Thursday, June 23, 2011

எனது இலக்கிய அனுவங்கள் - 3. ஆசிரியர் உரிமை (2)

எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனது
ரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்கு
ஏற்ப மாற்றுவது ஆசிரியரின் இன்னொரு உரிமையாகும். சில சமயம் மாற்றப்படும்
தலைப்பு எழுத்தாளருக்கு உவப்பானதாகவும் அமைந்து விடுவதுண்டு. அநேகமாக
எழுத்தாளர் முகம் சுளிப்பதாகவே மாற்றம் அமைவதுதான் யதார்த்தம். அதே
சமயம் வாசகருக்கும் உவந்ததாகவும் அமைந்து விடலாம். ஆனால் படைப்பாளி
முகம் சுளிப்பதில் பயனில்லை. அடுத்து அவருக்கு வாய்ப்பு இல்லமால் போகக்
கூடும். எல்லா பத்திரிகைக்கும் இது பொதுவானதுதான் என்றாலும் 'குமுதம்'
பத்திரிகைக்கு தலைப்பை மாற்றுவது என்பது அத்தியாவசியமான செயல்
போலிருக்கிறது. மாற்றினால்தான் அது சரியான 'எடிட்டிங்'!

என் கதை ஒன்றிற்கு 'குமுதத்தி'ல் இப்படி நேர்ந்திருக்கிறது. நான் 'அண்ணா
மலைப் பல்கலை'யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு படிக்கும் போதுதான் 1956ல்
ஆனந்தவிகடனில் முதல் 'மாணவர் திட்டம்', வாசன் அவர்களால் தொடங்கப்
பட்டது. வாரம் தோறும் மாணவர் ஒருவரது படைப்பு தேர்வாகி பிரசுரமாகி வந்தது.
'குழந்தைத்தெய்வம்' என்கிற என்னுடைய கதையும் அப்போது 1957ல் வெளியானது.
அதற்குப் பிறகு சில கதைகள் விகடனில் வெனியான நிலையில் 'குமுதத்'தில் கதை
வெளியானால் தான் ஜென்மம் சாபல்யமாகும் என்ற அற்ப ஆசையால் அதற்கும்
முயன்றேன். 1963ல் அந்த ஆசை 'கொஞ்சம் குறைகிறது' என்ற கதை மூலம்
நிறைவேறியது. 'குமுதத்'தில் கதை வெளியான பூரிப்பை முழுமையாக அனுபவிக்க
முடியாதபடி கதையின் தலைப்பு உறுத்தியது. நான் கொடுத்திருந்த தலைப்பு
'மனிதனுக்கு மனிதன்' என்பதுதான் பொருத்தமானது என்ற என் கருத்துக்கு மாறாக
சம்பந்தமில்லாமல் 'கொஞ்சம் குறைகிறது' என்று மாற்றிவிட்டார்களே என்ற
ஆதங்கத்தை அவர்களுக்கு எழுத முடியுமா? கதை வெளியானதே பெரிய
விஷயம்! அதோடு சன்மானமும் அந்தக் காலகட்டத்திற்கு கணிசமானதாக
ரூ.60 வேறு கிடைத்திருந்தது. எனவே எதிர்காலப் பிரசுரம் கருதி கசப்பை
விழுங்கிக் கொண்டேன்.

கதையைக் கோடிகாட்டினால் தான் என் ஆதங்கம் புரியும்.

ஒரு முன்னிரவு நேரத்தில் ஒரு தொழிலாளி, மனைவியுடன் பேருந்தில் பயணம்
செய்கையில் பயணச்சீட்டுக்கு காசு கொஞ்சம் குறைகிறது. முன் இருக்கையில்
இருக்கிற தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்
தரவில்லை. நடத்துநர் தாட்சண்யம் காட்டாது அவர்களை பேருந்திலிருந்து இறக்க
முயல்கையில் முதலாளிக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சாமியார் இரக்கப்பட்டு,
குறைகிற காசைக் கொடுத்து அவர்கள் தொடர்ந்த பயணிக்கு உதவுகிறார். முதலாளி
'அவன் வேஷம் போடுகிறான் அவனுக்கெல்லாம் உதவ வேண்டியதில்லை' என்கிறார்
சாமியாரிடம். அவர் 'இருக்கட்டும், ஏதோ மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டியதுதான்!'
என்கிறார். உடனேயே முதலாளி பயணச் சீட்டுக்குப் பணம் தர வேண்டிய போது அவரது
பணப்பை காணாமால் போயிருப்பது தெரிகிறது. 'ஊர் போய்ச் சேர்ந்ததும் தருவதாக
முதலாளி சொல்ல, நடத்துனர் மறுத்து 'பணம் இல்லாவிடில் இறங்கி விடுங்கள்'
என்கிறார். முதலாளி, சாமியரிடமே உதவி கேட்கிறார். அவர் தன்னிடம் இனி பணம்
இல்லை என்று சொல்ல, 'மனிதனுக்கு மனிதன் இது கூடச் செய்யக் கூடாதா?' என்று
அவரிடமே அவரது பாடத்தைப் படிக்கிறார். 'அது சரிதான்! மனிதனுக்கு,
முன்பே நான்செய்து விட்டேன்' என்கிறார்சாமியார். நடத்துனர் தாட்சண்யம் காட்டாது
கும்மிருட்டில் முதலாளியை இறக்கி விட்டுவிட, பேருந்து நகர்கிறது.

அடுத்த வார 'குமுதத்தி'ல் என் கதைக்குப் பாராட்டும் கண்டனமும் வந்திருந்தன.
நான் ஆதங்கப்பட்ட தலைப்பு மாற்றத்தைப் பாராட்டி இரண்டு பேர் எழுதி
இருந்தார்கள். 'சில்லரை கொஞ்சும் குறைகிறது என்பதைத் தலைப்பு சுட்டுவது
பொருத்தமாக உள்ளது' என்று ஒருவரும், 'பண்பாடு கொஞ்சம் குறைகிறது என்பதை
கதை நாசூக்காய்சுட்டுகிறது' என்று மற்றொருவரும் பாராட்டி இருந்தார்கள். கண்டனம்
தெரிவித்தவர் 'கதை யதர்த்தமாக இல்லை. முக்கியஸ்தராக அப்பகுதியில் இருக்கிற
முதலாளி ஒருவரை இப்படி எல்லாம் எந்த நடத்துனரும் இறக்கி விட்டுவிட மாட்டார்'
என்று எழுதி இருந்தார். இதற்குப் பதிலாக, அடுத்த வாரம் ஒருவர், 'இப்படி இறக்கி
விட்டு விடுவாரா என்பதல்ல கதை; இப்படிப் பட்டவர்களை இரக்கமின்றி இறக்கி விட
வேண்டும் என்பதுதான் கதை!' என்று எனக்காகப் பரிந்து எழுதினார். வாசகர் பல விதம்!
அதுதான் பத்திரிகை ஆசிரியரின் பலம். ஆனால் ஒரு திருப்தி! என் கதை ஒரு
வார்த்தை கூட வெட்டுப் பெறாமல் நான் அனுப்பியபடியே முழுமையாக வெளியாகி
இருந்தது!

பிறகு வந்த என் கதைத் தொகுப்பில் நான் வைத்த தலைப்பிலேயை கதை
வெளியானது. 0

No comments: