சென்னையிலிருந்து எங்களுடன் எங்கள் மாப்பிள்ளை-சீஷெல்ஸில் வழக்கறிஞராக இருப்பவர் உடன் வந்ததால் சென்னையிலும் துபாயிலும் கஸ்டம்ஸ் சோதனை மற்றும் இதர சடங்குகள் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டதால் எங்களூக்கு முதன்முறை பயணம் செய்வது போன்ற பதற்றமோ தடுமாற்றமோ இல்லை. சீஷெல்ஸ் விமான நிலையம் மிகச் சிறியது. சுத்தம் சூழ்நிலை கூட நம்மூர் ரயில்வே நிலையம் போல் பராமரிப்பு சுமாராகத்தான் உள்ளது. என்றாலும் கெடுபிடியெல்லாம் எங்கும் ஒரே மாதிரிதான். கஸ்டம்ஸ் சோதனை முடிந்து தற்காலிக விசாவுக்கு மனுச்செய்து 15 நாட்களுக்கு அனுமதி பெற்றோம். சீஷெல்ஸ் தீவுக்கு யார் வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இருந்தால் போகலாம். எங்கள் விஷயத்தில் 'யாராவது உறவினர் அழைப்பின் பேரில் வந்தால் முன்னதாகவே விசாவுக்கு மனுச் செய்யாமல் இறங்கியதும் மனுச் செய்து பெற்றுக் கொள்ளலாம்', என்ற விதிப்படி பெற்றோம். 15 நாட்களுக்குப் பின் மீண்டும் புதுப்பிக்க மனுச்செய்தால் 3 மாதங்களுக்கு நீட்டிப்பார்கள்.
விமான நிலையத்துக்கு என் மகள் - அங்குள்ள அரசு கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணி புரிபவர் - காருடன் வரவேற்கக் காத்திருந்தார். ஆனல் அவருக்கு முன் மழை எங்களை வரவேற்றது. வௌ¤யில் வந்ததும் நம்முர் யூனிபாரம் போடாத போர்ட்டர் போல் - அரைக் கால்சட்டையும், டி ஷர்ட்டும் ஹவாய் செருப்புமாய் மிகச் சாதாரணமாய்க் காட்சி தந்த ஒருவரை, பெரிய தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பெரிய தொழில் அதிபருக்கான பந்தா, படாடோபம் சிறிதுமற்ற அந்த எளிமையை என்னால் நம்ப முடியவில்லை. பிறகு காரில் ஏறிய பின்தான் விளக்கினார்கள் - அதுதான் சீஷெல்சின் தேசீய உடை என்றும் பிரசிடெண்ட் முதல் சாதாரணத் தொழிலாளிவரை அந்தப் பெர்முடா காற்சட்டையும் டி ஷர்ட்டும் அலுவலகத்திலும் அணிவார்கள் என்று. கொஞ்ச தொலைவு போனதும் மழை பெய்த சுவடே இல்லை.
அதற்கும் விளக்கம் சொன்னார்கள். அதுதான் சீஷெல்ஸின் சீதோஷ்ண நிலையாம்.
எப்போது வேண்டுமானாலும் மழை தூறும். அடித்துப் பெய்வதில்லை. குளிராது. எப்போதும் வெம்மையாய் இருக்கும் என்பதைப் பிறகு அனுபவத்தில் கண்டேன். ஏற்றமும் இறக்கமுமான கொண்டை ஊசிவளைவுகள் அதிகம் கொண்ட மலைப் பாதையில் எதிரே சீறிவரும் வாகனங்களில் மோதாமல் ஒலிப்பானை எழுப்பாமலே லாகவமாய் வளைந்து போக்குவரத்து வரத்து விதிகளை சற்றும் மீறாமல் அநாசயசமாய் அங்கு கார் ஓட்டுவதைக் கண்டு வியந்தேன்.
விமான நிலையத்திலிருந்து 15கி.மீ பயணம் செய்து மகள் வீட்டை அடைந்தோம். சீஷெல்ஸ் முழுவதுமே மலைப்பகுதிகள் தான். நமது ஊட்டி கொடைக்கானல் போல மஞ்சு தவழும் மலைகள். எங்கும் பசுமை. கண்ணுக்கு இதமான இயற்கைக் காட்சிகள்.
எங்கு போனாலும் கூடவே சலசலத்து ஓடி வரும் மலையருவி என்று முதல் நோக்கிலேயே அந்தத் தீவு மனதை மயக்கியது. வந்திறங்கியது முதல் இரவு வரை மகள், மாப்பிள்ளையின் நண்பர்கள் குடும்பம் குடும்பமாய் வந்து எங்களை வரவேற்றதும் நலம் விசாரித்ததும், ஒரு நாள் தங்கள் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று அழைத்ததுமான அந்த நாட்டுப் பண்பு கண்டு நெகிழ்ந்தோம்.
சீஷெல்ஸ் என்பது 116 சிறுசிறு தீவுகள் கொண்ட தீவுக்கூட்டம். 130 லட்சம் சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் 30 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாசம் செய்கிறார்கள். இதில் மிகப்பெரிய தீவு மாஹே என்பதாகும். இது 27 கி.மீ நீளமும் 11 கி.மீ அகலமும் உடையது. சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா இதில்தான் உள்ளது. துறைமுகமும், விமான நிலையமும் தலைநகரில்தான் உள்ளன. சீஷெல்ஸின் மொத்த நிலப்பரப்பே 455 சதுர கி.மீ தான். இதில் 49 சதவீதம் பாதுகாக்கப்பட்ட அல்லது தேசீய பூங்கா. கணக்கில் அடங்கா தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மொத்த மக்கள் தொகை 85 ஆயிரம்.
இதில் 72 ஆயிரம் பேர் மாஹே தீவில் வசிக்கின்றனர். இதில் இந்தியர் 8000 பேர். அதில் தமிழர்கள் சரிபாதி. இவர்களில் 800பேர் மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வந்திருப்பவர்கள். முதன் முதலில் அங்கு வேலைக்காகவோ, வியாபாரம் செய்யவோ சென்றவர்கள் பின்னர் தங்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று அழைத்து வந்து பெருகி விட்டவர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்வரை மனிதசஞ்சார மற்றிருந்த
இங்கு முதலில் மனிதர்கள் வந்ததெப்படி? அதற்கு சீஷெல்ஸின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
(தொடரும்)
Thursday, January 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment