Monday, June 13, 2005

களஞ்சியம் - 19

எனது களஞ்சியத்திலிருந்து - 19

விவேகசிந்தாமணி விருந்து - 8

மயக்க அணி:

ஒரு பொருளை மற்றொரு பொருளாக எண்ணி மயங்கிச் செயலாற்றுவதை புனைந்து கூறுவது மயக்க அணியாகும். விவேகசிந்தாமணியில் மகிழ்ச்சியூட்டும் மயக்க அணியை உடைய பாடல்கள் சில உள்ளன.

ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் 'கெண்டைமீன்,கெண்டைமீன்' என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.

தண்டுலாவிய
.....தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை
.....முகத்தருகு ஏந்தினாள்;
'கெண்டை' 'கெண்டை'
.....எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள்
.....நின்று தயங்கினாள்.

மயக்க அணியை அற்புதமான பாடலால் புனைந்துரைக்கிறார் கவிஞர்.

இன்னொரு பாடலில் கற்பனை செய்யத் தெரியாத ஆறறிவில்லாத ஜீவன் ஒன்றின் மயக்கத்தை பார்க்கிறோம்.

ஒரு பெண் நாவல் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தாள். மலர்களிலுள்ள தேனையுண்ட கரிய வண்டுகள் மயங்கி வழியில் கிடந்தன. அவற்றைக் கண்ட மங்கை அவற்றை நாவற் பழங்கள் என்று நினைத்து ஒன்றைத் தன் பெரிய கையில் எடுத்துக் குனிந்து பார்த்தாள். அப்போது அந்த வண்டு அவளது அழகிய முகத்தை வானத்துச் சந்த்¢ரன் அருகில் வந்து விட்டது என்று எண்ணி விட்டது. தான் கிடந்த அவளது சிவந்த கையைத் தாமரைமலர் என்று மயங்கி, சந்திரன் வந்தால் தாமரை மலர் குவிந்து விடுமே எனப் பயந்து 'குப்'பென எழும்பிப் பறந்து விட்டது. அதைக் கண்ட மங்கை 'பறந்தது வண்டோ, பழமோ? என்ன இது இது புதுமையாய் இருக்கிறது!' என்று மயங்கினாளாம்.

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
.....தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
.....தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்
வான் உறு மதியம் வந்ததென்று எண்ணி
.....மலர்க் கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
.....புதுமையோ இதுவெனப் புகன்றாள்.

இன்னொருவித மயக்கத்தை வேறொரு பாடலில் காணலாம். தலைவன் ஒருவனின் கூற்றாக இப் பாடல் உள்ளது.

'வானத்தை முட்டும் உயரமான மேடை ஒன்றின்மீது என் தலைவி நின்று உலாவினாள்.அப்போது அவளது முகத்தை முழுமதி என்று நினைத்து நவக்கிரகங்களுள் ஒன்றான இராகு என்ற பாம்பு விழுங்குவதற்காக நெருங்கி வந்தது. அதைக் கண்டு பதறிய, பாகுபோன்ற இனிய மொழ்¢யுடைய என் காதலி பாதம் நோக நடக்க, அவளது சாயலைக் கொண்டு அழகிய தோகைமயில் எனப் பயந்து பின்வாங்கிவிட்டது' என்கிறான் தலவன்.

மாகமா மேடை மீதில்
.....மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்று எண்ணி
.....இராகு வந்து உற்ற போது
பாகுசேர் மொழியினாளும்
.....பதறியே பாதம் வாங்கத்
தோகை மாமயில் என்று எண்ணித்
.....தொடர்ந்து அரா மீண்டது அன்றே.

( மாகமா - வானத்தை அளாவும்; ஏகமா மதி - முழுமதி; அரா - அரவம், பாம்பு; அன்றே - அசை )

- இப்படி இன்னும் அழகழகான அணி நலன்கள் நிறைந்த பாடல்கள் விவேக சிந்தாமணியில் நிறைந்துள்ளன.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: