Sunday, July 12, 2009

'இலக்க்கிய உரையாடல்கள்'- - ஒரு அறிமுகம்.

அநேகமாக இன்று எல்லா இலக்கிய இதழ்களும் பேட்டிகளை வெளியிடுகின்றன. குறிப்பாக 'தீராநதி', 'காலச்சுவடு'
'புதிய புத்தகம் பேசுது', 'இனிய உதயம்' போன்றவை தவறாது பேட்டிகளை இதழ்தோறும் வெளியிட்டு வருகின்றன. முதலில், 1965ல் தொடங்கப்பட்ட 'தீபம்', 'கணையாழி' இதழ்களில்தான் இப்படித் தவறாது மாதந்தோறும் பேட்டிகள் வந்தன. 'தீபம்' 'இலக்கியச் சந்திப்புகள்' என்ற பெயரில் சிறந்த இலகியவாதிகளைப் பேட்டி கண்டு வெளியிட்டது.
ஆனால் 'கணையாழி' இலக்கியவாதிகள் மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் பேட்டி கண்டு வெளியிட்டது. பின்னர் பேட்டிகளைக் கலைவடிவத்திற்கு உயர்த்திய கோமலின் 'சுபமங்களா'வில் வந்த இலக்கியப் பேட்டிகள் பெரிதும் பேசப்பட்டன. அதன் பின் கண்ணனின் 'காலச்சுவடு' கனமான ஆழ்ந்த சிந்தனையுடனான பேட்டிக¨ளை இதழ்தோறும் வெளியிட்டதுடன் அவற்றைத் தொகுப்புகளாகவும் வெளியிட்டு வருகிறது. சொற்ப காலமே வெளிவந்திருந்தாலும், ஜெயமோகன் நடத்திய 'சொல்புதிது', இதழ்தோறும் ஆன்மீகம், இலக்கியம், அரசியல் என்று பல்வேறு துறைகளிலும்
சிறந்த சிந்தனாவாதிகளின் நீண்ட பேட்டிகளை வெயிட்டது. கலைவடிவத்திற்கு உயர்த்தப்பட்ட இலக்கியப்பேட்டிகளை மேலும் செழுமைப் படுத்தியதாக அவை அமைந்திருந்தன. ஜெயமோகன், வேதசகாயகுமார், செந்தூரம் ஜெகதீஷ், ஆர்.குப்புசாமி, அ.கா.பெருமாள். சரவணன், ஜி.சந்திசெகர், க.மோகனரங்கம், சுப்பிரமணியம் ஆகியோர் கண்ட பேட்டிகள் இப்போது 'எனி இந்தியன் பதிப்பகத்'தாரால் 'இலக்கியச் சந்திப்புகள்' என்ற தலைப்பில் ஜெயமோகன்,
சூத்திரதாரி ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. பேட்டிகள் சமயத்தில் கேட்பவரும் பதில்
அளிப்பவரும் தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படியான கலந்துரையாடல்களின் தொகுப்பாக இது அமைந்திருப்பதால், வழக்கமான பேட்டி என்ற பெயரில் அல்லாமல் 'இலக்கிய உரையாடல்கள்' என்ற பொருத்தமான தலைப்பில் வெளியாகியுள்ளது.

இப்பேட்டிகள் 'எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான - படைப்புகளின் வழியே அனுமானித்துவிட முடியாத
பல்வேறு காரணிகளை அறிந்து கொள்ள உதவுகின்றன என்கிற வகையில் இவ்வகைத் தொகுப்புகள் பெரிதும் விரும்பிவரவேற்கப்படுகின்றன. 'எனி இந்தியன் பதிப்பக'மும் அத்தகைய சிறந்த பணியாக இத்தொகுப்பைச் சிறப்பாக வெளியிட் டுள்ளது.

இச் சந்திப்புகள் நான்கு தலைப்புகளில் - 'அயல் குரல்கள்', 'மரபின் குரல்கள்', 'முதல் குரல்கள்', 'புதுக் குரல்கள்'
எனத் தரப்பட்டுள்ளன. 'அயல் குரல்களி'ல் நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத 'நித்ய சைத்தன்ய யதி', கே.சச்சிதானந்தன்,
டி.ஆர்.நாகராஜ் ஆகியோரது சந்திப்புகள் இடம் பெற்றுள்ளன. 'மரபின் குரல்களி'ல் பேராசிரியர் ஜேசுதாசன், மற்றும்
நா.மம்மது ஆகியோரது சந்திப்புகளும், 'முதல் குரல்களி'ல் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, ஜெயகாந்தன்,
நீல.பத்மநாபன், அ.முத்துலிங்கம் ஆகியோரின் இலக்கிய உரரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. 'புதுக்குரல்கள்'
பகுதியில் பாவண்ணன், எம்.யுவன் என்கிற இளைய தலைமுறையினரின் சந்திப்புகளும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேட்டிக்கும் முன்னதாக பேட்டி காணப்படுபவர் பற்றிய விவரமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

நித்ய சைத்தன்ய யதியினுடனான உரையாடல்கள் அதிகமும் ஆன்மீகம் சார்ந்ததாகவும், கே.சச்சித்தனந்தனின்
சந்திப்பில் மிகுதியும் மார்க்ஸியமும், டி.ஆர்.நாகராஜனின் பேட்டியில் 'பின்நவீனத்துவமு'ம் இடம் பெற்றிருப்பது
அவற்றில் ஆர்வமில்லாதவர்களுக்கு சற்று அலுப்பைத் தரக்கூடும். ஆனாலும் கொஞ்சம் விறுவிறுப்பான உரையாடல்களும் அவற்றில் உண்டு.

நித்ய சைத்தன்ய யதியின் கருத்துக்களில், 'உண்மை என்று அகம் எதை அறிகிறதோ அதில் எவ்வித சமரசமும்
இல்லாமலிருப்பவனே பெரிய படைப்பாளி', 'உன் வாசிப்பனுபவத்தில் இன்றைய நவீனக் கருத்துக்கள் எப்படிச் செயல்
படுகின்றன என்றே பார்க்கவேண்டும். உனக்கு உதவாதபோது நிராகரிக்கவும் வேண்டும். உலகம் சொல்கிறது
என்பதெல்லாம் மடமை. இவையெல்லாம் நிரூபணவாதக் கருத்தல்ல.' என்பவை என்னை ஈர்த்தன. இன்னும் அவர் மிக கனமான தத்துவங்கள்பற்றி எல்லாம் கருத்துச் சொல்லி இருக்கிறார். 'இலக்கியம் பற்றிய மதிப்பீடு', 'நவீனத்துவம்',
'கலை', 'அழகு', 'மதம்', மற்றும் 'தியானம்' பற்றிய அவரது கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தக்கூடியவை.
'அழகு' என்பது என்ன என்று விளக்குகையில் இப்படிச் சொல்கிறார்: 'அழகு என்பது என்ன? சாக்ரடீஸ் கேட்டார். பெண் அழகு. பானை அழகு. குதிரைக்குட்டி அழகு. இவையனைத்திலும் பொதுவாக உள்ள அழகு என்ன? அதைத் தனியாகப் பிரித்துக் கூறமுடியுமா? முடியாது. அந்தரங்க அனுபவம் சார்ந்தே பேச முடிகிறது. அந்தரங்கமான ஒன்றுக்குப் புழக்க தளத்தில் மதிப்பு இல்லை. ஆகவே நாம் ஏகதேசப் படுத்தலாம். அடிப்படைக் கருதுகோள்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு பொதுமைப்படுத்தப்பட்ட தனி அனுபவங்களே. அழகு என்பது ஒரு பொதுவான ஒப்புதலின்
அடிப்படையிலான ஏகதேசப்படுத்துதல். (Beauty is an approximation of a general agreement) அந்தப் பொது வட்டத்திற்குள் இல்லாதவர்களுக்கு அதில் எந்தப் பொருளுமில்லை.'

கே.சச்சித்தானந்தன் பேட்டியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிபற்றிக் கேட்டபோது, 'சோவியத் ரஷ்யாவின்
வீழ்ச்சிக்குப் பல வருடங்களுக்கு முன்னரே நான் மார்க்சியத்தின் போதாமைகளைப் பற்றி நிறையப் பேசியும் எழுதியும்
விவாதித்தும் வந்துள்ளேன். லெனினிசத்தின் போதாமைகள் பற்றி என்று இன்னும் கச்சிதமாய்க் கூறலாம். எனவே
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நான் ஓரளவு முன்கூட்டியே ஊகித்ததுதான். இவ்வளவு விரைவாக நிகழும் என்று எதிர்
பார்க்கவில்லை. அவ்வளவுதான்.' என்றும் 'சீனாவிலும் மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டது. அதிக காலம் அங்கு ஜனநாயக உரிமைகளைத் தடை செய்து வைக்க முடியாது என்றே தோன்றுகிறது' என்று சொல்வது அவரது தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது. மேலும் சொல்கையில், 'மார்க்சீயம் தனி மனிதனை நிராகரிக்கிறது. கூட்டு மனிதனுக்கு அது மிகையான
முக்கியத்துவம் தருகிறது. இதன் விளைவாகவே அது சர்வாதிகாரத் தன்மை உடையதாக ஆகிறது. மார்க்சீயத்துக்கு ஜனநாயக அடிப்படையைத் தர முயன்றவர்களை லெனின் கிண்டல் செய்தார். கடுமையாக ஒடுக்கினார். லெனின் ரஷ்யாவில் கொண்டுவந்த மார்க்சீயத்தை மார்க்ஸ் காண நேர்ந்தால் அவர் கல்லறையில் நெளிவார் என்று மிஷல் ·பூக்கோ
கூறியது முற்றிலும் உண்மை' என்கிறார்.

முற்போக்கு இலக்கியம் பற்றிப் பேசும்போது, 'முற்போக்கு இலக்கியம் என்ற ஒரு இயக்கம் நேற்று இருந்தது.ஆனால் அழகியல் ரீதியாக அப்படி ஒரு தனித்த வகை இல்லை. அந்த உருவத்திலேயே நிறையக் குளறுபடிகள்
உண்டு. முற்போக்கு என்றால் என்ன என்று அது திட்ட வட்டமாக வரையறுத்துக் கொள்ளவில்லை. அடிப்படையில் அது வாழ்க்கையை எளிமைப்படுத்திக் காட்டும் தன்மை கொண்டது. இதன் மூலம் மொழியிலும் அனுபவத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வெற்றுப் படைப்புகளை அது உருவாக்க நேர்கிறது. மேலும் அதன் மொழி பற்றிய கருத்தாக்கம் மிகவும்
பின் தங்கியது. யதார்த்தவாதமே ஒரே இலக்கியவகை என்ற பிடிவாதம் அதற்கு உள்ளது. இயல்புவாதம் என்றுதான் நான் அதைக் கூறுவேன். யதார்த்தவாதம் இந்த முற்போக்கு எழுத்தை விட விரிவானது. இது ஏன் என்று பார்த்தால்
சம்பிரதாயமான மார்க்சீய சமூக ஆய்வு முறையை முழுமையாக நம்பி ஏற்பதுதான் காரணம் என்று புரிகிறது' என்கிறார்.

இன்னும், கேரள தேசீயம், கவிதை அனுபவம், வாசிப்பின் அரசியல், அமைப்பியல்-பின் அமைப்பியல் பற்றியெல்லாம் சச்சிதானந்தன் விரிவாக இப் பேட்டியில் சொல்லியுள்ளார்.

அடுத்து பிரபல கன்னட எழுத்தாளரான டி.ஆர்.நாகராஜனின் பேட்டியில் தலித்தியமும் பின் நவீனத்துவமும் பேசப்பட்டுள்ளன.'பெரியார் பற்றி உங்கள் கணிப்பு என்ன?' என்று கேட்டதற்கு, 'பெரியாருக்கு இந்தியக் கலாச்சாரத்தில்
பிடிப்பு இல்லை. இங்குள்ள பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை; தனக்குச் சாதகமானவற்றைக் கூட.
இங்கிருந்த மறைஞானிகளை (mystics) அவர் அறிந்திருக்கவில்லை. நம் கலாச்சாரத்தில் பிராமணியத்துக்கு எதிரான முக்கிய சக்தி அவர்கள். பெரியார் இம்மரபுகள் எவற்றையும் அறிந்திருக்கவில்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
அளவுக்கு மீறிய மேற்கத்திய சிந்தனைத் தாக்கம் கொண்டவர் அவர். எளிய மேற்கத்திய வாதத்தை அவர் அப்படியே
நம்பி ஏற்றார். 'முன்னேற்றம்' பற்றிய மேற்கத்தியக் கருத்துக்களிலும், விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய கருத்துக்களிலும் பெரியார் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். விஞ்ஞானமும்
தொழில் நுட்பமும்தான் அவரது கடவுள்கள்' என்று பதில் கூறிய நாகராஜன் இன்னும் பெரியாரின் பௌத்தம் பற்றிய
மதிப்பீடு, மொழி பற்றிய அவரது கண்ணோட்டம் பற்றியெல்லம் தொடர்ந்து சொல்கிறார்.

'தலித் என்ற அடையாளம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, 'தலித் என்ற அடையாளம் ஒரு ஒற்றைப்படையான முத்திரையோ, தரப்படுத்துதலோ அல்ல. அது பொதுவான நோக்கமுடைய ஒரு பொது அடையாளம்.
அதிகமும் அரசியல் சார்ந்தது. தலித் சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மை ஒரு பிரச்சினை. எல்லா சாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வும் பங்கேற்பும் இருக்கும் விதமாக இந்த அடையாளத்தை சமரசப்படுத்தியபடியே இருக்க வேண்டும். இச்சாதிகளின் கலாச்சார ஞாபகங்களுக்கும் இன்றைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு மோதல் உள்ளது. ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியும் தன் வேர்களை மறுகண்டுபிடிப்பு செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த தேசத்தின் கலாச்சாரம் மறுபிறப்பு பெற முடியும்' என்ற கருத்தை முன் வைக்கிறார். மற்றும் இலக்கியம், இலக்கியப் படைப்பு, வக்ரோத்தி என்கிற மொழிசார்ந்த திரிபுநிலை, பின்நவீனத்துவம்,
காந்தி-அம்பேத்கார் உறவு, காந்தீயத்தில் உள்ள குறைபாடு, அம்பேத்கார் பற்றிய குறை நிறைகள் - பற்றிய கேள்வி
களுக்கும் அவர் அளித்துள்ள பதில்கள் படித்து உணரவேண்டியவை.

பேராசிரியர் ஜேசுதாசனின் உரையாடலில் கம்பராமாயணத்தில் அவருக்கிருந்த மிகுந்த ஈடுபாட்டையும்,
அப்போதைய தமிழ்ப் பேராசிரியர்களுக்கு மாறாக மரபிலக்கியங்களில் மட்டுமின்றி நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த
வாசிப்பும், ரசனையும் கொண்டவராக அவர் இருந்ததையும் அறிய முடிகிறது. 'அறமே' அவரது ரசனையின் அடிப்படி என்பதையும் காண முடிகிறது. கம்பனின் மானிட அனுபவம், சிலப்பதிகாரத்தில் காவிய ஒருமை இன்மை, திருக்குறள்
சிறந்த நீதிநூல்தான் எனினும் நீதி மட்டுமே அதைக் கவிதையாக்கிவிடாது, பாரதியின் கவிதைகள் வெறும் இனிப்பு மட்டுமே - வாசக நிறைவைத் தரவில்லை, சித்தர் பாடல்களில் வடிவத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவற்றில் காணப்படும் தனியான மனோபாவமும் அழகியலும் முக்கியத்துவம் பெறுபவை என்றெல்லாம்அவர் கூறியுள்ள கருத்துக்கள் அவரை ஆரோக்கியமான சிந்தனையாளராகக் காட்டுகிறது.

தமிழிசை ஆய்வாளரான நா.மம்மது தன் பேட்டியில் தமிழிசை, தமிழிசை மரபுகளை விரிவாகவே ஆய்வு செய்த
ஆபிரஹாம் பண்டிதர், சிலம்பில் காணக் கிடைக்கும் இசைக் குறிப்புகள், இலங்கை அறிஞர் விபுலானந்தரின் யாழ் பற்றிய ஆய்வுகள், மேளகர்த்தா ராகங்கள் என்று நாம் அதிகமும் அறியாத பலதும் பற்றி புதிய செய்திகளைச் சொல்லி உள்ளார்.

ஐம்பது ஆண்டுகளாக எழுதியும் குறைவாகவே அறியப்பட்டுள்ள அசோகமித்திரனின் பேட்டி அவரது எழுத்தைப்
போலவே எளிமையும் சுவையும் மிக்கது. 'இலக்கியம் Sublimation என்பதைவிட Evation (தவிர்த்தல்) என்பதே சரியாக இருக்கும்', 'அழகியல் பிரக்ஞை பூர்வமானதல்ல, அத்தகைய விளக்கங்கள் எல்லாமே சிறிய அல்லது பெரிய பொய்கள்',
'பேச்சு வழக்கை அப்படியே பதிவு செய்தாலும் அது நுணுக்கங்களைக் காட்ட வேண்டுமென்பதில்லை. சராசரி பேச்சு
நடையைக் கையாண்டு பலரகமான நுணுக்கங்களையும் வெளிப்படுத்துவது சாத்தியந்தான் என்று படுகிறது. படைப்பு உறுதியானதாக இருந்தால் மொழிநடை என்பவை எல்லாம் நம் மனதில் பதிவுபெறாது', 'காவியப் பாத்திரங்கள் திட்ட
வட்டமான அடையாளங்களும் குணாதிசயங்களும் உள்ளவை. அவற்றைத் தன் படைப்புக்குப் பயன் படுத்திக் கொள்வது சுரண்டலுக்குச் சமானமானதாகப் படுகிறது. எத்தனை பலவீனமாக இருப்பினும் அசலாக எழுதுவதே மேல்' என்பவை அவரது பேட்டியில் காணப்பட்ட வித்தியாசமான, ரசமான சிந்தனைகள்.

தமிழின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரும் தமிழில் நவீன நாடகத்தை உருவாக்கியவர்களில் முக்கியமான
வருமான இந்திராபார்த்தசாரதி சிறுகதை, நாவல், நாடகம் என்று எல்லா வடிவங்களிலும் எழுதுபவர். படைப்பாக்கத்தில்
எங்ஙனம் வேறுபாடு காண்கிறார் என்பதை தன் பேட்டியில் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் கூறியுள்ளார். 'இருப்பதிலேயே சவாலான விஷயம் ஒரு நல்ல சிறுகதை எழுதுவதுதான்' என்றும், டெல்லியில் பல கலாச்சார அதிர்ச்சிகளைச் சந்திக்க நேர்ந்ததும், தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள பாசாங்குத்தனங்களைக் கண்டதும் தந்த Reflections தான் தனது எழுத்து என்றும் கூறுகிறார். 'தமிழ் நாடகங்கள் பொதுவாக வளரவே இல்லை' என்பதுதான் தன் அபிப்பிராயம் என்றும் சொல்கிறார்.

ஜெயகாந்தனது சந்திப்பில் இசை பற்றியும் அதில் அவரது ஈடுபாட்டையும் சொல்லும்போது 'இசை ஒரு தூய கலை அல்ல.அதில் கணிசமான பங்கு தொழில் நுட்பமே. இசையைக் கற்பிக்கலாம். கற்பித்து பாரம்பரியமாகக்
கைமாற்றலாம். இலக்கியத்தை அப்படிக் கைமாற்றிவிட முடியாது. ரசிப்பதைக்கூடக் கற்பித்துவிட முடியாது. இலக்கியம் எழுதப்படுவதும் சரி படிக்கப்படுவதும் சரி, மிகவும் அந்தரங்கமான ஒரு தளத்தில்தான் நிகழ்கிறது' என்கிறார். மனிதநேயம்,ஆன்மீகமும் முற்போக்கு அம்சமும் முரண்படுதல், காந்திஜியின் இன்றைய முக்கியத்துவம், விவேகானந்தர், பாரதியின்
கவிதைகள், ஆனந்தவிகடனில் எழுத அவர் சமரசம் செய்து கொண்டதான குற்றச்சாட்டு பற்றியெல்லாம் கேட்டதற்கு
அவர் அளித்துள்ள பதில்கள் வழக்கமான ஆவேசமின்றி இதமான இலக்கிய நயத்துடன் உள்ளன.

'தொட்டாற்சிணுங்கி' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நீல.பத்மநாபனுக்கு ஜெயமோகன், மற்றும்
வேதசகாயகுமார் ஆகியோரது கேள்விகள் எதுவுமே இசைவாக இல்லை. மறுத்துக் கொண்டே வருகிறார். அவரது 'தலைமுறைகள்' நாவல் பற்றிய கேள்விகளில் இதைப் பார்க்கலாம். மற்றபடி அவரது இலக்கியக் கோட்பாடுகள், பாத்திரப் படைப்பு, அவரது சொந்த அனுபவப்பதிவுகளால் அவரது படைப்பின் நம்பகத் தன்மை பற்றியெல்லாம் சொல்லியுள்ளவை ஏற்கத் தக்க ஆரோக்கியமான பதில்களாகவே உள்ளன.

சமீபகாலத்தில் நுழைந்து வெகு சீக்கிரம் வாசகரின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களது பேட்டி அவரது எழுத்துபோலவே சுவாரஸ்யமாய் உள்ளது. வட்டாரவழக்கு, மாய யதார்த்தம்,
கதைச் சொல்லிக்கு ஏற்படும் புனைவுச்சிக்கல், அவரது கதைகளில் இயல்பாய்த் தென்படும் அங்கதச்சுவை, கவிதை
பற்றிய அவரது கண்ணோட்டம் பற்றியெல்லாம் சொல்லியுள்ள அவருடைய பதில்கள் ரசமானதும் கனமானதும் ஆகும்.
அவர் கடைசியாகச் சொன்ன 'சாகும் பரியந்தம் எழுத்தாளர்கள் எழுதுவதன் நோக்கம் உன்னதத்தைத் தேடும் முயற்சி
தான்' என்பதே அவரது படைப்புகளை நிர்ணயிக்கும் கூறாக அவர் கருதுவதாகும்.

பாவண்ணனின் பேட்டியில் வறுமையின் கொடுமையை அதிகமும் தன் படைப்புகளில் சித்தரிக்கும் அவர் ஏன் ஒரு
இடதுசாரி எழுத்தாளராக முடியாது போனது என்பதற்கும், எழுத்தின்மூலம் சமூகமாற்றம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லையா என்பதற்கும், கிராம வாழ்வை அதிகம் எழுதியபோதும் கிராமத்து அற/ஒழுக்க மதிப்பீடுக¨ளை அதிகம்
வலியுறுத்துவதில்லையே என்பதற்கும் அவரது பதில்கள் பாசாங்கற்றதாய், நேர்மையைப் பிரதிபலிப்பதாய், நம்பகத் தன்மை உடையனவாய் உள்ளன. 'எனது இறுதி இலக்கு நாவல்கள்தாம். டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும் தொட்டுப் பார்த்த
அந்தச் சிகர நுனியின் ஈரத்தை என் விரலாலும் தீண்டி உணரவேண்டும் என்பது என் உள்ளத்தின் கனவு' என்பது அவரது இப்போதைய லட்சியம்.

இறுதியாக உள்ள, தமிழகத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராய்க் கருதப்படும் எம்.யுவனின் பேட்டி - கவிதை
பற்றியே அதிகமும் பேசுவதாய் உள்ளது. நவீனக் கவிதையின் இலக்கண அமைப்பு, வடிவம், இன்றைய கவிதையின்
சவால், கவிதையில் கறாறான சொல்லாட்சி, கவிதையில் படிமத்துக்கான தேவை, கவிதையில் நாடகத்தன்மை என்று
கவிதை பற்றிய பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதாக அவரது பதில்கள் உள்ளன.

'தகவல் அடிப்படையிலான நேர்காணலை இன்று எந்தவொரு தீவிர வாசகனும் பொருட்படுத்த மாட்டான். படைப்
பியக்கத்தின் பின்னணியிலுள்ள எழுத்தாளனின் ஆளுமையையும், அந்த ஆளுமையைக் கட்டமைத்துள்ள காரணிகளையும்
குறித்த ஒரு விரிவான சித்திரத்தை உருவாக்கித் தருவதே நேர்காணலின் முதல் பணி. இரண்டாவது அந்த எழுத்தாள னுக்கும் வாசகனுக்குமிடையிலான ஒரு விவாதத்தைச் சாத்யப்படுத்த வேண்டும். வெவ்வேறு திசைகளிலிருந்து கிளை
பிரிந்து விரியும் இவ்விவாதமும் அதற்கான எழுத்தாளனின் எதிர்வினைகளுமே நேர்காணலைப் பூர்த்தி செய்கின்றன'
என்கிறார் இத்தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவரான சூத்ரதாரி முன்னுரையில். அது பூரணமாய் இந் நேர்காணல்களில்
நிறைவேறி உள்ளது என்று சொல்லலாம். 0

நூல் : இலக்கிய உரையாடல்கள்.
தொகுப்பாசிரியர்கள் : ஜெயமோகன், சூத்ரதாரி.
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

2 comments:

Sri Srinivasan V said...

Sir,
Namaskaram.
Enjoyed reading & cherishing the reviews.
Your analysis is very nice.
Hope you are keeping fine.
God Bless and Greetings.
Anbudan,
Srinivasan.

Sri Srinivasan V said...

சார்
நமஸ்காரம்.
மிகவும் ரசித்துப் படித்தேன்.
மிகச் சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அந்த முழு புத்தகத்தின் சாரமும் உணர்ந்தது போல இருக்கிறது. படித்தே ஆகவேண்டிய புத்தகங்களிலே இதையும் நான் எனக்குள் ரகசியமாக குறித்து வைத்துள்ளேன்.
அம்மாவுக்கு எண்களின் நமஸ்கரங்களைச் சொல்லவும்.
தங்கள் உடல் நலத்தைக் காத்து வரவும்.
மிகுந்த நன்றி.
வணங்கி மகிழ்கிறேன்.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.