Friday, June 02, 2006

கடித இலக்கியம் - 6

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதியவை)

நாகராஜம்பட்டி
28-5-76.

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தம்பிக்கு நேர்ந்த துக்கத்தை இங்கு அனைவரும் பகிர்ந்துகொண்டோம். வீட்டில் அம்மா, பெரியம்மா போன்றவர்கள் மிகவும் பரிதபித்தார்கள்.

துக்கங்களின் எதிரே நான் வாயடைத்து நின்றுவிடுவது வழக்கம். அதற்கு உள்ளானவர்களிடம் போய்ப் பேசக் கூடத் துணிச்சல் வருவதில்லை. (ஒரு விதத்தில் சொன்னால், இதேதான் நான் "கண்ணதாசனு"க்கு எழுதிய கதையின் கருவுக்கும் காரணம்) ஒரு தனித்த நேரம் கண்டு, தங்களை நேரடியாக வைத்துப் பேசுவது போல எழுத வேண்டும் என்று நினத்தேன். ஆனால் என் வாழ்க்கைச் சூழலின் மாறுபாடுகளை அனுசரிக்க மேற்கொண்ட வேலைப் பளுவில், அத்தகைய நேரம் இதோ அதோ என்று இவ்வளவு நாளும் நழுவி வந்து விட்டது.

இவ்வளவு அவலத்தில் எதற்கு வாழ்க்கை என்று தோன்றுகிற கணங்கள் நேரத்தான் செய்கின்றன. இருந்தாலும் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷம் என்று நினைக்கிறோமே....... அவரவர் தனிப்பட்ட அனுபவமா இது? இந்தப் பொதுமை, வாழ்வின் பரிபூரணத்துக்குத் தேவைப்படுகிறது போலும்......

தங்களின் தனிமை குறித்து எழுதியிருந்தீர்கள். எனது தனிமை எவ்வளவு தனித்தது தெரியுமா? விவரித்தால், அது சுயசரிதையின் ஒரு பாகமாகும். ஆனால் நம்முள் நாம் நிகழ்த்திக் கொண்டே வரவேண்டிய யோகத்தின் மூர்ச்சனை கலையாத வரை, நாம் எங்கு, எந்தச் சூழலில், எவருடனும் அல்லது எவரின்றியும் இருந்தாலும் நமக்குத் தனிமை இல்லை. இதை, உங்களுக்கு எழுதுகிற இப்போதுதான் நானும் அறிந்து உணர்கிறேன்.

எனது சூழல் மாறிய செய்தி என்னவென்றால், நான் அதே கிராமத்தில் ஒரு புதிய வீட்டுக்குக் குடிபோய்விட்டேன். முன்பு ஒரு குடிசையில் ஒண்டுக் குடித்தனம். இப்போது, போன கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேனே அந்த அய்யர் வீடு....... திடீரென்று இது நேர்ந்தது. கோடை விடுமுறையில் பார்த்துக் கொள்வதற்கு மட்டும் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட அந்த கொஞ்சம் வசதியான வீடு, மாதம் பத்து ரூபாய் வாடகைக்கு (அதற்கு மேலாக நான் அதைப் பராமரிப்பேன் என்கிற நம்பிகையில்) எனக்கு விடப்பட்டு, பொருள்களை மாற்றிக் கொண்டு குடித்தனமும் பெயர்ந்து விட்டேன். அதை ஒட்டிப் பல வேலைகள். இடையில் "கண்ணதாசனு"க்கு கதை வேறு கனத்த நிர்ப்பந்த நெருக்கடியில் என் இயல்புக்கு மாறாக எப்படியோ எழுதினேன்.......ஜூனில் வரலாம்.

இந்த வீடு, தங்களை வரவேற்கிற வீடு என்று சொல்லலாம். இத்தனை நாள் இருந்தது கணவனும் மனைவியும் ஆத்திரம் தீரவும் அன்பு கொஞ்சியும் கூடப் பேச முடியாத வீடு. இந்த வீடு, நண்பர்களுடனும் கூட நள்ளிரவு வரை பேசத் தக்க தனி வீடு.

மூன்று தென்னை மரங்கள் உண்டு. ஒரு சிறிய மாமரம் உண்டு. என் ஆசைக்குத் தோட்டவேலை செய்யலாம். புறாக் கூட்டையும் வெற்றிகரமாக இடம் மாற்றி விட்டேன். அந்தப் பெட்டி இப்போது எனக்கு 'டெலிவிஷன்'. பழங்காலத்து வீடு. நிறைய ஒழுகும். ஆனால் பரவாயில்லை. வாழைக் கன்றுகளுக்கு அக்கறையுடன் நீர் வார்த்து வருகிறேன். தண்ணீருக்குப் பஞ்சப் பயம் காட்டாத நல்ல கிணறு.

குறித்து வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து ஒன்று பாக்கி இல்லாமல் செய்வது என்பது, மளிகைக் கடையில் சாமான்கள் வாங்குகிற ஒரு விஷயத்தில் மட்டுமே - அதுவும் இப்போது சமீப காலமாகத்தான் எனக்குப் பழக்கம். எழுத ஆரம்பித்து விட்ட பிறகு, எழுத ஆரம்பித்ததை நிறுத்தி 'அயிட்டங்'களை யோசித்தால் தூக்கம் வருகிற மாதிரி தெரிகிறது. தங்கள் ஆர்வ விசாரிப்புகளை அலட்சியப் படுத்துகிறேன் என்று அர்த்தமல்ல. சங்கீதம் தெரியாத குறைக்கு நான் 'சபா'வுக்குக் கடிதம் எழுதுகிறேன். உங்களுக்கு எழுதுகிற போது நான் ஒரு புல்லாங்குழலை ஊதத் தொடங்குகிறேன். மனசின் ஏதேதோ தாகங்களைத் தணிவிக்கிற வீணையை இயற்றுகிறேன். என் போக்கில் எங்கேயோ நிறுத்துவதுதான் எனக்கு சௌகரியமாக இருக்கிறது. ஆயினும் எல்லாவற்- றையும் பற்றி எழுதுவேன் - இன்ஷா அல்லாஹ் - என்று நினைக்கிறேன்.

தாங்கள் அவசியம் ஒரு முறை வந்து போக வேண்டும். நாங்கள் இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் உங்களை வரவேற்கத் தயாராகிவிட்டோம். நாங்கள் இப்போது விருந்தினர்க்குப் பசித்திருக்கிறோம். எங்கள் வாழ்வின் வியப்புகளையெல்லாம் அவர்களுக்குக் காட்ட விரும்புகிறோம். அவர்களோடு பேச விரும்புகிறோம்.

***** ******

30-5-76

"கண்ணதாச"னில் எழுதிய கட்டுரை "குத்தூசி"யில் மறு பிரசுரம் ஆகியிருக்கிறது. அவர்களும் JK மலர் போட்டிருகிறார்கள்.

கம்யூனிஸ்டு முகாமில் வளர்ந்த சிலர், அதில் சேர்ந்ததாகப் பெருமை கொள்ளும் சிலர், எம்.ஜி.ஆரை நயந்து பிழைக்கும் பிழைப்பாக, JKயின் "சினிமாவுக்குப் போன சித்தாளு"வை விமர்சிக்கவும் மறுக்கவும் முனைந்துள்ளனர். வர்க்க சாஸ்திரங்களைப் பேசிக் கொண்டு, வர்க்கம் சார்ந்த இலக்கிய உலகின் கருங்காலிகளாக மாறியிருக்கிறார்கள். அந்த நாவல் குறித்து நாம் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கிறேன்.

நேற்று டவுனுக்குப் போய் வீரமணியிடம் பேசிக் கொண்டிருந்தேன். தீபத்தில் உங்கள் கதை வந்திருப்பதாகச் சொன்னார். படித்து விட்டு எழுதுகிறேன்.

JK, திருப்பத்தூருக்கு வருகிற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறார். ஒரு கூட்டம். மறுநாள் 7ஆம் தேதி நாங்கள் பூண்டி போகவிருக்கிறோம்.

கணையாழி, அது, இது என்று சில ஏடுகளை இப்போதுதான் பார்த்தேன். இந்தக் கூட்டத்தைத் தொடர்ச்சியாகக் கவனித்து வராதது நமது வளர்ச்சிக்கு நல்லது என்றே நினைக்கிறேன். ரஸமாக எழுதுகிறவர்கள் சில பேர் இருக்கிறார்கள். அதுவும், வம்பு, வழக்கு, இலக்கியத்தை மையமிட்ட கட்சிச் சண்டைகள், இவைகளில் சிக்காது ஒதுங்கி நின்று பார்ப்பது போன்ற நடுநிலைத் தோரணை, அதிலும் ஓர் உட்சாயல் - இவை சம்பந்தமாக, எழுதி எழுதித்தான் அந்த ரஸம் செலவாகிறது. creative ஆகவோ, அல்லது non-fiction ஆக இருந்த போதிலும் அதிலும் காணப்பட வேண்டிய இலக்கிய மேன்மையுடனோ யாரும் ஒரு single piece கூட எழுதுவதில்லை போல் தெரிகிறது. வண்ணதாசன், வண்ணநிலவன் என்கிற பெயர்கள் கண்ணில் பட்டிருக்கின்றன. எனக்குச் 'சொல் அலர்ஜி' யே உண்டு. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோது நான் 'வண்ணமுத்து பி.ச.குப்புசாமி' - இப்போது அந்தப் பேரில் எனக்கு மஹா சிரிப்பு வருகிறது - என்று புனைபெயர் வைத்துக் கொண்டிருந்தேன். தமக்கு வந்திருக்க வேண்டிய இலக்கியத் தெளிவிலும், அதனடிப்படை யில் வந்திருக்க வேண்டிய சொல்லலங்காரப் பண்பிலும் அவர்களால் எப்படி இந்த 'வண்ணப் பெயர்க'ளைத் தாங்கி நிற்கக் கூசாமல் இருக்கிறது? புரியவில்லை.

- திருப்பத்தூர் அடுத்த 'வேலன் நகர்' என்னும் பகுதியில் என்னை வீடு வாங்கச் சொன்னார்கள். வடிவேலு என்கிறவன் தன் நிலத்தைத் துண்டு போட்டு மனைகளாக்கி அதற்குத் தன் பெயரை வைத்து விட்டான் 'வேலன் நகர்' என்று. '' 'வடிவேலு மங்கலம்'
என்று வைத்திருந்தாலும் நான் அதை விரும்பியிருப்பேன். ஆனால் இந்த வேலன் நகர் பேரில், சமீபத்தில் தமிழில் படிந்த ஓர் அசிங்கமான நடையின் வாடை வீசுகிறது" என்று கூறி நான் வாங்க மறுத்து விட்டேன். சொத்துடைமைக்குக் கூட எனக்குச் சொல்லின் அலங்காரம் தேவை.

- அவர்கள் கதையை விமர்சிப்பதற்கு இது முன்னுரை ஆகாது. அவர்களைப் பார்த்ததும் நான் படிக்காமல் விட்டதன் காரணம் இது. எஸ்.முனியாண்டி, எஸ்.முனியாண்டி என்று தொடர்ந்து வந்திருந்தாலும் பார்த்திருப்பேன். வண்ண வண்ண என்று வருகிற எழுத்துக்கள் என்னைப் படிக்கத் தூண்டவில்லை.

