Wednesday, May 25, 2005

உவமைகள்-வர்ணனைகள் 39

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 39

சி.சு.செல்லப்பாவின் படைப்புக்களிலிருந்து:

1. ஊரிலேயே பெரிய மனிதரான அவருக்கு பொதுவாழ்வு கை நகத்தோடே பிறந்த மாதிரி. வளர்கிற நகத்தைத்தான் வெட்டுகிறோமே தவிர அடி நகத்தை பெயர்த்து எடுக்கிறதில்லை. பொதுவாழ்வை அவர் அறுத்துக் கொள்ள விரும்பவில்லை. வளர்ந்த நகம் மாதிரி கட்சி உறவைத்தான் துண்டித்துக் கொண்டார்.

- 'எதிர்ப்பு' கதையில்.

2. சாதாரணமாக என் தூக்கத்தை தினமும் காலையில் கலைப்பது அல்லது பள்ளியெழுச்சி பாடி எழுப்புவது - ரோடு மெயின் குழாய் லைனிலிருந்து ஜலத்தை வீட்டுக்கு உறிஞ்சி இழுத்துக் கொணரும், கீழே உள்ள அந்த 'வாஷர்' முழுக்கத் தேய்ந்த பம்பின் கதறல்தான். ஆனால் அன்று அந்த துரிதகால தாள வாத்ய ஒலிக்கு வெகு முன்னதாகவே கிளம்பின ஒரு இனிமையான குரல் விழிக்கச் செய்தது.

- 'பக்தி'.

3. அத்தான் ஒரு பேச்சுக் களஞ்சியம். அவர் ஒருத்தர் இருக்கிற இடத்தில் ஏற்படும் கலகலப்புக்கு, ஆடிக்காற்றிலே அலைபடும் ஆயிரம் தென்னைகள் உள்ள ஒரு தோப்பில் உண்டாகிற சலசலப்புக்கு ஈடாகாது.கொட்டி அளக்கிறது என்பது அவருக்குப் பொருந்தும். எங்கள் கேள்விக்கு அப்படிப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.

- 'மச்சு வீடு'.

4. "நான் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண் நீலா தான் அது. நாம ஊரிலே இல்லாதபோது அவளுக்கென்று வந்திருக்கிறது. பாவம், பல்லாங்குழி பல்லாங்குழியாக உடல் பூராவும் அம்மைத்தழும்பு".

- 'அழகு மயக்கம்'.

5. சிறை ஒரு கோவில் மாதிரி. கடவுள் கோவிலில் இருப்பதாகக் கருதி கும்பிடுபோடப் போகிற பக்தனுக்குத்தான் கோவில். தனக்குள்ளே தெய்வத்தை வைத்துக்கொண்டு இருப்பவனுக்கு, தூணிலும் துரும்பிலும் தெய்வத்தைக் காண்பவனுக்கு கோவில் ஒரு அர்த்தமற்ற சின்னம். அதே மாதிரிதான் சிறையும். தேசப்பணிப் பாதையில் சிறைவாசம்தான் மகத்தான சாதனையாகும் என்று நினைப்பவனுக்குத்தான் ஜெயில்.
கண்களைச் சுழற்றி அகல விரித்து மனித ஜாதியை ஊன்றிப் பார்த்து தன் முதுகைக் கொடுத்து அதன் கால்களை உயர்த்த முயற்சிப்பவனுக்கு சிறைவாசம் அர்த்தமற்றது.

- 'மருதநாயகம்'.

6. லௌகிக உலகத்தில் துன்பமும் இன்பமும் மனிதனில் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்றி ஓய்ந்து போய், ஒடிந்து விழும் மனதுக்கு கோவிலும் கடவுளும், ஆறுதலும் நம்பிக்கையும் தரும் தூரத்து கலங்கரை விளக்கமாக இருப்பது போல் தான் அசதி தோன்றிவிட்ட உடலுக்கு ஆஸ்பத்திரியும் டாக்டரும்.

- 'கிழவி'.

7. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஸ்டெஷனை விட்டுப் புறப்பட்ட ரயில் இருட்டில் வகிடு எடுத்துக்கொண்டு சென்றது. அதே சமயம் இருள் நுரையை அலையடித்து ஒதுக்கிக் கொண்டு நிலவொளி ஆகாசத்தில் பரவ ஆரம்பித்தது. என் மனதிலும் பழைய நினைவுகள் பரவலாயின.

- 'பாத்யதை'.

8. வெகு காலம் ஆகிவிட்டது நான் கதை எழுதி. மூணு நாலு வருஷங்களாய் சூன்ய ஆண்டுகள். அதற்கு முன்னே மட்டும் என்ன? கஜகர்ப்பத்தில் எப்போதாவது ஒன்று பிறக்கும்.

- 'அப்பாவின் ராட்டை'.

9. ஒரு நாள் அஸ்தமன சமயம். நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள் அமிழ்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கப்பலைப் போல் சூரியன் மேகு மலைவாய்க்குள் போய்க்கொண்டிருந்தான். அதே சமயம், எதிரியின் கப்பல் மறையும் தருணம் பார்த்து, மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும், கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் நீர்மூழ்கிக் கப்பலைப் போன்று பூர்ணசந்திரன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருந்தான்.

- 'பந்தயம்'.

10.குலுக்கி விட்ட மரக்காலுக்குள் எல்லாம் படிந்து கொள்கிற மாதிரி இந்த மனசுக்குள்ளே எல்லாம் படிந்துதான் போகிறது.

- 'ஜீவனாம்சம்' நாவலில்.

- மேலும் சொல்வேன்.

- அடுத்து க.நா.சு வின் படைப்புக்களிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: