Friday, July 08, 2005

நினைவுத் தடங்கள் - 34

எங்கள் பெரியப்பாவுக்கு நேர் எதிரிடையான குண இயல்புடையவர் எங்கள் அப்பா. அவர் முரடர் என்றால் இவர் சாந்த சொரூபி. எங்கள் அப்பாவுக்குக் கோபம் வந்து பார்த்ததாக எங்களுக்கு நினைவில்லை. எனக்கு வினவு தெரிந்து எங்களில் யாரையும் அடித்ததில்லை. கண்டிப்பு உண்டே தவிர தண்டனை தருவதில்லை. வேலையாட்களைக் கூட பெரியப்பா போல நாக்கில் நரம்பின்றித் திட்டியதில்லை. அதிக பட்சம் 'மடையா', 'முட்டாள்' என்பதுதான் அவர்களது திட்டலாக இருக்கும். அதனால் பொது மக்களிடம் எங்கள் அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஒப்பிட்டுப் பார்க்க பெரியப்பாவின் குணம் அதற்குத் துணை புரிந்தது. இன்றும் நாங்கள் கிராமத்துக்குச் சென்றால் எங்கள் அப்பாவுக்குக் கிடைத்த அதே மரியாதை எங்களுக்குக் கிடைக்கும். எங்கள் அப்பா காலமான பிறகு என் சகோதரர்கள் அனைவரும் தங்கள் பங்கு நிலத்தை விற்றுவிட்டு சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் வீடு கட்டி இடம் பெயர்ந்த போது, நான் ஊருக்கு அருகில் உள்ள நகரில் வசித்ததால் மூத்தவர்கள் பலர் எங்கள் அப்பாவின் நினைவாக நானாவது நிலத்தை விற்காமல் பிறந்த மண்ணுடன் என்றும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதால் நான் விற்க வில்லை. அந்த அளவுக்கு எங்கள் தந்தையார் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எங்கள் அப்பாவின் தர்ம சிந்தையும் தயாள குணமும் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. எங்கள் எல்லோரையும் படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது போலவே எங்கள் ஊரில் உள்ள எல்லாப் பிள்ளைகளும் படித்து வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்கள். இரவில் சாப்பாடு முடிந்ததும் அண்டை அயலில் உள்ள பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்பிப்பதை வேடிக்கை பார்க்கவே இரவில் கூட்டம் கூடும். ஏனெனில் அப்போது ஆங்கிலம் பேசுவது ஒரு அதிசயம் மக்கள் மத்தியில். தங்கள் பிள்ளைகளும் அப்படிப் பேச எஙகள் தந்தை முயற்சி எடுப்பதில் அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. அப்படி அன்று எங்கள் தந்தையார் தூண்டியதே இன்று எங்கள் ஊரில் நிறைய பேர் - பெண்கள் உட்பட- படித்து முன்னேறி இருப்பதற்கு ஒரளவு காரணம் எனலாம்.

எல்லோரும் கல்வி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது போலவே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டினார்கள். அப்போதெல்லாம் காலரா போன்ற கொள்ளை நோய் வந்தால் மருத்துவ உதவி பெற எந்த வசதியும் வாய்ப்பும் மக்களுக்குக் கிடையாது. எங்கள் தந்தையார் காலரா மருந்தை தபாலில் வரவழைத்து கிராமத்தில் - குறிப்பாக சேரியில் காலரா வரும் போது, மிகுந்த பரிவோடு கொடுத்து எவ்வளவோ பேரைக் காப்பாற்றி யிருக்கிறார்கள். பெரியவர்களானால் சர்க்கரையிலும், குழந்தைகளானால் தேனிலும் காலரா மருந்தை வயதுக்கேற்றபடி சொட்டுகள் விட்டுத் தானே குழைத்து மணிக் கொரு தரம் உள்ளுக்குக் கொடுத்து கடுமையான பத்தியம் சொல்லி பேணிஉள்ளார்கள். சாவின் விளிம்புக்குப் போய் காப்பாற்றப் பட்டவர்கள் மிகுந்த விசுவாசத்துடன் வெகுநாள் வரை பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

அதே போல பாம்புக்கடிக்கும் ஒரு அற்புத மூலிகையைக் கொண்டு பலரது உயிர்களை எங்கள் சுற்று வட்டாரத்தில் காப்பாற்றி இருக்கிறார்கள். பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கட்டிலில் கிடத்தி தூக்கி வரப்பட்ட பலர் இந்த பச்சிலை வைத்தியத்தால் பிழைத்து எழுந்து நடந்து போன அதிசயத்தை இன்றும் எங்கள் ஊரில் நினைவு கூர்வதுண்டு. எங்கள் தந்தையாரைப் போலவே எங்கள் தாயாரும் குழந்தை வைத்தியத்தில் அக்கறை கொண்டு தஞ்சாவூர் மாத்திரை, கோரோசனை போன்ற மருந்துகளை வாங்கி வைத்துக் கொண்டு இரவு பகல் பாராது கொடுத்து உதவி இருக்கிறார்கள். எங்கள் தந்தையார் இப்படிப் பல உயிர்களைக் காப்பாற்றிய புண்ணியத்தால்தான் நாங்கள் பத்து பிள்ளைகளும் அமோகமாக வாழ்வதாக ஊரின் மூத்த குடிகள் இன்றும் சொல்லி எங்களை வாழ்த்துவார்கள்.

எங்கள் தந்தையார் தீவிரமான சிவபக்தரும் கூட. தினமும் அதிகாலையில் வயற்காட்டுக்குச் சென்று பயிர்களைப் பார்த்துவிட்டுப் பத்து மணி அளவில் திரும்பிய பிறகு அவர்களே கிணற்றில் நீரிறைத்து ஆசாரமாய்க் குள்¢த்துவிட்டு சிவபூஜை செய்த பிறகுதான் ஒரே வேளையாக மதிய உணவை உட்கொள்வார்கள். தினமும் புற்று மண்ணால் சிவலிங்கம் செய்து சந்தனமும் பூவும் சாத்த்¢, தேவாரமும் திருவாசகமும் பாடி ஒரு மணி நேரத்துக்கு மேலாக பூசை செய்வார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு எங்கள் எல்லோருக்கும் அவை பாடமாகி விட்டன. அதன் தாக்கமே என் இலக்கிய ஈடுபாட்டிற்கு அடிப்படை என எண்ணுகிறேன். இரவில் அனுஷ்டானம் செய்து சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து வந்த பிறகுதான் இரவு உணவு. இந்த நியதியை அவர்கள் உடல் தளர்ந்து, விழும் வரை கடைப்பிடித்தார்கள். அவர்கள் செய்த பூஜாபலன்தான் நாங்கள் இன்று குறைவின்றி வாழ்வதற்குக் காரணம் என்று எல்லோரும் சொல்வார்கள். அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்ச்சி நடந்ததை இங்கே சொல்ல வேண்டும்.

லால்குடியில் வாழ்ந்த என் மூத்த சகோதரி ஒருமுறை குழந்தைகளுடன் பஸ்ஸில் எங்கள் ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார்கள். அப்போது திருச்சியிலிருந்து எங்களூர் வரை பஸ் ஓடவில்லை. மூன்று மைலுக்கு அப்பால் உள்ள ஊரோடு பஸ் வந்து திரும்பிவிடும். ஊருக்கு வரவேண்டுமானால் அப்பாவுக்குக் கடிதம் போட்டு வண்டியை பஸ் நிற்கும் ஊருக்கு வரச்செய்துதான் வீட்டுக்கு வர முடியும். அப்படி அக்கா கடிதம் முன்னதாகப் போட்டிருந்தும் அன்று வரை அது கிடைக்காததால் வண்டி அனுப்பப் படவில்லை. பஸ் வந்த நேரம் அந்தி மயங்கும் வேளை. இடமோ எட்டியவரையில் அத்துவானக் காடு. திருடர்களும் குடிகாரர்களும் இருட்டிய பிறகு புழங்கும் இடம். வண்டியைக் காணோம் என்றறிந்ததும் என் சகோதரிக்கு அழுகையே வந்துவிட்டது. சின்னஞ் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கழுத்திலும் கையிலும் நகைகளுடன் எப்படி ஊர் போய்ச் சேரப்போகிறோம் என்று திகைத்து நிற்கையில் தெய்வமே இரக்கப்பட்டு அனுப்பியதுபோல் ஒரு கட்டை வண்டி விறகேற்றிச் சென்று விற்று விட்டுத் திரும்பியது - இருட்டில் யாரோ குழந்தைகளுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்து நின்றது. "யாரம்மா இந்த வேளையில் தனியாக ..?" என்று வண்டி யோட்டி அனுதாபத்துடன் கேட்க, என் சகோதரி வண்டி வராததைச் சொல்லித் தேம்பி இருக்கிறார்.

வெகு பாமரனான அந்த வண்டியோட்டி இறங்கி வந்து யார் எவர் என்று விசாரித்தார். சகோதரி எங்கள் ஊரையும் எங்கள் அப்பாவின் பெயரையும் சொல்ல அந்த ஆள் 'ஆ' என்று அதிர்ந்தவராய் "அம்மா அந்தப் புண்ணியவான் பொண்ணா நீங்க? அவுரு போட்ட பிச்சையிலே தான் நான் இன்னும் உசுரோட இருக்கேன். நல்ல பாம்பு கடிச்சி கட்டையா நீட்டி விட்டவன பச்சிலை குடுத்துக் காப்பாத்துன புண்ணியவான் அம்மா உங்க அய்யா! அவுரு பண்ண தருமம் தான் இந்த நேரத்திலே என்ன இங்க அனுப்பியிருக்கு. நீ பயப்படாதே. ஏறு வண்டியிலே. நா கொண்டு போய் அப்பா கிட்டே விடுறேன்" என்று அபயம் கொடுத்தார். பெற்றோர் செய்யும் புண்ணியம் பிள்ளைகளைக் காக்கும் என்பதை மெய்யாக்கியது போல நடந்தது இது. இப்படி எங்கள் தந்தையார் செய்த தர்மமும் சிவபூஜையும் எங்களைக் காத்ததே தவிர அவர்களைக் காக்கவில்லை என்பது பெரிய சோகம். அறுபது வயதில் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் கண்ணருகே அடிபட்டு அப்போது அது பாதிப்பை உண்டாக்காமல் பின்னாளில் சிறுகச் சிறுக கண் பார்வையை இழக்கும்படி ஆனது.அது அவர்களது நித்திய நியமங்களையும் பரோபகாரச் செயல்களையும் பாதித்தது. கடைசி இருபது ஆண்டுகள் இருட்டில் வாழ்வது போன்ற அந்தக வாழ்க்கை வாழ்ந்த கொடுமையைச் சொல்லி உருகாதவர் இல்லை. அவரிடமே சிலர் கேட்பார்கள்: " இவ்வளவு தர்மமும் சிவபூஜையும் செய்தீர்களே, உங்களுக்கு ஏன் இந்தக் கொடுமை?" என்று கேட்பவர்கள்¢டம், "நான் இந்த ஜென்மத்தில் ஏதும் பாவம் செய்ததில்லை. இது போன ஜென்மத்தின் கர்ம வினை" என்று அவர்களைத் தேற்றுவார்கள். ஜென்மம், பாவ புண்ணியம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவரையும் எங்கள் தந்தையாரது வாழ்க்கை சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

1 comment:

ஆதிபன் சிவா said...

சுவையான செய்திகள் நன்றி