Wednesday, July 06, 2005

உவமைகள் வர்ணனைகள் - 42

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 42

பாலகுமாரன் படைப்புகளில் இருந்து:

1. சினிமா ஒரு காட்டாறு. அதற்கு இலக்கு முறைமை எதுவுமில்லை. காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நதி, கரை புரண்டு கிராமத்துப் பக்கம் போகும். பிறகு நகரத்தில் உலா வரும்.

- 'என் கண்மணி' நாவலில்.

2. சின்ன ஏரி மாதிரி இருந்தது லைப்ரரி.

- 'ஆருயிரே மன்னவரே' நாவலில்.

3. வெட்கம் ஒரு சுகமான விஷயம். வெட்கம் பழகப் பழகப் பிடித்துப் போகும். மறுபடி வெட்கப்பட மாட்டோமா என்று தோன்றும். வெட்கப் பட்டதை நினைத்து நினைத்து மறுபடி வெட்கப் படும். வெட்கம் காதலுக்கு உரம்.

- 'கல்யாண மாலை' நாவலில்.

4. இது மந்தை. மனித மந்தை. எங்கு போகிறோம் என்று தெரியாமல் இரு நூறு ஆடுகளுக்குள் எந்த ஆடு முதல் என்று முட்டிக் கொள்கிற மந்தை. நின்று நிதானித்து, தனித்து, தலை தூக்கி, எந்தத் திசை நோக்கி, எதற்கு என்று இவர்கள் கேட்டதே இல்லை. இவர்கள் இல்லை உலகம்; 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே'. உயர்ந்தவர்கள் யாரென்று உயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

- 'புருஷ விரதம்' நாவலில்.

5. காற்று, பத்து வயசுப் பெண்போல மின்விசிறி இறக்கைகளோடு கோத்துக் கொண்டு தட்டாமாலை ஆடிற்று. முரளிதரன் தலையைக் கலைத்தது.

- 'மரக்கால்' நாவலில்'.

6. "ஜலமில்லாத காவிரி மகாகொடுமை ரகு. தலையை மழிச்சு நார்மடி சுத்தி மூலையில் உம்மென்று உட்கார்ந்திருக்கிற கிழவி மாதிரி. ரொம்ப வேதனை ரகு. நீ இப்போ ஊருக்கு வராதே. ஜலம் வந்த பிறகு நான் உனக்கு எழுதுகிறேன்."

- 'ஏதோ ஒரு நதியில்' குறுநாவலில்.

7. வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. தரையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் புகையோடு எழும்பத் தொடங்கி விட்ட மாதிரி அதீத வேகம் கொண்டு விட்டது. உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேண்டும், சட்டையும், தலைமயிரும் மட்டுமில்லை, மனைவியே, மேற்கத்திய வக்கிரமும் நம்மீது வந்து விழுந்து விட்டது. கப்பலில் டிங்கு ஜுரம் வந்து இறங்குகிறது. பழங்கதைகள் பேசி லாபம் என்ன....?

- 'சேவல் பண்ணை' நாவலில்.

8. காதலித்த பிறகு அயர்ச்சி வருகிறதோ இல்லையோ திருமணம் என்பதற்குப் பிறகு ஒரு அயர்ச்சி வரத்தான் செய்கிறது. அது அயர்ச்சி இல்லை. இனி என்ன என்ற கேள்வி. கூத்து முடிந்து இல்லத்துக்குத் திரும்பும் போது கூத்து பாதியும், வீடு பாதியுமாய் நினைவிலிருக்குமே அதைப் போன்ற ஒரு அதிசயம்.

- 'கிருஷ்ண அர்ஜுனன்' நாவலில்.

9. யாரையுமே..... எதையும் எப்போதும் காதலித்தல் முடியாது. காதலுக்குக் கீழே இருக்கிற பொய் புரிந்து போன பிறகு முடியாது. கீழே இருக்கிற சேறு தெரிந்த பிறகு தாமரை உயரே வந்து விடும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சிரிக்கும். தெறித்தாலும் ஒட்டாது. சேறு கீழே விழும்.

- 'யானை வேட்டை' நாவலில்.

10. மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ. ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை. போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை. நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை. முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை. தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம் போல அழுக்கு இல்லை. கனகாம்பரம் போல அலட்டல் இல்லை. மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை. சாமந்தி போலத் திமிரில்லை. தாமரைபோல கர்வமில்லை. மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ. குடித்தனப் பொம்பிளை போல காதல், காமம், அமைதி, அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.

- 'அடுக்கு மல்லி நாவலில்'.

- இன்னும் வரும்.

- அடுத்து வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநயகம்.

1 comment:

Suresh babu said...

அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள். இன்னும் நிறைய இருக்கின்றன. நாவலை படித்துக்கொண்டு இருக்கும்போது இது போன்ற வரிகள் வரும் சமயம், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அது பற்றி சிந்திக்கும் சுகம் இருக்கிறதே !!! அதில் இருக்கும் சுகம் எதிலும் இருக்காது.