதமாகும்.எனவே முடிக்கிறேன். உடனே பதில் எழுதுங்கள். சென்னை வர முயலுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.
8-4-76.

No comments: