Friday, January 28, 2005

நினைவுத் தடங்கள் - 29

ஒரு பையனைப் பள்ளியில் புதிதாகச் சேர்க்கிறார்கள் என்றால் பிள்ளைகளைப் பொறுத்தவரை அது மிகவும் ரசமான விஷயம்! முதலாவது அன்று காலை அரைவேளப் படிப்புக் கிடையாது. இரண்டாவது 'ஐயா'வின் சிடுசிடுப்பும் கெடுபிடியும் அன்று மதியம் வரை சுத்தமாக இராது.
மாறாக ஐயாஅன்று மட்டும் சுமுகமாக அனைவரிடமும் பேசுவார்; யாரிடமும் கடுமை காட்டமாட்டார். முகத்தில் அபூர்வ மென்மையும் மலர்ச்சியும் இருக்கும். புதிதாகச் சேருகிற பையனை, சேருகிறபோதே மிரளச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும் அன்றைய வரும்படியை உத்தேசித்தும் அப்படி இருக்கக் கூடும்.

வரும்படி குடும்பத்தைப் பொறுத்தது. வசதியான குடும்பம் என்றால் ஒரு ஜதை வேட்டி, துண்டு ஐயாவுக்குக் கிடைக்கும். தட்சணையாக ஒரு ரூபாயும் - குறுணி நெல், பழம், தேங்காய், அரிசி எல்லாம் உண்டு. சாதாரண குடும்பமென்றால் வேட்டி, துண்டு நீங்கலாக மற்றவை நிச்சயம் கிடைக்கும். மற்ற ஆசிரியர்களுக்கு இதில் பங்கில்லை. வெறும் கால் ரூபாயும், தாம்பூலமும் மட்டும்தான். 'அட்சராப்பியாசம்' செய்து வைப்பவர் ஐயாதானே? அதனால் முழு வரும்படியும் அவருக்கு மட்டும்தான். ஊர்க்காரர்கள் ஐயா- வைத் தவிர வேறு யாரும் அட்சராப்பியாசம் செய்துவைப்பதையும் விரும்ப மாட்டார்கள். ஆயிரம் குறை சொன்னாலும் ஐயாவின் ஆகி வந்த கையால், குழந்தையின் கையைப் பிடித்து, பரப்பிய நெல்லின் மீது 'அரியே நம' என்று ஐயா எழுதிக் கொடுத்தால்தான் படிப்பு வரும் என்பது அங்கு மூன்று தலைமுறையாய் இருந்து வருகிற நம்பிக்கை!

எப்போதும் அடைத்திருக்கிற சாவடியின் சட்டக்கதவுகள் பரக்கத் திறந்துவைக்கப் பட்டு கூட்டி மெழுகப்பட்டு பளிச் சென்று அன்று காட்சிதரும். சுவற்றடியில் சரஸ்வதி படம் மலர்மாலை அணிவிக்கபட்டு பக்கத்தில் மரத்தண்டு விளக்கும் முன்னால் பசுஞ்சாணிப் பிள்ளையாரும் அருகம்புல்லுடன் இருக்கும். ஐயா அதிகாலையிலேயே சுவடி தயாரித்து வைத்திருப்பார். பசுமைமாறி மஞ்சள் ஏறிய புதிய பனையோலை நறுக்குகள் நாலைந்தை இடது ஓரம் துளையிடப்பட்டு மட்டை நரம்பினால் கட்டி, எழுத்தாணியால் ஐயாவே 'அரிநமோத்து சிந்தம்; அரியே நம' என்று தொடங்கி 'அ' முதல் '·' வரை எழுதி வைத்திருப்பார்.

நல்ல நேரம் தொடங்கியதும் சட்டாம்பிள்ளை தலமையில் வரிசை வரிசையாகப் பிள்ளைகள் கிளம்பி புதிதாகச் சேரவுள்ள குழந்தையின் வீட்டுக்குப் போவார்கள். வசதியான பெரிய இடம் என்றால் மேள தாளத்துடன் குழந்தையை ஊர்வலம்போல் அழைத்து வருவார்கள். காப்பரிசி, பொரிகடலை, பழம் ஆகியவற்றைத் தட்டுக்களில் பெரிய பிள்ளைகள் சிலர் எடுத்துக் கொள்ள, தகப்பனார் மற்றும் உறவினர் உடன்வர பள்ளிக்கு வருவார்கள். வரும்போது சட்டாம்பிள்ளை 'சீதக்களபச் செந்தாமரைப்பூ.. ' என்று தொடங்கும் விநாயகர் அகவலையும் சரஸ்வதி துதியையும் உரக்கப் பாட எல்லாப் பிள்ளைகளும் கோரஸாகப் பாடி வருவார்கள். பள்ளிக்குள் வந்ததும், சேரவுள்ள குழந்தயை ஐயா 'வாங்க' என்று சிரித்த முகத்தோடு அழைத்துப்போய் உள்ளே கூடத்தில் பிள்ளையார் முன்னே போடப்பட்டுள்ள சின்ன மணையின்மீது உட்கார வைப்பார். பிறகு தேங்காய் உடைத்து நைவேத்யம் காட்டி, சரஸ்வதிக்கும் பிள்ளையா- ருக்கும் தீபம் காட்டி, குழந்தையை முன்னால் விழுந்து நமஸ்கரிக்க வைத்தபின் ஐயா அருகில் அமர்ந்து அட்சராப்பியாசம் தொடங்குவார். மஞ்சள்கொம்பையும் ரூபாய் நாணயத்தையும் குழந்தையில் கையில் கொடுத்து முன்னால் பரப்பியுள்ள நெல்லின்மீது ஐயா கையைப் பிடித்து 'அரி..... அரி.....' என்று உரத்துச் சொன்னபடி எழுதவைப்பார். குழந்தையும் கூடவே சொல்ல வேண்டும். இப்படி 'அ' தொடங்கி அக்கன்னா வரை எழுதி முடித்ததும், ஓலைச் சுவடியை எடுத்துப் பிரித்துப் படிக்கச் சொல்லித்தருவார். பிறகு குழந்தையை எழுப்பி ஐயாவுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும், தகப்பனார் மற்றும் வந்துள்ள பெரியவர்களுக்கும் நமஸ்கரிக்கச் செய்வார். எல்லோரும் திருந்£று பூச்¢ குழந்தையை ஆசசிர்வதிப்பார்கள். அய்யாவுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் தக்க மரியாதை செய்தபின் பிள்ளைகளுக்கு அவர்கள் வெகுநேரமாய் ஆவலோடு காத்திருக்கிற பொரிகடலையும், காப்பரிசியும் வழங்கப்படும்.

'சரி, கொண்டுபோய் விட்டுட்டு வாங்க! பையா, போய்ட்டு நாளைக்கு வந்துடணும்' என்று புதுப் பையனிடம் சிரித்தபடி ஐயா சொல்லுவார். பையனும் ஐயாவின் சிரிப்பை நிஜமென்று நம்பி, சிரித்தபடி தலையாட்டுவான். 'அதுதான் அவனிடம் ஐயா சிரிக்கிற கடைசி சிரிப்பு' என்று அவனுக்குத் தெரியாது பாவம்! அவனை அழைத்துக் கொண்டு பிள்ளைகள், முன்பு கிளம்பியது போலவே வரிசையாக, பாடியபடி அவன் வீட்டுக்குப் போவார்கள். வீட்டில் அவனை விட்டுவிட்டு, அனைவரும் உரத்தகுரலில்,

"ஓடாதே!
ஒளியாதே!
இட்டதே சோறும்
பெற்றதே கறியும்
உண்டு தூங்கிப்
பூசை முடித்து,
வெள்ளி முளைக்கப்
பள்ளிக்கு வாரும்!"

என்று மறுநாளைக்குப் பள்ளிக்கு வரச் சொல்லிவிட்டுத் திரும்புவார்கள்.

மறுநாள் புதுப்பையன் முதல் நாளைய ஐயாவின் சிரித்த முகத்தை நிஜமென்று நம்பி பள்ளிக்கு உற்சாகத்தோடு வருவான். ஐயாவின் மலர்ந்த முகம் மறைந்து போய் கடுகடுப்பும், மிரட்டலும் கொண்ட முகத்தை பார்த்ததும் அரண்டு போவான். மறுநாள் பள்ளிக்கு வரச் சிணுங்குவான். ஐயாவுக்குத் தகவல் தெரிந்ததும் சட்டாம்பிள்ளையும் இரண்டு பெரிய பையன்களும் அனுப்பப்படுவார்கள். அவர்கள் போய் அவனைத் 'தரதர' வென்று கதறக் கதறப் பள்ளிக்கு இழுத்து வருவார்கள். தொடர்ந்து அந்தப் பையன் மக்கர் செய்தால் ஐயா இரக்கமின்றி, இதற்கென்று வைத்திருக்கிற சின்ன விலங்குக் கட்டையைக் காலில் பிணைத்துப் பூட்டுப் போட்டுவிடுவார். ஒருநாள் முழுக்க அழுது, அடங்கிப் போய்விடுவான். காட்டிலிருந்து பிடித்து வந்த யானையைப் பழக்குகிற மாதிரிதான்! அந்தக் காலத்துப் பெற்றவர்கள் ஐயாவின் இந்த நடைமுறையை ஆட்சேப்¢ப்பதில்லை. ஐயா பிள்ளைகளின் நல்லதுக்குத்தான் எதையும் செய்வார் என்று பூரணமாக நம்பினார்கள். அதனால் ஐயாவின் ஆளுமையில் பிள்ளைகள் ஆரோக்கியமாய் உருப் பெற்று வெளியே வந்தார்கள்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: