Wednesday, January 18, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 6

நான் கண்ட சிஷெல்ஸ் - 6: கல்வி - மருத்துவம் எல்லாம் இலவசம்.

விக்டோரியா 25000 மக்களைக் கொண்ட தலைநகரமும், துறைமுகமும் ஆகும்.

ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத் தொகை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகட்கே ஒதுக்கப் படுகிறது. இதனால் மக்களிடையே 80 விழுக்காடுக்கும் அதிகமாக எழுத்தறிவு வளர்ச்சியும், உடல் நலச் செம்மையும் காணப்படுகிறது.

சிஷெல்ஸில் கிரியோல் (Creole), ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மூன்று மொழிகளை ஆட்சிமொழிகளாக அங்கீகரித்துள்ளார்கள். எல்லா மக்களாலும் பேசப்படும் கிரியோல் மிகப் பழைமையான மொழி. ஆப்பிரிக்க மற்றும் பிரஞ்ச் மொழிகளைக் கலப்பாகக் கொண்டது. தேசீயமொழியான கிரியோலில்தான் மக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

கல்வி இங்கு எல்லோருக்கும் இலவசம். இப்பொதுதான் நம் நாட்டில் அமுலில் இருக்கிற - எல்லா வகுப்புகளுக்கும் இலவச பாட மற்றும் நோட்டுப் புத்தகங்கள் திட்டம் - எழுதுபொருட்கள் உட்பட, அங்கு வெகு நாட்களாகவே செயல் பட்டு வருகிறது. அத்துடன் இலவச பேருந்து பயண வசதியும் எல்லா பிள்ளைகளுக்கும் அங்கே தரப்படுகிறது. கல்விமொழி ஆங்கிலமும் பிரஞ்சும். அரசுப் பள்ளிகளின் தரம் நமது நராட்சிப் பள்ளிகளில் உள்ளபடிதான். இந்தப் பள்ளிகளில்தான் வசதியற்ற மக்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்களில் அதிகமும், கலப்பின மக்களான உள்ளுர்வாசிகள் தாம். பிள்ளைகளில் அதிகம் பேர் பள்ளி வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்களைவிட ஆகிருதி மிக்கவர்களாகத் தோற்றம் தருபவர்கள். ஆசிரியர்களைப் பெயர் சொல்லியே அழைப்பவர்கள். என் மகள் மங்களநாயகி இத்தகைய அரசுப் பள்ளியில்தான் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். தலைக்குமேல் உயரமான அவள் வகுப்பு மாணவர்கள் 'மிஸஸ் மங்ளா' என்றே அழைப்பார்கள். கட்டுப்படுத்த முடியாதபடியும் படிப்பில் அக்கறை அற்றவர்களாயும் இருப்பதால் ஆசிரியர்கள் என்னதான் முன்றாலும் அவர்களிடம் வேலை வாங்க முடியவில்லையாம். எல்லாம் இலவசம் என்பதால் பெற்றோருக்கும் தம் மக்களின் படிப்பில் அக்கறை இல்லை. மேலதிகாரிகளும் ஆசிரியர்களது இந்தக் குறைபாட்டுக்கு செவி சாய்ப்பதில்லை. அதனால் உண்மையாக உழைக்க விரும்பினாலும் பலனில்லை.


மாறாக நம் நகரங்களில் உள்ளது போலவே தரமான தனியார் பள்ளிகள் உள்ளன. ஆனால் அங்கு கல்விக்கட்டணம் நமது தனியார் தொழிற்கல்லூரிகள் போல மிக அதிகம். ஆண்டுக்கு 2-3 லட்சம் போல உயர்நிலைப் பள்ளிக்கே ஆகிறது. அதனால் வசதியுள்ளவர்கள் பிள்ளைகளே இங்கு பயில்கிறார்கள். பிரைமரி என்பது 1-5 வகுப்பு வரையிலானது. அடுத்து செகண்டரி. இதை A leval என்கிறார்கள். இது 6 முதல் 10 வரை. அடுத்து O level. நம் பிளஸ் 2 போல. இதில் 'பிரகாசமான வெற்றி' பெறும் மாணவர்களை அரசாங்கமே உதவித் தொகை கொடுத்து வௌ¤நாடுகளுக்கு மேற்கல்வி பயில அனுப்புகிறது. தங்கள் நாட்டின் அறிவுஜீவிகஆளை மேம்படுத்த அரசின் கொள்கை இது. செகண்டரிக்குப் பின் தொழிற்கல்வி பயில விரும்புகிறவர் களுக்கு பாலிடெக்னிக் பள்ளிகளும் (Vocatinal schools) உள்ளன. கம்யூட்டர் சயின்ஸ் நம் நாட்டைப் போலவே அதிகமான மாணவர்களை ஈர்க்கிறது. பெண்கள் அதிகமும் நர்சிங் படிப்பில் சேர்கிறார்கள். நர்சிங் படிப்பில் சேர பெரும் போட்டி. ஏனென்றால் இங்குள்ள அரசு மருத்துவ மனைகளில் உடனே வேலை கிடைத்து விடுகிறது.

4 வயதில் Maternity school என்ற படிப்பில் சேர்க்கலாம். இது நம் Pre-Primary போல. இது முடிந்து - 5 வயதில் தான் Piraimary முதல் வகுப்பு. 1997ல் நம் இந்திராகாந்தி திறந்தவௌ¤ப் பல்கலைக் கழகம் தன் கிளை ஒன்றை இங்கே திறந்துள்ளது. இதில் கலை, வணிகவியல் பட்டப் படிப்பும் சட்டப்படிப்பும் கற்பிக்கப் படுகின்றன.

இங்கு எல்லா அலுவலங்களும் பள்ளிகள் உட்பட- காலை 8 மணிக்கே துவங்கி விடுகின்றன. பள்ளிக்கூடங்கள் மாலை 3 மணிக்கும் மற்ற அலுவலகங்கள் - தனியார் நிறுவனமானாலும் மாலை 4 மணியுடனும் முடிவடைய வேண்டும். தொழிலாளர் நலம் பேணும் பொதுவுடமைச் சித்தாந்த நாடு ஆதலால் இந்த வேலை நேரக் கணக்கில் கடுமையாக இருக்கிறார்கள். ஓவர்டைம், கதவைப் பாதி சார்த்திக் கொண்டு வேலை செய்தல் என்பதெல்லாம் கூடாது. கட்டாயமாக மாலை 4 மணிக்கு அலுவல்கஆளை முடித்துக் கொண்டு மூடி விடவேண்டும். அதே போல சனி, ஞாயிறு எல்லோருக்கும் கட்டாய விடுமுறை. அந்த இரண்டு நாளும் கீழ்மட்ட மக்கள் 5 நாளில் சம்பாதித்ததை நாள் முழுதும் குடித்துக் கழிக்கிறார்கள். 'அலுவலகங்களில், அறிவாளிக்குத் தனிச் சலுகை ஏதும் இல்லை. அறிவாளிக்கும் முட்டாளுக்கும் ஒரே சம்பளம்தான்.உங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை' என்பது நம் நாட்டுத் திறமைசாலி களின் மனக்குறை. சம்பளமும் பிரசிடென்ட் வரை ஒன்றும் அதீத வித்யாசமில்லை. ஆனால் கடைசி தொழிலாளிக்கும் கூட ஏறத்தாழ ரூ.5000 (நம் பணத்தில் ரூ. 40,000) ஊதியம் கிடைக்கிறது. அதனால் வாழ்க்கை மோசமில்லை.

பொதுச் சுகாதாரம் இங்கு நன்கு பேணப்படுகிறது. சிங்கப்பூர் போல நூறு சதவீத சுத்தம் இல்லை என்றாலும் நாள் முழுதும் மினி வேன்களில் துப்புரவுத் தொழிலாளர்கள்- அதிமும் பெண்கள்- கைகளில் நீண்ட பெருக்குகிற படல்களும் தோளில் பெரிய பிளாஸ்டிக் பையுமாகச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான பீச் போன்ற இடங்களில் குப்பை சேராமல் பார்த்துக் கொள்கிறார்கள். நம் ஊர்களில் உள்ளது போல குப்பைத் தொட்டிகள் தெருவுக்குத் தெரு இல்லை. ஒரு பகுதியின் முடிவில் நடமாட்டம் மிகுந்த சாலையருகில் பெரிய பெரிய பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் 4,5 வைக்கப் பட்டுள்ளன. மக்கள் காலை 7 1/2 மணிக்கு அலுவலுக்குச் செல்லும் போது வீடுகளில் நாள் முழுதும் சேர்ந்திருக்கிற குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்து இந்தத் தொட்டிகளில் போட்டு விட்டுப் போகிறார்கள். இது விஷயத்தில் மக்களது பொறுப்புணர்ச்சி பாராட்டும்படி உள்ளது. நம்மூர்போல குப்பையை வௌ¤யே தெருவில் எறிவதோ பொதுஇடத்தில் கொட்டுவதோ இல்லை. காரில் செல்பவர்களும் டிக்கியில் குப்பைப் பைகளை வைத்துக் கொணர்ந்து நிறுத்தி பொதுத் தொட்டிகளில் போட்டு விட்டுப் போகிறார்கள். அதனால் எங்கேயும் குப்பை மேடுகளைப் பார்க்க முடியாது. இந்தத் தொட்டிகளில் சேரும் குப்பைகளை அடிக்கடி லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள்.

தலை நகர் விக்டோரியாவில் பெரிய பொதுமருத்துவ மனை உள்ளது. மற்ற - மக்கள் அதிகம் உள்ள பிராலன் போன்று 3 தீவுகளிலும் பொது மருத்துவமனைகள் உள்ளன. இந்த நாட்டுக் குடிமக்கள் எல்லோருக்கும் மருத்துவ வசதி இலவசம். பெரிய அறுவைசிகிச்சை ஆனாலும், எக்ஸ்ரே, ஸ்கேன் எதுவானாலும் கட்டணமில்லை. மக்களது உடல்நலம் பற்றி அரசு காட்டும் அக்கறையால் இங்கு இறப்பு விகிதம் குறைவு. சராசரி வயது 72.7.

முன்பே குறிப்பிட்டபடி, இங்கு பணியாற்றும் டாக்டர்கள் மக்களிடம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்புகிறபடிதான் வைத்தியம் செய்யவேண்டும்.

எல்லாவற்றிற்கும் ஊசிதான்; எக்ஸ்ரேதான்! அவசியமில்லை என்று சொன்னால் உடனே பிரெசிடெண்டுக்குப் புகார்தான்! அதோடு இங்கு டாக்டர்கள் பிரைவேட் பிராக்டீஸ் செய்ய அனுமதியில்லை.

இங்கு தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் நிறையபேர் அரசுப் பணியில் உள்ளார்கள். இவர்களில் 1980லேயே இங்கு வந்து எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர், மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோயிலைச் சேர்ந்தவரான டாக்டர் வி.ராமதாஸ். இங்கு மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிற அவரை - நான் போயிருந்த போது அவர் சென்னைக்கு வந்திருந்ததால்- சந்திக்க முடியாது போனதில் எனக்கு வருத்தமே. தொழில் முறையில் 'எலும்பியல் அறுவை சிகிச்சை' நிபுணரான (Orthopaedic Surgeon) அவர் 1980ல் சிஷெல்ஸ் ராணுவத்தில் மருத்துவப் பணியில் சேர்ந்தார். பின்னர் பிரசிடென்டின் பிரத்தியேக மருத்துவரானார்.


இன்று டாக்டர் ராமதாஸ் சிஷெல்சின் மிகப் பெரிய தொழிலதிபர். சில ரெஸ்டாரெண்ட்கள், உணவு விடுதிகள், மாஹேயிலும் பிராலன் தீவிலும் கேளிக்கை அரங்கங்கள் என பலவகைத் தொழில்களில் வெற்றி கரமாக இயங்கிக் கொண்டி ருப்பவர். விக்டோரியாவில் உள்ள இவரது 'Pirates Arms' என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளூர் மற்றும் வௌ¤நாட்டுப் பயணிகளை மிகமும் ஈர்க்கிற புகழ் வாய்ந்தது. மக்களால் மிகவும் விரும்பப்படும் 'Beau Vaalan' என்கிற கடற்கரையின் அருகில் அமைந்துள்ள இவரது உணவுவிடுதியான 'Cocod'Or' எப்போதும் உல்லாசப் பயணிகளால் ஆக்ரமிக்கப் பட்டிருக்கும். இந்த விடுதியில் நான் வியந்தது தரைவிரிப்பு முதல் உச்சிக் கூரைவரை இந்திய அடயாளங்களைக் காட்டுவதாக அமைந்திருப்பது. தென்னையின் எல்லாப் பகுதிகளுமே பயன் படுத்தக் கூடியது என்பார்கள். இவர் தஞ்சை மாவட்டக்காரர் என்பதால் தென்னையின் எல்லா உறுப்புகளும் இந்த விடுதியில் வித்யாசமான முறையில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். தென்னைக் குருத்தோலைகள் நம்மூர் போலத் தோரணங்களாகத் தொங்குகின்றன. மட்டைஓலைகள் அழகான விசிறிகள் போன்று விரித்து எங்கும் நடப்பட்டுள்ளன. மேலே கூரையில் தென்னங்கீற்றுகள் அலங்காரமான முறையில் வேயப்பட்டுள்ளன. கொட்டாங்கச்சி ஆஷ்ட்ரேயாக மாற்றப் பட்டிருக்கிறது. அடிமட்டைகள் ஆங்காங்கே துப்பாக்கிகளை மூன்று மூன்றாய் முக்காலி வடிவில் நிறுத்தி வைப்பது போல நிற்க வைக்கப் பட்டிருக்கின்றன. பருத்த அடிமரங்கஆளை நட்டு அதன் மீது பெரிய அடி மரங்களைக் குறுக்குவாட்டில் வில்லையாக நறுக்கியது போன்ற அமைப்பில் வைத்து மேஜையாக்கி இருக்கிறார்கள். நம்மூரில் என்றால் இது வியப்பளிக்காது. ஆனால் அங்கு இது வித்யாசமான அலங்காரமாய் மனங்கவர்கிறது. இதே போலவே அவரது எல்லா நிறுவனங்களிலும் இந்திய அடையாளம் தெரியும். இந்த நிறுவனங்களுக் கெல்லாம் எங்கள் மாப்பிள்ளை திரு. ராஜசுந்தரம் தான் சட்ட ஆலோசகர். டாக்டரின் இரு சகோதரர்களும் அவருக்கு உதவியாய் நிறுவனங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் பழுத்த முருக பக்தர். ஆனால் சர்ச்சுகளுக்கும் ஈடுபாட்டுடன் செல்பவர். நம்மூர் வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து 'புனித வேளாங்கண்ணி மாதா'வின் விக்கிரகம் ஒன்றைக் கொண்டுவந்து இங்குள்ள ரோமன் கத்தோலிக சர்ச் ஒன்றில் நிறுவியுள்ளார். அதோடு அன்னை வேளாங்ககண்ணிக்கு ஆண்டுதோறும் உற்சவம் ஒன்றையும் கோலாகலமாய் நடத்தி வருகிறார். இவர் இந்நாட்டுக் குடியுரிமை பெற்று சிஷெல்ஸின் பிரஜை ஆகி விட்டவர். இந்நாட்டுக் குடியுரிமை உடையவரே இங்கும் நிலம், வீடு வாங்கமுடியும்.

தற்போது பிரசிடெண்டின் தனிமருத்துவராக இருப்பவரும் தமிழர்தான். டாக்டர் செல்வம் என்று அழைக்கப்படும் டாக்டர் பன்னீர்செல்வம் தஞ்சையைச் சேர்ந்தவர்., மருத்துவப் பணிக்கான அர்ப்பணிப்பும் அன்பு நெஞ்சமும் கொண்டவர். எப்போதும் சிரித்தமுகம். அலுத்துக் கொள்ளாத, நோயாளிகளுக்கு நோயின் கடுமை தெரியாமல்

நம்பிக்கையூட்டி மருத்துவம் செய்பவர். இராசியானவர் என்று மக்களிடையே பெயர் பெற்றவர். எனக்கு அங்கிருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் லேசாச நெஞ்சில் வலியும் படபடப்பும் ஏற்பட்டபோது, என் மாப்பிள்ளை அவரது நெருங்கிய நண்பரான டாக்டர் செல்வத்துக்குப் போன் செய்தபோது, 'நீங்கள் வரவேண்டாம், நானே இதோ வருகிறேன்' என்று சொல்லி அந்த அர்த்த ராத்திரியில் 8 கி.மீ தொலைவிலிருந்து வந்து என்னை சோதித்து, 'ஒன்றும் பயமில்லை. இது சாதா வலிதான். மாத்திரை தருகிறேன். தூங்கினால் சரியாகி விடும்' என்று தைர்யமளித்துத் திரும்பிய அந்த அன்புள்ளம் என்னை நெகிழ்த்தியது. நம்மூரில் அத்தனை எளிதில் இப்படி மருத்துவரின் உதவி கிடைக்குமா என்று மனம் எண்ணிப் பார்த்தது. இவரும் இந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்தான்.

'இவர் டாக்டர் ஷேக்ஸ்பியர் - நம்மூர்க்காரர் தான்' என்று டாக்டர் செல்வம் ஒருவரை அறிமுகப் படுத்தியபோது வித்யாசமான பெயரால் புருவம் உயர்த்தினேன்.

அவரது தந்தை ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் தனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞரின் பெயரை வைத்தாராம். ஆனால் அந்தப் பெயருக்கு ஏற்றவாறு தனக்கு ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடோ கவியெழுதும் ஆற்றலோ இல்லை என்று குறைப் பட்ட அவர் தன் மகளுக்கு ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற பாத்திரங்களில் ஒன்றான ஜூலியட்டின் பெயரை வைத்திருப்பதாகவும் அவர் தாத்தாவைப் போலவே ஆங்கிலத்தில் புலமைம் கவிதை எழுதும் திறமும் பெற்றவர் என்று சொன்னார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளை தன் மகள் எழுதி இருப்பதாகவும் சொன்னார். இவர் கலை ரசனையும் நடிப்பார்வமும் மிக்கவர். தமிழ் சினிமாவில் நம்மூரில் ஒரு படத்தில் உப பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பதை டாக்டர் செல்வம் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜவஹர் கிருஷ்ணமூர்த்தி தூத்துக்குடிக்காரர். அங்குள்ள பிரபல தொழிலதிபர் திரு பி.எஸ்.கிருஷ்ணமுர்த்தி நாடாரின் மகன். அவர் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. இங்கு சிஷெல்ஸ¤க்கு வந்து சொற்பொழிவுகள் ஆற்றி இ¤ருக்கிறார். 1990ல் சுகாதார அமைச்சகத்தில் பணியில் சேர்ந்த டாக்டர் ஜவஹர்

தற்போது Sychelles Marketting Board என்கிற வர்த்தக நிறுவனத்தில் மருத்துவ அரிகாரியாக உள்ளார். மிக எளிமையானவர். சன்னக் குரலில் - ஆனால் அழுத்தமாக எதிலும் தன் கருத்தை வலியுறுத்தும் தன்மையர். பகவான் இராமகிருஷ்ணரிடம் பெரிதும் ஈடுபாடு மிக்கவர். சீஷெல்ஸ் பற்றி நிறையத் தவகல்களை எனக்குத் தந்தவர். இவரது மனைவி திருமதி சுந்தரி ஜவஹர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். சமூக அறிவியல் பட்டதாரியான இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். ஒரே ஊர், ஒரே தொழில் என்பதால் என் மகள் மங்களநாயகின் நெருங்கிய தோழி. சாயிபாபா பக்தை. சனிக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி வரை சக பாபா பக்தைகளுடன் சேர்ந்து உள்ளூர் வினாயகர் கோயிலில் சாய்பாபா பஜனை செய்து வருகிறார்.

டாக்டர் பாலா என்கிற பாலகுருநாதன் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றொர் இருவருமே தமிழ் ஆசிரியர்கள் என்பதால், நல்ல தமிழறிவும் பற்றும் மிக்கவர். அங்கு நான் இலக்கியச் சொற்பொழிவு செய்தபோது மிகவும் ரசித்து அதன்மூலம் என்னிடம் பற்றுக் கொண்டவர். நாங்கள் நாடு திரும்பியபோது அவரும் சென்னையில் வேறு பணியாக உடன் வந்தவர்- சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு கால் டாக்சி பிடித்து ஏற்றிவிட்டு எங்களை வழியனுப்பி வைத்த அன்பினையும் உதவியையும் மறக்க முடியவில்லை. இவர் 1990ல் இங்கு வந்து, 13 ஆண்டுகள் அறுவை சிகிச்சை நிபுணராக (M.S) பணிசெய்தவர். தற்போது சீஷெல்ஸில் தனி மருத்துவ மனையை நடத்தி வருகிறார். இவரும் சிஷெல்ஸ் குடியுரிமை பெற்றவரே.

இப்படி நிறையத் தமிழர்கள் கல்வித் துறையிலும் மருத்துவத் துறையிலும் சிறப்பாகப் பணி புரிந்து செல்வாக்குடன் வாழ்கிறார்கள்.

-தொடரும்.

1 comment:

Nirek said...

Hi uncle,
How there? No long no post from your side...