Monday, February 28, 2011

இவர்களது எழுத்துமுறை - 28.வாசந்தி

1. Writing is the process of learning. எழுத எழுத மனித மனங்களைத்
துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எழுத எழுத இன்னும்
பக்குவம் அடைந்த மனிதனாக ஒரு படைப்பாளி மாறுகிறான் என்பதே
என் எண்ணம்.

2. டெல்லி, கல்கத்தா, மிசோரம், அருணாசலப்பிரதேஷ், மேகாலயா,
நேபாள் இங்கெல்லாம் இருந்தபோது பல விதமான அனுபவங்கள் எனக்கு
ஏற்பட்டன. பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்தேன். அப்போதுதான்
பெண்கள் பிரச்சினைகள் பற்றி ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கே
போனாலும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்று
நான் உணர்ந்தேன். நகரமாகட்டும், கிராமமாகட்டும், ஏழையாகட்டும்,
பணக்காரனாகட்டும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
குடும்பச்சூழ்நிலையில் இதை நான் உணர்ந்துகொண்டபோதுதான் இதற்கான
காரணங்களை ஆராய முற்பட்டேன். மற்றப் பெண்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று என் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். எல்லா
மானிலங்களிலும் எந்தக் கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், பெண்கள்
நிலைமையில் மாற்றமில்லை என்பதை உணர்ந்தேன். அடிப்படையில் நம்
தேசம் நிலமான்ய சமுதாய (fudel) அமைப்பின் மிச்சமாகவும், தந்தை வழி
சமூகமாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்.
அப்போது கிடைத்த நேரங்களில் பெருவாரியாக இந்தப் பிரச்சினைகள்
பற்றியும் இலக்கியங்களையும் நிறையப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
மீண்டும் தீவிரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

3. ஜெயகாந்தன் கதைகளை விரும்பிப் படிப்பேன். ஜானகிராமன் கதை
களையும் படிப்பேன்.ஆனால் அவர்களைப்போல் எழுத வேண்டும்,
இவர்களைப்போல் எழுதவேண்டும் என்றெல்லாம் நினைத்து இல்லை.

4. நான் மத்தியதர வர்க்கத்துப் பெண்களை மட்டும் எழுதவில்லை.
பலதரப்பட்ட பெண்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அடிமட்டத்தில்
இருக்கும் கல்வியறிவு அற்ற பெண்களை - அவர்களது பிரச்சினைகளை
ஆராயும்போது பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இந்த
அனுபவங்களையொட்டி சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள பெண்களைப்
பற்றியும் என் கதைகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.

5. எளிமையாகப் படிக்கும்படியாக இருப்பதே என் நடை என்று
நினைக்கிறேன். It is quite easy to be too difficult. புரியாமல் எழுதுவது
ரொம்ப சுலபம். புரியும்படியாக எளிமையாக எழுதுவதுதான் ரொம்ப
கஷ்டம். தமிழ் இன்னும் இயல்பாக இருக்க வேண்டும் என்று
முயற்சிக்கிறேன். தமிழ்நாட்டுச் செய்திகளுக்கு இன்னும் அதிக
முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்கிறேன்.

6. நான் ஒன்றை எழுதிவிட்டு அதை உடனே பத்திகைக்கு அனுப்பும்
வழக்கமே கிடையாது. அதைத் திரும்பத் திரும்பப் படித்து எவ்வளவு
சொற்சிக்கனம் இருக்கணுமோ அதைக் கடைப்பிடித்து மீண்டும்
எழுதுகிறேன். சொல்லுகிற விஷயத்தை 'எப்படிச்சொல்கிறோம்' என்பது
தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதனால் நடைக்கு ஒரு
முக்கியத்துவம் கொடுத்து கலைநயத்துடன்தான் எழுதுகிறேன். முதலில்
எழுதிக் கொண்டிருக்கிறபோது இருந்தைவிட நாமும் நமது பார்வைகளை
யும், அணுகுமுறைகளையும் காலம் வளர வளர மாற்றிக் கொண்டு
வருகிறோம். அந்தப் பக்குவம் எழுத்தில் இருக்கத்தானே வேண்டும்?
ஐந்தாறு வருடமாக நான் வடிவம், கலைநயம் இவற்றிற்கு முக்கியத்துவம்
கொடுத்துத்தான் எழுதுகிறேன். 0

No comments: