Tuesday, November 22, 2005

நினைவுத் தடங்கள் - 36

எனது கலை ரசனைக்கு சிறுவயதில் நான் பார்த்த தெருக்கூத்து மற்றும் நாடகங்களும் காரணம். அந்த வயதில் நான் நாடகங்களைக் காணும் வாய்ப்பு எங்கள் எதிர் வீட்டில் இருந்த 'தொந்தி மாமா'வால் நேர்ந்தது. கனத்த பாரியான உடம்பு; ஒரு சின்னக் குதிர்போல இருப்பார். பெருத்த தொந்தி; தலையில் சின்ன மடக்கைக் கவிழ்த்தது போல வட்டமாய் நரை கலந்த முடி; மூக்கினடியில் காய்ந்து கருமஞ்சளில் காட்சி தரும் பொடி; எப்போதும், 'சவரம் செய்து கொண்டு ஒரு வாரம் ஆகியிருக்கும்' என்று எண்ண வைக்கும் முகவாய்; பெருத்த தொந்தி வயிற்றில் தொற்றிக் கொண்டு முழங்காலுக்குக்குச் சற்று கீழே தொங்கும் நாலு முழ வேட்டி; இடது தோளி¢ல் மூன்று முழத்துண்டு. இதுதான் தொந்தி மாமா. அவரது வித்தியாசமான பெரிய தொந்தியை உத்தேசித்தே எல்லோரும் அவரை 'தொந்திப் பிள்ளை' என்று அழைத்தார்கள். வயது அப்போதே அறுபதுக்கு மேலிருக்கும்.

அவருக்குக் குழந்தைள் கிடையாது. வெகு தாமதத் திருமணம் என்று எங்கள் அம்மா சொல்வார்கள். அவரது மனைவி அம்மாவுக்கு நெருங்கிய தோழி. அவர்களுக்கு நாங்கள்தான் குழந்தைகள். அம்மா கைவேலையாய் இருக்கும்போது எங்களை அவர்களிடம்தான் கொண்டு விட்டுவிடுவார்கள். மாமாவுக்கு நானும் என் தம்பியும் செல்லம். சிறு குழந்தைகளாய் இருக்கையில் எங்கள் இருவரையும் - என் தம்பியைத் தோளிலும் என்னை இடுப்பிலுமாகச் சுமந்து திரிவார். அவர் மடியில் எப்போதும் வறுத்த பாசிப் பயறோ வெவித்த மொச்சையோ எங்களுக்காக இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்து நடக்கிற வயதில் அவர் எங்களைப் பக்கத்து ஊரில் நடக்கும் தெருக்கூத்துகளுக்கும் நாடகங்களுக்கும் அழைத்துப் போவார். அப்படி அவர் ஒரு முறை அழைத்துப் போனது அரிச்சந்திரன் நாடகத்துக்கு. அப்பா எங்களை அப்படியெல்லாம் இரவில் அனுப்ப மாட்டார்கள். ஆனால் மாமாவின் பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டு அனுப்புவது உண்டு. நாடகம் கிராமங்களில் இரவு பத்து மணிக்கு மேல்தான் துவங்கும். வேலைக்குப் போனவர்கள் எல்லாம் வீடு திரும்பி ராத்திரி சாப்பாடு முடிந்து சாவகாசமாய்த்தான் நாடகம் ஆரம்பிக்கும். அப்போது அரிச்சந்திரன் வேஷத்துக்குப் புகழ் பெற்றிருந்தவர் சோழமாதேவி என்ற ஊரைச் சேர்ந்த நடேசன் என்பவர். மதனத்தூர் குண்டு என்பவர் பபூன் வேஷக்காரர். ராஜபார்ட் - சோழமாதேவி நடேசன், பபூன் - மதனத்துர் குண்டு வருகிறார்கள் என்றால் நாலா பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனக்கூட்டம் நெரியும். மேடைக்கு அருகில் இடம் பிடிக்க இரவு ஏழு மணிக்கே போட்டியாக இருக்கும்.

சோழமாதேவி நடேசனுக்கு அற்புதமான குரல் வளம். ஆளும் உயரமாய் கனத்த கட்டுமஸ்தான உடல் கொண்டவர். ராஜபார்ட்டுக்கு ஏற்ற உடல் அமைப்பு. ஜிகினா உடையும், பின்தோளில் முதுகின் பின்னே தொங்கும் நீண்ட வண்ணச் சால்வையும் பெட்ரோமாக்ஸ் ஒளியில் தங்கமாய் ஜொலிக்கும் கிரீடமும் வளைந்த காலணியுமாய் அவர் எட்டுக் கட்டை சுதியில் பாடிக் கொண்டே மேடையில் பிரவேசிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். கே.பி.சுந்தராம்பாளைப் போல கம்பீரமான கனத்த குரல். கம்பீரமான ரிஷபம் ஒன்று ஹ¥ங்காரம் செய்கிற மாதிரி இருக்கும் அவர் மேடையில் பாடும்போது. அரிச்சந்திர நாடகம் மூன்று நாட்கள் விடியவிடிய நடக்கும். அவர் மயான காண்டத்தில், சுடலை காப்பவனாகத் தோன்றி சந்திரமதியை நோக்கி கேதாரகௌளையில் 'யாரடி கள்ளி நீலீ......' என்று எட்டுக் கட்டையில் முழங்குவது ஒரு பர்லாங்கு தொலைவுக்குக் கேட்கும். சுருதி சுத்தமான அந்த சங்கீதம் என்னை அந்தச் சின்ன வயதிலேயே உருக்கி சங்கீதத்தில் ரசனையை ஏற்படுத்தியது. அந்தக் காம்பீர்யம் மிக்க குரல் இதை எழுதும்போதும் - ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குப் பின்னேயும் காதில் ரீங்காரமிடுகிறது.

இப்படி பத்து வயதுக்குள் பல தடவை தொந்தி மாமா எங்களை அழைத்துப் போனது எனக்கு நாடகத்திலும் இசையிலும் ஆர்வத்தை உண்டாக்கியது. பின்னாளில் கல்லூரியில் படிக்கும்போது விடுதிவிழாவுக்கு நாடகம் எழுதித்தரவும் கோடைவிடு முறையில் சிறுவர்களைக் கொண்டு ஓரங்க நாடகங்கள் தயாரித்து உள்ளூரில் நடைபெறும் நாடகங்களுக்கிடையே நடத்தவும் சிறுவயதில் பார்த்த நாடக ரசனையே காரணமாக இருந்தது. இதற்கு வாய்ப்புண்டாக்கித் தந்த தொந்தி மாமா நினைவில் என்றும் இருப்பார்.

நாடகத்துக்கு மட்டுமில்லாமல் பக்கத்து ஊர் கோயில் திருவிழாக்களுக்கும் எங்களை அவர் அழைத்துச் சென்றிருக்கிறார். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. இன்று இராஜேந்திரப் பட்டணம் என்று அழைக்கப்படும் திருஎருக்கத்தம்புலியூர் தேவாரப்பாடல்களுக்குப் பண் அமைத்த ஒரு தாழ்ந்த குலத்துப் பெண் பிறந்த ஊர். அங்கு ஆண்டு தோறும் மாசிமாதத்தில் பத்து நாட்கள் - கொடியேற்றம் நடந்து தேரும் தீர்த்தவாரியும் எங்களூரில் ஓடும் ஸ்வேத நதி என்கிற வெள்ளாற்றில் நடைபெறும். அந்தப் பத்து நாளும் மாமா எங்களை - ஐந்து வயதும் மூன்று வயதுமாய் இருந்த என்னையும் என் தம்பியையும் மூன்று மைலும் இடுப்பிலும் தோளிலும் சுமந்து அழைத்துப் போய்க் காட்டி நள்ளிரவில் பத்திரமாய் அவர் அழைத்து வந்ததை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.

சொந்தமாகத் தனக்கென்று பிள்ளை இல்லாத குறையை இப்படியுமா தீர்த்துக் கொள்ள முடியும் என்று மனம் உருகுகிறது. என்னுடைய ரசனைக்கு படிப்பறிவில்லாத தொந்திமாமாவும் காரணமாய் இருந்தார் என்பதை என் நினைவுத் தடங்களிலிருந்து எண்ணிப் பார்க்கிறேன். நான் படித்து வேலைக்கு வந்து அவருக்கு ஏதாவது செய்து அவரது பாசத்துக்கும் என்னுள் ரசனையை அவரையும் அறியாமல் ஏற்படுத்தியமைக்கும் நன்றிக் கடன் செலுத்தமுடியாது போனது உறுத்தலாக உள்ளது. பின்னாளில் நான் எழுத்தாளனாய் ஆன நிலையில் அந்தக் கடனை என் நாவலில் ஒரு முக்கிய பாத்திரமாய் அவரை உலவ விட்டும், 'தமிழரசி' மாத இதழில் 'தொந்தி மாமா சொன்ன கதைகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதிப் பிறகு அது நூலாக வந்தபோது அந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்தும் ஒரளவு தீர்த்தேன். ஆனால் அவர் இறந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எனக்குத் தகவல் கிடக்காது போன சோகம் மட்டும் இன்னும் தீராது தங்கியுள்ளது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

4 comments:

Nirek said...

Romba nalla irukku unga writing style! simple and with lot of details. Will mail more.. keep posting!

வெளிகண்ட நாதர் said...

எனது கல்லூரி நாடகம் ஒன்றில் இந்த தொந்திப்பிள்ளை என்றொரு கதாபாத்திரம் படைத்துருந்தோம். அதைத்தான் நின்னத்துக் கொண்டன். இந்த தெருக் கூத்துகள் பார்ப்பதற்காக நான் என் அத்தை வீட்டிற்கு, ஜெயங்கொண்டம் சென்றதுண்டு.

Vassan said...

மேலும் சொல்லுங்கள்.

நன்றி.

வாசன்

Nirek said...

Hello Saba Uncle,
Wish you a great new year 2006!
why soo much break in blogworld? write often no..