Sunday, October 11, 2009

ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகள் - 'விசும்பு'

தமிழில் அறிவியல் புனைகதைகளை முதலில் தொடங்கி வைத்தவர் திரு.சுஜாதாஅவர்கள். ஆரம்பத்தில் அவர் எழுதியவற்றில் அதிகமும், அறிவியல் கூறுகள் நிறைந்த விண்வெளிப் பயணம், மற்றும் திரில்லர் கதைகள். அதை ஒரு விளையாட்டாகவே செய்திருக்கிறார். ஆனால் பின்னாட்களில் சாதனைக் கதைகளும் படைத்தார். ஆனாலும் நமது அறிவியல் கதைகள் - நம்பவியலாத மேலை நாட்டு அறிவியல் கற்பனைக் கதைகள் போன்று இல்லாமல் - நம் மண்சார்ந்த யதார்த்தக் கற்பனைகளாக இருக்க வேண்டும் என்று எண்ணும் திரு.ஜெயமோகன் தாமே அப்படிப்பட்ட சில அறிவியல் கதைகளை - சமூக விசாரத்தை, தத்துவச் சிந்தனைகளை உள்ளடக்கிய கதைகளை - எழுதினார். இவற்றை எழுதியதின் நோக்கம் வாசிப்பவர்கள் தமிழ்ச்சூழல் சார்ந்து, தமிழ்நாட்டு அறிவியல்மரபு சார்ந்து உணர வேண்டும் என்பதாக ஜெயமொகன் தன் முன்னுரையில் கூறுகிறார். விரிந்த தளத்தில் இலக்கியப் படைப்புகளாக அவற்றை ஆக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்படி எழுதப் பெற்ற கதைகளில் பத்துக் கதைகளைத் தொகுத்து 'எனி இந்தியன் பதிப்பகத்'தார் 'விசும்பு' என்ற தலைப்பில் நூலாக்கி இருக்கிறார்கள்.

முதலில் பராட்ட வேண்டிய விஷயம் - வழக்கமாக அவரது கதைகள் 'சிறு' கதைகளாக இல்லாமல் அவசரயுகத்தின் வாசிப்பில் அயர்வை ஏற்படுத்தும் நெடும் கதைகளாக இருக்கிற அவரது மரபுக்கு மாறாக -இத்தொகுப்பில் உள்ள கதைகள் வாசிப்பை விரும்பி ஏற்கிற சிறுகதைகளாகவே இருப்பதாகும். எல்லாக் கதைகளுமே நமக்குப் பரிச்சயமான, நம் மண்சார்ந்ததாக, நமக்கு அன்னியமாக இல்லாத நெருக்கத்தைக்
கொண்டதாக இருப்பது சிறப்பம்சம் எனலாம்.

இதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில், வித்தியாசமான விஷயங்கள் பற்றி, நாம் முன்பே செவிவழியாகவோ, படித்தோ அறிந்த - பறவைகள் வலசை போதல், ரசவாதம், சித்த மருத்துவம், தியான மரபுகள், இரட்டை மனநிலை மாந்தர்கள் போன்றவற்றை மையக்கருத்துகளாய்க் கொண்டவை. 'முற்றிலும் இந்திய - தமிழ்ச்சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளன'.

'ஐந்தாவது மருந்து என்கிற முதல் கதை 'எயிட்ஸ்' நோய்க்கு. மூதாதையரின் ஓலைச் சுவடிகளிலிருந்து சித்த வைத்தியத்தை ஒட்டி ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்கிற நண்பனைக் சந்திக்கச் செல்லும் ஒரு டாக்டரின் கூற்றாகச் சொல்லப்படுவது. சித்த வைத்தியச் சுவடிகளில் எயிட்ஸ் மாதிரி ஒரு நோயின் இலக்கணம் இருப்பதாகவும், ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பாண்டிய ராஜகுடும்பத்தை இந்நோய் தாக்கியதாகவும், அப்போது இருந்த ஒரு போகர் ஒரு மருந்தை - கருங்குரங்கின் ரத்தம், சிறுநீர் இரண்டையும் கலந்து செய்து நோயை விரட்டியதாகவும் நண்பன் சொல்கிறான். இப்போதுள்ள மூன்று வகை மருந்துகளான - பென்சிலின் மாதிரியான தாவர மருந்துகளான அஜீவம், வாக்சின்கள் போன்ற ஜீவம், மற்றவையான ரசாயனங்கள் ஆகிய மூன்றுமே எயிட்ஸைக் குணப்படுத்தாது என்பதால், நான்காவதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறான். அது கதிர்வீச்சு சம்பந்தமானது. ஏற்கனவே சித்த வைத்தியத்தில் கதிரியக்கம் பற்றி இருப்பதாகவும், அதில் உள்ள ரசக்கட்டு என்கிற உக்தியைப் பயன்படுத்தி, பழைய அஜீவ, ஜீவ, ரசாயன மருந்துகளில் கதிர்வீச்சை செலுத்திபுதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும் சொல்கிறான். அதன் மூலம் தான் குணப்படுத்திய இருவரைக் காட்டுகிறான். அதைப் பார்த்த மருத்துவரான நண்பர் அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டுகிறார். ஆனால் அவன் அடுத்து சொல்வது அவரை அச்சப் படுத்துகிறது.

அவன் கண்டுபிடித்துள்ள இந்த நாலாவது மருந்துக்கு மறு பக்கம உள்ளது. "இந்த வைரஸ் முதலில் தாக்கிய பிறகு, பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துகளோட கட்டுக்குள் இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டு பிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடியும் தாக்கி இருக்கு. உலோகரசாயன மருந்துகளை ஐந்நூறு வருஷங்களிலே தாண்டி வந்திருக்கு. அதாவது அதன் பரிணாம வேகம் அதிகமாகிக் கிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துகளை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திகிட்டே இருக்காங்க.அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைஞ்சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறு வருஷத்துக்குள் இருக்கலாம். அப்ப கதிரியக்க மருந்தையும் இந்த வைரஸ் தாண்டிடும். அஞ்சாவது மருந்தைமனிதன் கண்டுபிடிப்பான்னு என்ன உத்திரவாதம் இருக்கு? இந்த வைரஸ் அப்ப இந்த உலகத்தையே அழிச்சுடும்" என்று பயமுறுத்துகிறான். நண்பர் அதிர்ந்து போகிறார். அந்த மருந்தை வெளியிடச் சொன்ன நண்பரிடம், "இல்லை. நான் நூறு வருஷம் கழிச்சு மனுஷகுலமே அழியக் காரணமா இருக்க விரும்பலை. இந்த விஷயத்துக்கு ஒரு தெளிவான விடை கிடைக்காமல் நான் இந்த மருந்தை வெளியிட மாட்டேன்" என்று நாலாவது மருந்தைக் கண்டு பிடித்தவன் சொல்வதோடு கதை முடிகிறது.

அடுத்த கதையான 'இங்கே, இங்கேயே....', வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் பறக்கும் தட்டுகள் போன்ற கதைகளை நம்பாத ஒரு பகுத்தறிவுவாதியான விண்வெளி ஆய்வாளருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியது. விண்வெளி ஆய்வில் 40 ஆண்டு அனுபவம் உள்ள டாக்டர் பத்மநாபன் என்பவர் மலையடிவாரத்தில் உள்ள தன் நண்பரின் பங்களாவுக்கு ஓய்வெடுக்க வருகிறார். நண்பர் மலையுச்சியில் விண்வெளி ஊர்தி வந்திறங்கிய சக்கரத் தடங்கள் உள்ளதாகவும் அதை அவர் பார்த்தால் வேற்றுக் கிரக ஊர்திகள் பூமிக்கு வருவது பற்றிய அவரது அவநம்பிக்கை மாறும் என்று அதைப் பார்க்க அழைக்கிறார். டாக்டர் விருப்பமில்லாமலே மலையுச்சிக்கு அவருடன் செல்கிறார். நண்பர் காட்டிய சக்கரத் தடங்கள், சீராக வெட்டிய எட்டடி அகலம் மூன்றடி ஆழம் உள்ள ஒரு ஒடை போன்று தெரிகிறது. டாக்டர் அது இயற்கையாய் ஏற்பட்டதாக இருக்கலாம் என்றும், பாறையில் மூன்றடி ஆழத்துக்குத் தடம் பதிக்க வேண்டுமானால் அந்த ஊர்தி மிகமிக எடை கொண்டதாக கனமாக இருக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட கனமான ஊர்திக்கான தனிமம் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மறுக்கிறார். 'மக்களுக்குப் பூமி மீது நம்பிக்கை போய்விட்டது. வானத்திலிருந்து யாரோ வர வேண்டியிருக்கிறது. கடவுளை விஞ்ஞானிகள் ஒழித்துக் கட்டி விட்டார்கள். ஆகவே விஞ்ஞானிகளை வைத்தே புது மூட நம்பிக்கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். ஆகவே புதிய தேவதைகள், புதிய சைத்தான்கள்....."
என்கிறார்.

தலைப்புக் கதையான 'விசும்பு' பறவைகள் வலசை போகும் ரகஸ்யம் பற்றியது. நஞ்சுண்டராவ் என்னும் பறவையியல் ஆய்வாளர் பறவைகள் வலசை போகும் ரகஸ்யம் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்திருக்கிறார். பறவைகளை நாம் விரும்பியபடி கட்டுப்படுத்தலாம், விரும்பிய இடத்துக்கு அனுப்பலாம் என்பது அவரது கண்டு பிடிப்பு. அவருடைய அப்பாவுக்கு பறவைகள் வழிபடும் தெய்வங்கள் மட்டுமே. 'பறவைகள் வலசை போவதை மனிதன் அறிந்துகொள்வது சாத்யமில்லை. வானம் என்பது விசும்பு. புவனங்களை எல்லாம் ஆள்வது பறவை. அது விசும்பின் துளி. அதைக்கட்டுப் படுத்த முடியாது' என்கிறார். புற ஊதாக் கதிர்களை, காதுக்குப் பின் உள்ள மூளைப் பகுதியால் வாங்கும் சக்தியுள்ள வலசைப் பறவைகளை நாம் விரும்பிய இடத்துக்கு அனுப்ப முடியும் என்றுசோதனை செய்து அப்பாவைச் சீண்டுகிறார். அப்பாவுக்கும் மகனுக்குமான இந்தக் கருத்து மோதலின் முடிவில் மகனின் முற்சி தோல்வியில் முடிகிறது.

'பூர்ணம்' என்கிற கதை அவசரநிலைப் பிரகடனக்காலப் பதிவு. பத்திரிகைக் கட்டுப்பாடு காரணமாய் பத்திரிககைகள் ஆன்மீகத்துக்குத் திரும்பிய வேளை. ஒரு பத்திரிகை நிருபர் ஒரு மடத்தின் மௌனசாமியைப் பேட்டி காணக் காத்திருக்கிறார். அவரது எதிர் அறையில் தங்கியுள்ள நரம்பியல் பேராசிரியர் ஒருவரும் சுவாமியைப் பார்க்க விரும்புகிறார். அவர் 30 ஆண்டுகளாய் மூளையின் திறனை அதிகரிக்கும் மருந்துகள் பற்றி ஆய்வு செய்பவர். அவர் கண்டு பிடித்த மருந்தை தன் வீட்டுக் காவலாளிக்குக் கொடுத்துச் சோதிக்கிறார். ஒரு
காட்டில் அவனை வைத்திருக்க அவன் தப்பி விடுகிறான். அவன்தான் இந்த மௌனச்சாமி என்று அவருக்குச் சந்தேகம். மறுநாள் இருவரும் அனுமதி கிடைத்து சாமியைச் சந்திக்கப் போகிறார்கள். ஒரு பெரிய தோட்டத்தில் ஒரு பாறை மீது ரமண மகரிஷியைப் போல ஒரு கோவணம் மட்டும் அணிந்து, மூளை மந்தித்தவர் போல மூளை இயங்காதவராய்க் காட்சியளிக்கிறார் சாமியார். பேராசிரியரின் சோதனையின் காரணமாகவும் அப்படி ஆகி இருக்கலாம். நிருபர் அவரைப் பார்த்ததும் நெகிழ்ச்சியுற்றவராய் கண்ணீர் பெருக அவரிடம் எதுவும் கேட்கத் தோன்றாமல் வெளியே வந்துவிடுகிறார். பேராசிரியர் அது பூரணம் என்று உணர்ந்து தன் பிரச்சினைக்கு விடை கிடைத்து விட்டது என்கிறார். அவரது முதல் சோதனைக்கு ஆளான காவலாளி தப்பிய பின் அவரது தம்பியையும் பரிசோதனைக்கு ஆளாக்கி இருக்கிறார். ஆனால் அவனுக்கு மூளையின் மையத்தை மட்டும் - அதாவது மூளையின் முகப்பு தொகுத்துக் கொள்ளும் பகுதி - அதாவது அதிகாரம், தன் முனைப்பு, அதன் காரணமாய் குரூரம் -
உக்கிரப் படுத்தியுள்ளார்.

ரசவாதம் பற்றிய கதை 'பித்தம்'. செம்பைத் தங்கமாக்கும் ஆசையில் நல்ல குத்தாலலிங்கம் பிள்ளை இருபது வருஷமாய் அந்த முயற்சியில் ஈடுபட்ட கோயில் பண்டாரத்துக்கு பண உதவி செய்து ஏமாந்து போகிறார். கடைசி முயற்சி என்று சொல்லி மீண்டும் பண உதவி செய்ய பண்டாரம் கேட்க, தர மறுக்கிறார். பகுத்தறிவுவாதியான பிள்ளையின் மகன் கோலப்பன் ரசவாத பித்தம் கொண்ட தன் அப்பாவையும் பண்டாரத்தையும், ரசவாதம் பற்றிய சித்தர் பாடலுக்கு வித்தியாசமான விளக்கம் தந்து நக்கல் செய்கிறான். கடைசியில் பிள்ளை பண்டாரத் துக்கு பணம் கொடுக்கிறார். மறுநாள் காலைவரை பொறுத்திருந்து பார்க்கச் சொல்லி விட்டுப் போய், பண்டாரம் ரசவாத முயற்சியில் தீவிரமாக முனைகிறான். ஆனால் மறுநாள் காலை கோயிலருகில் ஒரு மரத்தில் அவன் தூக்கில் தொங்குவதைப் பார்க்கிறார்கள். அங்கெ போகிற கோலப்பன், பண்டாரத்தின் காலடியில் உடைந்து கிடக்கும் சட்டியில் காய்ந்து போன ரசாயனக் கலவையில் பட்டுக் கிடக்கிற பண்டாரத்தின் ஒரு செருப்பின் ஆணியின் தலை மட்டும் தங்கமாய் மின்னுவதைக் காண்கிறான் என்று முடிகிறது கதை.

இரட்டை மன நிலை மனிதர்கள் பற்றிய கதை 'உற்று நோக்கும் பறவை'. ஸ்டீவென்சனின் Dr.Jekiland Mr.Hide' என்னும் சிலிர்ப்பூட்டும் -ஒரே மனிதனுக்குள்ளிருக் கும் 'சாந்தமும் குரூரமும் கொண்ட இரட்டை மனநிலை போன்ற - கதை. பழைய திருவிதாங்கூர் பிரிட்டிஷ் ஆவணங்களில் மட்டுமே உள்ள 'துவாத்மர்கள்' - மனப்பிளவை திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளும் இரட்டை மனநிலை கொண்ட மனப்பிளவு சமூகம் பற்றி -
திகிலூட்டும் தகவல்கள் கொண்டசுவாரஸ்யமான கதை.

அடுத்த கதையான 'நம்பிக்கையாளன்' உலகில் அணு ஆயுதம் பெருகினால் ஏற்படும் பயங்கரம் பற்றி எச்சரிக்கும் கதை.அணு ஆயுதம் பல்கிப் பெருகி, இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் போர் நடக்கிறது. இறைமறுப்பாளர்கள் யாருமே மிஞ்சவில்லை. இறைநம்பிக்கையாளர்களும் கதிரியக்கம் பற்றிய ரேடியோ எச்சரித்தும் மறைந்திருந்த பாதாள அறையை விட்டு வெளியே வந்து கதிரியக்கத்தை உண்டு
மடிகிறார்கள். கதிரியக்கத்தின் பின் விளைவுகளால் உலகம் அழிவது பற்றிய பீதியை ஊட்டும் கற்பனை.

1220-1203ல் நைல் நதி வறண்டு போய் ஏற்பட்ட கொடுமையான பஞ்சம் பற்றிய கதை 'நாக்கு'. கடும் பஞ்சத்தால் மக்கள் கண்ணில் பட்ட பச்சைகள் எல்லாம் தின்றார்கள். கொலையும் கொள்ளையும் செய்தார்கள். நாய், நரிகளை எல்லாம் பிடித்துத் தின்றார்கள். புழுப்பூச்சிகளைத் தின்றார்கள். பிறகு எதுவுமே எஞ்சாமலாயிற்று. எல்லோரும் பட்டினியானார்கள். அப்போதுதான் நரமாமிசம் தின்னும் பழக்கம் உண்டாயிற்று. முதலில், செத்த மனிதர்களைச் சுட்டு உண்டார்கள். அடுத்த நிலையாக மனித வேட்டையாடினார்கள். பின்புகுழந்தைகள், முதியவர்களைத் தின்பதில் ருசி கண்டதும் விதம் விதமாய்ச் சமைத்து உண்ண ஆரம்பித்தார்கள். தங்கள் தேவைக்கு மிஞ்சியதை விற்றார்கள். அது ஒரு வணிகமாயிற்று. கடைகளில் வேக வைத்த மாமிசம் விற்கப் பட்டது. பிறகு வேறு ஊர்களிலிருந்து உணவு வந்ததும் பஞ்சம் அடங்க ஆரம்பித்தது. ஆனால் ஏராளமான மக்கள் இதில் ருசியும் தொழிலில் சுகமும் கண்டு கொண்டார்கள். அவர்களை, வேட்டையாடுவதிலிருந்து தடுக்க முடியவில்லை. எகிப்திய அரசாங்கம் கடையில் அவர்களை ஒடுக்கியதும் மெல்ல அப்பழக்கம் அழிந்தது என்று கதை போகிறது.

கடைசி இரண்டு கதைகளும் எதிர்கால இலக்கிய உலகின் போக்குகள் பற்றிய அங்கத பாணியில் அமைந்த நகைச்சுவையான கற்பனைகள். 'தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஒரு ஆய்வு' - ஜெயமோகனின் இயல்பிலான நீண்ட கதை. கருத்தரங்கு ஒன்றில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டுளது. இதில் ஜெயமோகன், இலக்கிய வடிவங்களின் காலமாற்றத்திற்கேற்ப மாற்றங்களையும், மற்றும் கதைப் பாடல்களின் பரிணாம வளர்ச்சி, நாவல்களின் மின் நவீனத்துவ வளர்ச்சி, மின்கதைகளின் காரணிகள், நுண்கதை பற்றியெல்லாம் எதிர்காலக் கண்ணோட்டத்தில் பாதி யதார்த்தமாகவும் பாதி கேலியாகவும் சித்தரித்திருக்கிறார். கி.பி.2800 வரை கற்பனை நீள்கிறது. அக்கால கட்டத்தில் இலக்கிய வடிவங்களும், படைப்பாளிகளும், வாசகர்களும் மீண்டெழுந்து உருவாகும் நிலை பற்றிக் கற்பனை செய்யப் பட்டுள்ளது.

'குரல்' என்ற கடைசிக் கதை ஆய்வாளர்கள் மத்தியில் வாசிக்கப்பட்ட 'சமூக மானுடவியல் கூறுகள் அரசியலில் ஆற்றும் பங்கு' என்னும் தலைப்பிலான ஒரு ஆய்வேட்டின் சுருக்கமாக உள்ளது. அதனை ஒரு கதை போலச் சொல்லி இருக்கிறார்.

அறிவியல் கதைகள் என்றாலும் ஜெயமோகனின் நடையும், கதை சொல்லலும் - சுஜாதாவின் மென்னகை பூக்க வைக்கும் சாயலோடு அலுப்பில்லாத வாசிப்புக்கு ஆர்வமூட்டு வனவாய் அமைந்துள்ளன. 'பித்தம்' என்கிற கதை, அசல் புதுமைப்பித்தனின் கதை போன்ற தெற்கத்தி யதார்த்த வட்டார வழக்குப் பாணியில் வெகு ரசமாக, அறிவியல்கதை என்ற பிரக்ஞையே எழாமல் சொல்லப்பட்டுள்ள சிறப்பான கதை. 'ஜெயமோகனின் பிற கதைகள் போலவே இக்கதைகளும் வாழ்க்கையின் அடிப்படைகளைத் தத்துவ நோக்குடன் விசாரனை செய்பவையும் கூட' என்று நூலின் பின் அட்டையில் கூறப்பட்டிருப்பது கொள்ளத் தக்கது. 0


நூலின் பெயர் : விசும்பு.

ஆசிரியர் : ஜெயமோகன்.

வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

No comments: