Monday, January 24, 2005

உவமைகள் வருணனைகள் - 34

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள்: 34 : எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து:

1. முப்பத்திரண்டு குணங்களில் இரண்டு குணங்கள் தவிர மற்றவையெல்லாம் பிள்ளையிடத்தில் இருக்கின்றன என்பார்களே - அதாவது, தனக்காகவும் தெரியாது, ஒருத்தர் சொன்னலும் கேட்கமாட்டான் என்று - அது துரைச்சாவுக்குத்தான் பொருத்தமானது.

- 'புது மாட்டுப் பெண்' நாவலில்.

2. அவருடைய சம்சாரம் என்னவோ ரொம்பக் கட்டுப் பெட்டி. நிரக்ஷரகுக்ஷ¢. சடகோப அய்யங்காரே குடுமி வைத்துக் கொண்டிருக்கிற மனுஷர். குடுமி ஒரு பாபமும் பண்ணவில்லை. ஆனாலும் குடுமி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் இம்மாதிரி முற்போக்கான விஷயங்களை ஆதரிப்பது அசம்பாவிதம் போல் ஏதோ ஒரு உணர்ச்சி நமக்குத் தட்டுகிறது. கிராப்புக்குத்தான் அவை பொருத்தமாக இருக்கின்றன.

- 'பத்மநாபன்' கதையில்.

3. சுகுமாரி என்றது எங்க வீட்டுக்காரி. சுகுமாரி என்ற பெயரைச் சுருக்கி 'சுக்கு' என்று நான் அவளைக் கூப்பிடுகிறது. பேருக் கேத்தாப்போல் அவள் கொஞ்சம் காரமாகவே இருப்பாள். அவள் வீட்டிற்கு வந்தது முதல் அவள் சொல்லுகிற பேச்சை நான் கேட்கிறது என்கிறதே தவிர நான் சொல்லுவதை அவள் கேட்கிறது என்பது என்னவோ கிடையாது.

- 'மூக்குத்திருகு'.

4. அந்தக் கணவனை கல்யாணத்துக்கு முன் அவள் முன்பின் அறிந்தவளல்ல. தற்கால கல்யாணங்களைப் போல் அவள் தகப்பனார் இரவாய்ப் பகலாய் ரெயில் பிரயாணம் செய்து, தந்தியும், தபாலுமாய்ப் பறக்க வைத்து, காசி முதல் ராமேஸ்வரம் வரையில் சல்லடை போட்டுச் சலித்து, அலுத்துப்போய்க் கடைசியாய்ப் பிடித்துக் கொண்டு வந்த சரக்கு அந்தப் புருஷன். கல்யாண காலத்தில் கோணியில் போட்டுத் தைக்கப் பட்டிருக்கும் சரக்கு போலவே இருந்தான். அவிழ்த்துப் பார்த்தால் 'ரேஷன்' அரிசி மாதிரி ஆய்விட்டாலும் ஆய்விடலாம். இந்த ரீதியில் ருக்மணிக்குச் சாரங்கபாணி புருஷன் ஆனான்.

- 'அங்குசம்'.

5. மாமியார் ரகத்தில் எத்தனையோ விதம். பிள்ளைக்கும் நாட்டுப்பெண்ணுக்கும் சண்டை மூட்டிவிட்டுப் பிள்ளை சம்சாரத்தை அடிக்கும்போது "அடே அப்பா கையால் அடிக்காதேடா! பெண் பாவம் பொல்லாது. பெண்ணைக் கைதீண்டி அடிக்கக் கூடாதுடா, ஒரு கட்டையாவது எடுத்துக் கொள்ளுடா!" என்று சொல்லுகிற மாமியார்களும் இருக்கிறார்கள். இன்னும் இம்மாதிரியே படிப்படியாய் எத்தனையோ ரகங்கள்.
பஞ்சாமியின் தாயார் இதிலொன்றிலும் சேர்ந்தவளல்ல.

- 'அம்மாவுக்கு ஜுரம்'.

6. பல் கட்டிக் கொண்டவர்கள் முகத்திலேயே ஒரு களை உண்டு. கொஞ்சம் அசட்டுக் களையானாலும் பரவாயில்லை. கடவுள் கொடுத்த பற்களைவிட இவைகள் நன்றாய்த் தான் இருக்கின்றன. இதனாலேயே கடவுள் அவ்வளவு வேலைக்காரர் இல்லை என்று தெரிகிறது.

- 'ருக்மணிக்கு வயிற்றிலே பல்'.

7. அவளுக்கு இப்போது வயது நாற்பத்தைந்து ஆயிற்று. அவள் பருமனும் மூஞ்சியின் கோரமும், ரிக்ஷாவில் உட்கார வேண்டுமானால் ரிக்ஷா போதுகிறதில்லை. ஒவ்வொரு கையும் ஆனை தும்பிக்கை மாதிரி இருக்கிறது. தலை உடம்போடு இறுகிப்போய்க் கழுத்தே இல்லை. இதில் குள்ளம் வேறு.

- 'புருஷர்களை நம்பக் கூடாது'.

8. எட்டு நாய்கள், ஒன்பது ஓநாய்கள், இருபத்தைந்து குள்ள நரிகள், மூன்று சிங்கங்கள், நான்கு புலிகள், ஐம்பது குரங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரே சமயத்தில் 'பீபில்ஸ் பார்க்கில்' ஊளையிட ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது நம் வீடு. காரணம் காலையில் மணி ஏழாகியும் பால்காரன் இன்னும் வரவில்லை.

- 'பால்காரன்'.

9. விடாமுயற்சிக்குப் பகீரதனை உதாரணமாகச் சொல்லுவார்கள். பிச்சைக்காரர்களையும் சொல்லலாம். பிசைக்கு வந்தவன் பிச்சை வாங்காமல் போனால் அவன் அந்தத் தொழிலுக்கே புதியவனாக இருக்க வேண்டும். அல்லது அந்த வேலைக்கே லாயக்கில்லாதவனாக இருக்கவேண்டும். பிச்சைக்காரனை வீட்டை விட்டு அனுப்புவதற்கு ஒரே வழிதான் உண்டு; அதாவது பிசை போட்டு அனுப்பிவிடுவது. பிச்சை போடாமல் அவனை அனுப்பிவிடுவதற்கு எவ்வளவோ தந்திரங்கள் கற்றிருக்கவேண்டும். உருட்டல், மிரட்டல், பயமுறுத்தல் இவற்றால் ஆகிற காரியமில்லை.

- 'பிச்சைக்காரர்கள்.

10.ஜி.வி.டேவ் என்பவர் திவான்பகதூர் கருடாச்சாரியருடைய அருமைப் புதல்வன். ஆதியில் அவருக்கு வாசுதேவன் என்று நாமகரணம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளைக்காரர் நம்மை ஆளவந்த பிறகு இந்தியர்கள் என்று தெரியாவண்ணம் வெளித் தோற்றத்தை மாற்றிக் கொள்வதோடு நம்மவர்களுடைய ஆசை நிற்கவில்லை. பேரையும் மாற்றிப் பெருமை அடைவதில் நமக்கு உற்சாகம் ஏற்பட்டது. அந்த மோகத்திற்கு இணங்க வாசுதேவனுடைய பெயர் முதலில் உடல் குறுகி வி.தேவ் என்றாயிற்று. வெள்ளைக்காரப் பெயராய்த் தொனிப்பது மேலும் விசேஷம் என்று 'த' காரம் 'ட' காரமாய் மாறி வி.டேவ் என்றாயிற்று. ஜி என்பது அவன் தகப்பனார் கருடச்சாரியர் பெயரைக் குறிப்பது. இவ்வாறு, வாசுதேவன் ஜி.வி.டேவ் என்று பெருமையையும் ஆத்ம திருப்தியையும் விளைவிக்கும்படியான பெயயருடன் விளங்கி வந்தான்.

- 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் டேவ்'.

- தொடர்வேன்.

- அடுத்து ராஜம்கிருஷ்ணன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: