Thursday, January 05, 2006

வர்ணனைகள் உவமைகள் - 46

நான் ரசித்த வர்ணனைகள் - உவமைகள்: 46

அசோகமித்திரன் படைப்புகளிலிருந்து:

1. ஆட்டிவிட்ட கடிகாரம் மீண்டும் நின்றுவிட்டது. இந்த நாளில் பெண்டுலம் உள்ள கடிகாரங்களே அதிகம் காணமுடியாது. பாசம் மிகுந்த வீடுகளில்தான் பார்க்க முடியும். பல வீடுகளில் அவை ஓடாமல் அப்படியே சுவரில் ஒட்டடையும் தூசும் படிந்து கிடப்பதைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு கடிகாரத்தின் மீது குருவிகூடு கட்டி இருந்தது. சாவைக் குறிக்கும் கடிகாரத்தின் மீது, செத்துப் போன
கடிகாரத்தின் மீது ஒரு குருவி கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் திட்டமிட்டிருந்தது. பாசத்தைக் கிண்டல் செய்வது போலிருந்தது. வாழ்க்கையே கிண்டல் மிகுந்ததுதான். ஒவ்வொரு கணமும் மனிதனின் இயலாமையையும் அறியாமையையும் கண்டு கிண்டல் செய்வதுதான் அதன் முக்கிய பணி. இந்த வீட்டில் அதை இந்தக் கடிகாரத்தின் மூலம் செய்து கொண்டிருக்கிறது.

- 'கடிகாரம்' கதையில்.

2. அவன் இப்போது நிலவைப் பார்த்தான்.பௌர்ணமிக்கு மூன்று நாட்கள் இருந்தன. ஆதலால் நல்ல, பெரிய பிரகாசமான சந்திரன். கண்களுக்குத் தெரியாதபடி ஏதோ திரவம் போன்றது ஒன்றையும் நிலவு மேலிருந்து பூமிக்கு இறங்க வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆற்றல் சூரியனுக்குக் கிடையாது. சூரியன் பலநூறு மடங்கு அதிக வெளிச்சம் தரலாம். தணலாகச் சுட்டு, வறுத்து எடுக்கலாம். ஆனால் பரிமாணமுள்ளது எதையும் தரமுடியாது. சந்திரனால் முடிந்தது. சந்திரன் இறக்கும் அப்பொருளின் பளு தாங்கமுடியாமல்தான் எல்லோரும்
படுத்துக் கொண்டு விடுகிறார்கள். மாடுகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன. பறவைகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன.

- 'குதூகலம்'.

3. எங்கெங்கோ தூரத்திலிருந்து மெல்லிய ஒலிகள் வந்து கொண்டிருந்த நகரக் கடலில் அவன் தெரு ஒரு குமிழியாக மிதந்து கொண்டிருந்தது. வெளியமைதி பொறுக்க முடியாமல் கத்தி விடலாமென்று அவனுக்குத் தோன்றியது.

- 'காத்திருத்தல்'.

4. காற்று மண்டலமே கலங்கிய திரவமாகி அதன் அடியில் தங்க விழையும் சுண்ணாம்பாக பனி இறங்கிக் கொண்டிருந்தது. பனி மூட்டத்தில் ஒரு பர்லாங் தள்ளி இருந்த மனிக்கூண்டுக் கடிகாரம் மங்கலாகத் தெரிந்தது. அந்தக் கடிகார விளக்கு வானத்து நட்சத்திரங்களுடன் ஒரு அபத்தமான போட்டி நடத்திக் கொண்டிருந்தது.

- 'காட்சி'.

5. நான் வசிக்கும் பேட்டைக்கு வடக்கு தெற்கு உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை தெற்குப் பகுதிக்குப் போனேன். அங்கு கடிகார ரிப்பேர்க்காரர் யாராவது இருப்பாரா என்று தேடினேன். வடக்குப் பகுதியில் மூவர் உண்டு. மிகவும் அருகில் இருப்பவர் கடிகாரத்தைக் கையாளும் விதம் நரசிம்மாவதாரத்தை நினைவூட்டும். இன்னொருவர் முதல்வருக்கு ஏறக்குறைய எதிர்க் கடை. அந்தக் கடை முதலாழ்வார்களை நினைவு படுத்தும். தெருவில் இருந்தபடியே எட்டிக் கொடுக்க வேண்டும்'

- கைகாட்டி மரம் கடிகாரம்....'கட்டுரையில்.

6. திடீரென்று மல்லையாவுக்கு அவன் கனமெல்லாம் கொட்டிப் போய் ஏதோ காற்றால் ஆனவன் போலிருந்தது. அவன் கை கால்கள் ஒவ்வொன்றும் தனிஅறிவு பெற்று இயங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று. இடது காலுக்குக் கிளட்சின் சூட்சுமம் போலீஸ்காரன் எரிச்சலோடு கையை விசிறியபோது தெரிந்துவிட்டது.

- 'திருப்பம்'.

7. சைக்கிளில் உட்கார்ந்தபடியே வலது காலைக் கீழே ஊன்றி பார்வை கொள்ளும் அளவுக்கு வயல் வெளியைப் பார்த்தான். மூன்று நான்கு வயல்களைத் தவிர அங்கே முற்றும் நன்கு ஓங்கி வளர்ந்த பயிர்க் கதிர்கள் காற்றில் அசைந்து ஏரித்தண்ணீர் மேற்பரப்பு போல் சிற்றலைகளாகத் தென்பட்டது. தொலைவில் மலைத்தொடர் அப்போதே கலையத்தொடங்கும் பனி மூட்டத்தில் பிரம்மாண்டமான நாடகத்
திரை போல் காட்சியளித்தது.

- 'விரிந்த வயல்வெளிக்கப்பால்'.

8. அத் தோட்டங்களில் அப்போது ஒரு பூக்கூட காணக் கிடைக்கவில்லை. இதே தோட்டங்கள் வெயில் காலத்தில் பல வண்ணப் புஷ்பங்களை ஏராளமாகச் சுமந்து காண்டு அடக்கம் அறியாப் பெண்கள் போலிருக்கும். இயற்கையோடு இசைந்து ருப்பவர்களுக்கு அடக்கம் எதற்கு? மனிதன் கூட ஆதிநாட்ளில் காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் குளிரால் வ்வளவு கஷ்டப் பட்டிருக்க மாட்டான்.
அவனுக்குக் குளிரை எதிர்க்க இவ்வளவு சாதனங்கள் தேவைப் பட்டிருக்காது.

- 'தலைமுறைகள்' நாவலில்.

9. நான் இருட்டில் பின்வாங்கினேன். மேகங்கள் வெகு அவசரமாக எங்கோ பாய்ந்து காண்டிருந்தன. நான் சிறுவனாய் இருந்தபோது இரவில் அசையும் மேகங்கள் னக்குப் பயத்துக்குரியதாக இருந்தன. கீழிருந்து பார்க்கும்போது ஒரு சிறு மூட்டை போலக் காட்சியளித்தாலும் அது அளவில் மிகப் பெரியதாக இருக்கும் என்று சொன்னால் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. நான் அறிந்த
குன்றுகளையும் மலைகளையும் விடப் பெரியதாக வானத்தில் நகரும் மேகம் எனக்கு எப்போதுமே பயமூட்டியது. ஆனால் இன்று இந்த மேகங்கள் விபரீதமான உருவமும் அளவும் கொண்டதாயிருந்தாலும் எனக்கு அவை பயமூட்டவில்லை. மாறாக எனக்குத் துக்கம் மேலிட்டது.

- 'பாவம் டல்பதேடா' நாவலில்.

10. புன்னகையும் பருவநிலையும் தபால் பெட்டியில் தபாலைப் போடுவதைப் போல. கடிதத்தைப் பெட்டியின் வாயில் நுழைத்தவுடன் விஷயம் முடிந்து விடும்.

- 'இரு ஒற்றர்கள்' நாவலில்.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.

1 comment:

ENNAR said...

தங்கள் தனிமடலில் காணமுடியுமா
rethinavelu.n@gamil.com