- வண்ணநிலவன் சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறதாமே! எங்கேயாவது கிடைத்தால் படிக்கிறேன். நீங்களும் குறிப்பிடிருக்கிறீர்களே?

தன் எழுத்தோடும் வாழ்வோடும் integrity கொண்டுள்ளவர்களின் எழுத்தில் மட்டுமே கலையின் அழகு அமையும். அது இல்லையேல், வெறும் ஒரு தனிமனப் பயிற்சி மட்டும் கலையைப் பெற்றுத் தந்துவிடாது.

***** *****

10-6-76


- தங்களுக்கு எழுதுகிற கடிதம் இம்முறை மிகவும் நீள்கிறது - நாள் கணக்கில்.

இடையில், சென்ற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூருக்கு JK வந்திருந்தார். மறுநாள் திங்கட்கிழமை காலை இங்கே நாகராஜம்பட்டிக்கு என் புது வீட்டுக்கும் வந்திருந்தார்.

- இந்த விவரங்களை நேரில் சொல்கிறேன்.

கல்கியில் சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறார்களாமே? தேவபாரதி சொன்னார். JK வந்திருக்கிற சமயம் அவர் இதைச் சொன்ன போது, போட்டிகளுக்கும் எனக்கும் -நமக்கும் - சம்பந்தமில்லை என்று நினைத்தேன். இன்று, இந்தக் கடிதம் எழுதுகிற சற்று முன்பு ஒன்று தோன்றிற்று. எழுதுவோமே!

- என்னுள் ஒரு வீழ்ச்சியை உணர்கிறேன். இதை வெளித்தள்ள வேண்டும். மனசுக்குள் இதைச் சுமந்து கொண்டிருக்கக் கூடாது. ஒரு கதையில் தான் இந்த வலி தீர நான் முனக முடியும். போட்டிக்காக அல்லாவிடினும், இதற்காக நான் அதை எழுதித் தீரவேண்டும். பொதுவாக எழுதலாம் என்றால், அதற்கு ஒரு கால வரையறை மேற்கொண்டு செவ்வையாய் முடிக்க என்னால் இயலாது. நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டே எழுதுவோம். கல்கியின் தேதி ஜூன் முப்பதாம். இருபது நாட்களூக்குள் இந்த ஆவேசத்தைத் தணித்துக் கொண்டு, பிறகு ஒதுங்கி என் இலக்கிய முயற்சிகள் சம்பந்தமாக ஒரு பெரிய முடிவு மேற்கொள்வேன்.

எழுதுவதானால் நீங்களும் எழுதுங்கள். ஏதோ எழுதினோம் என்று நம்மைப் பொறுத்தவரை ஒரு லாபம் தானே?

ஜூலையில் இங்கு வருகிற 'புரோகிராம்' வைத்துக் கொள்கிறீர்களா? எங்கள் பள்ளியின் இலக்கிய மன்றத் துவக்க விழாவிற்கு அப்போது உங்களை அழைக்கிறேன். ஆரம்பப் பள்ளிக்கூடம் தான். ஐந்து வகுப்புகள் மட்டுமே உள்ளதுதான். ஆனால், நீங்கள் ன்னையும் நான் உங்களையும் அல்லவோ சந்திக்கிறோம்? இதை ஒரு பெரிய புரொகிராமாக ஒப்ப வேண்டுகிறேன்.

***** *****

15-6-76.


என்னவோ, தங்களுக்கு எழுதுவதைத் தபாலில் சேர்க்க இந்த முறை இத்தனை நாள் ஆகிவிட்டது. மன்னிக்க வெண்டுகிறேன்.

- இன்னும் வளர்த்தால் இன்னும் தாமதமாகும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.


தங்கள்,
பி.ச.குப்புசாமி.

1 comment:

Nirek said...

Hello uncle,
I cant avoid comparing my generation's short emails with those literary rich mails between you and him. will wait to read more abt your replies too.