1. கேள்வி (சுபமங்களா): பிறந்தது யாழ்ப்பாணம், குடும்பமாகி வாழ்ந்தது
மட்டக்களப்பு. ஆனால் உங்கள் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்தை மையமிட்டே
இருக்கின்றன. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?
பதில்: 'தீ' நாவல் மட்டக்களப்பு சூழலை வைத்து எழுதியபோதிலும்
மட்டக்களப்பு பழக்க வழக்கங்களையோ சொற்களையோ போட்டு அதற்கொரு
பிராந்தியத் தன்மையை நான் கொடுக்கவில்லை. ஆனால் பிராந்தியத் தன்மை
கொடுத்து செய்யப்பட்டது அனைத்துமே யாழ்ப்பாணத்தைக் களனாகக்
கொண்டவைதான். காரணம் யாழ் வாழ்க்கையைக் காரசாரமாக விவாதித்தவன்
நான் யாழ்ப்பாணத்து ஜாதியத்தின் கொடுமையை நேரடியாக அனுபவித்தவன்
நான். எனவே யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாண வாழ்க்கையின் பழக்க
வழக்கங்களை உட்கொண்டு யாழ்ப்பாணத்தவனாக இருந்து கொண்டே, அதே
சமயத்தில் அதிலிருந்து வேறுபட்டவனாக இருந்து பார்க்கும் பொழுது ஒரு
அலாதியான ஒட்டுறவு அற்ற ஒரு துறவு போன்ற மனோபக்குவத்துடன் அந்த
வாழ்க்கையைப் பார்க்க முடிந்தது. மற்றவர்களுக்கு இல்லாத பார்வை அது.
எனவேதான் மற்றவர்கள் கதைகளிலே இல்லாத ஒரு தன்மையை என்னுடைய
அணுகுமுறையிலே பார்க்கலாம். அது துறவு நிலை. அதில் பந்தபாசம் கிடையாது.
அதுதான் அந்த வித்தியாசம்.
2. கேள்வி: உங்களது படைப்புகள் மீதான விமர்சனங்களும் பாராட்டுகளும்
இருந்தாலும் அதன் உண்மை நிலை - தனித்துவம் உங்களுக்கேயான பிரத்தி
யேகமான சிறப்பு என்ன என்று சொல்ல முடியுமா?
பதில்: Plot, Theme இரண்டுக்கும் ஏற்றதாக நடையையும் உருவத்தையும்
கொடுக்க வேண்டும் என்று நான் கலைஞனாக முயற்சி செய்தபோதிலும்,
அதற்கு ஒரு முழுமையான இலக்கிய உருவம் கொடுப்பதற்கு இத்தகைய நடை
தான் உதவும் என்று நான் நினைத்த போதிலும் இந்த வேறுபட்ட நடைகளைக்
கூட என்னுடைய கதைகளைச் சுவாசிக்கும் பலரும் இது எஸ்.பொவினுடையது
தான் என்று பெயர் போடாமலே இனங்கண்டு கொள்வார்கள். இந்த நடை
வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எப்படி இனம் காண்கிறார்கள்? சற்றுப்
பெருமையாகச் சொன்னாலும் ஊடுபாவாக உள்ளது இலக்கியச் சத்தியம். நான்
எதைச் சொல்லப் புறப்பட்ட போதிலும் என்னுடைய பக்குவத்திற்கேற்ப நான்
எதைச் சத்தியம் என்று நினைக்கிறேனோ அதன் ஒலி அதில் இருக்கும். இது
சத்தியத்தின் ஒலி, நடைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேர்ந்த வாசகனால்
இனங்காண முடியும். எனவே There was something in common in
the diversityof styles which I employ. அதை மறுக்க இயலாது.
3. கேள்வி: உங்களுக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் என்ன பிரச்சினை?
நற்போக்கு இயக்கம் என்ற ஒன்றை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள்?
பதில்: முற்போக்கு இலக்கியத்துக்கும் எனக்கும் அதிகம் முரண்பாடு
இருந்ததாகச் சொல்ல முடியாது. இந்த முற்போக்கு இலக்கிய கோஷத்தை
ஒரு கட்டத்தில் தலைமையேற்று நடத்த வந்தவர்கள் தவறான பாதையில்
இட்டுச் சென்றார்கள்.அது எனக்குத் தெரிந்தது. அதனால் முரண்பட்டேன்.
மார்க்ஸீயம் வளர்க்கப்பட்ட ரஷ்யாவில் உள்ள எழுத்துக்கள்தான் எங்கள்
மாதிரிகள் என்று சொல்லும் பொழுது, எங்களுடைய மண்ணிலிருந்தும்,
எங்களுடைய தேசச் சூழலிலிருந்தும் அந்நியப்படுத்தும் வேலையை அவர்கள்
செய்தார்கள். தமிழ் இலக்கியத்திலிருந்து வந்து விட்டால் தமிழ் மொழியினதும்,
இனத்தினதும் தனித்துவமான சில விழுமியங்களும் சில மரபுகளும் இருக்கின்றன.
தமிழ்ச் சொற்களை நான் உபயோகிக்கும் போது அந்த தமிழ் இனத்தினுடைய
அடையாளத்தைப் பேணும் ஒரு பணியிலும் நான் ஈடுபட்டிருக்கிறேன்.
நம்முடைய மரபுகளின் தொடர்ச்சியாகவே இந்தப் புதுமைகள் தன்மைகள்
செய்ய வேண்டும். அதுதான் நற்போக்கு.
4. கேள்வி: இன்றைய நவீன தமிழ் இலக்கியம் பற்றி?
பதில்: நம் தமிழ் வாழ்கையில் உள்ள அவலங்களை - அவதிகளை -
ஏக்கங்களை - எதிர்பார்ப்புகளை - அவர்களுடைய நம்பிக்கைகளை -
சோகங்களை தமிழ் இலக்கியங்களாகப் படைத்துத் தர முனையும்போது
தமிழ் மண்ணின் உண்மையான உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எந்த இஸமும்
எனக்கு ஒரு புதிய வலுவைத் தராது என்றே நம்புகிறேன்.இலக்கியவாதிகள்
படைப்புச் சத்தியத்துக்கு முதன்மை கொடுத்துப்படைக்கட்டும். அதன்
உண்மையே அழகு. பொய்க்குத்தான் பூவேலையும்பூச்சுவேலையும் தேவை.
படைப்பிலே சத்தியத்தைக் கோட்டை விட்டுவிட்டு, அதன் வலிமைக்கு
இசம்களின் துணையைத் தேடுவதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. 0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment