Wednesday, March 30, 2005

களஞ்சியம் - 18

எனது களஞ்சியத்திலிருந்து - 18

விவேகசிந்தாமணி விருந்து - 7

புரட்சிக் கவிஞர் போற்றிய பாடல்

விவேகசிந்தாமணியின் பாடல்களில் அதிகமும் பட்டியலிடுவதாகத் தோன்றுபவை. பயனற்ற ஏழு, பகைக்கக் கூடாத பன்னிருவர், விரைவில் அழிந்து போகக் கூடியவை, மற்றவர்க்குச் சொல்லத்தகாதவை, பெண் கொடுக்கத் தக்கவர், பெண் கொடுக்கத் தகாதவர் என்று நீதிகளைப் பட்டியல் இட்டே மனதில் பதியும்படி சொல்கிற பாடல்களே அதிகம். நீதியை மட்டுமல்ல சில நினைவூட்டல்களையும் பட்டியல்
இடும் பாடலும் உண்டு.

அடிக்கடி பயணம் செய்பவர் பயணத்திற்கான பொருள்களை, கடைசி நேரத்தில் தேடும் சிரமத்தைத் தவிர்க்க பட்டியல் தயாரித்து வைப்பார்கள் அல்லவா? அது போன்றவொரு பட்டியலை ஒரு பாடலில் பார்க்கலாம். இது பழைய காலத்தில், இன்று போல போக்குவரத்து வசதியில்லாமல் கூண்டு வண்டி கட்டிக் கொண்டு நெடும்பயணம் செய்கையில் வழியில் சமைத்துச் சாப்பிட அதற்கான பொருள்களுடன் செல்பவர்க்கான நினைவுப் பட்டியலாக உள்ளது.

'தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு
தாளிதப் பொருள்கள் பாத்திரங்கள்
தாம்பு நீர்தேற்றும் ஊன்றுகோல் ஆடை
சக்கிமுக்கியுடன் கைவிளக்கு
கண்டகம் முகுரம் பூசை வஸ்துக்கள்
கழல் குடை அடிமை சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் அடைக்காய்ப் பை
கரண்டகம் கண்டம் நல் உப்பில்
துண்டம் ஊறிய காய் கரண்டி நல்லெண்ணெய்
துட்டுடன் பூட்டு கைக்கத்தி
சொல்லிய இவைகள் குறைவரத் திருத்தித்
தொகுத்து வேற்று ஊர் செலும் மனிதன்
பெண்டுகள் துணையோடு எய்தும் வாகனனாய்ப்
பெருநிலை நீர்நிழல் விறகு
பின்னும் வேண்டுவ சேர் இடம் சமைத்துண்டு
புறப்படல் யாத்திரைக்கு அழகே.

(தண்டுலம் -அரிசி; நீர் தேற்றும் ஊன்றுகோல் - நீரின் ஆழத்தை அளவிடும் அளவுகோல்; கண்டகம் -அரிவாள்; முகுரம் - கண்ணாடி; கழல் - செருப்பு; அடைக்காய்ப் பை - வெற்றிலைப் பாக்குப் பை; கரண்டகம் - சுண்ணாம்புக் கரண்டகம்.)

'அயல் ஊருக்குப் பயணம் போகும் ஒருவன், அரிசி, மிளகுத் தூள், புளி, உப்பு, தாள்¢த்தற்குரியவை, பாத்திரங்கள், கயிறு, நீரின் ஆழத்தைக் காட்டும் ஊன்றுகோல், ஆடைகள், தீ உண்டாக்கும் சக்கிமுக்கிக்கல், கைவிளக்கு, அரிவாள், கண்ணாடி, பூசைக்குரிய பொருள்கள், செருப்பு, குடை, பணியாள், சிற்றுண்டிகள், கம்பளம், ஊசி நூல், வெற்றிலைப்பை, சுண்ணாம்புக் குப்பி, எழுத்தாணி, உப்பில் ஊறிய காய், கரண்டி, நல்லெண்ணெய், காசுகள், பூட்டு, கைக்கத்தி, என்று இவற்றைக் குறைவில்லா மல் திருத்தம் செய்து சேர்த்துக் கொண்டு பெண்களின் துணையுடன், பொருந்திய ஊர்தியுடன் புறப்பட்டு, இடையில் நீர்நிலை, நிழல், சமைப்பதற்குரிய விறகு, மற்றும் விரும்பத் தக்கவை ஆகியவை உள்ள இடங்களில் இறங்கித் தங்கிச் சமையல் செய்து உண்டு, பிறகு புறப்பட்டு கருதிய இடத்துக்குச் செல்லுதல் சிறப்பாகும்.'

எவ்வளவு தீர்க்க தரிசனமான முஸ்தீபு! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதைப் பின் பற்ற யாருக்கு அவசியம் ஏற்படப் போகிறது? இதை உத்தேசித்துத்தானோ என்னவோ இந்தப் பாடலைப் பின்பற்றி இன்றைய தேவைக்கேற்ப ஒரு பட்டியல் கொண்ட பாடலை எழுதியுள்ளார்
பாவேந்தர் பாரதிதாசன்.

'சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டிக் கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.'

( கவிகை - குடை; காப்பிட்ட - பாதுகாப்பான )

விவேகசிந்தாமணி பட்டியலில் உள்ளவற்றில் காலத்திற் கேற்றபடி தேர்வு செய்த பட்டியலை புரட்சிக் கவிஞர் அளித்துள்ளார்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்

No comments: