Wednesday, July 08, 2009

இந்திராபார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா'

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை
இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை
நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன்
புதுமையான சுவையுடன் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். 'சொல் புதிது, சுவை புதிது,
பொருள் புதிது' என்று சொன்ன பாரதியைப் பிரதிபலிப்பதாய் இந்நாவலின் கதை சொல்லும் பாணி, உக்தி, சுவை,
எளிமை எல்லாமே புதிதுதான். இதுவரை வெளிவந்த அவரது நாவல்களான 'தந்திரபூமி', 'சுதந்திரபூமி, 'வேர்ப்பற்று',
'ஏசுவின் தோழர்கள்', 'குருதிப்புனல்' போன்றவற்றில் தன் அனுபவத்தையும், சமகால சமூக நிகழ்வுகளையும் பதிவு செய்தது போலன்றி இந்நாவல் நமக்குப் பரிச்சயமான பாரதக்கதையின் புதிய பதிவாகவும், அதே நேரத்தில் சமகால அரசியலை விமர்சிப்பதாகவும் வித்தியாசமான நடையில் அமைந்துள்ளது. உபதேசங்கள் ஏதுமில்லை. இந்நாவல் சமீப
காலத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனை என்று கருதப்படுகிறது.

'உலக இலக்கியங்களில் காணமுடியாத பரிமாணங்களை உடைய கதாபாத்திரமான கிருஷ்ணனை' தன் நாவலின்
கருவாகக் கொண்டது பற்றிக் குறிப்பிடுகையில் இ.பா எழுதுகிறார்:

'கிருஷ்ணனை எந்த யுகத்திலும், அந்தந்தக் காலத்திய மதிப்பீடுகளுக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே அவன் தனிச் சிறப்பு. பாகவதம், ஹரிவம்சம், விஷ்ணுபுராணம், மஹாபாரதம், ஆகிய நூல்களை நாம் படிக்கும்
போது அவற்றில் நம்மை ஈர்க்கும் கதாபாத்திரம் கிருஷ்ணன். ஆனால் இவற்றில் எந்த நூலிலும் அவன் கதைத் தலைவ னல்லன். ஒரு குறிப்பிட்ட ஆசிரியனின் படைப்பாகக் கிருஷ்ணனைக் கொள்ள முடியாது. அவன் ஒரு சமுதாயக் கனவு. பாகவதத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வருகின்ற கிருஷ்ணன், பாரதத்தில் ஒரு முழுநேர அரசியல்வாதியாக வருகிறான். ஆழ்வார் பாடல்களில் பேசும் பொற்சித்திரமாகவும், காதலனாகவும் வருகிறான். நாயக நாயகி பாவம்
(Bridal Mysticism) என்ற கோட்பாட்டுக்கு ஊற்றுக்கண் கிருஷ்ணன். உலக இலக்கியங்களில் அறிய முடியாத இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தின் செய்தியை நாவல் வடிவத்தில் எழுதவேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. இந்தக்
காலத்துக்கும் அர்த்தப்படுகின்ற ஒருவனாக அவனை காட்டவேண்டுமென்பது என் விருப்பம்.'

கிருஷ்ணனின் முடிவில் தொடங்குகிறது நாவல். ஜரா என்கிற வேடன், விலங்கு என்று எண்ணி மரத்தில் அமர்ந்
திருக்கிற கிருஷ்ணின் பாதத்தை அம்பால் அடிக்கிறான். பிறகுதான் நரஹத்தி செய்து விட்டோம் என்று பதறுகிறான்.
கிருஷ்ணன் அவனை அமைதிப்படுத்தி தன் முடிவிற்கான காரணத்தைக் கூறுகிறான். பாகவதத்தில் வியாஸர் கதையை சுகருக்குச் சொல்கிறார். சுகர் பரீட்சித்துக்குச் சொல்கிறார். இ.பாவின் கதையில் கிருஷ்ணன் தன் கதையை ஜரா
என்கிற வேடனுக்குச் சொல்கிறான். ஜரா என்கிற வேடன் நாரதருக்குச் சொல்கிறான். நாரதர் நமக்குச் சொல்வதாகக்
கதை. இக்காலத்துக்கும் அர்த்தப்படுகிற ஒருவனாகக் கிருஷ்ணனைக் காட்டவேண்டி நாரதரை நாவலில் கொண்டு
வருகிறார் இ.பா.

நாரதர் எக்கால மொழியிலும் பேச வல்லவர். அவர் திரிகால ஞானி. முக்காலமும் உணர்ந்தவர். 'மாய யதார்த்த' யுக்திக்கு நாரதர் இந்நாவலில் பெரிதும் பயன்படுகிறார். தற்கால பிரச்சினைகளைக் கோடி காட்டுகிறார். அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கிறார். ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்' நாடகத்தில் வரும் சூன்யகாரிகளின் குரல்களை அசரீரியுடன்
ஒப்பிடுகிறார். கம்சன் கதையில் 'எக்ஸ்டன்ஷியலிசம்' பற்றிக் குறிப்பிடுகிறார். 'சோவியத் யூனியன் மீது ஹிட்லர் ஏன்
குளிர்பருவத்தில் படை எடுத்தான் தெரியுமா?' என்று யுத்தகால யுக்திக¨ளைப் பேசுகிறார். 'ஷேக்ஸ்பியர், ஹிட்லர் அது
இது என்று வெளுத்து வாங்குகிறேனே என்று பார்க்கிறீர்களா? திரிகால சஞ்சாரி, முக்காலமும் உணர்ந்தவன், செய்திக்
கலைஞன் எல்லாமும்தான் தெரிந்திருக்க வேண்டும்' என்று தன் பேச்சுக்கு விளக்கம் தருகிறார். அவரது பேச்சில்
சிலப்பதிகார வரிகளும், ஆண்டாள், ஆழ்வார் பாசுரங்களும் சரளமாகக் கொட்டுகின்றன. நாவலுக்குச் சுவை கூட்டுவதுஅவரது பாத்திரந்தான்.

நாவல் முழுதிலும் கிருஷ்ணனின் பன்முகப் பரிமாணங்களையும் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் இ.பா. அவனுடைய சாகசங்கள் சராசரி உலகத்துக்கென்று விதிக்கப்பட்டுள்ள ஒழுக்க அளவுகோல்களுக்கு முரணாகத் தென்படக்கூடும். ஆனால் அதைக் கொண்டு அவனை யாரும் மதிப்பிடுவதில்லை. 'சராசரி உலகம் மட்டுமல்ல, காவியக் கதாநாயகர்களுக்கு நிர்ணயிக்கபட்டுள்ள ஒழுக்க அளவுகோல்கள் கூட அவனைப் பொறுத்தவரை பொருந்தாமல்
போவதை' ஆசிரியர் பல நிகழ்ச்சிகள் மூலம் காட்டுகிறார். பாரதத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வருகிற
கிருஷ்ணன் எப்படி பாரதத்தில் ஒரு முழுநேர அரசியல் வாதியாக வருகிறான் என்பதைக் காட்டுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் கிருஷ்ணனைப் பற்றி புதிது புதிதாகக் கிடைக்கும் தகவல்கள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. " 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'. அவரவர் அந்தந்தக் காலத்திய சௌகரிய அசௌகரியங்களுக்கு
ஏற்றாற்போல் அர்த்தம் பண்ணிக் கொள்வதுதான் - நன்மை தீமை. சத்தியமும் பொய்யும், சௌகரிய அசௌகரியங் களைப் பொறுத்த விஷயங்கள்தாம். எதையுமே கருப்பு வெள்ளையாகப் பார்க்கக் கூடாது. தன் வாழ்க்கை வரலாற்றை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்" என்று கிருஷ்ணன் தன்னிடம் சொன்னதாக ஜரா என்கிற வேடன்
சொல்கிறான்.

"கிருஷ்ணன் ஒரு 'anti hero'. ராமாவதாரம் தனக்கு அலுத்துவிட்டதாகவும் அதற்கு மாறுதலாகத்தான் கிருஷ்ணா
வதாரம் எடுத்ததாகவும், அதனால்தான் இந்த அவதாரத்தில் பலர் தன்னை அரசனாக்க முயற்சித்தும் அது தன்
சுதந்திரத்திக் கட்டுப்படுத்தும் என்பதால் ஏற்கவில்லை" என்று கிருஷ்ணனே சொன்னதாக நாரதர் சொல்கிறார்.

கிருஷ்ணன் என்ன செய்தாலும் அது கவர்ச்சியாகப் படுகிறது. இந்தக் 'கவர்ச்சி' பற்றிப் பேசும் போது நாரதர் நம் அரசியல்வாதிகளைக் ஒரு இடி இடிக்கிறார். "கவர்ச்சி மிக்க உங்கள் அரசியல்வாதிகள் என்ன செய்தாலும் அதை
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அது சரியா தப்பா என்று ஆராய்கிறீர்களா? ஆனால் கிருஷ்ணனுக்கும் இன்றைய
அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம் என்றால், கிருஷ்ணன் என்ன செய்தாலும் அதை லோக§க்ஷமம் கருதிச்செய்தான்.
உங்கள் அரசியல்வாதிகளுடைய தலையாய தர்மம், அவர்களுடைய சொந்த தர்மம் தான்!". இடிப்பது இ.பாதான்!
நாரதர் ஒரு கருவிதான்.

'ஸம்பவாமி யுகே யுகே'க்கு இ.பா ஒரு விளக்கம் தருகிறார். ''ஸம்பவாமி யுகெ யுகே என்று அவன் சொல்லி
இருப்பதின் பொருள் தெரியுமா? அவன் மறுபடியும் மறுபடியும் அவதாரம் எடுப்பான் என்று அர்த்தம் இல்லை. ஏற்கனவே எடுத்துவிட்ட கிருஷ்ணாவதாரத்தின் அர்த்தப் பரிமாணங்களை அந்தந்தக் காலத்துக்கு ஏற்றபடி மனதில் வாங்கிக்
கொண்டு அவனை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்" என்கிறார்.

மஹாபாரதத்தில் வரும் எல்லாப் பெண்களுமே கிருஷ்ணனை விரும்பினார்கள் என்பது ஒரு முக்கியமான விஷயம் என்கிறார் இ.பா. துரியோதனனின் மனைவி பானுமதி, பீமன் மீது கொள்ளைக் காதல் கொண்ட ஜலந்தரா, கர்ணனின் மனைவி காஞ்சனமாலா எல்லோரும் அவனைச் சகோதரனாக நேசித்து உதவி கேட்கிறார்கள். கிருஷ்ணனும் அவற்றை
நிறைவேற்றுகிறான். இச் செய்திகள் எல்லாம் புராணங்களில் இல்லைதான். ஆனாலும் கிருஷ்ணன் சொன்னதாக ஜரா
என்கிற வேடன் சொன்னதையே தான் சொல்வதாக நாரதர் சொல்கிறார். 'சரித்திரம், புராணம் எல்லாவற்றின் கதையும் இப்படித்தான். நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது உங்கள் முத்திரையும் இருக்க வேண்டும்' என்கிறார் இ.பா.

'எக்ஸ்டென்ஷியலிசம்' பற்றியும் பேசுகிறார் நாரதர். உயிருக்கு உயிராய் நேசித்த தங்கை தேவகியின் குழந்தைதான் தனக்கு எமன் என்று அசரீரி மூலம் அறிந்ததும் அவளைக் கொல்ல முனைகிறான் கம்சன். அவள்பால் அவனுக்கிருந்த
அன்புக்கும், தற்காப்பு உணர்வுக்குமிடையே நிகழும் எக்ஸ்டென்ஷிலியப் பிரச்சினை இது. உயிரைக் காப்பாற்றிக்
கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற வெறி' என்கிறார்.

'கிருஷ்ணன் ஒரு கலகக்காரன். பிராமணர்களை அழைத்து வந்து மந்திரம் ஓதி, இந்திரனுக்கு யாதவர் நடத்தி வந்த பூஜையை நிறுத்தினான். மலையடிவாரம் சென்று மலைக்குப் பூஜை செய்வேம். அதுதான் நம் பசுக்களுக்குப் புல் தருகிறது. நமக்கு நிழல் தருகிறது. கூட்டுச் சோறு செய்து, மலைக்குப் படைத்து விட்டு, நாம் எல்லோரும் சேர்ந்து உண்டு,
ஆடிப்பாடி மகிழ்வோம் என்கிறான். கண்ணுக்குத் தெரியாத இந்திரனைக் காட்டிலும், மனிதர்கள் கண்ணுக்குத்
தெரிகின்ற, அவர்களுக்குப் பயன்படுகின்ற பொருள்களே முக்கியமானவை, வழிபாட்டிற்கு உரியவை' என்கிறான்.
'சமயச்சடங்கு ஏதுமில்லாமல் முதல் community dinner- ஐத் தொடங்கிவைத்தவனே கிருஷ்ணன்தான்' என்கிறார்
நாரதர் - நாரதர் வாக்காக இ.பா.

'வாழ்க்கையையே ஒரு ரசானுபவமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் கிருஷ்ணனுடைய கட்சி. ஆண்களும் பெண்களும் மனத்தடை ஏதுமின்றி பழகினால்தான் இது சாத்தியம். முதலில் அகல வேண்டியது மனத்தடை, 'நீ ஆண்,
நான் பெண்', 'நீ பெண், நான் ஆண்' என்கிற பேதஉணர்வு. இந்த மனத்தடை அகன்ற நிலையில்தான் கோபிகைகளால், கிருஷ்ணனோடும், அவனால் அவர்களோடும் மிகச் சுலபமாக, சகஜமாக உறவாட முடிந்தது' என்று கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் கோபிகைகளுடன் லீலைகள் புரிந்ததை கேள்வியாக்குகிறவர்களுக்கு நாரதர் சொல்கிறார்.

அதேபோல கிருஷ்ணன், கோபியர் நீராடும்போது அவர்களது துகில்க¨ளை எடுத்துக் கொண்டு அருகே இருந்த மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறிக் கொண்டு அவர்க¨ளை அலைக்கழிப்பதைப் பற்றிப் பேசுபவர்களுக்கும் 'நம் உடலைக் கண்டு நாமே வெட்கப்பட வேண்டியதில்லை. என்ன அற்புதமான உண்மை இது தெரியுமா? நம் உடலைக் கண்டு நாமே வெட்கப்படும்போதுதான், மனத் தடைளும் மனக் களங்கங்களும் ஏற்படுகின்றன என்று இப்பொழுது உங்கள் உளவியல் அற்¢ஞர்கள் கூறுகின்றனர். Strip tease industryயின் மூலதனமே இந்த மனத்தடை உணர்வுதான் என்கிறார்கள் அவர்கள்' என்று விளக்கம் சொல்கிறார் நாரதர்.

மகாபாரதத்தில் முன்னும் பின்னுமாக கதை சொல்லப்படுவது பற்றி பின்நவீனத்துடன் ஒப்பிட்டுக் கேலி செய்கிறார் இ.பா. 'எது முன் எது பின் என்கிற விவகாரம் நம் நாட்டுக் கதைகளில் அந்தக் காலத்திலும் கிடையாது, இப்போது
உங்கள் தீவிர இலக்கியவாதிகள் பேசுகிற பின்நவீனத்துவக் கதைகளிலும் இருக்கக் கூடாது, அப்படித்தானே? ஆனால், ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டு அந்தக்காலத்திய கதைகளில் இந்தப் போக்கு இயல்பாகவே
இருந்திருக்கிறது' என்கிறார் நாரதர்.

பீஷ்மனது ராஜபக்தியைப் பற்றிப் பேசும்போது, நாரதர் தற்கால அரசியலை விலாவாரியாகப் பேசுகிறார். ராஜபக்திதான் கடமை என்று கொள்கிறான் பீஷ்மன். அநீதி என்று உணர்ந்திருந்தும், கடமை-ராஜபக்தி உணர்வில் அநீதியை வெறுப்பவன், அநீதியின் பக்கம் இருந்து போராடுகிறான். 'அந்தக் காலத்து ராஜபக்தியைத்தான் இன்று தேசபக்தி
என்கிறார்கள். அரசனுக்காக உயிர் துறப்பதாகச் சொல்லி, உயிர் துறந்தார்கள் அக்காலத்தில். இதை ஒரு புத்திசாலித் தனம் என்று நான் சொல்மாட்டேன். அரசனுக்காகப் போராடினாலும் அதர்மத்துக்காக உயிர் துறப்பது விவேகமன்று
என்கிறான் கிருஷ்ணன். அமெரிக்க அரசு அநியாயமாக வியட்நாம் போரில் வியட்நாம் மக்களைக் கொன்று குவித்தபோது
அமெரிக்க நாட்டு மக்களே அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியதை அறிந்த நீங்கள் ராஜபக்தி என்பதையோதேசபக்தி என்பதையோ ஒரு குறுகிய அர்த்தச் சிறையில், இறுகிப்போன கோஷமாய்ப் பார்க்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நாட்டு எல்லைகள் மாறிக்கொண்டே வரும் இந்நாளில், வெவ்வேறு இனங்களின் பூகோள
நடமாட்டம் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்நாளில், தேசபக்தி என்று பேசுவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்
காகவா அல்லது 'தேசபக்தி என்பது ஸாமுவல் ஜான்சன் சொன்னது போல 'அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா?' - என்று வெளுத்து வாங்குகிறார் நாரதர்.

'கனவில் புகுந்து சாகஸங்கள் செய்வதெல்லம் 'post-modern' நாவல்களில்தாம் நடக்கும் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறீர்களா? அந்தக் காலத்திலேயே நடந்திருக்கிறது. அநிருத்யன் கனவில் உஷா புகுந்திருக்கிறாள்.
அநிருத்தன் உஷா அழகைக் கண்டு சொக்கிப் போனான். என்னுடன் வருகிறாயா என்று கேட்டாள் உஷா. உடனே புறப்பட்டு விட்டான். உடன்போக்கு என்றுதானே தமிழ் இலக்கியத்தில் சொல்வார்கள்? கொஞ்சம் வித்தியாசம்,
தலைவியுடன் தலைவநின் உடன் போக்கு நிகழ்கிறது! அவனைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறாள். இருவரும் அவளது அந்தப்புரத்தில் 'living-in companian' ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்' என்று post-modernism, தமிழ் இலக்கியம் சொல்லும் உடன்போக்கு, இன்றைய நவநாகரீக வாழ்க்கைமுறை எல்லாம் புராண காலத்திலேயே இருந்திருப்பதைப் சுட்டிக் காட்டுகிறார் நாரதர்.

பாரதப்போர் முடிந்ததும் அஸ்வத்தாமன் பாண்டரது வம்சமே இல்லாதொழிக்க இரவில் அனைவரும் ஆழ்ந்த
நித்திரையில் இருந்தபோது பாண்டரது குழந்தைகளைக் கழுத்தை நெருக்கிக் கொலை செய்ததைக் குறிப்பிடும்போது 'ஜாலியன் வாலா பாக் புகழ் ஜெனரல் டயர் மகாபாரதம் படித்திருப்பான் என்று தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?'
என்று கேட்கிறார் நாரதர்.

யுத்தத்தின்போது கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு 'பகவத்கீதை' மூலம் உபதேசம் செய்தது பற்றிய ஒரு நியாயமான சந்தேகத்துக்கும் பதிலளிக்கிறார் நாரதர். எப்படி? 'அர்ச்சுனனின் கேள்வியும் கிருஷ்ணன் அவனுக்குக் கூறும் பதில்களும்
என்று 700 சுலோகங்களாக, கீதை விர்¢கிறது. எதிர்த்தாற்போல் பகைவர்கள் போராடத் தயாராக நின்று கொண்டி ருக்கும்போது, கிருஷ்ணன் மணிக்கணக்கில் இவ்வாறு அர்ச்சுனனிடம் பேசியிருப்பான் என்பது சாத்தியமா என்பது
நியாயமான கேள்வி. நானே கிருஷ்ணனிடம் இதுபற்றிக் கேட்டேன். கிருஷ்ணன் சொன்னான், நாரதா, வார்த்தைகளின் உதவியின்றி, மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில்பேசினால், இந்த உரையாடல் நிகழ அதிக பட்சம் ஐந்து
நிமிஷங்களாகும் என்று. நீங்கள் இப்போது சொல்கிறீர்களே 'telepathi' என்று, அதுவேதான் கிருஷ்ணன் சொல்லும் 'எண்ணமொழி' '- என்பதுதான் அவரது விளக்கம்.

- இப்படி நாவல் முழுதும் அற்புதமான கருத்துக்கள் வைரங்களாய் மின்னுகின்றன. அவற்றைச் சொல்லி மாளாது. நாவலை முழுதும் படித்தே அனுபவிக்க முடியும்.

நாவலுக்குச் சிறப்புச் சேர்ப்பது அத்தியாயங்கள் தோறும் ஓவியர் ஆதிமூலம் அவர்கள் வரைந்துள்ள அற்புதமான
உயிர்த்துடிப்புள்ள கோட்டோவியங்கள் என்றால் அது மிகையல்ல. பாரதத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் கண் முன்னே நிற்பது போல் ஒரு பிரமையை ஆதிமூலம் உருவாக்கியுள்ளார்.

இறுதியாக நாவல் சொல்வதென்ன? 'மகாபாரதப்போர் ஒரு செய்தியைத் திட்டவட்டமாக உலகுக்கு அறிவித்து
விட்டது. மனிதனுக்குத்தான் தர்மமேயன்றி தர்மத்துக்காக மனிதனில்லை என்பதை கிருஷ்ணன் உணர்த்திவிட்டான்' என்பதுதான். 0

நூல்: கிருஷ்ணா கிருஷ்ணா
ஆசிரியர்: இந்திராபார்த்தசாரதி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.

1 comment:

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

"மனிதனுக்குத்தான் தர்மமேயன்றி தர்மத்துக்காக மனிதனில்லை என்பதை கிருஷ்ணன் உணர்த்திவிட்டான்' என்பதுதான்".

எனக்கு இது புரியவில்லை. ஆதார தர்மங்கள் என்பது நிரந்தரமானவையில்லையா?
உம்:ஸ்வதர்மம்; நமக்கென்று ஏற்றுக்கொண்ட தொழிலை, கடமைகளை உண்மையோடு செய்யவேண்டும். இது ஒரு தார்மீக விதி; இது எனக்கு தற்பொழுது சௌகர்யப்படவில்லை என்பதற்காக விதியை நெகிழ்த்தி வளைத்துக்கொள்ளலாமா!

திருட்டென்பது அதர்மம்; பொய் என்பது அதர்மம்; விதிவிலக்குகள் இருக்கலாம்; வள்ளுவரும் அதைக்குறிப்பிட்டு இருக்கிறார்; மனிதருக்காகத்தான் தர்மம் என்றால் இன்றய மனிதருக்கு ஒத்துவரவில்லை என்று வளைத்துக்கொள்வது தர்மமா!

தர்மம் என்பது மனிதருக்கானது - பொதுவானது - சமூக வாழ்க்கைக்கானது; தனி மனிதன் இஷ்டப்படி இருந்துகொள்வதற்கானதல்ல.

முதலில் உள்ள தங்கள் வாக்யம் இந்த அர்த்தத்தைக் கொடுத்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

கண்ணன், கும்பகோணம்.