பாவண்ணன் லா.ச.ராவைப் போல ஒரு அழகு உபாசகர். 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதிதாசன் சொன்னது போல அவருக்கு எங்கெங்கும் அழகே தென்படுகிறது. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் அவரது கண்களில் தென்படுபவை எல்லாமே அழகுதான். பூங்காக்களில் தத்தித் தாவும் வண்ணப் புள்ளினங்களில், அங்கே விளையாடும் குழந்தைகளில், வானில் வலசை போகும் பறவைகளில், மஞ்சு தவழும் மலைக்குன்றுகளில், அவற்றிடையே வானின்று ஒழுகும் அருவிகளில், ஆரவாரமற்று அமைதியாய் ஓடும் ஆறுகளில் என்று - 'தொட்ட இடமெல்லாம் 'புரட்சிக் கவிஞருக்கு 'அழகென்பாள் கவிதை தந்த' மாதிரி, பாவண்ணனுக்கு படைப்புக்கான விஷயங்கள் கிடைக்கின்றன. தொட்டதில் எல்லாம் மனம் தோய்கிற வரம் பெற்றவராக, 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலாரைப்போல தான் காணும் வதைபடும் மாந்தர்களுக்காக மனங்கசிந்து உருகுபவராக அவரது கட்டுரைகள் அவரை நமக்குக் காட்டுகின்றன. பார்க்கிற காட்சிகள் மட்டுமல்ல, படிக்கிற கவிதைகள், பழம்பாடல்கள் எல்லாமும் அவரைப் பரவசப் படுத்துகின்றன. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் பெருநோக்கில், அவற்றைத் தான் பரவசப்பட்டு உணர்ந்தவாறே தனது வாசகரையும் உணர வைத்து உருகவைப்பதில் வெற்றி காண்பவர். 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள இந்த 'துங்கபத்திரை' கட்டுரைத் தொகுப்பு அதை நிரூபிக்கிறது. இதில் அவர் காட்டும் காட்சிகள், நிகழ்வுகள் எல்லாம் நாமும் காண்பவையாகவும், நம்முடையவையாகவும் இருப்பதால் நாம் அவருடன் நெருக்கத்தை உணர முடிகிறது. இது ஒரு சிறந்த படைப்பாளிக்கே சாத்தியம்.
ஒவ்வொரு கட்டுரையுமே ஒரு சிறுகதைபோல் சுவாரஸ்யமாக இருக்கிறது. 'ஒரு வீட்டின் ஆயுட்காலம்'என்னும் முதல் கட்டுரை, தேவையைப் பொறுத்து அமைகிற சொந்த வீடு பற்றிய அபிமான உருக்கத்தின் பல நிலைகளைப் பேசுகிறது. ஆசைப்பட்டுக் கட்டிய, வாங்கிய வீட்டை விற்க நேரும்போது உள்ள மனநிலை, நேசித்த வீட்டைப் பிரியும்போது ஏற்படும் மனக்கிலேசம் பற்றியெல்லாம் இதில் பாவண்ணன் காட்டும் காட்சிகள் நம்மையும் உருக வைக்கின்றன. வீட்டை இடிக்கிற தொழிலாளிகூட 'கட்டினவங்களுக்கு என்ன மொடையோ, பாத்துக்க முடியாத பிரச்சினையோ, வித்துடறாங்க. ஆனா வீடுங்கறத வெறும் சிமிட்டும் மண்ணும் கலந்த செவுருன்னு நெனச்சிடலாமா ஐயா. எவ்வளவோ நல்லது கெட்டதுங்க இந்த வீட்டுக்குள்ள நடந்திருக்கும். மனுஷங்க சந்தோஷம், துக்கம், சிரிப்பு, அழுகை எல்லாத்தயும் இதுவும் மௌனமாப் பாத்துக்கிட்டுதானே இருக்குது. அதுக்கும் உயிர் இருக்குமில்லையா?' என்று பாவண்ணனிடம் வீட்டை இடிக்க நேருகிற பாவத்தை மனம் வலிக்கப் பேசுகிறான். நமக்கும் வலிக்கவே செய்கிறது.
அடுத்துள்ள 'எரிந்த வீடும் எரியாத நினைவும்' என்கிற கட்டுரையும் ஒரு வீட்டின் இழப்பைப் பேசுகிறது.கண்ணனின் இதழ் ஸ்பரிசத்தை அறிந்த வெண்சங்கு- ஆண்டாளுக்கு எழுப்பியிருக்கும் கேள்விகளும், தலைவனின் வருகையை எதிர்பார்த்து ஏங்கும் குறுந்தொகைத் தலைவி தோழியிடம் எழுப்பும் ஐயங்களும், கன்னடக் கவிஞர் சிந்தாமணி கொட்லேகெரேயின் 'கங்கைக் கரையில் கிடந்த கல்' எனும் கவிதையில் வரும் கல் அவருள் எழுப்பும் காட்சிகளுமான - பாவண்ணனை அசைபோட வைக்கும் அவரது அவதானிப்புகளால் நமக்கு ரசமான இலக்கிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. இலங்கைக் கவிஞர் வில்வரத்தினத்தின் வீடு இந்திய அமைதிப்படையால் அழிக்கப் பட்ட போது, அந்த வீட்டின் நினைவாக ஒரு பொருளை எடுத்துவரச் சென்ற அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வேதனையோடு குறிப்பிடுகையில் கவிதைப்பரப்பின் அதிசயங்களை தானும் வியந்து நம்மையும் வியக்க வைக்கிறார்.
கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில் அன்று 15 ரூபாய் பரீட்சைக்குக் கட்ட முடியாத பெற்றோரையும், இன்று லட்சக்கணக்கில் பணம் கட்ட வசதி இருந்தும் பிள்ளைகளின் கல்வி வாய்ப்புக்கு அலைகிற, பிள்ளைகளின் மனப்போக்கு பற்றிக் கவலைப்படுகிற இன்றைய பெற்றோர்களையும் ஒப்பிட்டு சில யதார்த்தங்களைச் சுட்டி 'புதிய பெற்றோர்கள்' என்னும் கட்டுரை பேசுகிறது.
தலைப்புக்கட்டுரையான 'துங்கபத்திரை'- துங்கபத்திரை நதி பாவண்ணனுக்கு ஏற்படுத்திய வித்தியாசமான அனுபவங்களை ரசமாகச் சொல்கிறது. பல்வித எண்ண அலைகளை அங்கு சுற்றுலாவரும் பள்ளிக் குழந்தகளும் அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களும் எழுப்புகிறார்கள்.
அவரது சொந்த ஊரில் அவர் மிகவும் நேசிக்கும் ஏரி - நீர்தளும்பி அலையடித்த நிலை மாறி இன்று வறண்டு கிடக்கும் கோலத்தைப் பார்க்கும் பாவண்ணனுக்குள் மனித வாழ்கையின் சுமைகள், முடிவே இல்லாத - பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்பற்றி எல்லாம் எழும் ஆழ்ந்த சிந்தனைகளை 'வாழ்க்கை எனும் சுமை' என்கிற கட்டுரை விரிவாகப் பேசுகிறது. வாழ்க்கைச் சுமையை யதார்த்தமாக ஏற்கும் லட்சுமி அம்மா என்கிற உழைக்கும் பெண்மணியின் கதை இந்தியாவின் உழைக்கும் பெண்களின் வாழ்வே இப்படித்தான் என்று
காட்டுகிறது.
'மகிஜா என்றொரு மனிதர்' கட்டுரையில், பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம் ஆண்டுக் கணக்கில் குப்பை மேடாக மாறி இருந்தது - மகிஜா என்றொரு மாமனிதரின் முயற்சியால் அற்புதப் பூங்காவாக மாறியது பாவண்ணனைக் கவர்கிறது. அதற்கு அவர் பட்ட சிரமங்கள், அரசியல்வாதிகளின் அலட்சியம், அரசு அலுவலர்களின் சிகப்புநாடா நடைமுறை என்று எவ்வளவோ தடை ஏற்பட்டும் அம்மாமனிதர் அயராது நடை நடையாய் நடந்து வெற்றி கண்டதற்கு தானும் நண்பர்களும் உதவியதையும், இடையே அரசியல்வாதிகளைப் பற்றிய எள்ளல்களையும் பாவண்ணன் ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார்.
பார்க்கிற எளிய மனிதர்களிடம் எல்லாம் பாவண்ணனுக்குப் பரிவும் அக்கரையும் உண்டாகின்றன. 'ஆறுதல்' என்கிற கட்டுரையில் பூங்காவில், கடலை விற்கும் ஒரு மனிதரின் சோகக் கதையைக் கேட்டு உருகி அவருக்கு ஆறுதல் சொன்னதை நினைவு கூர்கிறார். 'சந்திப்பு' உதவ யாருமற்ற குப்பம்மாள் என்கிற வயதான ஏழை மூதாட்டியின் சோகக் கதையை விவரிக்கிறது.
'சொர்க்கத்தின் நிறம்' என்னும் ஈரானிய திரைப்படம் தந்த, அழுத்தமான விடுபடமுடியாத தாக்கம் பற்றி ஒரு கட்டுரையில் சொல்கிற பாவண்ணன், அப்படம் 'செல்வமோ வசதியோ சொர்க்கமாக இருக்க முடியாது. மனம் விரும்புவதை அடைவதே மிகப்பெரிய சொர்க்கம்' என்று உணர்த்துவதைக் காட்டுகிறார். வில்லியம்ஸ் என்கிற மேலைநாட்டு மருத்துவர் ஒருவரைப் பற்றி அவர் படிக்க நேர்ந்த புத்தகத்தில் கண்ட அம் மருத்துவரது அரிய சாதனை அவரை நெகிழ்த்திய அனுபவத்தை 'சாவை வென்ற வீரர்' சிலிர்ப்புடன் விவரிக்கிறது. புரந்திர
தாசரின் பாடல்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது 'நெஞ்சை நிரப்பிய பாடல்கள்' என்கிற புரந்திரதாசர் பாடல்கள் பற்றிய பாவண்ணனின் ரசானுபவம்.
இயற்கையின் மீதான பாவண்ணனின் தீராத தாகத்தையும் பரவசத்தையும், கர்நாடகாவின் 'ஜோக்' அருவியை அவர் கண்டு சிலிர்த்த அனுபவத்தை அதே பரவசம் நமக்கும் ஏற்படுகிற மாதிரி சொல்லியுள்ள 'அருவி எனும் அதிசயம்' கட்டுரையில் காண்கிறோம். அந்த அருவி பற்றிய கவித்துவமான வருணனையே அற்புதமானது.நாமும் அவருடன் நின்று ஜோக் அருவியின் சாரலையும் அது ஒழுகும் அழகையும் ரசிக்கிறோம்.
'Out of sight is out of mind' என்பார்கள். நம் பார்வையிலிருந்து தப்பியவை நம் கவனத்திலிருந்தும் தப்பிவிடுவது நம் அனுபவம். ஆனால் பாவண்ணன் பார்வைக்குத் தப்பியதை அவர் மறப்பதே இல்லை. அவரது தேடல் மனம் விடாது அதைத் தேடிக் கண்டடைகிறது என்பதற்கு 'பச்சை நிறத்தில் ஒரு பறவை' என்கிற கட்டுரையே சான்று. ஒரு நாள் மைதானம் ஒன்றில் புதிய பச்சைநிறப் பறவை ஒன்றைக் கண்டவர் அதன் அழகில் மயங்கி அதன் பெயரை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அது என்ன பறவை என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களுடன் காத்திருந்தும் அந்தப் பறவை மீண்டும் வரவில்லை. போகட்டும் என்று நாமானல் விட்டு விடுவோம். ஆனால் பாவண்ணன் அதை மறந்துவிடாமல் மறுநாள் அதே நேரத்தில் அதே இடத்தில் காத்திருந்தும் பறவை வரவில்லை. பிறகு ஒரு நாள் அவருக்கு மட்டும் அது காட்சி தருகிறது. தன்னை ஈர்த்த எதையும் பற்றி, விடாது தேடி ஆராய்கிற அவரது தேடல் மனத்தை இதில் பார்க்கிறோம்.
'தாமரை இலையின் தத்துவம்' எனும் கட்டுரையும் அவரது தன்னை மறந்த தேடல் தாகத்தைச் சொல்வதாக உள்ளது. அவரது மேலதிகாரியின் புதுமனை புகுவிழாவிற்காக திருவானைக்காவுக்குச் சென்றவர் மலைக்கோட்டையையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும், கல்லணையையும் பார்க்கப்போய் நிகழ்ச்சி முடிந்தபின் அதிகாரியின் வீட்டுக்குப் போகும்படி நேர்ந்து விடுகிறது. மலைக்கோட்டையின் உச்சியில் நின்று கருநீல வண்ணத்தில் விரிந்திருக்கும் வானத்தையும், இறைந்துகிடக்கும் நட்சத்திரங்களையும் ரசிப்பதிலும், சித்தன்னவாசல் ஓவியங்களில் கண்ட பற்றின்மையை உணர்த்தும் தாமரை இலைகள் சுட்டும் வாழ்க்கைத் தத்துவத்திலும் ஆழ்ந்து போகிறார்.
சித்தமருத்துவ நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவருடைய ஊர்த் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றவர் அந்த நண்பரின் குடும்பத்தாரிடையே பரம்பரையாகத் தொடரும் சித்த மருத்துவம், சிலம்பம் முதலிய கிராமியக் கலைகள், அங்குள்ள ஈஷா மையப் பள்ளியின் கல்விமுறை ஆகியவற்றைக் கண்டு வியந்த அனுபவத்தை'அழிந்து போன அறிதல் முறை' கட்டுரை சுவைபடச் சொல்கிறது.
கடைசிக் கட்டுரையான 'பார்வையும் பரிவும்', இன்றைய தாராளமயப் பொருளாதாரமும் ஏழைகளின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதாயில்லை என்பதும், அப்பாவி எளிய மக்கள் மீது பலருக்கும் உள்ள மனச்சித்திரம் அவ்வளவு உயர்ந்ததாய் இல்லை என்பதும் அவர் பார்க்க நேரிடும் பிச்சைக்காரர்களும், கழைக் கூத்தாடிகளும் உழைக்கும் மக்களும் உணர்த்தி மனதைப் பாரமாக்குவதை உருக்கமாகச் சித்தரிக்கிறது.
இவ்வாறு, தன்னைச் சுற்றியுள்ள புறவுலகின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் கூர்ந்து கவனிப்பவராகவும், தொடர்ந்து தன்னைப் பாதித்தவற்றை அசை போடுபவராகவும் பாவண்ணனைக் இக்கட்டுரைகளில் காண்கிறோம். அத்துடன் அழகுணர்ச்சியொடும் சமூக அக்கரையோடும் மனித நேயத்தோடும் தான் கண்டுணர்ந்தவற்றையும், ரசித்தவற்றையும் - அலுப்பை ஏற்படுத்தாத எளிய இனிய நடையில் படைத்தளிக்கும் திறம் கொண்டவராகவும் அவரை இவை நமக்குக் காட்டுகின்றன. 0
நூல் : துங்கபத்திரை
ஆசிரியர் : பாவண்ணன்
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை
Sunday, December 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான தொகுப்பு. மிகச் சுவாரஸ்யமான மொழி நடை. தொகுப்பு குறித்து சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே !
பாவண்ணனின் மறக்க முடியாத சிறுகதையொன்று; மிதிவண்டியில் ஊர் சுற்றும் ஒருவன், மழைக்காக சாலையோர வீடொன்றில் தங்க நேரிடும். கைம்பெண் ஒருத்தி மகனுடன் வாழும் குடிசை. மழை நின்றவுடன் கூடவே சிறுவனை அருகிலிருக்கும் ஊரொன்றில் விட்டு செல்ல அழைத்து செல்வான் கதையின் நாயகன். மிதிவண்டியை நேசிக்கும் சிறுவன் குரங்கு பெடல் போட்டு மிதிவண்டியை ஓட்டி சென்ற பொழுது, வரும் பேருந்தில் ஏறி, மிதிவண்டியை சிறுவனுடனே விட்டுச் சென்று விடுவான். மனதை நிறைத்த கதை.
துங்கபத்திரை கட்டுரை நூலை வாங்க பார்க்க வேண்டும்.
நன்றி.
Post a Comment