Sunday, November 23, 2003

நினைவுத் தடங்கள் - 1

ரசனை என்பது ஒரு வரம்; ஒரு கொடை. எல்லோருக்கும் அது பிறவியிலயேயே வாய்த்துவிடுவதில்லை. பயிற்சியால் பலர் அதை அடையலாம். பாரம்பரியமாகக் கூட அனேகருக்கு அது சித்திப்பதுண்டு. பிறவியிலேயே ரசனை வாய்க்கப் பெற்றவர்கள் பாக்யசாலிகள். தி.ஜானகிராமன் ரசனை பற்றி எழுதும்போது, `மதுரைமணி ஒரு அற்புதம் என்றால் மதுரைமணியின் பாட்டைக் கேட்டு ஓடுகிறானே அவனும் கூட ஒரு அற்புதந்தான்` என்பார். எப்படி ஓட முடிகிறது என்பது அவருக்கு வியப்பு.மனிதர்கள் அனைவருக்கும் அது இயல்பாகவே இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். `பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்பார்கள்` என்பார் பாரதி. மாணிக்க
வாசகரது பாடல்களை வியக்கின்ற வள்ளலார்,

`வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில் அங்கு நானடைதல் வியப்பன்றே`

- என்று ஆறறிவில்லாத ஜீவராசிகளுக்கும் ரசனை இருப்பதைச் சொல்லுகிறார்.


ரசனை இசைக்கு மட்டுமல்ல-பிற எல்லா கலைகளுக்குமே வேண்டும்தான். அதற்கு ஒரு மனலயம் வேண்டும். தொட்டதில் எல்லாம் தோய்கிற ஒரு மனம் வேண்டும். பார்ப்பதில் எல்லாம் பரவசம் கொள்ளுகிற ஒரு பக்குவம் வேண்டும். பாரதிக்கு அந்த மனலயம் இருந்தது.
அதனால்தான் பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்ணனின் பச்சைநிறம் நிறம் அவருக்குத் தென்பட்டது; கேட்கும் ஒலியிலெல்லாம் கண்ணனின் கீதம் இசைப்பதைக் கேட்க முடிந்தது; தீக்குள் விரலை வைத்தால் கண்ணனைத் தீண்டும் இன்பம் கிட்டியது. அந்த மனலயம்
கிட்டியதால்தான் கவிமணிக்கு

`வண்டியும் அற்புதப் பொருளாம்,
வண்டி மாடும் அற்புதப் பொருளாம்
மாடு பூட்டும் கயிறும்
மனதிற் கற்புதப் பொருளாம்`
என்று பாட முடிந்தது.


பாரதிதாசனுக்கு அந்த மனலயம் இருந்ததால்தான்
`ஆலம் சாலையிலே கிளைதோறும் கிளிகள்
கூட்டம்தனில் அழகென்பாள் கவிதை தந்தாள்`.


உங்களுக்கு அழகு உபாசனை வாய்க்குமானால் எங்கும் எதிலும் அழகு தென்படும். எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஒரு தடவை ஏற்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் திருமணம் நடந்த புதிதில் கும்பகோணத்தில் என் மாமனாரின் நண்பரின் மகன் திருமணத்துக்கு
அழைப்பு வந்து கலந்து கொண்டேன். பெரிய தனவந்தர் வீட்டுத் திருமணம் அது. அப்போதைய நடைமுறைப்படி திருமணம் முடிந்ததும் இசைக்கச்சேரி நடந்த்தது. மதுரை சோமசுந்தரம் பாட்டு- கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின். கச்சேரி தொடங்கு முன், பக்கத்தில் பார்த்தேன். இரண்டு இடம் தள்ளி நாகப்பழம் போன்ற கருப்பில் பட்டுப்புடவையும் நகைகளுமாய் ஒரு பெண் வீற்றிருந்தாள். சொள்ளை நாகப்பழம் போல அவளது முகமெங்கும் அம்மை பொளித்து, பார்க்க விகாரமாய் இருந்தாள். மறுமுறை பார்க்கத் தோன்றவில்லை. மதுரை சோமசுந்தரத்தின் பாட்டு என்னைப் பரவசப் படுத்தியது. அற்புதகானம் என்னைச் சிலிர்ப்பூட்டியது. மனதில்
ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. எங்கும் எதிலும் அழகே தென்பட்டது. இப்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அடடா! எத்துணை அழகு அவள்! அவளது கருப்பும் அம்மைத் தழும்புகளும் உதிர்ந்து போயிருந்தன. மகா அழகியாய் அவள் அப்போது எனக்குத் தென்பட்டாள்.



அட! இசைக்கு அந்த அற்புத சக்தி உண்டா? ரசனை வரம் கிட்டியவர்களுக்கு அது கிட்டும் என்றே தோன்றியது. எனக்கு அந்த வரம் எப்போது கிட்டியது? நினைவுத் தடத்தில் பின்னோக்கி நடக்கிறேன். அறுபது ஆண்டுகளுக்கு முன் என் ஏழு அல்லது எட்டு வயதில்
ஏற்பட்ட ரசனை நினைவில் புரளுகிறது.

- தொடர்வேன். ---வே.சபாநாயகம்.



No comments: