1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.
2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப்
பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.
3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹிருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தைப்
பிறருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.
4. இவ்வுலகில் எதிரிடையான எவ்வளவோ பொருள்களும் குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மை இருக்கிறது. கூடவே தீமையும் இருக்கிறது. அழகு இருக்கிறது. அதனுடனேயே அருவருப்பான விஷயமும் இருக்கிறது. கருணை இருக்கிறது. கொடுமையும் இருக்கிறது....இவற்றில் எழுத்தாளன், எப்படி எந்தெந்த அளவுக்கு, எந்தெந்த விஷயங்களைப் பொறுக்கி எடுத்துத் தன் சிருஷ்டித் தொழிலை செய்ய வேண்டியது? என்ன அளவுகோல்? எப்படி எடைபோட்டு விஷயங்களை எடுத்துக் கொள்வது? எந்தச் சல்லடைமூலம் தனக்கு வேண்டிய சாமான்களை சலித்து எடுப்பது?
........எழுத்தாளன் நல்லதோர் எண்ணத்தில், மனதைத் தூய்மைப்படுத்தும் சிந்தனையில், உள்ளத்தை உயர்த்தக்கூடிய அனுபவத்தில் நிலைத்து நிற்குமேயானால் அப்போது எழுத்தின் தன்மையும் தானே சிறந்தோங்கி விளங்குகிறது.
5. எழுத்து என்பதே சத்தியம்(truth), சுந்தரம்(beauty), சிவம்(goodness) இவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவையே உலகை இயக்குபவை. எழுத்திலே இவற்றையே பிரதிபலிக்க வேண்டும். தவிர ஒரு அடிப்படையான குறிக்கோளும் வேண்டும். அடிப்படையான லட்சியத்துடன் எழுதும், எழுதப்படும் எதிலுமே இவை மூன்றும் பிரதிபலிக்காமலிராது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment