எனது களஞ்சியத்திலிருந்து - 22
பாடல் ஒன்று - விளக்கம் இரண்டு :
இரட்டை அர்த்தம் தொனிக்கப் பாடப்படும் பாடல் சிலேடை எனப்படும். இங்கே குறிப்பிடுவது சிலேடைப் பாடல் பற்றி அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் பாடப்படும் பாடலுக்கு நயமான இன்னொரு விளக்கம் அளிப்பது பற்றியாகும். கவிக் காளமேகம் வெண்பாவில் எல்லாவித உக்திகளையும் வெற்ற்¢கரமாகக் கையாண்டு பாடியவன். அவன் பாடிய சிலேடைப் பாடல்களைக் கையாளாத பேச்சாளர்கள் இல்லை எனலாம். அவனது சிலேடைப் பாடல்களி¢ல் பல ரசக்குறைவானவை. சமத்காரமான சில பாடல்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணலாம். அவன் பாடிய பாடலுக்கு அவனே மாற்றுப் பொருள் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று அவன் நாகைப்பட்டினத்து சத்திரத்துக்குச் சாப்பிடப் போனபோது நேர்ந்தது.
நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான்.
ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை இழந்து சத்தம் போட்டவனை நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவன் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை. நாழியாகஆகப் பசி அதிகமாகி கவிஞனுக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டான். அதற்குள் அவரே அவனைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினான்.
கத்துக்கடல் நாகைக்
.....காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
.....அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
.....ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
ஒலிக்கும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.
இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவுசெய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவனே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.
'காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.
காத்தான் போன்ற சாதாரண மனிதரிடம் என்று இல்லை - கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.
காளமேகம் பார்த்தான். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே" என்று புதிரை விடுவித்தான்.
'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னான்.
கன்னபுர மாலே
.....கடவுளிலும் நீ அதிகம்
உன்னை விட நான்
.....அதிகம்- ஒன்று கேள்
உன் பிறப்போ பத்தாம்
.....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை
என் பிறப்போ
.....எண்ணத் தொலயாதே.
காலத்தால் முற்பட்ட நந்திக் கலம்பம் என்ற நூலில் இதைவிடவும் ரசமான ஒரு பாடல் இரு பொருளுடன் அமைந்துள்ளதைக் காணலாம்.
நந்திக் கலம்பத்தின் நாயகன் நந்தி வர்மனின் வீரத்தைப் புகழ்ந்து பாடும் பாடல் அது. நந்திவர்மன் கோபத்தோடு படையெடுத்துக் கிளம்பாத போது, பகைவேந்தர்க ளின் செழிப்பான நாடுகளில் அழகான ஊர்கள் இருக்கும். அங்கே மகிழ்ச்சி ஆரவாரங்களும், பாட்டும் கூத்தும் ஏக அமர்க்களமாக இருக்கும். எங்கே பார்த்தாலும் தாமரைகள் பூத்து வனங்களும் சோலைகளுமாய் நீர்வளத்தையும் நாட்டு வளத்தையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும். பகை மன்னர்களிடம் தேர்களும் கூட இருக்கும்.
'ஊரும், அரவமும்,
....தாமரைக் காடும்,
உயர் வனமும்,
.....தேரும் உடைத்தென்பர்
சீறாத நாள்;'
ஆனால், பகை மன்னர்களின் அடங்காத்தனத்தையும், அக்கிரமங்களையும் கண்டு கோபமடைந்து நந்திவர்மன் படைகளோடு அந்நாடுகளுக்குள் புகுந்தால், அப்புறம் அவர்களது நிலை என்னவாகும் தெரியுமா? 'ஒன்றும் ஆகி விடாது; அப்படியதான் இருக்கும்' என்று கூறுவதுபோலச் சொல்லுகிறார் கவிஞர். சிலேடையும் ஹாஸ்யமும் கலந்த பேச்சு அது. நந்திவர்மனின் படைகள் புகுந்த பிறகும் அங்கே 'ஊரும் அரவமும், தாமரைக் காடும், உயர்வனமும், தேரும்' இருக்கத்தான் செய்யுமாம். ஆனால் இந்த 'ஊரும் அரவமும்' முதலியவை வேறு! தேசம் முழுதும் பாழாகிவிடும் என்பதைத்தான் கவிஞர் இங்கே சொல்ல வருகிறார்.
ஊரும் , அரவமும்,
.....தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பர்
.....சீறாத நாள்; நந்தி
சீறியபின்,
ஊரும் அரவமும்,
தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பரே
தெவ்வர் வாழும்
செழும்பதியே.
(ஊரும் அரவமும் - ஊர்ந்து செல்லும் பாம்புகளும்; தாமரைக் காடும் - தாவித்திரியும் மிருகங்களும் நிறைந்த காடுகளும் ; உயர்வனமும் - பெரிது பெரிதாக மரங்கள் நிறைந்த காடுகளும்; தேரும் - பேய்த்தேர் எனப்படும் கானல்நீரும்; தெவ்வர்-பகைவர்; செழும்பதி - செழிப்பான நாடு.)
நந்திவர்மனின் கோபத்துக்கு ஆளாகிவிட்டால் எதிரியின் நாடு காடாகிவிடும் என்ற விஷயத்தை இப்படி இரண்டு விதமாகப் பொருள்படும் படி ரசமாகப் பாடி விட்டார் நந்திக் கலம்பக ஆசிரியர். இவ்வளவு அற்புதமாகப் பாடிய கவிஞர் பெயர் தான் தெரியவில்லை.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Monday, October 10, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் அதாவது காளமேகப்புலவர் திருவானைக்காவல் வந்த போது ஒரு பெண் அவரை பார்த்து 'காளமேகப் புலவர் என்னம் விளக்கமாற்று கட்டை இவர்தானே' எனக் கேட்டதாகவும் அவர் அது பெறுக்க பெறுக்க தேயும் என சொன்னதாகவும் கேள்வி. தெரிந்தால் சொல்லுங்களேன் அப்படி அவர் சொன்னது விளக்க மாறா அல்லது வேறையவா?
காளமேகப்புலவர் திருவானைக்காவல் கோவிலில் பரிசாரகராய் (சமையல்காரர்) பணியாற்றி வந்த சமயம் ஒரு நாள் ஓய்வாக கண் அயர்ந்து தூங்கும் போது அவ்வழியாக வந்த பெண்களில் ஒருத்தி அவரின் தோற்றம் அசிங்கமாய் இருந்ததை கண்டு,
" காளமேகம் என்னும் கட்டை விளக்குமாறு இதுதானே " என்றாள்
அகிலாண்டேஸ்வரியின் அருளால் கவிபாடும் திறம்பெற்ற காளமேகம் கண் திறந்து,
" பெருக்க பெருக்க தெரியும் " என்றார்.
விளக்குமாறு பெருக்க பெருக்க தேயும், அதுபோல் சந்ததியும் பெரு(க்)க பெரு(க்)க தேய்ந்து கொண்டே போகுமென சபித்ததாய் ஸ்ரீரங்கத்தை பூர்வமாக கொண்ட தெய்வமான என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இன்றளவும் திருவானைக்கா கோவில் பிரகார வீதியில் உள்ள வீடுகளில் மனநிலைசரியில்லாதவர்களை (அநேகர்) காணலாம்.
Mrs.பிரான்ஸிஸ்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் தங்கள் பதிலைக கண்டேன் நன்றி Mrs.பிரான்ஸிஸ்
Post a Comment