Wednesday, August 03, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 9.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)

திரைப்பட ரசிகர்களுக்குத் தம் அபிமான நடிகர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பதைப்
போல, வாசகர்களுக்கும் தம் அபிமான எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பது
இயல்பு தான். அது போன்ற ஆர்வம் எனக்கும் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் ஆரம்ப
நாட்களில் இருந்தது. எனவே அப்போதெல்லாம் சென்னை சென்ற நாட்களில் பல
எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை
ஆசிரியர்களையும் சந்திப்பதுண்டு.

'குமுதம்' அலுவலகம் சென்றால் ஆசிரியர் எஸ்.ஏ.பி யைச் சந்திக்கவே முடியாது.
யாராவது உதவி ஆசிரியர் தான் வெளியே இருக்கும் 'காத்திருப்போர் அறை'யில் வந்து
விசாரிப்பார். விகடனிலும் அப்படித்தான். இப்போது நினைத்துப் பார்த்தால் என் பேதமை
குறித்து வெட்கமாக இருக்கிறது. ஒரு பிரபல பத்திரிகையின் ஆசிரியர் தனது அவசர,
அவசிய வேலைகளைப் போட்டு விட்டு எல்லோரையும் சந்திக்க முடியாது தான். என்
கதைகளையும் நான் எடுத்த போட்டோக்களையும் பிரசுரத்துக்குக் கொடுக்கத்தான் நான்
அந்த அவலுவலகங்களுக்குச் சென்றிருக்கிறேனே அல்லாமல் ஆசிரியரகளைத்
தரிசிப்பதற்காகச் சென்றதில்லை. அதனால் எனக்கு ஏதும் ஏமாற்றமில்லை. ஆனால்
அவர்களால் அழைக்கப்பட்டு ஆசிரியர்களைச் சந்திக்க நேர்ந்ததுண்டு. அப்படி ஒரு தடவை
ஆனந்த விகடன் ஆசிரியர் திரு.எஸ.எஸ் வாசன் அவர்களை, அழைப்பின் பேரில் நேரில்
சந்திக்கிற வாய்ப்பு நேர்ந்தது.

திரு.வாசன் அவர்கள் தான் இன்றைய விகடனின் 'மாணவர் திட்டத்'தை 1956ல்
உருவாக்கியவர். அது இன்றைய மாணவ நிருபர் போன்றது அல்ல. அது 'மாணவ
எழுத்தாளர்' திட்டம். வாரம் ஒரு மாணவரது படைப்பை வெளியிட்டு, ஒரு ஆண்டு
முடிந்ததும் அதுவரை அறிமுகமான 52 வார மாணவப் படைப்பாளிகளில் இருவரைத்
தேர்வு செயது உதவி ஆசிரியர் பணிக்கு அமர்த்துவதான திட்டம். அப்படி 1956 -57ல்
வெளியான 52 படைப்புகளை எழுதிய மாணவர்களுக்கு, வழக்கமான சன்மானத்துடன்
ஆண்டிறுதியில் 'ஆனந்தவிகடன்' என்று பெயர் பொறித்த 'பைலட்' பேனா ஒன்றும்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்த 52 பேரில் நானும் ஒருவன்.

அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் அனுப்பிய 'குழந்தைததெய்வம்'
என்ற எனது சிறுகதை நான் படிப்பை முடிக்கும் போது, 1957 மே மாதம் பிரசுரமாயிற்று.
அதுதான் 'ஆனந்த விகடனி'ல் வெளிவந்த எனது முதல் கதை. எனது போட்டோவுடன்
என்னைப் பற்றிய குறிப்புகளோடு கதை பிரசுரமான போது பெரிதும் கிளர்ச்சியுற்றேன்.
அடுத்து, ஜூலையில் நான் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஏற்ற சுருக்கில், எனக்கு
ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தின்படி, உதவி ஆசிரியருக்கான நேர்காணலுக்கு
அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. 52 மாணவப் படைப்பாளிகளில்
பத்து பேரைத் தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். போக வர பயணப்
படியும் அனுப்பி இருந்தார்கள். ஆசிரியர் வாசன் அவர்களே அந்தப் பத்து பேரையும்
அவரது அலுவலக அறையில் வைத்து நேர்காணல் நடத்தினார்கள்.

எனது முறை வந்த போது, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் என்கிற பிரம்மாண்ட சாதனை
யாளரைச் சந்திக்கப் போகிறோம் என்கிற படபடப்போடு அவரது அறையில் நுழைந்தேன்.
பெரிய நீண்ட மேஜையின் பின்னனால், பளீரென்ற தூய வெள்ளைக் கதருடையில்
இன்முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். எதிரில் மேஜை மீது எங்களது கதைகள்
வந்த விகடன் இதழ்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவரது கையில் என் கதை வந்த
இதழ் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. எதிரே அமரும்படி சொல்லி விட்டு, "இப்போது என்ன
செய்கிறீர்கள்?" என்று விசாரித்தார். உயர் நிலைப்பள்ளிக்கு அபோது தன் நியமனம் ஆகி
பணியில் சேர்ந்திருப்பதைச் சொன்னேன். "ஆசிரியராக இருப்பதால் தான் குழந்தைகளின்
உளவியலை வைத்து எழுதி உள்ளீர்கள். கதை நன்றாக உள்ளது. ஆனால் நம் திட்டத்தின்
நோக்கம் உங்களுக்குத் தெரியுமல்லவா? வேலை இல்லாதவருக்கு வேலை கொடுப்பது
தான் நமது நோககம். உங்களுக்குதான் வேலை கிடைத்து விட்டதே - வேலை இல்லாத
ஒருவருக்கு இதைத் தரலாமல்லவா?" என்றார்.

எனக்குள் ஏமாற்றம் பரவியது. முகத்தில் அதைக் காட்டாமல், "சரி!" என்றேன் குரல்
இறங்கி. வேறு என்ன சொல்ல முடியும்?

"விகடனுக்குத் தொடர்ந்து எழுதுங்கள்" என்று கை கூப்பி விடை கொடுத்தார். படி இறங்கி
வரும் போது நடை கனத்தது. ஆனந்தவிகடனில் உதவி ஆசியராகப் போகிறோம் என்ற
கனவோடு வந்தவனுக்கு அது கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தாலும், "சரி, போய்
வாருங்கள். முடிவைப் பிறகு தெரியப்படுத்துகிறோம்" என்று சொல்லாமல் உண்மை
நிலைமையை மறைக்காது உடனே தெரிவித்த வாசன் அவர்களது நேர்மையை மனதுக்குள்
பாராட்டியபடி திரும்பினேன்.

பிறகு அந்த இரண்டு இடங்களுக்கும் ஆம்பூர் கோ.கேசவன் அவர்களும், பின்னாளில்
முகுந்தன் என்ற பெயரில் சிறந்த நகைச்சுவை எழுத்தளராய்ப் புகழ் பெற்று மறைந்த
எஸ்.வரதராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப் பட்டார்கள். ஆனால் அந்த
இருவரும் அதிக நாட்கள் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றவில்லை. ஆம்பூர் கேசவன்
வெகு சீக்கிரமே மரணமடைந்தார். வரதராஐன் சுதந்திர எழுத்தாளராக ஓரிரு ஆண்டுகளில்
விகடனிலிருந்து விலகினார். அத்துடன் அந்தத் திட்டமும் முடிந்து போனது.

வாசன் அவர்களைச் சந்திக்கும் முன்பாக பத்திரிகைத் துறையில் அனுபவம் கொண்டிருந்த
என் உறவினர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் "பத்திரிகையில் சேர்ந்து நீ ஒன்றும் எழுதி
விட முடியாது. பள்ளிக்கூடத்தில் நோட்டுத் திருத்துவதறகுப் பதில் இங்கு வரும் கதை
களைத் திருத்தப் போகிறாய். வெளிப் பத்திரிகையில் எழுத அனுமதிக்க மாட்டார்கள்.
சம்பளமும் இப்போது உள்ள வேலையில் கிடைப்பதை விட அதிகம் கிடைத்து விடாது.
உத்தியோக உயர்வெல்லாம் கிடையாது" என்றார். பின்னாளில் அத உண்மையும் ஆயிற்று.
கல்வித் துறையில் பதவி உயர்வுகளும் கணிசமான ஊதியமும் பெற்றுத் திருப்தியாக
இருந்ததுடன், விகடனிலும் பிற பத்திரிகைகளிலும் நிறைய எழுதி ஓரளவு சாதிக்கவும்
முடிந்தது. ஆனால் இன்றளவும், வாசன் அவர்களைச் சந்தித்தது இனிய நினைவாகவே
இருந்து வருகிறது. 0

2 comments:

புல்லாங்குழல் said...

முழு நேர எழுத்தாளர் வாழ்வு என்பது ஜெயகாந்தன், ஜெயமோகன் என யாரோ ஒரு சிலரால் தான் முடிகின்றது. உங்கள் அனுபவ படிப்பினை பகிர்வை தொடருங்கள்.

RAMESHKALYAN said...

உண்மைதான். முழுநேர எழுத்தாளராக இருப்பதற்கு எழுதுபருக்கும் அதைவிட அவருடைய குடும்பத்துக்கும் அசாத்திய தைரியம் வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஜே.கே. அசோகமித்திரன் தற்போது எஸ்.ராமகிருஷ்ணன் ஜெயமோகன் (அவர் வேலை ருசியை பார்த்துவிட்டு பிறகு விட்டவர் என்று எண்ணுகிறேன் - அது இன்னும் கடினம்). ஒரு பேட்டியில் என்று நினைக்கிறன் - லா.ச.ரா - பையன் நன்றாக கதை கட்டுரை எழுதுகிறான் என்றால். ஓஹோ.. நல்ல விஷயம்தான். சரி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறான் என்று கேட்டதாக - படித்ததாக நினைவு. சமீபமாக இ.பா பேசும்போது பு/பி போன்ற பெரும் எழுத்தாளர்கள் எழுத்துக்காக வறுமையை சம்பாதித்து கொண்டவர்கள் என்றது நினைவுக்கு வருகிறது.